ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

“பாலித்தின் பைகள் இருந்தால் இங்கே கொண்டு வாருங்கள்!’’

மாணவர்களிடையே விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்களிடையே விழிப்புணர்வு

மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விநோத பள்ளிக்கூடம்!

பாலித்தின் பைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைப் பயன்படுத்தி விட்டு, நிலத்திலும் நீர்நிலைகளிலும் மக்கள் வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுகிறது. மட்காமல் அப்படியே கிடப்பதால், நிலத்துக்குள் மழைநீர் சேகரமாவது தடுக்கப்படுகிறது. இது ஒருபுறமென்றால், பாலித்தின் பைகள் கலந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், காற்று மாசடைகிறது. இதனால்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாலித்தின் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் பாலித்தின் பயன்பாடு குறைந்தபாடில்லை.

பிளாஸ்டிக்கை சேகரித்தல்
பிளாஸ்டிக்கை சேகரித்தல்

இந்நிலையில்தான் காஞ்சிபுரம் மாவட்டம், நீலமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் பாரதியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பாலித்தின் மேலாண்மை யில் தீவிர கவனம் செலுத்தி வருவது இப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. இப்பள்ளியில் சுமார் 500 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை நிர்வகித்து வரும் பிரேம்குமார் - ஹன்னா தம்பதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீங்குகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு எடுத்துரைப்பதோடு... பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாக்க ஒரு சிறப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார்கள்.

பிரேம்குமார் - ஹன்னா தம்பதி
பிரேம்குமார் - ஹன்னா தம்பதி

இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் பயன்படுத்தும் பாலித்தின் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் பள்ளிக்கு எடுத்து வர செய்து, இங்குள்ள ஓர் அறையில் சேமிக்கின்றனர். அவற்றை வாரம் ஒரு முறை எடுத்துச் சென்று, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஏற்பாட்டில் படப்பையில் இயங்கி வரும் பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சி மையத்தில் ஒப்படைகின்றனர். அங்கு மறு சுழற்சி செய்யப்பட்ட பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் தார்ச்சாலைகள் போடு வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக்கை சேகரித்தல்
பிளாஸ்டிக்கை சேகரித்தல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பள்ளியின் ஆலோசகர் பிரேம் குமார். “எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் பெரும்பாலான நாடு கள்ல பிளாஸ்டிக் குப்பைகளைத் தீ வச்சு எரிக்கிறதில்லை. ஆனால், இந்தியாவுல மட்டும்தான் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமா எரிக்கப்படுது.

குறிப்பா, கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகள்ல இந்த அவலம் ரொம்பவே அதிகம். இதனால குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னை களுக்கு ஆளாகி ரொம்பவே பாதிக் கப்படுறாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடியே எங்களோட பள்ளி யில பாலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினேன். ஆனா, அதுக்கான வாய்ப்புகள் அமையாமலே போயிடுச்சு. ஆனாலும், இதைப் பத்தின யோசனை எனக்கு இருந்துகிட்டே இருந்துச்சு. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மட்டும் தொடர்ந்து செஞ்சுகிட்டே இருந்தோம்.

மாணவர்களிடையே விழிப்புணர்வு
மாணவர்களிடையே விழிப்புணர்வு

இந்தச் சூழல்லதான், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்புல... பாலித்தின் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் அரைக்கும் மெஷின் வாங்கப்பட்டு, படப்பையில அது இயங்குறதா ஊடகங்கள்ல தகவல் வெளியாகி இருந்துச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிடுச்சு.

மாணவர்களிடையே விழிப்புணர்வு
மாணவர்களிடையே விழிப்புணர்வு

அதைத் தொடர்ந்துதான் எங்களோட பள்ளியில பிளாஸ்டிக் மேலாண்மை திட்டத்தை அறிமுகம் செஞ்சோம். இதுக்கான தொடக்கவிழாவை சிறப்பா ஏற்பாடு செஞ்சு, பெற்றோர்களையும் அழைத் திருந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட மறுநாளே மாணவர்கள் ஆர்வமா தங்களோட வீடுகள்ல உள்ள பாலித்தின், பிளாஸ்டிக் குப்பைகளைப் பள்ளிக்கூடத்துக்கு எடுத்துக் கிட்டு வந்து இங்க குவிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

