'பழநி' திரைப்படத்தில் புகழ்பெற்ற ஒரு பாடலில், “தேர் கொண்ட மன்னன் ஏது, பேர் சொல்லும் புலவன் ஏது, ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?” என்ற சுகமான வரிகளை கண்ணதாசன் எழுதியிருப்பார். இதையே நம் வள்ளுவர் “உழவே தலை” என்றார் குறளில். வேளாண்மை என்ற தமிழ்ச்சொல் ஆழ்ந்த பொருளுடையது. ‘வேள்’ என்றால் மண் என்றும் மண்ணைப் பயன்படுத்திப் பயிர் செய்யும் முறைமையை 'வேளாண்மை' என்று தமிழர்கள் அழைத்ததாக ஐயா இளங்குமரனார் கூறுகிறார். நிர்வாகவியலை மேலாண்மை என்று நாம் அழைத்ததை இங்கு நினைவுகொள்ளலாம். இதனால்தான், மண்ணைப் பயன்படுத்திப் பாண்டங்கள் செய்யும் தொழிலாளிகளை கிராமத்தில் 'வேளார்' என்றனர். உழவு செய்யும் குலத்தவரை 'வேளாளர்' என்று அழைக்கும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் உண்டு.

இந்தியச் சிந்தனை மரபில் ஒரு மரபாகிய வேத மரபு (வைதீக மரபு) மண்ணைக் கீறுவதைப் பாவம் என்றது. ஆனால் தமிழ் மரபோ “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றது. கம்பர் தன் பாட்டில் “மேழி பிடிக்கும் கை, வேல் வேந்தர் நோக்கும் கை” என்று விவசாயியின் கை பிடித்து நடக்கிறார். இந்தப் பார்வைக்குக் காரணம் தமிழர்களின் வேளாண்மைப் பண்பாடுதான். தமிழர்கள் நீண்ட காலமாகவே ஒரு இடத்தில் தங்கி விவசாயம் செய்யும் வாழ்வை நடத்திவந்தார்கள். நீண்டநாள் வாழ்ந்து-படிந்த வாழ்க்கை முறைதான் பண்பாடாக மாறும். அதனால்தான் வாழ்ந்த நிலப்பரப்பை அதன் தன்மைக்கு ஏற்றபடி திணை மண்டலங்களாகப் பிரித்து, இலக்கணப் படுத்தியவர்களும் தமிழர்கள்தான். அதன் விளைச்சலால்தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலமாகப் பிரித்தனர்.
குறிஞ்சி நில வேளாண்மை உழாமல் நடப்பது. மிகப்பழைமையான முறை இது. (இதையே சிறந்த வேளாண்மை என்பார் இயற்கை வேளாண்மையின் தந்தையான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசானோபு ஃபுகோக்கா) இங்கு வெண்ணெல்லும் தினையும் விளைந்தன. முல்லை நிலத்தில்தான் முதலில் கலப்பை வருகிறது. அது எளிய கலப்பை. மருதநிலக் கலப்பை பெரியது. மருதநிலத்தில் ஆழமாகவும் அகன்றும் உழ வேண்டிய தேவை வந்தது. அதனால் அந்தக் கலப்பை பெண் யானையின் வாயைப்போன்று மடிந்தும் அகன்றும் இருந்ததாகவும், அதை இழுக்கும் வேலையை வலிமையான பகடுகள் எனப்படும் மாடுகள் செய்ததாகவும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. மருத நிலத்தில் வேளாண்மை விரிவானதாக மாறுகிறது. அதிக விளைச்சலைச் சேர்த்துவைக்க பெரிய குதிர்கள் வருகின்றன. ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் விளைந்ததாக பொருநர் ஆற்றுப்படை பேசுகிறது.
“சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக” என்று.
இதையே நம் ஔவைக் கிழவி
“உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்கிறாள்.
இந்த இலக்கியங்களின் காட்சி மொழிதான் உயர்ந்த இடத்தில் விவசாயி இருந்ததற்கான சாட்சி மொழி. இந்த உயர்ந்த விவசாயி 'கடைசி விவசாயி' ஆகிப்போனதுதான் இன்றைய நம் சோகம்.

