திருவையாறில், விளை நிலங்களில் புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அந்த இடத்தைக் கடந்து சென்றார். அப்போது, விவசாயிகளைச் சந்தித்து பேசாமல் அவர் சென்றது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்துக்காக, சம்பா சாகுபடி செய்யப்பட்டு வயல்களில் நெற் பயிரை உயிருடன் அழித்து புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 8-ம் தேதி, தஞ்சாவூர் ஆர்.டி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் எங்களை உயிருடன் புதைத்தாலும் சாலை அமைக்க இடம் தர மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறியதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், சம்பா பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும், அதன் பிறகு நிச்சயமாக சாலை அமைக்கபடும் பணி தொடங்கபடும் எனவும் ஆர்.டி.ஓ ரஞ்சித் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த 10-ம் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். அறவழியில் போராடி வரும் விவசாயிகளை இது வரை அதிகாரிகள் யாரும் சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரூ.2.27 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையம், கால்நடை மருத்தகம் உள்ளிட்ட ஒன்பது கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
இதில், விவசாயிகள் சாலையோரத்தில் போராட்டம் நடத்தி வரும் கண்டியூர் பகுதியைக் கடந்து அமைச்சர் சென்றார். அப்போது விவசாயிகள் அமைச்சரை மறைத்து முற்றுகையிடுவார்கள் எனக் கருதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. ஆனால், விவசாயிகள் அறவழியில் அமைதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். விவசாயிகள், அமைச்சர் தங்களை சந்தித்துப் பேசி நியாயத்தைக் கேட்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விவசாயிகளைக் கண்டுக்கொள்ளாமலேயே சென்றது விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தரப்பில் பேசினோம், ``எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்கள் சார்ந்த திட்டங்களையே முதல்வர் செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அரசுதான் தமிழக அரசு. புறவழிச்சாலை திட்டம் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. எனவே, மாவட்ட ஆட்சியருடன் கலந்து பேசி யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
முப்போகம் விளைகின்ற முக்கனிகள் விளையக்கூடிய வளம் வாய்ந்த நிலத்தை சாலை அமைக்கத் தர மாட்டோம் எனக் கூறி யாருக்கும் தொந்தரவு ஏற்படாத வகையில் அறவழியில் போராடி வருகிறோம். இதுவரை மாவட்ட ஆட்சியர் எங்களை சந்தித்து பேசவில்லை. எங்களைக் கடந்து செல்லும் அமைச்சர் எங்களிடம் பேசுவார் என பெரிதும் எதிர்பார்த்தோம்.

ஆனால், அவர் எங்களை திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விட்டார். விவசாயிகளைக் காப்பாற்றுகிற அரசு என முதலைமைச்சர் உள்ளிட்ட பலரும் கூறுகின்றனர். இதே பகுதியில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார். அப்போது வயலில் டிராக்டரில் உழவு ஓட்டினார். வயலுக்குள் இறங்கி நடவு நட்டார். விவசாயிகளுடைய பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிச் சென்றார். ஸ்டாலின் வந்த கண்டியூர் பகுதியில் தான் தற்போது புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலம் கையகப்படுத்தபட்டு வருகிறது. அவருடைய ஆட்சியின் கீழ் இருக்கும் அமைச்சர் எங்களை சந்தித்துப் பேசக்கூட தயாரில்லை.

விவசாயிகளை உதாசீனம் செய்துவிட்டு நியாமான போராட்டத்துக்கு மதிப்பளிக்காமல் சென்றது எங்களை கடும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு முதலைமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை. எங்க மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செயல் எங்களை கண்ணீரும், கம்பலையுமாக நிற்க வைத்துள்ளது'' என்று விம்மினர்.