நாட்டு நடப்பு
Published:Updated:

முதல்வர் வெளியிட்ட அங்கக வேளாண் கொள்கை! தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் வளர வழிகாட்டுமா?

இயற்கை வேளாண் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை வேளாண் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்

அறிவிப்பு

இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, உலகின் பல நாடுகளிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கை விவசாயத்திற்கெனத் தனிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மார்ச் 14-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அங்கக வேளாண் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ரசாயன விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு, இது எந்தளவிற்குக் கை கொடுக்கும்? ஏற்கெனவே இங்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தக்கூடிய அம்சங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளனவா?

இதுகுறித்து, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்துவிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திற்கெனத் தனிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என 2008-ம் ஆண்டிலிருந்தே வலியுறுத்தி வரப்பட்டது. தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை மிகப்பெரிய அளவில் விரிவுப்படுத்த... இயற்கை விவசாயச் செயற்பாட்டாளர்கள், அமைப்புகளின் முயற்சிகள் மட்டுமே சாத்தியமல்ல. தமிழக அரசும் களத்தில் இறங்கினால்தான் இயற்கை விவசாயத்தை மாநிலம் முழுவதும் பெரும்பான்மையான விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்ய முடியும்.

தமிழக அரசு, இதற்கான கொள்கையை உருவாக்கி அதிகாரப்பூர்வமான நடவடிக் கையில் இறங்குவது அவசியம் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அங்கக வேளாண் கொள்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனை மனதார பாராட்டுகிறோம். இதில் பசுமை விகடனுக்கும் முக்கியப் பங்குள்ளது. இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டில் எழுச்சிப்பெற பசுமை விகடன் ஆற்றிய பணி அளப்பரியது. இயற்கை விவசாயத்திற்கான கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது.

இயற்கை வேளாண் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்
இயற்கை வேளாண் கொள்கை வெளியீட்டு நிகழ்வில்


மாதிரி இயற்கை விவசாயப் பண்ணை...

ஏற்றுமதிக்குப் பயிற்சி...


இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளின் நலன், நுகர்வோரின் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு சார்ந்தது. மேலும் பாரம்பர்ய விதைகள் பாதுகாப்பு மற்றும் பன்மயத்துக்கும் உத்தரவாதம் அளிக்ககூடியது. பல்லுயிர் பெருக்கத்திற்கும் அவசியமானது. தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள கொள்கை வரைவில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வட்டார அளவில் மாதிரி இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்படும். இயற்கை விவசாயம் தொடர்பான விழாக்கள் நடத்தப்படும். இயற்கை இடுபொருள்கள் தயார் செய்ய மகளிர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இயற்கை விவசாய விளைபொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும் எனக் கொள்கை வரைவில் சொல்லப்பட்டுள்ளன. இவை உறுதியாக நடைபெற வேண்டும்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக ரசாயன விவசாயச் செயல்பாடுகளுக்குப் பழக்கப்பட்டுப் போன வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள்... இயற்கை விவசாயச் செயல்பாடுகளில் மிகுந்த முனைப்போடும், ஊக்கமோடும் ஈடுபட, முறையான பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஆந்திர மாநில அரசு, அங்கு இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக, சமூக ஆதார நபர்கள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பரவலாக, தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, மாதம் 15,000 ரூபாய் ஊதியம் வழங்கியது. அவர்களுக்கு இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அங்குள்ள விவசாயிகளுக்கு அந்த நபர்கள்... இடுபொருள் மேலாண்மை, பூச்சி, நோய் கட்டுப்பாடு, நீர் மேலாண்மை, மகசூல் ஆய்வு உள்பட இன்னும் பல்வேறு அம்சங்களில் ஆலோசனைகள் வழங்கினார்கள். தமிழ்நாட்டிலும் அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

மூன்றாண்டுகளுக்கு இழப்பீடு

வேளாண் பொருளியல் ஆய்வாளரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான கி.வெங்கட்ராமன், “அங்கக வேளாண் கொள்கையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருப்பது, மிகவும் காலதாமதமானது என்றாலும் கூட இதனை வரவேற்கிறோம். ரசாயன இடுபொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இதில் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துடுத்துவதற்கான நடவடிக்கை களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் அதேசமயம், தமிழக அரசு பொறுப்பேற்றுச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை. ரசாயன விவசாயத்தினால் ஏற்படும் கேடுகள் குறித்து, தங்களுடைய அனுபவத்தின் மூலம் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். ஆனாலும் அதில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர், 5 ஏக்கருக்கும் குறைவான நில உடமை கொண்டவர்கள். நீண்டகாலமாக ரசாயன விவசாயத்திற்குப் பழக்கப்பட்டுப் போன தங்களுடைய நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்றினால், மூன்றாண்டுகள் வரை லாபகரமான மகசூல் கிடைக்காது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, இயற்கை விவசாயத்திற்கு மாறத் தயங்குகிறார்கள். அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை... இழப்பீடாகவோ, நிவாரணமாகவோ வழங்க வேண்டும்.

ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோல் வழங்கப்பட்டு வருகிறது. அதை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ்நாட்டிலும் அதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அங்கக வேளாண் உணவு திருவிழாக்கள் நடத்தப்படும் எனத் தற்போது வெளியிடப்பட்டுள்ள கொள்கை வரைவில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இயற்கை விவசாய விளைபொருள்களைத் தமிழக அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வது குறித்தோ, மானிய திட்டங்கள் குறித்தோ எந்த ஒரு அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

கி.வெங்கட்ராமன், அனந்து
கி.வெங்கட்ராமன், அனந்து

இயற்கை வேளாண் விளைபொருள்களில்
திருப்பதி லட்டு


ரேஷன் கடைகளில் முதல்கட்டமாக, குறைந்தபட்சம் 20-30 சதவிகிதமாவது இயற்கை விவசாய விளைபொருள்கள் வழங்கலாம். அரசு மருத்துவமனைகள், பள்ளி மாணவர்களுக்கான சந்துணவுத் திட்டம், அரசு கல்லூரிகளின் மாணவ விடுதிகளிலும் இயற்கை விவசாய உணவு வழங்கலாம். தற்போது, ஆந்திர மாநில அரசு, இயற்கை விவசாய விளைபொருள்களில்தான் திருப்பதி லட்டு தயார் செய்து விற்பனை செய்கிறது. அதனை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

கிடைத் தொழில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்...

இதற்கான செல்பொன் செயலிகளை உருவாக்க வேண்டும். மண்புழுவுரம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் விற்பனை என்ற பெயரில், கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கே ஆதிக்கம் செலுத்த தமிழக அரசு அனுமதிக்ககூடாது. ஒரு விவசாயி, மற்றொரு விவசாயியிடமிருந்து இயற்கை இடுபொருள்கள் வாங்குவதற்கு, இரு தரப்புக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கலாம். குறிப்பாகப் பாரம்பர்யமாகக் கிடை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் கீதாரிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். தற்போது ரசாயன விவசாய நிலங்களின் வரப்புகளில் உற்பத்தி செய்யப்படும் மூலிகைகள்தான் சித்த மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதனால் அந்த மூலிகைகள் இயல்பான வீரியத்துடன் இருப்பதில்லை. எனவே மூலிகை உற்பத்தியில் ஈடுபடும் இயற்கை விவசாயிகளுக்கும் சித்த மருத்துவர்களுக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் வளர்ச்சி அடையும்’’ எனச் சொல்லி முடித்தார்.