அரிசியை உலகத்திற்கு அறிமுகம் செய்தவர்கள் தமிழர்களே. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் வழியாகவே ஐரோப்பாவுக்கு அரிசி சென்றுள்ளது. இங்கு வந்த அரேபிய வணிகர்கள் மூலமாகவே அரிசி கீழ்த்திசை மேல்திசை நாடுகளிலெல்லாம் பொங்கியது. அரிசி என்ற தமிழ்ச் சொல் பிற மொழிகளில் எப்படிப் புழங்குகிறது என்பதே நமக்கு இந்த உண்மையைச் சொல்லும். அரபி - அல்ருஸ்; ஸ்பானிஷ் - அராஸ்; இத்தாலி - ரைசே; பிரெஞ்சு - ரிஸ்; ஜெர்மனி - ரெய்ஸ்; ஆங்கிலம்-ரைஸ். இப்படி அரிசியைப் பின்தொடர்ந்தால் 3000 ஆண்டுகள் பழைமையான தமிழர்களின் 'ஊர் - நகர நாகரிகத்தை' நம்மால் அடையாளம் காண முடியும். அதன் ஒரு காலடிதான் கீழடி.
பயிரின் உயிர்போன்றது மண்ணும் நீரும். தமிழ் மக்களின் நீர் குறித்த அறிவு நம்மை மலைக்கவைக்கும். நீரின் ஆதாரம் எது என்ற கேள்விக்கு அரிஸ்டாட்டில் பிளாட்டோ போன்ற அறிஞர்கள் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் காரணம் என்றும் அதை நிலம் உறிஞ்சி மேலே கொண்டுவந்து ஆறாக ஓடவிடுவதாக நம்பினார்கள். இதுதான் கி.பி.1500 வரை கிரேக்க அறிஞர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் நம் வள்ளுவரோ 2000 ஆண்டுகளுக்கு முன்பே “நீரின்றி அமையாது உலகு” எனச் சொன்னவர், அடுத்தவரியில் அந்த நீருக்கான ஆதாரம் மழை என்பதை ”வான் இன்று அமையாது ஒழுக்கு” என்கிறார். அதனால்தான் “வான்சிறப்பு” அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வைத்து மழையின் பெருமையில் உலகை நனையவைத்தார் வள்ளுவர். இளங்கோ அடிகளோ “மாமழை போற்றுதும்” என்பார். மழை பெய்வதற்கான அறிவியல் காரணத்தை, “வான்முகந்த நீர் மலைப் பொழியவும்; மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்” என்று பட்டினப்பாலை நீரின் சுழற்சியைப் பாடலாக்குகிறது.

மழை நீரைச் சேமிக்க வேண்டிய தேவை மலை பூமியாம் குறிஞ்சியில் இல்லை. அருவியும் சுனையும் அள்ளி அள்ளி நீரைத் தந்தன. காடுகள் சூழ்ந்த முல்லை நிலத்திலும் காட்டு மனிதர்களுக்குத் தேவையானதைக் காடு வாரி வழங்கியது. அவர்களின் தேவையும் மிகக் குறைவு. எனவே நீர்ப் பாசன முறை பற்றிய கவலை அவர்களுக்கும் இல்லை. வயல்களால் நிரைந்த மருதம் நிலத்திற்குத்தான் நீரின் தேவை அதிகம். அதனால் நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் முறையும்; ஆற்றின் போக்கைத் தடுத்து அதை விரும்பிய வகையில் தேவையான அளவு பயன்படுத்தும் தொழில் நுட்பமும் மருதநில மக்களின் தேவையாக மாறியது. இதன் விளைவுதான் மதகுகளும் கால்வாயும் வாய்க்காலும் அணைகளுமாகும். அப்படிக் கட்டப்பட்ட அணைதான் கல்லணை. கல்லணையை நாம் மிக விரிவாக இரண்டு கட்டுரைகளாக ’ஊறும் வரலாறு’ தொடரில் பார்த்துள்ளோம்.
