
மழைநீர் சேமிப்பு
எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், சக்கரக்கோட்டை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து ஊரைத்தேடி வரும் தண்ணீர், ஒரு சொட்டுகூடத் தங்காமல் அப்படியே கடலுக்குள் சென்றுவிடும். இந்தக் கொடுமையைப் பார்த்துப் பதறிய ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி மக்கள், இன்று மழை நீரை வீணாக்காமல் நீர் மேலாண்மையில் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
‘‘தண்ணியில்லாக்காடுன்னு ராமநாதபுரம் மாவட்டத்துக்குப் பேர் வந்தது சமீப காலமாத்தான். ஒரு காலத்துல பருவமழை தவறாம பெய்யும். மதுரையிலிருந்து வருகிற வைகை ஆறு, ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் உள்பட மாவட்டம் முழுக்க இருக்கக் கண்மாய்களையும், ஊருணி, குளங்களையும் நிரப்பிடும். முப்போகம் விவசாயம் செஞ்ச செழிப்பான பகுதி. 1980-க்கு பிறகு பருவமழை தவறிடுச்சு. நிலத்தடி நீராதாரம் குறைஞ்சது. மழை நீர் கொஞ்சமா கடலுக்குப் போகணும்னு சொல்வாங்க. ஆனா, இங்க பெய்யுற மழைநீர் நிலத்தில தேங்காம நேரா கடலுக்குள்ள போயிடும். இந்தக் கொடுமையாலதான் வறட்சி மாவட்டமாகிடுச்சு’’ என்கிறார்கள் இப்பகுதி பெரியவர்கள்.

20 வருடங்களுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பைக் கையில் எடுத்தது திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம். தற்போது பெய்யும் மழைநீரை ஊரில் உள்ள ஊருணி, குளங்களில் நிரப்பும் வகையில் செய்திருக்கிறார்கள் ஊர் மக்கள். இதனால் ஊரின் நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்தி, சாதித்து வருகிறார்கள் திருப்புல்லாணி மக்கள்.
ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் 10-வது கிலோமீட்டரில் அமைந்துள்ள பெரிய ஊராட்சிதான் திருப்புல்லாணி. வைணவத்திருத்தலமான ஆதி ஜெகன்னாதர் கோயில் இங்கு அமைந்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கிடைத்த நீரை எப்படிச் சேகரிக்கிறார்கள் எனப் பார்ப்பதற்காகத் திருப்புல்லாணிக்குச் சென்றோம்.
திருப்புல்லாணி சாலையை ஒட்டி அமைந்துள்ள பொன்னங்கழி கானல் நீர் ஓடையில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் ஊருணிக்குச் செல்லும் வாய்க்காலில் விட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஆனந்தன் என்பவரிடம் பேசினோம். ‘‘வழக்கமா மழை பெய்யும்போது பொன்னங்கழி கானல் நீர் ஓடையில கடல் மாதிரி தண்ணித் தேங்கி நிக்கும். ஆனா, அந்தத் தண்ணி ஊருல இருக்க ஊருணி, குளங்களுக்கு வராது. பக்கத்திலிருக்கச் சேதுக்கரை முகத்துவாரம் வழியாகக் கடலுக்குப் போயிடும். இதுதான் காலம் காலமாக நடந்துட்டு இருந்துச்சு. கிடைக்கும் மழைநீரால ஊருக்கு எந்தப் பயனும் இல்ல. நிலத்தடி நீர் ஆதாரமும் குறைஞ்சு போச்சு. ரொம்பச் சிரமமாகிடுச்சு. இந்த நிலைமையை மாத்த என்ன செய்யலாம்னு ஊர் மக்கள் யோசிச்சிட்டு இருந்தோம். அந்த நேரத்துல தான் 2001-ம் வருஷம், மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அறிவிச்சது தமிழக அரசு. இந்தத் திட்டம் எங்களுக்காகவே அறிவிச்ச மாதிரி இருந்துச்சு. அப்ப ஊராட்சி நிர்வாகத்திலிருந்தவங்க அதை முறையா பயன்படுத்திகிட்டாங்க.
கலெக்டரைப் பார்த்து, எங்க ஊர் நிலையை எடுத்துச் சொன்னாங்க. அப்ப இருந்த கலெக்டர் 3.50 லட்சம் ரூபாய் நிதியை எங்க ஊருக்கு ஒதுக்கினாரு. அதை வெச்சு கானல் ஓடையில சின்னதா ஒரு தடுப்பணையைக் கட்டுனாங்க. அங்க தேங்குற தண்ணியைக் குழாய்மூலமா பெரிய கிணறுகள்ல தேக்கி பிறகு, அதை மோட்டார் மூலமா பம்ப் பண்ணி ஒவ்வோர் ஊருணியா தண்ணி நிரம்புற மாதிரி அமைச்சாங்க. முதல்ல 15 ஏக்கர் பரப்புல இருக்கப் பெரிய மதகு குட்டம் ஊருணி, தொடர்ந்து 2 ஏக்கர் பரப்பளவுள்ள முஸ்லிம் தெருக் குட்டம் ஊருணி, அடுத்து 12 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார் குட்டம் ஊருணி, அடுத்து 6 ஏக்கர் பரப்பளவுள்ள சக்கரத் தீர்த்த தெப்பக்குளம்னு வரிசையா தண்ணியைக் கொண்டுப்போய்ச் சேமிச்சாங்க. இப்ப வரைக்கும் அது நடைமுறையில இருக்கு. இதனால ஒவ்வொரு வருஷமும் மழைத்தண்ணி மொத்தமும் அப்படியே கடலுக்குப் போகாம, நீர் நிலைகளுக்குப் போகுது’’ என்றார் பெருமையாக.






