நாட்டு நடப்பு
Published:Updated:

மதிப்புக்கூட்டுதல், விதை சுத்திகரிப்பு மையம்... விவசாயிகளுக்குச் சேவையாற்றும் மதுரை கேவிகே!

பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
News
பயிற்சியில்

சேவை

மதுரை மாவட்டம், ஆனைமலை அடிவாரத்தில் 19 ஆண்டுகளாக இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையம், அப்பகுதி விவசாயிகளுக்குப் பல வகைகளிலும் சேவையாற்றி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்நிலையம், வேளாண்மை தொடர்பான நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் சாகுபடி, சிறுதானியங்கள் மதிப்புக்கூட்டுதல் ஆகிய வற்றுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

விவசாயிகளுக்குப் பயிற்சி
விவசாயிகளுக்குப் பயிற்சி

14 வகையான பாரம்பர்ய நெல் ரகங்கள்...

ஒரு பகல்பொழுதில் இந்நிலையத்துக்குச் சென்றோம். இதன் செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசிய இந்நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், “விவசாயம் தொடர்பான எந்த ஒரு தொழில் நுட்பமாக இருந்தாலும், நேரடிக் களப்பயிற்சி மூலம் கற்றுத் தந்தால்தான், அதை விவசாயிகளால் முழுமையாக உள்வாங்க முடியும். அதனால், ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் வகையில் பல்வேறு விதமான மாதிரி செயல் விளக்கத் திடல்களை இங்கு உருவாக்கியுள்ளோம். நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு, ஒற்றை நாற்று நெல் சாகுபடி ஆகியவற்றுக்கான மாதிரி விளக்கத் திடல்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் டி.ஆர்.ஒய்.எஸ்-5, ஏ.டிடீ-54, கோ-55, சி.ஆர்-1009 சப் 1)ஆகிய புதிய நெல் ரகங்களுக்கான விளக்கத்திடல், அங்கக வேளாண்மை மூலம் 14 வகையான பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்வதற்கான மாதிரி விளக்கத்திடல், தீவனச்சோளம், கம்பு நேப்பியர், தீவன தட்டைப்பயறு ஆகிய வற்றுக்கான மாதிரி விளக்கத் திடல்களையும் இங்கு உருவாக்கியுள்ளோம். இதனால் ஏராளமான விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்க, இது போன்ற மாதிரி செயல் விளக்கத் திடல்கள் எந்தளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு அவசியமானது, மற்ற விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை நேரடியாகப் பார்வையிட்டு அவர்களுடைய அனுபவங்களை அறிந்து கொள்வது. இதிலும் நாங்கள் சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். பிற மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நவீன நெல் ரகங்கள், பாரம்பர்ய நெல் ரகங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள், தீவனப் பயிர்கள் ஆகியவற்றைப் பார்வையிட மதுரை மாவட்ட விவசாயிகளை அழைத்துச் செல்கிறோம்.

பயிற்சியில்
பயிற்சியில்

சொட்டுநீர்ப் பாசனம்...
விதைச் சுத்திகரிப்பு மையம்...

பாசனத்துக்கான தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனத்தை விவசாயிகள் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானதாகும். இது குறித்து இப்பகுதி விவசாயிகளிடம் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்நிலையத்தின் தொடர் முயற்சி பல விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறியுள்ளார்கள். தரமான விதைநெல், விதை உளுந்து, பழமரக்கன்றுகள், தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கிறோம். மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, கால்நடைகள் வளர்ப்பு, அசோலா, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிவற்றுக்கான பயிற்சிகளும் இந்நிலையத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி, தமிழக அரசு அவ்வப்போது செயல் படுத்தும் புதிய திட்டங்கள் குறித்து, இம்மாவட்ட விவசாயிகளுக்கு வழிகாட்டி வருகிறோம். இதன் மூலம் நிறைய விவசாயிகள் பலன் பெற்றுள்ளார்கள். வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியவற்றுடன் இணைந்து விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று அவ்வப்போது களப்பயிற்சி அளித்து வருகிறோம். நெல், கரும்பு, வாழை, பயறு வகைகள், பழ மரங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களிலும் ஏற்படும் பலவிதமான பூச்சி, நோய்த் தாக்குதல்களுக்கும் தீர்வு காண ஆலோசனை களை வழங்கி வருகிறோம். எங்கள் நிலையத்தின் விஞ்ஞானிகள், விவசாயிகளின் நிலங்களுக்கு நேரில் சென்று, பயிர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தீவிரமாக ஆய்வு செய்து, என்ன வகையான பூச்சி, நோய்த் தாக்கியுள்ளது என்பதைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

