
மாத்தியோசி
தீபாவளிக்கு ஓ.டி.டி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993-ம் ஆண்டு நடந்த சம்பவத்தை அடிப்படை யாகக் கொண்டது கதை. ‘‘இந்தப் படத்தில் ராசாக்கண்ணு இருளராகச் சித்திரிக்கப் பட்டுள்ளார். அவர் உண்மையில் வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அவர்களும் ஒரு விளிம்பு நிலை சமூகம்தான் என்பது வேறு’’ எனச் சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
‘‘விகடனில் நான் பணிபுரிந்தபோது ‘தமிழ் மண்ணே வணக்கம்’ தொடர் எழுதினேன். அப்போது வழக்கறிஞர் சந்துருவைச் சந்தித்துப் பேசினேன். ‘உங்க கரியரில் உங்களுக்குப் பிடிச்ச வழக்கு என்ன’ன்னு கேட்டதற்கு இந்தப் பழங்குடிப் பெண்ணின் வழக்கைச் சொன்னார். அவர்கிட்டே ஜட்ஜ்மென்ட் உட்பட அனைத்துத் தரவு களும் இருந்தன. அதுவே, படத்தின் கருவாக அமைந்தது. படத்தில் இருளர்களைக் காட்டியது ஒரு குறியீடுதான். பொதுவாகவே பழங்குடிகள் வாழ்வு இப்படித்தான் உள்ளது’’ என்கிறார், விகடனின் முன்னாள் நிருபரும் படத்தின் இயக்குநருமான த.செ.ஞானவேல்.
இந்தப் படத்துக்குப் பிறகு, பொது வெளியில் இருளர்கள் குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. இருளர்கள் குறித்துப் பல ஆய்வுகள் நடந்துள்ளன. உண்மையில் இருளர்களின் பூர்வீக இருப்பிடம் ஊட்டி என்று அழைக்கப்படும் நீலகிரி மலைதான். மலையிலிருந்து கீழே வந்த முதல் பழங்குடியினம் இவர்கள்தாம். சாதி சான்றிதழ் தொடங்கி... இதனால், இவர்கள் அனுபவிக்கும் தொல்லை ஏராளம். இன்னும் சில இருளர்கள் நீலகிரி மலையில் வசிக்கிறார்கள். இருளர்கள் மனித குலத்தின் ஆதி இனமான நெக்ரிடோ (Necrito) இன வகைகளைச் சார்ந்தவர்கள் என்று மானிடவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

நீலகிரியிலிருந்து இறங்கிய இருளர்கள் முதலில் குடியேறிய பகுதி தென்னிந்தியா வின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர்தான். அப்போது கொங்கு நாடு எல்லாம் உருவாகவில்லை. அடர்ந்த காடுகளுடன் இருந்த இதன் ஆதிகாலப் பெயர் கோவன்புத்தூர். கோவன் என்ற இருளர் இனத் தலைவனின் பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் கோயம்புத்தூர் என்றாகிவிட்டது. காட்டை ஆண்டு வந்த கோவனின் மக்களான இருளர்கள், கண்ணில் கண்ட விலங்குகளை எல்லாம் கானகத்தில் வேட்டையாட வில்லை. தங்களின் தேவைக்கு மட்டும் வேட்டையாடி, விளையாடி வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் தெரியும், காடு அழிந்தால், வாழ்வு இல்லை என்று. இதனால், காட்டைக் குலைக்காமல் மலைத்தேன், காடுகளில் கிடைக்கும் கிழங்குகள்... என்று இனிப்பான உணவுகளை உண்டு இன்பமாக வாழ்ந்த இருளர்கள் வாழ்வில், ஒரு நாள் இருள் சூழ்ந்தது.
ஆம், இப்போதுபோல அப்போதும் ஆட்சியாளர்கள் இயற்கையை அழிக்கும் வேலையில் இறங்கினார்கள். காட்டை அழித்து நாடாக உருவாக்கத் துடித்தார்கள். காடுகளைப் பற்றி நன்கறிந்த இருளர்களை வைத்தே பல பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி கழனியாக்கினார்கள் என்கிறது வரலாறு. இதற்கு இலக்கியமும் சாட்சி சொல்கிறது.
‘மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அம் சில் ஓதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
அரலை மாலை சூட்டி
ஏம் உற்றன்று இ அழுங்கல் ஊரே.’
கி.பி 2-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறுந்தொகை 214 பாடல் இது. கானவர்கள் (இருளர்கள்) மரங்களை வெட்டிக் களைகளை நீக்கி, விளைநிலமாக மாற்றுவார்கள். அந்த நிலத்தில் கருந்தினை விதைப்பார்கள். பயிர் விளைந்ததும் அதன் கதிர்களைக் குறமகளிர் காவல் புரிந்தார்கள் என்பதுதான் இதன் பொருள். இந்தப் பாடலைக் கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்தக் காலத்திலேயே ‘உழவில்லா வேளாண்மை’ அதாவது, உழவு செய்யாமல் தினை விதைக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது.
அரசு காடுகளை வெட்டி நாடாக்கும் பணியை விரிவுபடுத்தியதால், இருளர்களும் சமவெளிப்பகுதிகளில் பரவி வாழத் தொடங்கினார்கள். இப்போது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர்... போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலத்தில் இவை அனைத்தும் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இருளர்களைக் கொண்டு காடுகளை அழித்து ஊர் உருவாக்க வைத்தது சோழ அரசர்களாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.

