வனத்துக்குள் திருப்பூர்... 8 ஆண்டுகளில் 14 லட்சம் மரக்கன்றுகள் தொடரும் பசுமை சேவை!

வனம்
திருப்பூர் என்று சொன்னாலே... பின்னலாடை நிறுவனங்களும், சாயப் பட்டறைகளும்... இவற்றால் ஏற்பட்டுள்ள காற்று மற்றும் தண்ணீர் மாசு ஆகியவைதான் நினைவுக்கு வரும். இந்நிலையில்தான் ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற திட்டத்தின் மூலம் இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்களை வளர்த்து, திருப்பூரைப் பசுமை மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இப்பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், வெற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைருமான சிவராம். பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான அமைப்புதான் இது. தற்போது இதன் பணிகள் எப்படி உள்ளன என்று அறிய நேரில் சென்றோம். பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பதைக்காட்டிலும், மரம் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளின் நிலங்களில் கன்றுகள் நடவு செய்து கொடுத்தால், அவை அக்கறையுடன் பராமரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் என்பது இவருடைய நம்பிக்கை. இதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கடந்த 7 ஆண்டுகளில் பல விவசாயிகளின் நிலங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவை நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் முறையாகப் பராமரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவது கூடுதல் சிறப்பு.

இதுகுறித்து விரிவாகப் பேசினார் சிவராம், “தமிழ்நாட்டுல மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது, திருப்பூரோட சுற்றுச்சூழல் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டுருக்கு. இதைச் சரி செய்யதான் முதல்கட்ட நடவடிக்கையா மரம் வளர்ப்பை கையில எடுத்தோம். நான் தலைவரா பொறுப்பு வகிச்சுக்கிட்டு இருக்குற வெற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தோட ஒரு திட்டம்தான் வனத்துக்குள் திருப்பூர். முதல் கட்டமா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோட நினைவா 1 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்யலாம்னு திருப்பூர்ல 2015-ம் வருஷம் நடந்த அப்துல் கலாம் அஞ்சலி கூட்டத்துல முடிவெடுத்தோம்.

அதை எங்க நடலாம்னு எங்களோட வெற்றி தொண்டு நிறுவனத்தோட நிர்வாகிகள் ஆலோசிச்சோம். பொதுவா சுற்றுச்சூழல் அமைப்புகள், சாலையோரங்கள்ல மரங்கள் நடுறதுதான் வழக்கம். ஆனா, திருப்பூரைப் பொறுத்தவரைக்கும் அது சாத்தியமில்லை. காரணம், இங்க வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகம். எப்ப வேணும்னாலும் சாலை விரிவாக்கம் நடக்க வாய்ப்புண்டு. சாலையோரத்துல மரக்கன்றுகளை நடவு செஞ்சோம்னா, அதைப் பெரிய மரங்களா வளர்த்தெடுக்குறதுக்கான உத்தரவாதம் கிடையாது. கோயில், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மாதிரியான பொது இடங்கள்ல மரக்கன்றுகளை நட்டோம்னா, அதை முறையா பராமரிச்சு, பாதுகாக்கக்கூடியவங்க அங்க இருப்பாங்கனு உறுதியா நம்ப முடியாது.

இதனாலதான் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை விவசாயிகள் மூலம் நடைமுறைப் படுத்த முடிவெடுத்தோம். நாங்கள் நடவு செஞ்சு கொடுக்குற மரக்கன்றுகளை, கால்நடைகள் மேயாமல் பார்த்துக்கணும். முறையா தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கணும்... இதுதான் விவசாயிகள்கிட்ட நாங்க வச்ச முதன்மை யான கோரிக்கை. அதுக்கு விவசாயிங்க முழு மனசோடு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. நாங்களே குழி எடுத்து, கன்றுகளையும் நடவு செய்து கொடுத்துடுவோம்னு சொன்னதால, விவசாயிங்க சந்தோஷமா சம்மதம் தெரிவிச் சாங்க. கன்றுகள் நல்லா வளர்ந்து, பெரிய மரங்களாக முதிர்ச்சி அடைஞ்சு எதிர் காலத்துல அறுவடைக்கு வரும்போது கணிசமான வருமானம் கிடைக்கும்ங்கற நோக்கத்துனாலயும் பலர் இதுல ஆர்வம் காட்டினாங்க.
மரக்கன்றுகளைப் பல கிராமங்களுக்கும் எடுத்துக்கிட்டுப் போகுறதுக்கு வாகன வசதிகள் தேவைப்பட்டுச்சு. திருப்பூரில் உள்ள தொழிலதிபர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவங்க உடனடியா 30 டிராக்டர்களை விலைக்கு வாங்கி எங்களோட அறக்கட்டளைக்கு நன்கொடையா கொடுத்தாங்க. டீசல் செலவையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க.

