ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

மறைந்தது பெற்றெடுத்த இளங்கன்று; மனதாற்றுகிறது வளர்த்தெடுத்த மரக்கன்று!

தான் வளர்த்த மரத்துடன் முனுசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
தான் வளர்த்த மரத்துடன் முனுசாமி

மகன்களாக மரங்களை வளர்க்கும் மாமனிதர்!

சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்கள், சமூக அக்கறையோடு பொது இடங்களில் மரம் வளர்ப்பில் ஈடுபடுவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இது ஒரு பக்கமென்றால்... ஒரு சிலர் தங்களுடைய வாழ்வில் நேர்ந்த துயர சம்பவங்களால் ஏற்பட்ட மனவேதனையிலிருந்து, மீண்டு வர மரம் வளர்ப்பில் ஈடுபடுவதுண்டு. மரங்கள் நிழலை மட்டும் அல்ல... துன்பத்தில் வாடுபவர்களுக்கு மனநிம்மதியையும் ஆறுதலையும் கொடுக்கக்கூடிய வல்லமை மிக்கவை.

இந்த வகையில்தான் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், கரடுமுரடான பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வருவது, அப்பகுதி மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. இந்தத் தகவல் அறிந்தவுடன் முனுசாமியை நேரில் சந்திக்கச் சென்றோம்.

குழிகள் எடுக்கப்பட்ட காஞ்சனகிரி மலை
குழிகள் எடுக்கப்பட்ட காஞ்சனகிரி மலை

ராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள விஸ்வநாதபுரத்தில் வசிக்கிறார் முனுசாமி. ஊருக்குள் சென்ற நாம், இங்குள்ள மக்களிடம், ‘மரம் வளர்க்குற முனுசாமி யோட வீடு எங்க இருக்கு. அவரை சந்திக்க வந்திருக்கோம்’ என நாம் சொன்னதும், ‘இப்ப நீங்க அவரோட வீட்டுக்குப்போனாலும் அவரை பார்க்க முடியாது. காஞ்சனகிரி மலையிலதான் பெரும்பாலும் அவர் இருப்பார். அங்க போங்க கண்டிப்பா பார்க்கலாம்’’ எனத் தெரிவித்தனர்.

அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சனகிரி மலைக்கு பயணம் மேற்கொண்டோம். அங்கு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த முனுசாமியை மிக எளிதாக அடை யாளம் கண்டுகொண்டோம். அருகில் சென்று பேச்சு கொடுத்தபோது, அமைதியான குரலில் பேசத் தொடங்கினார். “இன்னைக்கு நான் இந்தளவுக்கு எழுந்திரிச்சு நடமாடிக்கிட்டு இருக்கேன்னா, அதுக்குக் காரணம் இந்த மரங்கள் தான். என் மகனை இழந்த சோகத்துல முடங்கிக் கிடந்த நான், மரங்கள் வளர்ப்புல ஈடுபடாம இருந்திருந்தா, என் வாழ்க்கையே ஒட்டுமொத்தமா இருண்டுபோயி எதுவேணும்னாலும் நடந்திருக்கலாம்.

குழிகள் எடுக்கப்பட்ட காஞ்சனகிரி மலை
குழிகள் எடுக்கப்பட்ட காஞ்சனகிரி மலை

நான் சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்குற தொழில் செஞ்சுகிட்டு இருந்தேன். என்னோட மனைவி பள்ளி ஆசிரியை. எங்களுக்கு இரண்டு பசங்க. மூத்த மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில மூணாம் வருஷம் மருத்துவம் படிச்சுகிட்டு இருக்கார். இரண்டாவது மகன், கல்லூரித் தேர்வுல மதிப்பெண் குறைவா வாங்கினதுனால, தாழ்வு மனப்பான்மையால கடந்த வருஷம் தற்கொலை பண்ணிகிட்டான். எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிடுச்சு.

