நாட்டு நடப்பு
Published:Updated:

நாய்களுக்கு மரியாதை!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
News
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

நாய்களுக்கு மரியாதை!
உலக அளவில் நாய்களுக்காக அதிக அளவு செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்குத்தான் முதலிடம். நாய்களுக்கு இவர்கள் செய்யும் செலவுகள் வித்தியாசமானவை. நாய்களுக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்தே வெளியில் அழைத்துச் செல்கின்றனர். சிலர் வாராவாரம் தன் செல்ல நாய்களை அழகு நிலையங்களுக்கும் அழைத்துச் செல்கிறார்கள். இந்த நாய்க்களுக்கான அசைவ உணவு, வாராந்திர மருத்துவச் செலவு, நாய் தங்குவதற்கான குடில், உடை, கண்ணாடி, விலை உயர்ந்த பிஸ்கெட்... போன்றவற்றிற்கு ஆண்டுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல், மக்கள் செலவு செய்வதாக ‘ரீட்டெய்ல் ஃபெடரேசன்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வு சொல்கிறது.

நாய்க்கடி எச்சரிக்கை!
நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறி நோய்) காரணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் 55,000 பேர் இறக்கின்றனர் என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பெரும்பாலான நாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் ரேபிஸ் நோய் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 30 முதல் 60 சதவிகிதம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று உலகச் சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


நடக்க விரும்பும் நாய்!
நம் நாட்டில் வெளிநாட்டு இன நாய்களை விரும்பி வளர்ப்பது அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாயும் ஒரு விதமான தன்மை கொண்டது. உதாரணத்துக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற நாய், ஆடுகளை மேய்க்கப் பயன்படுத்தினார்கள். இதனால், இந்த நாய் இனங்கள்  தினந்தோறும் நீண்ட தூரம் நடக்க விரும்பும். நடக்கவில்லை என்றால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆகையால், சென்னை போன்ற பெருநகரங்களில் இட வசதி குறைந்த பொட்டி, பொட்டியாக உள்ள அடுக்கு மாடிகளில் தவறியும் இந்த இன நாய்களை வளர்க்க வேண்டாம் என்று செல்லப்பிராணிகள் வல்லுநர்கள் அன்பாக அறிவுறுத்துகிறார்கள்.

மைக்ரோ சிப்புடன் கூடிய நாய்கள்
நாய் வாங்கி வளர்க்க விரும்பிகிறீகள் என்றால், அதை வாங்கும் போதே, இந்திய கென்னல் கெஜட் (INDIAN KENNEL GAZETTE) சான்றிதழ் பெற்றுவிடுங்கள். இதில் மைக்ரோ சிப்புடன் நாயின் தாய், தந்தை என அதன் பிறப்பு விவரங்களை அத்தனையும் இருக்கும். மருத்துவச் சிகிச்சைக்கு மட்டுமல்லாமல், பெண் நாய் என்றால், அதன் குட்டிகளை விற்பனை செய்யவும் இந்தச் சான்றிதழ் உதவும்.

எலிகளைப் பிடிப்பதில் கில்லாடி!
தஞ்சாவூர், திருவாரூர், நாகட்டினம் உள்ளிட்ட டெல்டா பகுதியில் ‘கட்டைக்கால்’ என்ற குட்டை இன நாய் உள்ளது. குட்டையாக இருந்தாலும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கும். இந்த நாய் நெல் வயலில் உள்ள எலிகளைப் பிடிப்பதில் கில்லாடி. எலிகளைப் பிடிக்கவே நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த நாயை விரும்பி வளர்த்து வளர்க்கிறார்கள்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு


நாய்களுக்கும் வந்துவிட்டது ‘சர்க்கரை’
பாசமாக வளர்க்கும் செல்லப்பிராணி என்பதால் நாய்களுக்கும் நாம் சாப்பிடும் பாஸ்ட் புட், நொறுக்குத் தீனி, கிரீம் பிஸ்கெட், சாக்லேட் என்று சகலத்தையும் தின்பதற்குக் கொடுத்து வருகிறோம். அப்புறம் என்ன? மனிதர்களைப் போலவே, நாய்களுக்குச் சர்க்கரை நோய் வந்துவிட்டது. வெளிநாட்டு நாய் இனங்களான டாபர் மேன், அல்சேஷன் இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. ‘‘ ‘நம்ம நாட்டு இன நாய்கள் இரும்பு மாதிரி. அதுகெல்லாம் சர்க்கரை நோய் வராது’ என்று நொறுக்கித் தீனிகளையும் இனிப்புகளையும் அன்புடன் அள்ளி வைத்தால் அதற்குச் சர்க்கரை நோய் வருவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று கால்நடை விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

தெரு நாய்கள் ஏன் கடிக்கின்றன?
சமீப காலமாகத் தமிழ்நாட்டில் நாய்க்கடி அதிகரித்து வருகின்றது. ஏன் தெரியுமா?
நாம் வீடுகளில் வளர்க்கும், வெளிநாட்டு நாய்களான டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு... போன்றவற்றை வீடு மாறும்போதோ, நம்மால் வளர்க்க முடியாத சூழ்நிலையிலோ தெருவில் விட்டு விடுகிறோம். அப்படி அவை தெருவில் விடப்படும்போது, அந்த நாய்களுக்கும் தெருவில் வசிக்கும் நாட்டின நாய்களுக்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்துவிடுகின்றன. இப்படிக் கலப்பினமாக உருவாகும் நாய்கள் கடிக்கும் சுபாவம் கொண்டதாக இருக்கும். உதாரணமாக சொல்லவேண்டுமென்றால்... ஜெர்மன் ஷெப்பர்டு கடிக்கும் குணம் கொண்டவை. ஆகையால், வெளிநாட்டு நாய்கள் வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இனக்கலப்பு அதிகமாக நடந்தால், நாட்டு நாய் இனம் அழிந்துவிடும் வாய்ப்புகள் உண்டு. தெருவில் யார் நடந்தாலும் நாய்க்கடியுடன் தான் வீடு திரும்ப வேண்டிய நிலை உருவாகும். தயவு செய்து வெளிநாட்டு நாய்களை விரும்பி வளர்ப்பவர்கள் அதை அனாதையாகத் தெருவில் விட்டுவிட வேண்டாம். புளூ கிராஸ் அமைப்பில் ஒப்படைத்துவிடுங்கள். இதன் மூலம் மூன்று நன்மைகள் நடக்கும். ஒன்று, உங்கள் செல்லப்பிராணி பாதுகாப்பாக இருக்கும். நாய்க்கடிப் பிரச்னையும் உருவாகாது. நாட்டு இன நாய்களும் பாதிப்படையாமல் இருக்கும்.