இத்திட்டத்தைத் தொடங்கினப்ப அதிக எண்ணிக்கையில தரமான மரக்கன்றுகள் எங்களுக்குக் கிடைக்குறதுல சில சிரமங்கள் இருந்துச்சு. அதனால தமிழக வனத்துறையில இருந்து கன்றுகள் வாங்கினோம். 1 லட்சம் மரக்கன்றுகளை நட 120 நாள்கள் திட்ட மிட்டிருந்த நிலையில், 90 நாள்களிலேயே 1.35 லட்சம் மரக்கன்றுகள் நட்டோம். அதுக்கான நிறைவு விழாவுக்கு வந்தவங்க எங்களோட சேவையைப் பாராட்டின அதேசமயம், ‘மரக்கன்றுகள் நடுறதுக்கு எதுக்கு நிறைவு விழா... இதைத் தொடர்ச்சியா செய்யுங்க. நாங்க, எங்களால முடிஞ்ச உதவி களைச் செய்றோம்’னு சொன்னாங்க. அவங்க தந்த உற்சாகத்தால அந்த நிறைவு விழாவுல ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட் டோம். இது வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 2-க்கான தொடக்கவிழா... திருப்பூரைப் பசுமையாக்குற பணியைத் தொடர்வோம்னு அறிவிச்சோம்.
வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை வெற்றிகரமா செயல்படுத்துறதுக்காக முறை யான திட்டமிடல்களைக் கட்டமைச்சோம். ஒவ்வொரு வருஷமும் தென்மேற்குப் பருவமழை தொடங்குறப்ப மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வடகிழக்குப் பருவமழை முடியுறப்ப முடிச்சிடுவோம். 6 மாதம் நடவு பணி, 6 மாதம் பராமரிப்பு பணி செய்றதை வழக்கமா வச்சிருக்கோம்.

வனத்துக்குள் திருப்பூர் திட்டம் 1-ல் நடப்பட்ட பெரும்பாலான மரக்கன்றுகள் நல்லா வளர்ந்து பெரிய மரங்களா ஆயிடுச்சு. விவசாயிகளுக்கு எதிர்காலத்துல வருவாய் தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டுக் கொடுக் குறதுனால, அவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கு. சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் உகந்ததாக இருக்கு. சந்தனம், தேக்கு, வேம்பு, செம்மரம், இலுப்பை, புங்கன் உட்பட இன்னும் சில வகையான மரக்கன்றுகளை நடவு செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கோம். விவசாயிங்க, ரொம்ப ஆர்வமாவும் கண்ணும் கருத்துமாவும் பராமரிக்குறாங்க.
களப்பணிகளை மேற்பார்வை செய்ய... திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம் பகுதிகள்ல, கள மேலாளர்கள் நியமிச் சிருக்கோம். மரங்கள் வளர்க்க விருப்பப்படும் விவசாயிகள் ‘90470 86666’-ங்கற செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டால், எங்களோட கள மேலாளர் நேர்ல போயி, அந்த விவசாயியோட நிலத்தைப் பார்வை யிடுவார். நிலத்தைச் சுற்றிலும் வேலி இருக்கா, மண் வளம், நீர் வளம் நல்லா இருக்கா, நில உரிமையாளருக்கு மரம் வளர்ப்புல முழுமையான ஈடுபாடு இருக்கானு ஆய்வு பண்ணுவார். இதெல்லாம் சரியா இருந்தா, அந்த விவசாயியோட மண்ணுக்கு ஏத்த மரக்கன்றுகளை நட்டுக் கொடுப்போம்.