அவனோட இழப்பை என்னால தாங்கிக்க முடியலை. பல நாள்கள் சோறு தண்ணி, தூக்கமில்லாம, வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன். எனக்கு வாழவே பிடிக்கலை. உலகமே வெறுத்துப்போயிடுச்சு. அந்த சோகத்துல இருந்து மீண்டு வரவே முடியாம, அழுதுகிட்டே முடங்கிக் கிடந்தேன். ஒருநாள் மனசு ரொம்ப விரக்தி அடைஞ்சதுனால, காஞ்சனகிரி மலையில் மன பாரத்தோடு உட்கார்ந்திருந்தேன்.

அப்பதான் என்னோட நண்பர் ஒருத்தர், நான் சோகமா உட்கார்ந்து இருக்குறதைப் பார்த்துட்டு, என் பக்கத்துல வந்து ஆறுதலா சில வார்த் தைகள் பேசினார். ‘மன வேதனையில இருந்து மீண்டு வரணும்னா, இந்த மலையை நல்லா உத்து கவனிச்சுப் பாருங்க. இதுக்கு என்ன தேவைன்னு தோணுதோ, அதுல கவனம் செலுத் துங்க’னு சொன்னாரு. அப்பதான் கவனிச்சேன்... இந்த மலையை சுத்திலும் மரங்களே இல்லாம வெறிச்சோடிக் கிடந்துச்சு. அப்பதான் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தேன். என்னோட பையனோட நினைவா, என்னால முடிஞ்ச அளவுக்கு இங்க நிறைய மரங்களை வளர்த்து, இந்த மலையை பசுமையா மாத்தணும்னு முடிவெடுத்து அதுக்கான பணிகள்ல தீவிரம் காட்ட ஆரம்பிச்சேன்.

என்னோட மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையா இருக்குறதுனால, குடும்பத் துக்குத் தேவையான வருமானம் வந்துடுது. அதனால நான் முழுநேரம் மரம் வளர்ப்புல கவனம் செலுத்திக்கிட்டு இருக்கேன். நான் ஏற்கெனவே சம்பாதிச்சு வச்ச பணத்துல இருந்து ஒரு பகுதியை எடுத்து இதுக்கு செலவு செய்றேன். என்னோட நண்பர்கள், மற்ற தன்னார்வலர்களும் தங்களால முடிஞ்ச உதவிகளை செஞ்சுகிட்டு இருக்காங்க. முதல் கட்டமாக 500 மரக்கன்றுகளை நட்டு பராமரிச்சுக் கிட்டு இருக்கேன். நான் வச்ச வேம்பு, புளி, நாவல், இலுப்பை, அரசுனு இன்னும் பல கன்றுகள் நல்லா செழிப்பா வளர்ந்துகிட்டு இருக்கு’’ என்று சொல்லி, அந்த மரக்கன்றுகள் உள்ள இடங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டியபடியே பேசிய முனுசாமி, “வெயில் காலத்துல ரெண்டு நாளைக்கு ஒரு தடவை தண்ணீர் கொடுக்கலைனா கன்றுகள் காஞ்சுப் போயிடும். ஒரு டேங்கர் தண்ணீர் 1,300 ரூபாய்னு விலை கொடுத்து, மலை மேல கொண்டு போயி, ஒவ்வொரு கன்னா தண்ணீர் ஊத்தினேன். தண்ணீர் ஊத்துறக்கே ஒவ்வொரு தடவையும் 1,000 ரூபாய்க்கும் மேல செலவு செஞ்சேன்.