ஆறுகள் அல்லாமல் நீரைச் சேகரிக்கக் குளங்களை வெட்டினர். 'குளம் வெட்டி வளம் பெருக்கி' என்ற தமிழ்த் தொடரே இதன் சாட்சியாகும். குளங்கள் மட்டுமல்ல, நீரைச் சேகரிக்கப் பல அமைப்புகளைச் சூழலுக்கு ஏற்ப அமைத்தனர். கேணி, ஏரி, ஓடை, கண்மாய், வாவி, தடாகம், குட்டம், அலந்தை, குண்டம், இலஞ்சி, கோட்டம், பல்வலம் என்று 30-க்கும் அதிகமான பெயர்களால் நீர் நிலைகளை அமைத்தனர். இவை எல்லாவற்றையும் நாம் பேச ஒரே காரணம், வேளாண்மை என்பதை விரிவான ஒரு தொழிலாக, வாழ்வாக, பண்பாகப் பார்த்த நிலம் மருதநிலம் என்பதைச் சொல்லவே.

அந்த மருத நிலத்தின் மடியில் பெரும்பகுதி தவழும் ஊர்தான் திருச்சி. காவிரியை அகண்ட காவிரியாக வரவேற்கும் அதிர்ஷ்டம் அமைந்த பூமி திருச்சியுடையதாகும். காவிரியின் சகோதரியான கொள்ளிடம் பிறந்த இடமும் திருச்சிதான். தமிழர்களின் பழைமையான விவசாயத்தின் எல்லாக் கூறுகளையும் நம்மால் திருச்சி மாவட்டத்தில் பார்க்கமுடியும். அதைப்போலவே நவீன வேளாண்மை வளர்ச்சிக்கு வாய்ப்பளித்த ஊரும் திருச்சியாகும்.
பழைய திருச்சி மாவட்டத்தின் முசிறி குளித்தலை தொடங்கி தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்கள் முழுதாகச் சேர்ந்து, சிதம்பரம் காட்டுமன்னார்குடி வட்டங்கள் சேர அதனோடு அறந்தாங்கி வட்டமும் சேரும்போது, இருபது லட்சம் ஏக்கர் கொண்ட சமவெளியாக அது விரிந்துள்ளது புரியும். இந்தப் பரந்த சமவெளி முழுவதும் காவிரிப்பாசனச் சாகுபடி மண்டலத்தில் உள்ளது. இவ்வளவு பெரிய தொடர் சமவெளி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. ஐந்து நதிகள் பாயும் பஞ்சாபில்கூட இவ்வளவு பெரிய 'தொடர் சமவெளி' கிடையாது. இம் மாபெரும் சமவெளி தமிழர்களுக்கு இயற்கை வழங்கிய கொடை. இந்தக் 'காவிரி சமவெளியின்' முக்கியப் பகுதிதான் திருச்சி மாவட்டம்.
பழைய திருச்சி மாவட்டத்தின் மண்வளத்தை நாம் நெரிந்து கொள்ளலாம். காவிரிக்கரையை ஒட்டிய பகுதிகள் கரிசல்மண் - களிமண் நிரம்பியவை. லால்குடி, மணச்சநல்லூர், அந்தநல்லூர் பகுதிகள் பெரும்பாலும் மணல் கலந்த பூமி. கரூர், அரியலூர், மணப்பாறைப் பகுதிகள் பெரும்பாலும் செம்மண் நிலமாகும். துறையூர், பெரம்பலூர்ப் பகுதிகள் கருமண் பூமியாகும். மூன்று வகையான விவசாயம் இங்கு நடக்கிறது. அவை: 1. பணப்பயிர், 2. தோட்டப்பயிர், 3. பூக்கள்.
காவிரியை ஒட்டிய இடங்களில் நெல், வாழை, கரும்பு, தென்னை, கோரை போன்ற பயிர்கள் விளைகின்றன. காவிரியைத் தாண்டியுள்ள பகுதிகளில் எள், கடலை, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகள் விளைகின்றன. மேலும் பரவலாக சோளம், கம்பு, வரகு, சாமை, மொச்சை, கொண்டகடலை, கருஞ்சோளம் போன்ற சிறு தானியங்களும் விளைகின்றன. மாவட்டத்தின் மொத்த நிலப்பகுதி 10,99,011 ஹெக்டேராகும். 67,722 ஹெக்டேரில் அமைந்துள்ள காடுகள் பெரும்பாலும் பெரம்பலூர், துறையூர்ப் பகுதிகளில் உள்ளன. சாகுபடிக்கேற்ற நிலப்பரப்பு 5,74,911 ஹெக்டேராகும். இதில் நெல் 1,04,907 ஹெக்டேரில் விளைகிறது. மணச்சநல்லூர்ப் பொன்னி சுவைமிகுந்த ஓர் அரிசி வகையாகக் கருதப்படுகிறது.
