ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

11 ஏக்கர், 58 பாரம்பர்ய நெல் ரகங்கள், ரூ.3,34,000 லாபம்!

பாரம்பர்ய நெல்லுடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய நெல்லுடன் ( ம.அரவிந்த் )

மகசூல்

'உணவே மருந்து’ என்று வாழ்ந்த தமிழர்கள் இன்றைக்கு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து வருகிறார்கள். அதனால் மருத்துவ மனைகளில் மண்டியிட்டுக் கிடக்கிறது ஆரோக்கியம். இந்த நிலை மாற வேண்டும். உணவே மருந்து என்ற கலாசாரம் மீண்டும் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 58 பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டு நிறைவான லாபமும் பெற்று அசத்தி வருகிறார் தேவேந்திரன்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணிபுரத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுநகர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன், பள்ளி மாணவர்களிடம் பாரம்பர்ய நெல் ரகங்கள், விளையாட்டுகள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அவரைச் சந்திப்பதற்காகச் சென்றோம்.

சுற்றிலும் நெல் வயல்கள் பச்சை பட்டாடை உடுத்தியிருந்தன. கரிசல் மண் பகுதியில் ஆற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் பாசனம் நடைபெறுகிறது. முப்போகம் விளைகிற பகுதி. நடவு செய்யப்பட்ட வயலுக்குள் பயிர்களைக் கவனித்துக் கொண்டிருந்த தேவேந்திரன் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார்.

வயலில் தேவேந்திரன்
வயலில் தேவேந்திரன்

‘‘போன வருஷம் காட்டுயானம், கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கம்பன் சம்பா, வாடன் சம்பா, இலுப்பைப் பூ சம்பா, வாழைப்பூ சம்பா, தேங்காயப்பூ சம்பா, தூய மல்லி, குள்ளக்கார், பூங்கார்னு 58 பாரம்பர்ய நெல் ரகங்களை விளைய வெச்சேன். இந்த வருஷம் 45 ரகங்கள்தான் பயிர் பண்ணி யிருக்கேன்’’ என்றவர், பாரம்பர்ய நெல் ரகங்கள் பயிரிடுவது தொடர்பான அனுபவங் களைப் பகிரத் தொடங்கினார்.

‘‘பி.இ எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படிச்ச எனக்கு, படிப்பை முடிச்ச உடனேயே சென்னையில இருக்க ஜப்பான் நாட்டு கம்பெனில வேலை கிடைச்சது. 10 வருஷமா அங்க வேலைபார்த்தேன். மாசம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கினேன்.

என்னோட அப்பா, அம்மா (உமாநாத்-மாலதி) ஊர்ல 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நெல் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் கைய நிறைய சம்பளம் வாங்கினாலும் மாசம் ஒரு தடவை ஊருக்கு வந்து பெற்றோர்களோடு சேர்ந்து விவசாய வேலை செய்வேன். அது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

பாரம்பர்ய நெல்லுடன்
பாரம்பர்ய நெல்லுடன்

விழிப்புணர்வு கொடுத்த நம்மாழ்வார்

ரசாயனம் பயன்படுத்தி விவசாயம் செய்றதால மண்ணுக்கும், அதைச் சாப்பிடுற மனுஷங்களுக்கும் ஏற்படுற விளைவு பத்தின விழிப்புணர்வு இல்லாம நாங்களும் ரசாயன உரம் பயன்படுத்திதான் நெல் விவசாயம் பார்த்தோம். பிறகு, நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தில ஏற்படுத்தின விழிப்புணர்வு பத்தின வீடியோவை யூடியூப்ல பார்த்துத் தெரிஞ்சுகிட்டேன். பிறகு, அதைப் பத்தி தேடித்தேடி தெரிஞ்சுகிட்டேன். நாமளும் இயற்கை விவசாயம் செய்யணும்னு தோணுச்சு’’ என்றவர் தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இயற்கை, ரசாயனம் ஒப்பீடு

‘‘அப்பா, அம்மா அனுமதியோடு எங்க ஊர்ல, நான் தனியா 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயத்தில ஈடுபட ஆரம்பிச்சேன். சென்னையில் வேலை பார்த்துக்கிட்டே அப்பப்ப ஊருக்கு வந்து இயற்கை முறையில நெல் விவசாயம் பார்த்துக்கிட்டு வந்தேன். முதல்ல ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில பாரம்பர்ய ரகமான மிளகுச் சம்பாவும், ரெண்டு ஏக்கர்ல ரசாயன முறையில என்.எல்.ஆர் ரகமும் பயிரிட்டேன். ஒரு ஏக்கருக்கு 3 டிப்பர் சாண எரு அடிச்சு, உழவு ஓட்டி, மிளகுச் சம்பா பயிரிட்டேன். விதை நெல், உழவு, அறுவடை கூலி எல்லாம் சேர்த்து 11,000 ரூபாய் செலவாச்சு. மொத்தம் 23 மூட்டை நெல் மகசூல் கிடைச்சது.