‘‘ஒருவன் சாவின் மீது பயமில்லை என்று சொல்கிறான் என்றால் ஒன்று அவன் பொய் சொல்கிறான். இல்லையென்றால் அவன் கூர்க்காவாக இருப்பான்” என்கிறார் முன்னாள் ராணுவ தளபதி ஃபீல்டு மார்ஷல் மானக் ஷா, இவரும் கூர்க்கா படைப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. கூர்க்கா போல போரில் முதல் வரிசையில் வேல் ஏந்திச் சென்ற வீரர் களாகவும் இருளர்கள் இருந்துள்ளார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக உள்ள இருளர்களை மீட்க சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்தன. அந்தக் குழுவினருடன் நானும் சென்னை அருகில் உள்ள செங்குன்றம் பகுதிக்குச் சென்றேன்.
‘‘எங்க ஓனர், எங்கள கொத்தடிமையா நடத்தல. நல்ல சோறு போடறாரு. கேட்கும்போது பணம் கொடுக்கிறாரு. வேற என்ன சார் வேணும்...’’ என்று எங்களைத் திரும்ப அனுப்பிவிட்டார்கள். நாள் முழுக்கச் சுற்றியும் ஓர் இருளரைக் கூட எங்களால் மீட்க முடியவில்லை. இத்தனைக்கும் மிகக் குறைவான ஊதியத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் இருந்தபோதும், அதைவிட்டு வெளியில் வராமல் இருக்கிறீர்கள். ஏன் இப்படி அறியாமையில் இருக்கிறீர்கள் என்று நாங்கள் சொன்னோம். ‘‘இது எங்க மக்களோட விசுவாசம், சார். ஒருத்தரை நம்பிட்டா உசிருகூட கொடுப்பான் இருளன்’’ என்றார் வயதான இருளர் ஒருவர்.
வேடந்தாங்கல் செல்லும் பேருந்துகளில் வயலில் பிடித்த எலிகளுடன் பயணம் செய்யும் இருளர்களைப் பலமுறை பார்த்துள்ளேன். வேடந்தாங்கல் என்ற பெயரே இருளர்களால் உருவானதுதான். தாங்கல் என்ற பெயர் ஏரியைக் குறிக்கும். இந்தத் தாங்கல் அருகே, வேடர்களான இருளர்கள் தங்கியிருந்தபடியால், அது வேடந்தாங்கல் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே ஏரியில் உள்ள மரங்களில் பலவிதமான பறவைகள் வந்து அமர்ந்தன. 1797-ம் ஆண்டுச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து பத்திரம் வெளியிட்டார். இன்றும் கூட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகில் இருளர்கள் வசித்து வருவதைப் பார்க்க முடியும். இங்கு தேன் சேகரித்தல், ஈசல் பிடித்தல், மூலிகைச் சேகரித்தல், எலிப்பிடித்தல், பாம்புப் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்வதையும் பார்க்க முடியும்.

இருளர்கள் ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி நாளன்று மாமல்லபுரம் கடற்கரையில் கூடி, இரவு சமைத்து உண்டு, ஆடி பாடி மகிழ்வது வழக்கம். பின் காலையில் கடலில் நீராடி அவர்களின் குல தெய்வமான கன்னியம்மனை வழிபடு வார்கள். இந்தத் திருவிழா அவர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. ஆண்டு முழுவதும், அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும் மாடாக உழைக்கும் இருளர்கள், இந்தத் திருவிழாவைக் கொண்டாட காத்துக் கிடப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இருளர்களையும் அப்போது அங்கு பார்க்க முடியும்.
1970-ம் ஆண்டு வாக்கில் வந்த வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தால், வேட்டைக்குத் தடை வந்தது. இதனால், வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு, இப்போது பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புக்கடிக்கான விஷமுறிவு மருந்து பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தப் பணிகளில் இருளர்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்படுகிறது என்பது வெளியில் தெரியாத உண்மை.
2017-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பர்மீஸ் பைதான்கள் எனப்படும் மலைப்பாம்புகள் அதிகரித்து வந்தன. பர்மீஸ் பைதான்கள் அங்கு வாழும் வன உயிரினங்களைக் கொன்று தின்று ஏப்பம் விட்டன. இதனால் பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டது. இந்தப் பாம்புகளைப் பிடிக்க ‘பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகரிடம் உதவி கோரியது அமெரிக்கா. இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள பாம்புகளைப் பிடிக்கத் தமிழ்நாட்டிலிருந்து இருளர்கள் சென்றார்கள். உலகில் சக்தி வாய்ந்த அணுகுண்டு வைத்திருந்தாலும் இயற்கை அறிந்தால் மட்டுமே மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடியும் என்பதற்கு இதுவே உதாரணம்.
அந்தமான் தீவில் வசித்து வரும் ஆங்கீஸ் (Onge) பழங்குடி இன மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. பாரம்பர்ய கதைகளின் வழியாக நில நடுக்கத்தைப் பற்றியும் ஆழிப் பேரலைகள் பற்றியும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி வருகிறார்கள். 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது, இந்த இனத்தில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படாமல் பிழைத்திருக்கிறார்கள் என்ற தகவல் இன்றுவரை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
பல கோடி செலவில் வானில் ஏவும் செயற்கைக் கோள்களும், ராடர்களும்கூட தவறான தகவல்களைக் கொடுக்கும். காடுகளில் வாழும் பழங்குடிகள் சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும்போது, ‘‘இன்னும் கொஞ்ச நேரத்துல மழை கொட்டும்’’ என்று சொல்லி முடித்தவுடன் பொய்க்காமல் மழை பெய்வது மரபு சார்ந்த பாரம்பர்ய பொக்கிஷம். இதையெல்லாம் ஆவணப்படுத்துவது அவசியம். அதற்கு முதலில் அவர்களை மனிதர்களாக மதிக்கத் தொடங்குவது முக்கியம்.