தமிழக அரசின் விதைப்பண்ணைத் திட்டம், தொழில் கடன் மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் கீழும் விவசாயிகளுக்குப் பலவிதமான பயிற்சிகள் இங்கு வழங்கப் படுகின்றன. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் இயற்கை இடுபொருள்களை அவ்வப்போது மானிய விலையிலும், இலவச மாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

பயிற்சியில்
பயிற்சியில்

இந்நிலையத்தில் விதைச் சுத்திகரிப்பு மையம் உள்ளது. குறைந்த கட்டணத்தில் இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து விதைப் பண்ணை விவசாயிகள், உழவர் உற்பத்தி யாளர் குழுக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விநாயகபுரத்தில் இயங்கி வரும் நீர் மேலாண்மை பயிற்சி மையத்துடன் இணைந்து வாரம்தோறும் விவசாயிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும் முறை, சிறுதானியங்கள் மற்றும் வெற்றிலை மதிப்புக்கூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளும் இந்நிலையத்தில் வழங்கப்படுகின்றன. இங்கு பயிற்சிக்கு வரும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களை, வேளாண் வணிக மையத்துடன் தொடர்பு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களைத் தொழில்முனைவோராக மாற்றியுள்ளோம். மகளிர் சுயஉதவிக்குழுக்களில் உள்ள வேளாண்மை சார்ந்த பெண்களுக்கு, விளைபொருள்கள் சந்தைப் படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி அளித்து வருகிறோம்.

பயிற்சியில்
பயிற்சியில்


விதை உளுந்து... தீவனப்புல் விதைக்கரணை...

வேளாண்மைத் துறையுடன் இணைந்து நடப்பு ஆண்டில் 14.5 டன் விதை உளுந்து உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்துள்ளோம். இந்நிலையத்தின் வளாகத் தில் அமைக்கப்பட்டுள்ள தீவனப் பூங்காவில் தீவனப்புல் விதைக் கரணைகளைத் தரமான முறையில் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலன் சார்ந்து வழங்கி வரக்கூடிய நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம், இதுவரை 8,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மல்பெரி சாகுபடி, மீன் வளர்ப்பு, நெல்லுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன’’ என்று சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர்,
செல்போன்: 90034 28245

வண்டல் மண் விழிப்புணர்வு...

விளைநிலங்களில் அடியுரமாக வண்டல் மண் பயண்டுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்துப் பேசும் இந்நிலையத்தின் விஞ்ஞானிகள், “இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வண்டல் மண் அதிகம். குறிப்பாக, தென் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. மலையிலிருந்து ஓடிவரும் ஆறு, மட்கிய செடி, கொடி, தாதுப் பொருள்களை அடித்துக்கொண்டு வரும்போது அவையெல்லாம் சேர்ந்து வண்டல் மண் உருவாகிறது. இதில் தழைச்சத்து, நார்ச்சத்து, கனிம சத்து நிறைந்திருக்கும். இந்த வண்டல் மண்ணை விவசாய நிலத்தில் உரமாகப் பயன்படுத்துவது நம் பாரம்பர்ய விவசாய முறையாகும். இது களிமண்ணுடன் கலந்து உள்ளதால் நிலத்தை உழுவது எளிதாக இருக்கும்.

இதை விளைநிலங்களில் அடியுரமாகப் பயன்படுத்தினால் பயிர்கள் செழிப்பாக விளையும். ஓராண்டுக்கு நிலங்களில் வேறு உரங்கள் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை. வண்டல் மண்ணில் பயிருக்குத் தேவையான ஊட்டசத்துகளும் அதிக அளவில் உள்ளன. பொட்டாசியம் பாஸ்பேட், சுண்ணாம்பு, கார்பன் கலவைகள் அதிகமாகவும், நைட்ரஜன் குறைவாகவும் உள்ளன. விவசாய நிலத்தில் வண்டல் மண் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மேம்படுவதோடு, மண்ணரிப்புத் தடுக்கப்படும், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையும் அதிகரிக்கும். இது ஒரு சிறந்த அங்கக இடுபொருளாகச் செயல்படுகிறது. வண்டலில் நன்மை தரக்கூடிய பாக்டீரியா, பூஞ்சணம், நுண்ணுயிர்கள் அதிக அளவு இருப்பதால் பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. சாகுபடிக்கு உதவாத நிலங்களில் வண்டல் மண்ணை இட்டு நல்ல நிலமாக மாற்றி விவசாயம் செய்யலாம்’’ எனத் தெரிவித்தார்கள்.