கனகாம்பரம், மல்லிகை, ரோஜா, சாமந்தி, அரளி, மரிக்கொழுந்து, போன்ற மலர் வகைகள் திருச்சி புறநகர், மணப்பாறை, முசிறி, துறையூர், ஶ்ரீரங்கம் முதலிய இடங்களில் பயிரிடப்படுகின்றன. நச்சலூர் எதுமலை முதலிய இடங்களில் சிறந்த மலர் நர்சரிப் பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காட்டுக் கறிவேப்பிலை ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றது. ஶ்ரீரங்கத்தில் மிகப் பெரிய மலர்ச் சந்தை உள்ளது.
தமிழ் மக்களின் மங்கல வாழ்வோடு கலந்தது வெற்றிலை. காவேரிக் கரையில் அதன் சாகுபடி சிறப்பாக நடக்கிறது. கற்பூரவல்லி, வெல்லக்குடி, பச்சைக்குடி போன்ற வெற்றிலை வகைகள் முக்கியமானவை. முசிறி, தொட்டியம், புகளூர், பாண்டமங்கலம் பகுதிகளில் உற்பத்தியாகும் வெற்றிலை வெளிநாடுகளுக்கும் போகிறது. 1994-ல் சிறுகமணியில் வெற்றிலை ஆராய்ச்சிப் பண்ணை தொடங்கப்பட்டது.
தோட்டப் பயிர்களான மா, வாழை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, முந்திரி, மிளகாய், மிளகு போன்றவையும் காய் வகைகளான தக்காளி, வெண்டை, வெங்காயம், உருளை, பரங்கி, பூசணி, கத்திரி, பீட்ருட், துவரை, பீன்ஸ் இன்னும் பல காய்களும் விளைகின்றன. மொத்த விளைநிலத்தில் 20% நிலத்தில் தோட்டப்பயிர் வளர்க்கிறது. அரசுத் தோட்டப்பயிர் மையம் முதலைப்பட்டியில் 1978 முதல் இயங்குகிறது.
பட்டு உற்பத்திக்குத் தேவையான மல்பெரிச் சாகுபடி சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறுகிறது. உலக வங்கியால் பட்டு உற்பத்தித் திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாவட்டங்களில் திருச்சி மாவட்டமும் ஒன்று. கலிங்கம்பட்டி, காருக்காமடையில் மல்பெரி உற்பத்திப் பண்ணை உள்ளது.
பணப்பயிரான மரவள்ளி நீர்ப்பாசனம் குறைவாக உள்ள நிலங்களில் பயிரிடப்படுகிறது. ஓரளவு தண்ணீரே இதற்குப் போதுமானது. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி இதற்குப் பொருத்தமானது. சிப்ஸ் தயாரிக்கவும் ஜவ்வரிசி தயாரிக்கவும் பயன்படுகிறது. முசிறி, நொச்சியம், பெரம்பலூர் துறையூர்ப் பகுதிகளில் மரவள்ளிச் சாகுபடியை அதிகம் பார்க்கலாம்.
கரும்பு உற்பத்தியிலும் திருச்சி முக்கிய இடம் வகிக்கிறது. E.I.D பாரி, கோத்தாரி சர்க்கரை ஆலைகள் இங்குள்ளன. திருவளர்சோலையில் வளரும் பொங்கல் கரும்புகள் சுவையானவை. காந்தி மார்க்கெட்டில் இயங்கும் வெல்ல மண்டி தமிழ்நாட்டின் பெரிய மண்டிகளுள் ஒன்று.
காவிரியை ஒட்டிய நிலங்களில் நெல்லுக்கு இணையாக வாழை பயிரிடப்படுகிறது. செவ்வாழை, நேந்திரம், ரஸ்த்தாளி, பூவன், கற்பூரவள்ளி, நெய்பூவன், ஏலரசி என்று பல சுவையான வாழைகள் விளையும் பூமி இது. நேந்திரம் கேரளாவுக்கு அதிகம் அனுப்பப்படுகிறது. ஒருகாலத்தில் கூலி வேலை செய்வோரின் காலை உணவே இதுதான். செவ்வாழை வாழைகளின் அரசன்.