ரசாயன முறையில சாகுபடி செஞ்ச என்.எல்.ஆர் ரகத்துக்கு இயற்கையில செஞ்சதை விட கூடுதலா செலவாச்சு. மகசூலும் பெரிய அளவுல இல்ல. இயற்கை, ரசாயனம் ரெண்டுக்குமான வித்தியாசம் அப்பதான் எனக்குப் புரிஞ்சது.

அப்ப அனுபவம் இல்லாதனால மிளகுச் சம்பாவை, என்.எல்.ஆர் ரகத்தோடு சேர்த்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துல போட்டுட்டேன். இதைப் பார்த்துட்டு சிலபேர், ‘இயற்கையில விளைவிச்சு அதைக் கொள்முதல் நிலையத்துல போட்டிருக்கியே’னு திட்டினாங்க. பிறகு, மிளகுச் சம்பாவை அரிசியா மாத்தி வீட்டுல பயன்படுத்த ஆரம்பிச்சோம்’’ என்றவர், மிளகுச் சம்பா மகத்துவத்தைப் பற்றிப் பேசினார்.

பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்
பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்

உடலை பலமாக்கிய மிளகுச் சம்பா சோறு

‘‘மிளகுச் சம்பா சோற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தபோது உடல் வலிமையா மாறினதை என்னால உணர முடிஞ்சது. சென்னையில, பாரம்பர்ய விளையாட்டான சிலம்பம் கத்துக்கத் தொடங்கிய நான், எந்த நேரமும் சுறுசுறுப்பா இருப்பேன். என்னோட சிலம்பம் கத்துக்கிட்டவங்க, அதைக் கவனிச்சு கேட்க ஆரம்பிச்சாங்க. நான் மிளகுச் சம்பா சோறு பத்தி சொன்னேன். அவங்க, என்கூட வேலைபார்க்குறவங்க பலரும் மிளகுச் சம்பா அரிசியைக் கேட்க ஆரம்பிச்சாங்க. பிறகு, இந்த 3 ஏக்கர் இல்லாம, நண்பர் உதவியோடு ஒரத்தநாடு பக்கத்துல இருக்கக் கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில 8 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தேன். இப்ப, மொத்தம் 11 ஏக்கர்ல நெல் சாகுபடி செய்றேன்.

முதல் ஊரடங்கு சமயத்துல சென்னை யிலிருந்து ஊருக்கு வந்துட்டேன். சுமார் 6 மாசம் வீட்டுல இருந்தே வேலையைப் பார்த்துக்கிட்டு விவசாயத்தைக் கவனிச்சேன். முன்னோடி இயற்கை விவசாயிகளைச் சந்திச்சு பேசி, பாரம்பர்ய ரகங்கள், அதன் பலன்கள் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்.

பாரம்பர்ய நெல் ரகங்கள்
பாரம்பர்ய நெல் ரகங்கள்

முழுநேர விவசாயி

என்னதான் கை நிறைய சம்பாதிச்சாலும் மனசுல திருப்தி இல்ல. எதிர்காலத்தில விவசாயம்தான் நம்மை வாழ வைக்கும்ங் கிறதுல தெளிவா இருந்தேன். நம் மண்ணுக்கும் சுத்தியிருக்கவங்களுக்கும் நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு நெனச்சு, வேலையை விட்டுட்டு முழுநேரமா விவசாயத்துல இறங்கிட்டேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்க, சொந்தக்காரவங்கனு ‘கிடைச்ச நல்ல வேலையை விட்டுட்டு களத்து காட்டுல கஷ்டப்படப்போறானாம். இவன் என்ன கிறுக்கா’னு ஏளனப் பார்வை பார்த்தாங்க. ஆனா, என் நிலையில் நான் உறுதியாக இருந்தேன்.