மாணவர்களிடையே விழிப்புணர்வு
மாணவர்களிடையே விழிப்புணர்வு

குறிப்பா, ஒண்ணாம் வகுப்பு, ரெண்டாம் வகுப்பு படிக்குற குழந்தைகள்கூட இதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க. சுற்றுச்சூழலை பாது காக்கணும்ங்கற எண்ணத்தை, குழந்தைகளாக இருக்குறப்பவே மாணவர்கள் மனசுல விதைச்சுட்டா, இவங்களோட வாழ்நாள் முழுக்க நிலைச்சிருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

மாணவர்களிடையே விழிப்புணர்வு
மாணவர்களிடையே விழிப்புணர்வு

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய பள்ளியின் தாளாளர் ஹன்னா, “பாலித்தின், பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுற தீங்குகள் பத்தி, ஒவ்வொரு வகுப்பா போயி, மாணவர்கள்கிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு இருக்கோம். இது மட்டுமல்லாம, பாடப்புத்தகங்கள் எடுத்துக்கிட்டு போறதுக்கான துணிப்பை களை நாங்களே தயார் செஞ்சு, அந்தப் பைகள்ல சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெற செஞ்சிருக்கோம். பாலித்தின் பொருள்களை மறுசுழற்சிக்குக் கொடுத்தால் ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் கொடுப்பாங்க. ஆனா, நாங்க அதுமாதிரி பணமெல்லாம் எதிர்பார்க்குற தில்லை. மட்காத பொருள்களைச் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில முறையா அப்புறப்படுத்தி மறுசுழற்சி செய்யணும்ங்கறது மட்டும்தான் எங்களோட முக்கிய நோக்கம்.

பிளாஸ்டிக்கை சேகரித்தல்
பிளாஸ்டிக்கை சேகரித்தல்

கடந்த வாரம் ஒரு லாரி நிறைய பாலித்தின் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை, படப்பையில உள்ள மறுசுழற்சி மையத்துல ஒப்படைச்சோம். கொஞ்சம் நினைச்சுப் பாருங்க... அவ்வளவும் எங்க பகுதியில உள்ள நிலங்கள்லயும், ஏரி, குளங்கள்லயும் கிடந்தா என்னாகும். எங்க பள்ளி மாணவர்கள்கிட்ட மட்டுமல்ல.. இந்தப் பகுதியில உள்ள வீடுகளுக்கும் போயி, இது சம்பந்தமா விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டு இருக்கோம்’’ என்றார்.

இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ருத்ரனிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, “நானும் என்னோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து, எங்க தெருவுல கிடந்த பாலித்தின் பைகளை எரிச்சு பல தடவை விளையாடி இருக்கோம். அது ரொம்பத் தவறுங்கறதை உணர்ந்துட்டோம். எங்க வீட்ல கிடக்குற பாலித்தின் பைகளை, எடுத்துக்கிட்டு வந்து ஸ்கூல்ல கொடுக்குறதோட மட்டுமல்லாம, வெளியிடங்கள்ல எங்கயாவது இதுமாதிரி பைகள் கிடந்தாலும், அதைக் கொண்டு வந்து ஸ்கூல்ல கொடுத்துடுவேன்’’ என்றார்.

பிளாஸ்டிக்கை சேகரித்தல்
பிளாஸ்டிக்கை சேகரித்தல்

பள்ளிக்கூடங்கள், பாடப்புத்தகத்தோடு நின்றுவிடாமல் களத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும்போதுதான் கல்வி என்பது முழுமைபெறும். அந்த வகையில், இந்த உலகத்துக்கு இந்த நிமிடத்தில் மிகமிக முக்கிய தேவையாக இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை, குழந்தைகளின் மனதில் பசுமரத்தாணி போல பதியமிடும் முயற்சியில் இறங்கியுள்ள இந்தப் பாரதியார் பள்ளியை நாம் அனைவரும் வாழ்த்துவோம். இந்த விஷயத்தை கையில் எடுத்து நாடு முழுக்க உள்ள பள்ளிகளில் இதை கடைபிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்பதையம் வலியுறுத்துவோம்.