தொடர்ந்து பேசிய அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ஹாலித், ‘‘நம்ம ஊர் ஓடையில தேங்குற பல லட்சம் கன அடி மழைத்தண்ணி, நிலத்தில தங்காம கடலுக்குப் போறதை ஆரம்பத்தில பெருசா நினைக்கல. விவசாயத்துக்குத் தண்ணி இல்லாம, நிலத்தடி நீர் குறைஞ்சி, வறட்சி வந்த பிறகுதான் யோசிக்க ஆரம்பிச்சோம். அப்ப இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டு ஊர்மக்கள் ஒத்துழைப்போட இந்த ஏற்பாட்டைப் பண்ணுனாங்க. இப்ப எங்க ஊர்ல தண்ணிப் பஞ்சம்ங்கிற பேச்சுக்கே இடமில்ல. அது மட்டுமில்லாம இப்ப தண்ணி உப்புக் கரிப்பது இல்ல’’ என்றார்

திருப்புல்லாணி ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலாவிடம் பேசினோம். ‘‘மழை நீர் சேமிப்பில் எங்க ஊர் வெற்றிகரமா செயல்படுறதை மத்த ஊர்க்காரங்களும், அதிகாரிகளும் பாராட்டுறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியா இருக்குது. பல ஊர்க்காரங்க இதை வந்து பாத்துட்டுப் போறாங்க. முன்னாடி இருந்த ஊராட்சி நிர்வாகம் உருவாக்குன இந்த மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நாங்களும் தொடர்ந்து செயல்படுத்திட்டு வர்றோம். அதனால எல்லா வீட்டுக் கிணறுகள்லயும், போர்வெல்லயும் குறைந்த ஆழத்திலயே தண்ணி இருக்குது. ஊரைச் சுத்தி, மரம், செடி, கொடிக நல்லா வளர்ந்திருக்கு. விவசாயமும் நல்லபடியாக நடக்குது. ஊரே எப்பவும் குளிர்ச்சியா இருக்கு. மழை பெய்ய ஆரம்பிச்ச உடனே, தண்ணியைப் பம்ப் செய்யுற வேலையில இறங்கிடுவோம். மோட்டார் பம்புகள் வைக்கக் கட்டடங்களை அரசு கட்டிக் கொடுத்திருக்கு. எங்க ஊரு ஊருணிகள்ல வருஷம் முழுக்கத் தண்ணியைப் பார்க்கலாம்’’ என்றார்.
கடலோரப்பகுதிகளில் திருப்புல்லாணி ஊராட்சியைப் போன்று மற்ற ஊராட்சிகளும் பின்பற்றினால் ராமநாதபுரம் வளமான மாவட்டமாக மாறும் என்பதில் ஐயமில்லை.