பாரம்பர்ய நெல் ரகத்துல 80 நாள்கள்ல தொடங்கி 180 நாள்கள்ல அறுவடைக்கு வரக்கூடிய மிளகுச் சம்பா, கறுப்புக் கவுனி, காட்டுயானம், குழி வெடிச்சான், குள்ளக்கார், மாப்பிள்ளைச் சம்பா உள்ளிட்ட 58 பாரம்பர்ய நெல் ரகங்களை 11 ஏக்கரிலும் நடவு பண்ணுனேன்’’ என்றவர், மகசூல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

ஒரு ஏக்கரில் கறுப்புக் கவுனி

‘‘கறுப்புக் கவுனி மட்டும் ஒரு ஏக்கர்லயும், மற்ற ரகங்களைச் சுமார் 100 குழியில (33 சென்ட்) சாகுபடி செஞ்சேன். சில ரகங்களை 100 குழிக்கு 3 ரகங்கள்னும் நடவு பண்ணுனேன். இருக்குற இடத்தை 57 ரகங்களுக்கு ஏத்த மாதிரி பிரிச்சுகிட்டேன். கறுப்புக் கவுனி ஒரு ஏக்கருக்கு 21 மூட்டை (1 மூட்டை 64 கிலோ) நெல் கிடைச்சது. 10 ஏக்கர்ல பயிரிடப்பட்ட மற்ற 57 ரகங்களும் சேர்த்து ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை வீதம் மொத்தம் 180 மூட்டை கிடைச்சது.

பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்
பாரம்பர்ய நெல் சாகுபடி வயல்

கைக்குத்தல் முறையில் அரிசியாக்கி விற்பனை பண்ண அதிக நாள் பிடிக்கும், செலவும் அதிகமாகும். அதனால கறுப்புக் கவுனியை மட்டும் இயந்திரத்தில அரைச்சு, அரிசியா விற்பனை பண்ணுனேன். மத்த ரகங்களை அவிச்சு, அரைச்சு அரிசியாக்கி விற்பனை செஞ்சேன். ‘உடம்புல இருக்கத் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேத்தும். சோர்வை போக்கும்’னு கறுப்புக் கவுனி அரிசி சாதம் சாப்பிடுறதால கிடைக்குற பயன்களை நண்பர்கள், உறவினர்கள்னு பலபேர்கிட்ட எடுத்துச் சொன்னதால பெருசா மெனக்கெடாமலேயே விற்பனை ஆனது. இதேபோல மற்ற ரகங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.

கறுப்புக் கவுனி 21 மூட்டையில 798 கிலோ அரிசி கிடைச்சது. கிலோ 200 ரூபாய் வீதம் 1,59,600 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். அதுல 29,000 ரூபாய் செலவு ஆச்சு. அதுபோக 1,30,600 ரூபாய் லாபமாகக் கிடைச்சது. மத்த ரகங்களை அரிசியா மாத்துனதுல 6,480 கிலோ கிடைச்சது. சராசரியா ஒரு கிலோ 80 ரூபாய் விலைக்குக் கொடுத்தேன். மொத்தம் 5,18,400 ரூபாய் கிடைச்சது. 10 ஏக்கருக்கும் சேர்த்து 3,15,400 ரூபாய் செலவாச்சு. அதுபோக 2,03,400 ரூபாய் லாபமா கிடைச்சது’’ என்றவர் நிறைவாக,

‘‘போன தடவை 58 ரகங்கள் பயிரிட்டதில சில ரகங்களைப் பற்றிப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால விற்பனை செய்றதுல சிரமம் இருந்துச்சு. அதனால, அன்னமழகி, ஆற்காடு, நவரா, பிசினி, கிச்சிலி மாதிரியான 13 ரகங்களை விட்டுட்டு, கருவாச்சி, கருடன் சம்பா, வாடன் சம்பா, கறுப்புக் கவுனி, சூரக் குறுவை, துளசி வாசனை சீரகச் சம்பா உள்ளிட்ட 45 பாரம்பர்ய ரகங்களை மட்டும் நடவு பண்ணி யிருக்கேன்.

‘உணவே மருந்து’னு சொன்னது போய் ரசாயன விவசாயத்தால இன்னிக்கு உணவே நஞ்சா மாறியிருக்கு. இதை மாத்த இயற்கை விவசாயம், பாரம்பர்ய ரகங்கள் மட்டும்தான் கைக்கொடுக்கும். இதை மாணவர்கள்கிட்ட கொண்டுபோய்ச் சேர்த்துக்கிட்டு இருக்கேன்’’ என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, தேவேந்திரன்,

செல்போன்: 93455 97255.

பல ரகங்களை விதைக்கும் முறைகள்

விதை நெல்லை தனித் தனியாகச் சணல் சாக்கில் போட்டுக் கட்டி, 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதை வெளியே எடுத்து நாற்காலியில் வைத்து, சாக்கு மேல் கனமான பொருளை வைத்து அடுத்த 12 மணி நேரம் விட்டு விட வேண்டும். தண்ணீர் வடிந்துவிடும்.

