ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

7 விதமான தக்காளி, 16 விதமான கத்திரி, 160 வகையான மரங்கள்... 5 ஏக்கரில் உணவுக்காடு!

உணவுக்காட்டில்
பிரீமியம் ஸ்டோரி
News
உணவுக்காட்டில்

பண்ணை

‘வள்ளுவம் வாழ்வியல் நடுவம்’ திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பில், இயற்கை வேளாண்மையால் செழித்தோங்குகிறது இந்தப் பண்ணை. உணவுக்காடு, குறுங்காடு, ஐந்தடுக்குப் பண்ணையம் எனப் பலவிதமான பெயர் களில் அழைக்கப்படும், இப்பண்ணையில் பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்வதோடு, இயற்கை வேளாண்மைக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, வெற்றிமாறன் என்ற இளைஞரின் உன்னத முயற்சியாலும் உழைப்பாலும், இந்தப் பண்ணையம் உருவெடுத்துள்ளது.

பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் வெற்றிமாறன்
பண்ணையில் விளைந்த விளைபொருள்களுடன் வெற்றிமாறன்

ஒரு பகல்பொழுதில் இந்தப் பண்ணை யத்தைப் பார்வையிடச் சென்றோம். எலுமிச்சை, நார்த்தங்காய் மரங்களில் காய்கள் பறித்துக்கொண்டிருந்த வெற்றிமாறன், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்று பேசினார். ``இயற்கை விவசாயத்துல விளைஞ்ச காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுறதே ஒரு அலாதியான சந்தோஷம். அதுலயும் பறிச்சவுடனே சமைச்சு சாப்பிறதுங்கறது, இரட்டிப்பு சந்தோஷம்’’ என ஆத்மார்த்தமாகப் பேசிய வெற்றிமாறன், தனது இயற்கை விவசாய அனுபவ பயணம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

பண்ணையில்
பண்ணையில்

“நான் கோயம்புத்தூர்ல எம்.பி.ஏ படிச்சுட்டு, தனியார் வங்கியில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பெல்லாம் எனக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தின எந்தப் புரிதலும் கிடையாது. இந்தச் சூழல்லதான், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எழுதின, ‘இனி விதைகளே பேராயுதம்’ என்ற புத்தகத்தைப் படிக்கக்கூடிய வாய்ப்பு யதார்த்தமா அமைஞ்சது. அந்தப் புத்தகத்தினால ஏற்பட்ட தாக்கம், நம்மாழ்வார் அய்யாவை நேர்ல சந்திச்சு விரிவா பேசணும்னு ஆசைப்பட்டேன். அடுத்த வாரமே கரூர் மாவட்டம் கடவூர்ல உள்ள வானகத்துக்குப் போய் அவரைச் சந்திச்சேன்.

பண்ணையில்
பண்ணையில்

அவரைச் சந்திச்ச பிறகு இயற்கை விவசாயத்து மேல இன்னும் தீவிரமான நேசிப்பு ஏற்பட்டுச்சு. இதைப் பத்தி பேசியே சந்தோஷம் அடைஞ்சுகிட்டு இல்லாமல், இதைப் பத்தி உடனடியான முழுமையா கத்துக்கிட்டு களத்துல இறங்கணும்னு முடிவெடுத்தேன். அங்க நடந்த இயற்கை விவசாயப் பயிற்சி முகாம்ல கலந்துகிட்டேன். அதைத் தொடர்ந்து, நம்மாழ்வார் அய்யாவோடவே தொடர்ச்சியா 6 மாதங்கள் பயணிச்சேன். நம்மாழ்வார் அய்யாவோட இறப்புக்குப் பிறகு, வானகத்துல பயிற்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். வானகம் மாதிரி, ஊர்தோறும் இயற்கை விவசாயப் பண்ணைகளை உருவாக்கி, அதுமூலமா, விவசாயிகள்கிட்டயும் பொது மக்கள்கிட்டயும் பரவலா இயற்கை விவசாயத்தைக் கொண்டு போகணும்னு நம்மாழ்வார் அய்யா அடிக்கடி சொல்வார்.