கால்நடைகளுக்கான காப்பீடு

“இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யும் பாரம்பர்ய நெல் ரகங்களையும், அவர்கள் பின்பற்றும் செயல்முறைகளையும் ஆவணப்படுத்துகிறோம். இதன் மூலம் மற்ற விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.

அறிவியல் பூர்வமான செயல்முறைகள் எந்தளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு விவசாயிகளின் அனுபவபூர்வமான செயல்முறைகளும் அவசியமானது. ட்ரோன் மூலம் பயிர்களுக்கு இடுபொருள்கள் தெளிக்கும் தொழில்நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்குப் பயிற்சிகள் வழங்கி வருகிறோம். கால்நடைகளுக்குக் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளிடம் வலியுறுத்துகிறோம்’’ என்கிறார் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன்.

சுப்ரமணியன், கிருஷ்ணகுமார், கோபால்,  ஜெயரட்சகன்
சுப்ரமணியன், கிருஷ்ணகுமார், கோபால், ஜெயரட்சகன்

உதவிகள் பலவிதம்

மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடு குறித்து நம்மிடம் பேசிய மேலவளவு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த விவசாயி கோபால், “விவசாயத்துல அறிமுகமாகக்கூடிய புதிய தொழில்நுட்பங்கள், கருவிகள் பத்தி உடனுக்குடன் தெரிஞ்சுக்க முடியுது. இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கவும், அதோட தரத்தைச் சோதனை செஞ்சு பார்க்கவும் பயிற்சிகள் கொடுக்குறாங்க. அந்தப் பயிற்சிகளால நிறைய விவசாயிகள் பயன் அடைஞ்சுருக்கோம். சிறுதானியங்களை எப்படி லாபகரமான முறையில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம்ங்கற பயிற்சியிலயும் நானும் கலந்திருக்கேன். இதுக்கான முயற்சிகள்ல இப்ப இறங்கியிருக்கோம்” என்றார்.

வாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயரட்சகன், “இந்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், எங்க ஊருக்கே வந்து, இந்தப் பகுதி விவசாயிகளுக்குக் களப்பயிற்சிகள் வழங்கியிருக்காங்க. குறிப்பா, இயற்கை விவசாயத்தோட அவசியம் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்காங்க. விளைபொருள்களை லாபகரமா விற்பனை செய்றதுக்கான சந்தை வாய்ப்புகள் பத்தியும் ஆலோசனைகள் வழங்குறாங்க. விவசாயம் சம்பந்தமா, எந்த ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும். எங்க பகுதி விவசாயிகள், கே.வி.கே.-வை போன்ல தொடர்புகொண்டாலே போதும். அதுக்கான ஆலோசனை கிடைச்சுடும். உண்மையிலயே இந்த கே.வி.கே சிறப்பா செயல்படுது” என்றார்.

பயிற்சி சுழற்சி... பலபயிர் சாகுபடி...

இந்நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் கிருஷ்ணகுமார், ‘‘இயற்கை விவசாயம் என்பது நம் மக்களிடம் காலம் காலமாக இருந்து வந்ததுதான். இடைப்பட்ட காலங்களில் ரசாயன உரங்களைப் பயன் படுத்தியதால் நிலம் பாதிக்கப்பட்டு நீரும் மாசடைந்துள்ளது. இதைச் சரிசெய்ய இயற்கை விவசாயம் செய்வது இன்றியமையாததாகும். விவசாயத்தில் நீடித்த, நிலைத்த வெற்றி கிடைக்க... பயிர் சுழற்சி முறை மற்றும் பலபயிர் சாகுபடியும் அவசியமானது. இது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

நஞ்சு இல்லாத காய்கறிகள் சாகுபடி செய்ய, நீர்வள, நிலவள திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கி இயற்கை இடுபொருள்களை இலவசமாக வழங்குகிறோம். விவசாயிகளைத் தொழில் முனைவோராக மாற்றவும் பிற துறை களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறோம்’’ என்றார்.