அதிக ரகங்களைப் பயிர் செய்பவர்கள், அரை ஏக்கரில் ஒரு ‘டிராக்டர்’ மாட்டுச் சாண உரம் தெளித்து, தண்ணீர் விட்டு உழவு ஓட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு அடி இடைவெளியில் ஒவ்வொரு ரகமாக விதைக்க வேண்டும். இரண்டு நாள்கள் நாற்றங்காலில் தண்ணீர் நிற்கும் வகையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, அதிக தண்ணீர் பாய்ச்சாமல், நாற்றங்காலில் ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்தால் போதுமானது. மண்ணில் உள்ள ஈரத்திலேயே நாற்று பறிக்கக்கூடிய அளவுக்குப் பயிர்கள் வளர்ந்துவிடும். 25-ம் நாள் நாற்று பறித்து நடவு செய்யலாம்.

மாடுகள்
மாடுகள்

ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு ‘டிராக்டர்’ வீதம் மாட்டுச்சாண எரு போட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, ஏர் கலப்பை மூலம் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, ஓர் அடி இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ரகத்தையும் இதே முறையில் தனித்தனியாகப் பயிர் செய்ய வேண்டும். அடையாளத்துக்காக ஒவ்வொரு ரகத்துக்கு அருகிலும் அந்த ரகத்தின் பெயரை எழுதிப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும்.

நடவு செய்தவுடன் 2 நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. பிறகு 10 நாள்கள் தண்ணீர் நிற்பதுபோல் பாசனம் செய்ய வேண்டும். அதனால் தேவையில்லாமல் முளைக்கும் புற்கள் அழுகி, மண்ணிலேயே மடிந்துவிடும். இதனால் களை எடுக்க அவசியமிருக்காது. பயிர் வளர்ச்சிக்காக 30-ம் நாள் ஒரு லிட்டர் ஜீவாமிர்தத்தில் 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயிரில் தெளிக்க வேண்டும். பூச்சி தாக்காமல் இருக்க 40-ம் நாளில் 30 மி.லி மீன் அமிலம், 15 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். 80-ம் நாளிலிருந்து அந்த ரகத்துக்கு உரிய நாளில் கை அறுவடைவையைத் தொடங்கலாம்.

நாய்கள்
நாய்கள்

6 மாடுகள், 2 நாய்கள்

“மாட்டுச் சாண உரத்துக்காக உம்பளச்சேரி ரகத்துல 4 பசுக்கள், 2 காளைகளை வளர்த்துக்கிட்டு வர்றேன். இதுல கிடைக்குற சாணத்துல விவசாயத் தேவைகளுக்குப் போக, மிச்சமிருக்குறதை உரமாகவும் ராட்டியாகவும் தட்டி விற்பனை செய்றேன். ஒரு ராட்டி 10 ரூபாய் விலையில சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன். இது மூலமா மாசம் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது.

பாதுகாப்புக்காக 2 சிப்பிப்பாறை நாய்களை வளர்க்கிறேன். வருஷத்துக்கு ஒரு தடவை 8 குட்டிகள் வரைக்கும் போடும். ஒரு குட்டி சுமார் 7,000 ரூபாய் வீதம் 56,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்” என்கிறார் தேவேந்திரன்.

விழிப்புணர்வு

‘‘டாக்டர் சுதாகர், கவின் தெட்சிணாமூர்த்தி ஆசான்கள்கிட்ட முறைப்படி சிலம்பம், குத்து வரிசை, வேல் கம்பு, வால் வீச்சு பாரம்பர்ய விளையாட்டுகளைக் கத்துக்கிட்டேன். ஊரணிபுரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்குப் போய்ப் ‘பாரம்பர்ய பள்ளி’ என்ற பேர்ல ஏழை மாணவர்களுக்கு பாரம்பர்ய விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்துட்டு வர்றேன். அவங்களா விருப்பப்பட்டுக் கொடுக்குற பணத்தைக் கட்டணமா வாங்கிக்கிறேன். அவங்க கிட்ட நான் பயிரிட்ட 58 பாரம்பர்ய ரகங்கள், அதோட பயன்கள் பற்றி எடுத்துச் சொல்வேன். குறிப்பாக, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா விவசாயத்தில் ஏற்படுத்துன விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வேன்’’ என்கிறார் தேவேந்திரன்.