தக்காளி 21 ரூபாய், கத்திரி 23 ரூபாய், வெண்டை 22 ரூபாய்; இப்படித்தான் விலை இருக்கும்!

விலை முன்னறிவிப்பு
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்ய வேண்டிய பயிரை தேர்ந்தெடுப்பதற்கு வழி காட்டும் வகையில்... சந்தை நிலவரம் குறித்த விலை முன் அறிவிப்பை வெளிட்டு வருகிறது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம். அந்த வகையில் அடுத்து வரும் மாதங்களுக்கான தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை ஆகிய காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

“தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி மற்றும் பயன் பாட்டில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது. தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.17 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தற்போது கோவை மொத்த விலை சந்தைக்குத் தக்காளி அதன் சுற்றுவட்டார கிராமங்களான கிணத்துக்கடவு, சாவடி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், பெரிய நாயக்கன்பாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதி யிலிருந்து வருகிறது. வர்த்தக மூலங்களின் படி, கடந்த பருவத்தின் விலைக் குறைவு காரணமாகவும், பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தாலும் தக்காளியின் வரத்து குறை வாக இருப்பதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளது.

நம் மாநிலத்தில் கத்திரி 0.24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.12 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கத்திரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டா முத்தூர், போளுவாம்பட்டி மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய பகுதிகளி லிருந்து கத்திரி வரத்து அதிகரித் துள்ளது.
தமிழகத்தில் வெண்டை 0.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.14 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சேலம், தேனி, தர்மபுரி, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெண்டை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, கோயம்புத்தூர் சந்தைக்கு வெண்டை வரத்தானது மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் மற்றும் போளுவாம்பட்டி பகுதிகளிலிருந்து வருகிறது.

ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம் புத்தூர் சந்தையில் கடந்த 12 ஆண்டு களாக... தக்காளி, கத்திரி, வெண்டை ஆகியவற்றுக்கு நிலவிய சந்தை விலையை, விலை முன்னறிவிப்பு திட்டக்குழு, ஆய்வு செய்தது.
அந்த ஆய்வு முடிவின்படி... வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் வரை தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 21 முதல் 23 ரூபாய் வரை, நல்ல தரமான கத்திரியின் விலை 23 முதல் 25 ரூபாயாகவும் மற்றும் தரமான வெண்டையின் விலை 22 முதல் 24 ரூபாய் வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. மேலும் நீடிக்கும் பருவ மழையால் சந்தைக்கு வரத்து குறையும் என்பதால் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவு எடுக்கலாம்’’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி: 0422 2431405.