இந்தத் திட்டத்தை 100 சதவிகிதம் வெற்றி கரமா செயல்படுத்தணும்கிறதுனால, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை இதுக்குப் பயன்படுத்துறோம். இதுக்குனு ஒரு தனிச் செயலி (மொபைல் ஆப்) உருவாக்கியிருக்கோம். அதுல விவசாயிகளோட பெயர், முகவரி, நிலத்தோட விவரம், என்னென்ன வகையான மரங்கள், எவ்வளவு எண்ணிக்கையில நடவு செய்யப்பட்டுருக்குங்கற விவரங்களைப் பதிவு செய்றோம். இதை ஜி.பி.எஸ் மூலமும் கண்காணிக்கிறோம். மரக்கன்றுகள் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கு, பாதிப்பு ஏற்படாம இருக்கானு ஒவ்வொரு வருஷமும் தனியார் நிறுவனம் மூலம் தணிக்கை செய்றோம்.
நாங்க நட்டுக் கொடுத்த மரக்கன்றுகள் வளர்ந்து பெரிய மரங்களா வளர ஆரம்பிச்சதும், பறவைகளோட வருகை அதிகமாகி, அதுங்களோட எச்சத்துனாலதான் புது வகையான மரங்கள், செடி, கொடிகள் எல்லாம் உருவாகி இருக்கு. சிலந்தி, பாம்பு, கீரி, ஓணான் உட்பட இன்னும் பலவிதமான உயிரினங்க வந்துருக்கு. நாங்க மரக்கன்றுகள் நட்டுக் கொடுத்த நிலங்கள், பல்லுயிர்களோட வாழ்விடமா மாறிக்கிட்டு இருக்கு, வனத் துக்குள் திருப்பூர் திட்டம் மூலம், வருஷத் துக்குக் குறைந்தபட்சம் 2 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யணும்னு திட்டமிட்டுருந்தோம். எங்களோட இலக்கு நிறைவேறி இருக்கு. 2015-ம் வருஷத்துல தொடங்கி, இப்ப 2022-ம் வருஷம் வரைக்கும் மொத்தம் 14 லட்சம் மரக்கன்றுகள் நடவு செஞ்சிருக்கோம்.
திருப்பூர் தொழிலதிபர்களோட ஒத்துழைப்பு, வெற்றி தொண்டு நிறுவன களப் பணியாளர்களோட அர்ப்பணிப்பு, விவசாயிகளோட ஈடுபாடு... இதெல்லாமே ஒரு சேர அமைஞ்சதுனாலதான், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் வெற்றிகரமாகச் செயல் பட்டுக்கிட்டு இருக்கு’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் சிவராம்.
தொடர்புக்கு,
செல்போன்: 90470 86666
இலவசமாக 2,000 மரக்கன்றுகளைக் கொடுத்தார்கள்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கணபதி பாளையத்தைச் சேர்ந்த தேவி வேலுசாமி ‘‘2015-ம் வருஷத்துல இருந்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். வனத்துக்குள் திருப்பூர் திட்டம் பத்தி, வாட்ஸ் அப் குழு மூலம் தெரிஞ்சுகிட்டேன். எங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்துல மரக்கன்றுகள் நடலாம்னு ஆசைப்பட்டு, வெற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை அணுகினேன். அவங்க எங்களோட நிலத்துக்கு நேர்ல வந்து மண் பரிசோதனை செஞ்சு பார்த்துட்டு... செம்மரம், சந்தனம், வாகை, மருது, நாவல் உட்பட 2,000 மரக் கன்றுகளை இலவசமாக நட்டுக் கொடுத்தாங்க. அப்பப்ப களப் பணியாளர்கள் வந்து மரக்கன்றுகளைப் பார்வையிட்டு, ஆலோசனைகள் சொல்வாங்க. ஊடுபயிரா வெங்காயம், தக்காளி உட்பட வேற சில பயிர்களும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன்.
எங்கள் நிலத்துல பாறைகள் அதிகம் இருக்கும். அதனால சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிங்க, எங்க நிலத்தைப் பாறைத் தோட்டம்னுதான் கிண்டலா சொல்வாங்க. ஆனா, மரக்கன்றுகளை நட்டு, செழிப்பா வளர ஆரம்பிச்சதுனால, தோட்டத்தோட அமைப்பே மாறிடுச்சு. ஒன்றரை வருஷத் துக்குள்ளயே நல்ல வளர்ச்சி. இதைப் பார்த்துட்டு எங்க பகுதியில உள்ள மற்ற விவசாயிகளும் மரங்கள் வளர்க்க ஆர்வமா இருக்காங்க’’ எனத் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அழகுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரம்யாதேவி, ‘‘வெற்றி தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலவசமா மரக்கன்றுகள் நட்டு கொடுக்கு றாங்கிறதை, நாளிதழ்கள் மூலம் தெரிஞ்சு கிட்டேன். என்னோட நிலத்துல மியாவாக்கி முறையில மரங்கள் வளர்க்க முடிவு செஞ்சு, வெற்றி அமைப்பை 2019-ம் வருஷம் தொடர்பு கொண்டேன். களப் பணியாளர்கள் வந்து என்னோட நிலத்தைப் பார்வையிட்டு... வேம்பு, நாவல், இலுப்பை, மந்தாரைனு
2,000 மரக்கன்றுகளை இலவசமாக நட்டுக் கொடுத்தாங்க. இந்த மரக்கன்றுகள் வளர்ந்து உயிர்வேலியாகவும், காற்றுத் தடுப்பானகவும் பயன்படுது. எங்க பகுதியில அதிகமா பறவை களைப் பார்க்க முடியாது. ஆனா, என்னோட தோட்டத்துல மரக்கன்றுகள் வளர ஆரம்பிச்ச பிறகு, இங்க நிறைய பறவைகள் வர ஆரம்பிச்சிருக்கு’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.