வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 6-ம் ஆண்டு, உழவர் களஞ்சியம் நிகழ்ச்சி நாளை ஆரம்பமாகிறது. வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் கருத்தரங்கங்களுடன் நடைபெறும் இந்த வேளாண் கண்காட்சியானது டிசம்பர் 14, 15 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில், வேளாண்துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். அத்துடன் வேளாண்மை சார்ந்த செயல் விளக்கங்களும், வேளாண் பொருள்கள் கண்காட்சியும் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ICAR , நபார்டு, தமிழ்நாடு அரசு வேளாண்மை & உழவர் நலத்துறை மற்றும் பசுமை விகடன் ஆகியவை ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
98 அரங்குகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 வேளாண் பொருள் விற்பனை நிறுவனங்கள் கலந்துகொள்ளும் இந்தக் கண்காட்சியில் தேன், ஆயுர்வேதம், விதைகள், எண்ணெய் முதற்கொண்டு தென்னை நார் உட்பட நீர்ப்பாசனம், மூங்கில் கைவினைப் பொருள்கள், சிறுதானியங்கள் வரை அனைத்து வேளாண் சார்ந்த பொருள்கள் இந்தக் கண்காட்சி அரங்குகளில் இடம் பெறுகின்றன.
அத்துடன் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, கால்நடை வளர்ப்புத்துறை, விவசாய பொறியியல்துறை, விதை சான்றிதழ்துறை, சந்தைப்படுத்துதல் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறை அரங்குகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
விவசாய வங்கிக் கடன் பற்றி விளக்க ஒரு சில வங்கிகள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு அரங்குகள் அமைக்கின்றன. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழக அரங்குகளோடு பெங்களூரில் உள்ள ICAR - தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ICAR - மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்குகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்று சிறப்பிக்கவிருக்கின்றன. இந்தக் கண்காட்சியுடன் கூடவே கருத்தரங்கமும் நடைபெறுகிறது. இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு வேளாண்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு இரண்டு நாள்களும் தனித் தனி அமர்வாக பேசவிருக்கின்றனர்.
முதல் நாளான 14-ம் தேதி, ``இயற்கை விவசாயத்துக்கான இன்றைய தேவை" என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த பாமயன், `விவசாயத்துக்கான அரசன் திட்டங்கள் மற்றும் ஆதரவு' குறித்து திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சி.கற்பகம் ஆகியோர் பேச உள்ளனர்.
இரண்டாம் நாளான 15-ம் தேதி மட்டும் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கம் மற்றும் சென்னா ரெட்டி அரங்கம் என இரண்டு அரங்கங்களில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அண்ணா அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில், `நீர் மேலாண்மை' குறித்து விளக்குகிறார் பிரிட்டோ ராஜ், அவரைத் தொடர்ந்து இரண்டாம் அமர்வில் மத்திய வணிக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் தலைவரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் பொன் மணிவேல், `மருத்துவ தாவரங்கள்' குறித்து விவரிக்கிறார்.

மூன்றாம் அமர்வில் மீன் வளர்ப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோமு சுந்தரலிங்கம் `மீன் வளர்ப்பு தொழில்நுட்பம்' பற்றி பேச உள்ளார்.
அன்றைய தினமே சென்னா ரெட்டி அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் முதல் அமர்வில் `சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டல்' பற்றி திருவண்ணாமலையில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நிர்மலகுமாரி பேசுகிறார். அடுத்ததாக தோட்டக்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டி.என்.பாலமோகன் `அடர் நடவு மற்றும் பருவம் கடந்த மா உற்பத்தி' குறித்து கருத்துரை வழங்க உள்ளார்.
மேலும், இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் முருங்கைப் பொருள்களின் மதிப்புக்கூட்டல் பற்றியும் மீன் உணவு பொருள்களின் மதிப்புக்கூட்டல் பற்றியும் வேளாண்துறை வல்லுநர்கள் செயல் விளக்கம் அளிக்கின்றனர்.
இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான அனுமதி இலவசம். மேலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஒன்றியங்களிலிருந்து வி.ஐ.டி பல்கலைக்கழகம் வரை வந்து செல்வதற்கான இலவச பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.