பண்ணையில்
பண்ணையில்

அதனால குளத்துப்பட்டியில் உள்ள எங்களோட பூர்வீக நிலமான இந்த 5 ஏக்கர்ல இயற்கை விவசாயப் பண்ணை அமைக்க முடிவு செஞ்சேன். பெரிய அளவுல முதலீடு செய்யாமல், இருக்குறதை வச்சுக்கிட்டு, படிப்படியா பண்ணையைக் கட்டமைக் கணும்னு தீர்மானிச்சேன். பல வருஷங்களுக்கு முன்னாடி, எங்களோட நிலத்துல நெல் சாகுபடி நடந்திக்கிட்டு இருந்துச்சு. அப்புறம் தண்ணி பற்றாக்குறை காரணமா சோளம், கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களைப் போட்டாங்க. அதுக்குப் பிறகு, ஒரு கட்டத்துல விவசாயம் கைவிடப்பட்டு நிலம் தரிசாதான் கிடந்துச்சு.

பண்ணையில்
பண்ணையில்

இந்த நிலத்துல இயற்கை விவசாயப் பண்ணை அமைக்கணும்னு முடிவெடுத் ததுமே, முதல்ல உயிர்வேலி அமைக்குறதுக்காக, நிலத்தைச் சுத்திலும் அகத்தியும் தேக்கும் நட்டேன். வெளியில இருந்து வீசக்கூடிய வெப்பக்காற்று, பண்ணைக்குள்ள உள்ள பயிர்களைப் பாதிக்காமல் இருக்க, உயிர்வேலி அவசியங்கறதுனால அதைச் செஞ்சேன். இவ்வாறு மிகவும் அரிய வகை மரங்களான காட்டு மா, தடசு, திருவோடு, ஆத்தி, கருமருது, வெண் மருது, திருவாட்சி, ருத்ராட்சம் நடவு செஞ்சு வளர்த்தேன். செம்மரம், சந்தனமரம், மகோகனி, மூங்கில் மரங்களையும் வளர்த்தேன்.

அதுக்கு அடுத்தபடியாகப் பழவகைகளான மா, கொய்யா, எலுமிச்சை, சீத்தா, பப்பாளி, நாவல், வாழை மரங்களையும், தென்னை மரங்களையும் உருவாக்கினேன். மொத்தம் 160 வகையான மரங்களை இங்க பயிர் பண்ணியிருக்கோம்.

காய்கறிச் சாகுபடி
காய்கறிச் சாகுபடி

அதுக்கு அடுத்தடுத்த அடுக்குகளா, பலவிதமான காய்கறிகள், மூலிகைச் செடி களையும் பயிர் செஞ்சேன். தக்காளியில் காட்டுத் தக்காளி, கருந்தக்காளி, காசி தக்காளினு மொத்தம் 27 வகை... கத்திரியில முள் கத்திரி, கீரிக்கத்திரி, வெள்ளை கத்திரினு மொத்தம் 18 வகைகள் பயிர் செஞ்சுகிட்டு இருக்கோம். சீனி அவரை, மூக்குத்தி அவரை, சிறகு அவரை, இலை பிரண்டை, உருட்டுப் பிரண்டை, சுண்டைக்காய், மெழுகு பீர்க்கை, மிதிபாகல், தம்பட்டை, வரி புடலை, பாம்பு புடலை உள்ளிட்ட கொடி பயிர்களைப் பயிர் செய்றோம். மஞ்சள், மல்லிகை, வாடா மல்லி உள்ளிட்ட பூ வகைங்க, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெற்றிலை, மரவள்ளினு இன்னும் பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்றோம். எல்லாப் பயிர்களையும் எல்லா நேரத்துலயும் பயிர் செய்ய மாட்டோம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாறிக்கிட்டே இருக்கும்.

