“திருஆரூரான் சர்க்கரை ஆலை... கண்டுகொள்ளாத முதல்வர்...” - கண்ணீர்விடும் தஞ்சை கரும்பு விவசாயிகள்!

திருஆரூரான் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜன், 2013 முதல் 2017 வரை தமிழக அரசு தரக்கூடிய கரும்புக்கான ஆதரவு விலை ரூ.60 கோடியை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
‘‘ `தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருஆரூரான் ஆலையை அரசே ஏற்று நடத்தும்’ என்று கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் முதல்வர்’’ எனக் கொதிக்கின்றனர் தஞ்சை மாவட்ட கரும்பு விவசாயிகள்!
தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியில் இருக்கிறது திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை. நஷ்டம் என்று கூறி இந்த ஆலையை அதன் உரிமையாளர் கடந்த 2018-ம் ஆண்டு மூடிவிட்டார். இதையடுத்து, ‘கரும்புக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றைத் தராமலேயே ஆலையை மூடிவிட்டனர். எனவே, தமிழ்நாடு அரசு, ஆலை நிர்வாகத்திடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்’ எனக் கூறி பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் அப்போதே போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் திருஆரூரான் ஆலையை, ‘கால்ஸ் டிஸ்டில்லரீஸ்’ எனும் தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்திருப்பதையடுத்து மீண்டும் ஆலை முன்பு தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர் விவசாயிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘கரும்பு விவசாயிகள் சங்கம் - சுவாமிமலை’யின் செயற்குழு உறுப்பினர் சரபோஜி, ‘‘திருஆரூரான் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜன், 2013 முதல் 2017 வரை தமிழக அரசு தரக்கூடிய கரும்புக்கான ஆதரவு விலை ரூ.60 கோடியை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அதுமட்டுமின்றி விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ஆலை நிர்வாகமே வங்கியில் நேரடியாகச் செலுத்துவதாகக் கூறி, 50 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. 2016-ல் கரும்புப் பணம் தருவதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றி கையெழுத்து வாங்கி, விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்ற ரூ.240 கோடி கடனையும் அடைக்கவில்லை. 2017-18-ம் ஆண்டுக்கான கரும்புப் பணத்தையும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
இந்த நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏலம் நடத்தி, திருஆரூரான் சர்க்கரை ஆலையை வெறும் 147 கோடி ரூபாய்க்கு, ‘கால்ஸ் டிஸ்டில்லரீஸ்’ எனும் தனியார் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டது. விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வாங்கிய கடன் மற்றும் வரவேண்டிய நிலுவைத் தொகை போன்ற பிரச்னைகளை தீர்ப்பாயம் முழுயாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ரெவின்யூ ரெக்கவரி விதிப்படி எங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தவறிவிட்டது’’ எனக் கொந்தளித்தார்.

விவசாயி செந்தில்குமார் பேசும்போது, ‘‘ஆலை நிர்வாகம், விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டது. இப்போது கடனைக் கட்டச்சொல்லி வங்கிகள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருஆரூரான் ஆலையை அரசே ஏற்று நடத்தும்’ என வாக்குறுதி அளித்திருந்தார் மு.க. ஸ்டாலின். ஆனால், தற்போது எங்கள் போராட்டத்தையும் கண்டுகொள்ளாமல், எங்கள் துயரையும் துடைக்காமல் மெளனம் காக்கிறார் முதல்வர். ஆலை முன்பாக முப்பது நாள்களுக்கும் மேலாக நூதன முறையில் தொடர் போராட்டம் நடத்திவருகிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் கால்ஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில், விவசாயிகள் ஐந்து பேர்மீது போலீஸ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இது, அந்த நிறுவனம் தி.மு.க நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமானது என்ற குற்றச்சாட்டு உண்மைதானோ என்று எண்ணவைக்கிறது’’ என்றார் ஆதங்கத்துடன்.
இதையடுத்து ‘கால்ஸ் டிஸ்டில்லரீஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஆலையின் ஆலோசகரும், நிர்வாகப் பொறுப்பாளருமான முனுசாமியிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டோம். அவர், ‘‘விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையில் 57% வழங்க வேண்டும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் நாங்களே முன்வந்து, ‘நூறு சதவிகித நிலுவைத் தொகையையும் தந்துவிடுவதாக’க் கூறி, இரண்டு தவணைப் பணமும் கொடுத்துவிட்டோம். மற்ற கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்’’ என்றார்.

கும்பகோணம் ஆர்.டி.ஓ பூர்ணிமாவிடம் விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டபோது, ‘‘திவால் ஆனதால் ஆறு வருடங்கள் இயங்காமல் இருந்த ஆலையை கால்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்திருக்கிறது. நிலுவைத் தொகையை 100% வழங்குவதாக கால்ஸ் தரப்பிலும் உறுதியளித்துவிட்டனர். ஆனால், விவசாயிகளோ ‘நிலுவைத் தொகையை வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்’ எனக் கூறுவதே பிரச்னை தொடர்வதற்கான காரணம்.
முன்பிருந்த ஆலை நிர்வாகம் எந்தெந்த விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் கடன் பெற்றிருக்கிறது என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை விவசாயிகள் வேதனை அடைகிற வகையில் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். எனவே, விவசாயிகள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.
விவசாயிகளின் வாக்குகளையும் பெற்றுத்தான் ஆட்சியமைத்தோம் என்பதை, வாக்குறுதி கொடுத்த தி.மு.க அரசு மறந்துவிடக்கூடாது!