வேளாண்மை விரிவாக்கத்தில் விவசாயத்துறையின் பங்களிப்பு முக்கியமானது. நிலம் மற்றும் நீரின் தகுதியை விவசாயிகளுக்கு உறுதியளிப்பதும் மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வழிகளைச் சொல்லித் தருவதும் இதன் முக்கியப் பணியாகும். காலத்திற்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்ய விவசாயிகளுக்குத் துணை நிற்பதும் விவசாயத்துறையே. விவசாயக் கடன் மற்றும் மானியம் தொடர்பான வழிகாட்டலையும் விவசாயிகளுக்கு இந்தத் துறைதான் வழங்குகிறது. நீர் வளம் அதிகமில்லாத வயல்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் கிடைக்கவும் உதவுகிறது. மேட்டுப்பாங்கான நிலங்களை பயிர் செய்வதற்கு வசதியாக மாற்றிப் பக்குவப்படுத்தித் தருவதும் இவர்களே. ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் நிலங்களைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதும் விவசாயத்துறைதான்.
நவீன வேளாண்மை, தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. உற்பத்தியை அதிகமாக்க பலவிதமான உரங்களும் பூச்சிக் கொல்லிகளும் வேளாண்மைக்குள் வந்தன. அதைப் பசுமைப் புரட்சி என அழைத்தோம். அந்தப் பசுமைப் புரட்சி இன்று பெரிய விவாதப்பொருள் ஆகியுள்ளது. நம்மாழ்வார் வலியுறுத்திய இயற்கை விவசாயம் இன்று அரசாலும் ஏற்கப்படும் ஒன்றாக மாறிவருகிறது. பாரம்பர்ய நெல் விதைகளைப் பாதுகாத்துப் பரவலாக்கிய நெல் ஜெயராமன் மக்களால் கொண்டாடப்பட்டதை அவரின் மரணத்தின்போது காணமுடிந்தது.
வேளாண்மை வளர்ச்சியில் பல அரசு நிறுவனங்கள் திருச்சி மாவட்டம் முழுதும் செயல்படுகின்றன.

1. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம். திருச்சி - திண்டுக்கல் சாலையில் நவலூர்குட்டப்பட்டு கிராமத்தில் 60 ஹெக்டேர் பரப்பளவில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முதல் வேளாண்மை அறிவியல் நிலையம் இதுதான். குமரப் பெருமாள் வேளாண் அறிவியல் நிலையமாக 1977-ல் தொடங்கியது இது. வேளாண்மைப் பல்கலைக் கழகத்தோடு இணைந்த இந்தக் கல்லூரி களர் நிலங்களுக்கேற்ற பயிர்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற கல்லூரியாகும்.
2. கரும்பு ஆராய்ச்சி நிலையம் – சிறுகமணி கிராமத்தில் இந்த நிலையம் 1959 முதல் செயல்பட்டுவருகிறது. திருச்சி மாவட்டத்தின் நிலத் தன்மைக்கு ஏற்ற பல புதிய கரும்பு ரகங்களையும் சாகுபடி நுட்பங்களையும் அறிமுகப்படுத்துகிறது.
3.தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – போதாவூரில் அமைந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பரவும் வாழைச் சாகுபடிக்கு உதவுவதற்காக ஒன்றிய அரசால் 1993-ல் தொடங்கப்பட்டது இது. பல வகையான வாழைகளின் மரபணுக்களைச் சேகரித்து, ஆராய்ச்சிக்காக ஒரு கருவூலம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
4. வேளாண்மைப் பொறியியல் கல்லூரி. லால்குடிக்கு அருகில் உள்ள குமுளூரில் 1992 முதல் செயல்படத் தொடங்கியது. நவீன வேளாண்மைக்குத் தேவையான இயந்திரங்களை உருவாக்குவதிலும் இயக்குவதற்குப் பயிற்சி தருவதிலும் இக்கல்லூரி முக்கியப் பங்காற்றுகிறது. கோவையை அடுத்து தொடங்கப்பட்ட இதில், நீர்ப்பாசனம், சாகுபடி, கருவிகள், தொழில் நுட்பம் ஆகியவற்றில் இங்கு ஆராய்ச்சி நடக்கிறது.