பண்ணையில்
பண்ணையில்

2016-ம் வருஷம் இந்தப் பண்ணைக்கான பயணத்தைத் தொடங்கினேன். இப்ப செழிப்பான உணவுக்காடா உருவெடுத்துக் கிட்டு இருக்கு.

இந்தப் பண்ணையில உள்ள ஏராளமான மரம், செடி, கொடிகள்ல இருந்து உதிரக்கூடிய இலைதழைகள், இங்கயே பரவலா போட்டு, மூடாக்கா பயன்படுத்துறோம். இதனால் மண்ணுல ஈரப்பதம் பாதுகாக்கப்படுறதுனால, தண்ணி தேவை குறையுது. ஒரு முறை தண்ணி பாய்ச்சினா 20 நாள்களுக்குத் தாக்குப்புடிக்குது. பண்ணையைச் சுற்றி அகழியும், பண்ணைக் குள்ள குட்டைகளும் அமைச்சிருக்கோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிட்டே இருக்கு.

பண்ணையில்
பண்ணையில்

இந்தப் பண்ணையில இருந்து கிடைக்கக் கூடிய காய்கறிகள், பழங்களையெல்லாம் இங்க பயிற்சிக்கு வர்றவங்களுக்கும் எங்களோட சொந்த தேவைக்கும்தான் பெரும்பாலும் பயன்படுத்திக்கிறோம். எங்களோட தேவைக்குப் போக மிச்சமிருந்தால் அதை விற்பனை செய்வோம். இப்போதைக்கு இந்தப் பண்ணையில இருந்து குறைவான லாபம்தான் கிடைச்சுக்கிட்டு இருக்கு. வருங்காலத்துல லாபம் அதிகரிக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன். இந்தப் பண்ணையில பயிற்சிகளும் கொடுக்கிறேன்’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, வெற்றிமாறன்,

செல்போன் 95666 67708

பண்ணையில்
பண்ணையில்

வட்டப்பாத்தி முறையில் வீட்டுத்தோட்டம்!

‘‘இங்க பயிற்சிக்கு வரக்கூடியவங்ககிட்ட உயிர்வேலி அமைக்குறதோடு அவசியத்தை வலியுறுத்துறோம். பயிர் செய்றதுக்கு முன்னாடி மண்ணோட தன்மையை எப்படித் தெரிஞ்சுகிறது, மண், தண்ணீரோட கார, அமிலத்தன்மையை எப்படிக் கண்டுபிடிக்குறதுனு சொல்லிக் கொடுப்போம். அதுக்குப் பிறகு மண், தண்ணீர் தன்மைக்கு ஏற்ப என்னென்ன பயிர்களை எப்படியெல்லாம் சாகுபடி செய்யலாம்னு வழிகாட்டுவோம். மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யா, மீன் அமிலம், பழக்காடி, தேமோர் கரைசல் உட்பட இன்னும் பல வகையான இயற்கை இடு்பொருள்கள் தயாரிக்கவும் பயிற்சி கொடுக்குறோம்.

கால்நடைகள்

நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகளும் நிறைய வளர்க்குறோம். மாட்டு சாணத்துல இருந்து பயோ கேஸ் உற்பத்தி செஞ்சு சமையல் செய்யப் பயன்படுத்திக்கிறோம்.

பண்ணையில்
பண்ணையில்

மேட்டுப்பாத்தி

ரசாயன நச்சு இல்லாத ஆரோக்கியமான காய்கறிகளைச் சாகுபடி செய்ய, ஏக்கர் கணக்குல நிலம் தேவையில்லை. 24-க்கு 24 அடி அளவுல இடம் இருந்தாலே போதும். வட்டப்பாத்தி முறையில வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை உற்பத்தி செஞ்சிக்க முடியும். இதுக்கு உழவு செய்ய வேண்டிய அவசியம்கூட இல்லை. இதையும் எங்கள் பயிற்சி முகாம்ல வலியுறுத்துறோம்’’ என்கிறார் வெற்றிமாறன்.