தான் வளர்த்த மரத்துடன் முனுசாமி
தான் வளர்த்த மரத்துடன் முனுசாமி

மரங்கள் நடுறதைவிடவும், அதைக் கண்காணிச்சு, முறையா பராமரிச்சு, பாதுகாக்குறது சவாலான விஷயம். தினம்தோறும் காலையிலயும் சாய்ந் தரமும் ரெண்டு வேளை, மலைமேல போயி, மரக்கன்றுகளைப் பார்த்துட்டு வருவேன். ஆரம்ப நாள்கள்ல மரக் கன்றுகளுக்கு பக்கத்துலயே படுத்து தூங்கி இருக்கேன். இந்த மலையை சுத்திலும் மஞ்சு (மஞ்சம் புல்) அதிகமா இருக்குறதுனால, சிலர் அதுல நெருப்பை பத்த வச்சிட்டுப் போயிடுவாங்க.

அந்தத் தீயில, நான் வச்ச மரக்கன்றுகள் சேர்ந்து அழிஞ்சிப் போகுறதுக்கான வாய்ப்பு இருக்கு. அதனால கன்றுகள் நடும்போதே அந்த இடத்தைச் சுத்திலும் உள்ள மஞ்சை அப்புறப்படுத்திடுவேன். கன்று நட்ட பிறகும்கூட மஞ்சு பயிர்கள் முளைச்சு வந்துச்சுனா, அதைக் கைகளால புடுங்கி அப்புறப்படுத்திடுவேன்’’ என்று சொன்னவர் கன்றுகள் நடுவதில் உள்ள சவால்களை விவரித்தார்.

“இது பாறைகள் நிறைஞ்ச மலைப்பகுதி. மண்வெட்டி மூலம் கையால குழி வெட்டுறதுங்கறது ரொம்ப கஷ்டம். அது சாத்தியப்படாது. ஜே.சி.பி மூலம்தான் குழி வெட்டியாகணும். வாடகைக்கு ஜே.சி.பி கொண்டு வந்து, மலைமேல வரவழைச்சு குழி வெட்டணும்னா, ஒரு குழிக்கு 150 ரூபாய்க்கு மேல செலவாகும். கன்றுகள் வாங்குறதுக்கான செலவுகள், அதை மலை மேல கொண்டு வர்றதுக் கான செலவுகள் எல்லாத்தையும் சேர்த்து கணக்குப் பார்த்தோம்னா, ஒரு கன்று நட 300 ரூபாய் செலவாகிடும்.

வளர்ந்து வரும் மரங்கள்
வளர்ந்து வரும் மரங்கள்

என்னோட சொந்த பணம் மட்டுமல்லாம, நண்பர்கள், உறவினர்கள், சில தன்னார்வலர்கள்னு பலரும் உறுதுணையா இருக்குறதுனாலதான், சுணக்கம் இல்லாம, தொடர்ச்சியா இதுல ஈடுபட முடியுது. அடுத்தகட்டமா, இன்னொரு 500 மரக் கன்றுகள் நடுறதுக்காக குழிகள் வெட்டி தயாரா வச்சிருக்கேன். இப்படி அடுத்தடுத்து, தொடர்ச்சியா மரக்கன்றுகளை நட்டு வளர்த்துக்கிட்டே இருப்பேன். மரங்கள் வளர வளர என் மன பாரம் குறைஞ்சுகிட்டே இருக்கு. இந்த மரங்களை பார்க்குறப்ப எல்லாம், என்னோட மகனே நேர்ல வந்து எனக்கு ஆறுதல் சொல்றது மாதிரி இருக்கு’’ என உருக்கமாகத் தெரிவித்தார்.

முனுசாமியின் முயற்சி

‘‘இந்த மலையைச் சுற்றிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அரசாங்கத்தால் ஊர் மக்கள் உதவியோடு மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நடப்பட்டதே தவிர, அதைப் பராமரிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அதனால் 70% மரக்கன்றுகள் வளராமல் போய் விட்டது. அதற்குப் பிறகு மரம் நட யாரும் முயற்சி செய்யவில்லை. காலியாக உள்ள இடத்தில் முனுசாமி, தன் மகனின் நினைவாக மரங்களை வளர்த்து வருகிறார்’’ என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.