கால்நடை வளர்ப்புத்துறை, கால்நடை மருத்துவப் பிரிவு, ஆடு வளர்ப்பு கூட்டுறவு சங்கங்கள், கோழி வளர்ப்பு ஆராய்ச்சி மையம், பன்றி வளர்ப்பு, வாத்து உற்பத்தி போன்ற நடவடிக்கைகளில் அரசும் சில தனியாரும் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். பால் உற்பத்தியில் 430 பால் உற்பத்தி சங்கங்கள் இணைந்துள்ளன.
திருச்சி மாவட்ட நீர்ப் பாசனம்:
இம்மாவட்டத்தின் நீர்ப் பாசனம் பெரும் பகுதியும் காவிரியைச் சார்ந்தும், ஏரி குளங்களை நம்பியும், போர் வெல் பாசனமாகவும் உள்ளது. காவிரியை ஒட்டி 2000 கிளை வாய்க்கால்கள் அமைந்துள்ளன. தென்னிந்திய பாசனத்தின் தந்தை என்று போற்றப்பட்ட சர் ஆர்தர் காட்டன் 1836-ல் முக்கொம்பில் மேலணையைக் கட்டினார். இதைத் தொடர்ந்து 1929-34 ஆண்டுகளில் மாயனூருக்கு அருகில் கட்டளை கிராமத்தில் காவிரியில் ஒரு கிளை வாய்க்கால் திறக்கப்பட்டது. இதிலிருந்து கட்டளை பெருவாய்க்கால், தென்கரை வாய்க்கால், கட்டளை உயர் வாய்க்கால் போன்ற வாய்க்கால்கள் மூலம் 80,000 ஏக்கர் பாசனம் பெற்றது.
திருச்சி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறுகளைப் போலவே இன்னும் சில முக்கியமான ஆறுகள் உண்டு. உய்யக்கொண்டான் ஆறு, கோரையாறு, குடமுருட்டியாறு, அரியாறு, ஐயாறு, குண்டாறு ஆகிய ஆறுகள் திருச்சியில் பாய்கின்றன.
1947-49 ஆண்டில் ஜேடர்பாளையம் பிரிவு திறக்கப்பட்டு இதன் மூலம் இராஜ குமாரபாளையம் வாய்க்கால் புகழூர் வாய்க்கால் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மணப்பாறை வட்டத்தில் முகவனூர் கிராமத்தில் பொன்னி ஆறு நீர்த்தேக்கம் 1975-ல் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் புதிதாகப் பாசனவசதி பெற்றன. புலிவலம் மற்றும் ஓமாந்தூர் பெரிய ஏரிகளில் உற்பத்தியாகும் உப்பாறு லால்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தில் கொள்ளிடத்தில் கலக்கிறது. மெயின்ஜாக்குறிச்சிக் காட்டில் உற்பத்தியாகும் கட்டையாறு, சண்முகாநதி இங்கு உப்பாற்றில் சேர்கிறது. இவ்விடத்தில் 1986-ல் ஒரு நீர்த்தேக்கம் கட்டப்பட்டு 1785 ஏக்கர் பாசன வசதி பெற்றது. சித்தமல்லி ஓடையில் ஒரு நீர்தேக்கம் 1990-ல் உருவாக்கப்பட்டு 5,080 ஏக்கர் நிலம் புதிதாக பாசன வசதி பெற்றது. காவிரி டெல்டாவில் 17 கால்வாய்கள் ஜேடர்பாளையத்திலிருந்து கல்லணை வரையில் உள்ளன. இவற்றில் கல்லணைக் கால்வாய் புள்ளம்பாடி கால்வாய்களைத் தவிர ஏனையவை 11 மாதங்கள் நீர்வரத்தைக் கொண்டுள்ளன.
புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கத்தில் கி.பி 785-ல் ஆண்ட நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த ஏரியை “மார்பிடுகு ஏரி” என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இந்த ஏரியே பிறகு முதலாம் பராந்தகச் சோழனால் மதுராந்தகப்பேரேரி என அழைக்கப்பட்டது. திருச்சி-குண்டூரில் ஆதித்த சோழன் காலத்தில் குண்டூரைச் சேர்ந்த மாறன் குலாவன் என்பவனால் வெட்டப்பட்ட குண்டூர் ஏரி வழியாகவே இன்றும் பாசனம் நடைபெறுகிறது. துவாக்குடி ஏரியில் குமிழி அமைத்த பேரரையனுக்கு நிலம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இவ்வூர் துழாய்க்குடி என அழைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர் மலைக்கோயில் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச ‘உத்தமசீலி வாய்க்கால்’ வெட்டப்பட்டது. முதலாம் பராந்தகனின் மகன் பெயர் உத்தமசீலியாகும்.
பெரிய ஆறுகளிலிருந்து பாசனத்திற்காகக் கிளை ஆறுகள் வெட்டப்பட்டன. கிளை ஆறுகளின் தலைப்பு 'வாய்த்தலை' எனப்பட்டது. காவிரிக்கரையில் உள்ள பல ஊர்கள், ‘சித்தலைவாய்’, ‘பேட்டைவாய்த்தலை’, ‘வாத்தலை’ என்று அழைக்கப்பட இதுவே காரணம். பேட்டைவாய்த்தலை என்ற ஊரிலிருந்துதான் உய்யக்கொண்டான் வாய்க்கால் உருவாகிறது. ராஜ ராஜனுக்கு உய்யக்கொண்டான் என்ற சிறப்புப் பெயர் உண்டு. பிறகு ராணி மங்கம்மாள் இதைச் சீர் செய்துள்ளார். இன்றைய முசிறி சோழர் காலத்தில் ‘மும்முடி சோழப்பேட்டை’ என்று அழைக்கப்பட்டது. இங்கு அமைந்த வாய்த்தலையை 'வெட்டுவார் நாயன்'அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. அல்லூரில் கிடைத்த கல்வெட்டு “தலைவார் சான்றோர்” என்று நீர்ப்பாசனப் பணிகளைக் கண்காணித்தவர்களைக் குறிப்பிடுகிறது. திருவெறும்பூர் அருகில் உள்ள சோழமாதேவி கல்வெட்டில் 'உய்யக்கொண்டான் ஆற்று வாரியம்' என்ற அமைப்பைக் குறித்துள்ளனர். ஏரிகளைப் பராமரிக்க ஏரிப்பட்டி என்ற நிலம் தானமாக அளிக்கப்பட்டது. காவிரிக்கரையை 'கரிகாலக்கரை' என்றே அழைத்தார்கள். இப்படி திருச்சியின் வேளாண்மைக்கு பெரிய சரித்திரப் பெருமிதமும் சான்றுகளும் உண்டு.
திருச்சி மக்களின் வாழ்வோடு கலந்த முதன்மையான தொழில் விவசாயம்தான். இந்திய விவசாயிகள் சந்திக்கும் எல்லாச் சிக்கலையும் இவர்களும் சந்திக்கிறார்கள். விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை. குறைந்தபட்ச விலையை முடிவுசெய்வதில்கூட அரசு மெத்தனமாக உள்ளது. ஆறுகள் சாக்கடைகளாக மாறி 'இறந்த ஆறுகள்' உருவாகிவிட்டன. பெருமழைக் காலங்களில் கிடைக்கும் அதிக தண்ணீரைச் சேமிக்கும் வலுவான திட்டம் எதுவும் இல்லை. ரசாயன உரங்களால் நிலம் மலடாவதைத் தடுக்கமுடியவில்லை. இடுபொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது.
இப்படி எத்தனையோ சிக்கல்களை வேளாண்மை சந்திக்கிறது. ஐயா நம்மாழ்வார் இறந்தபோது, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வானகம் போயிருந்தோம். திரண்ட கூட்டத்தில் ஜீன்ஸ் பேன்டும் டீ ஷர்ட்டும் போட்ட ஏராளமான இளைஞர்களை யுவதிகளைப் பார்க்கமுடிந்தது. அந்த இளைய முகங்களில் பட்டுத் தெறித்த ஆழ்ந்த கவலைதான் எதிர்கால வேளாண்மையின் நம்பிக்கைக் கீற்று.