100 ஏக்கர் வேளாண் பண்ணை; பழமரங்கள், காய்கறிகள்; வேல்முருகன் எம்.எல்.ஏ-வின் விவசாய அனுபவம்!

நானும் விவசாயி
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பரபரப்பான அரசியல்வாதி மட்டுமல்ல... மிகுந்த நேசத்தோடு விவசாயம் செய்து வரும் விவசாயியும்கூட.
பலாவையும் முந்திரியையும் தாங்கி நிற்கும் அந்தச் செம்மண் பூமியில், 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் இவர். பழ வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், பலவிதமான மூலிகைகள், ஆசிய அளவிலான அரிய வகை மரங்கள் உட்பட பலவிதமான பயிர்கள் இவருடைய தோட்டத்தில் வரிசைகட்டி நிற்கின்றன.
இவருடைய விவசாய அனுபவங்களை அறிந்து கொள்ள ஓர் அதிகாலைப் பொழுதில், புலியூர் காட்டுசாகையிலுள்ள இவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்ற வேல்முருகன், “வாங்க, என்னோட முன்னோர்களை எல்லாம் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்...” எனத் தனக்கே உரிய இயல்பான புன்னகையுடன் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

“பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே விவசாயம்தான் எங்களுக்குத் தொழில். இங்குள்ள முந்திரி மரங்களும், பலா மரங்களும் சுமார் 100 வருஷங்களுக்கு முன்ன பயிர் செய்யப்பட்டவை. இன்று வரையிலும் எங்கள் குடும்பத்தை வாழ வைத்துக்கொண் டிருக்கின்றன. அதனால்தான் இங்குள்ள பலா, முந்திரி மரங்களை என்னுடைய முன்னோர்களாகக் கருதி நேசிக்கிறேன்.
நான் பள்ளிக்கூட மாணவனாக இருக்கும் போதே... அப்பா, அம்மாவோடு இங்கு வந்துவிடுவேன். நெல் நடவுப் பணிகள் நடக்கும்போது, நாற்றுக் கட்டுகளை எடுத்துக் கொடுப்பேன். கொஞ்சம் வளர்ந்ததும், மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டத்தில் இறங்கி வேலைகள் செய்யத் தொடங்கினேன்’’ எனத் தன்னுடைய கடந்த காலத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார்.

பயிலரங்கம்
தோட்டத்தின் பிரதான வாயிலில் நுழைந்து சற்று தூரம் நடந்தோம். அங்கு கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தது. “அரசியல் பணிகளுக்கு இடையில் நேரம் கிடைத்தால், இந்தத் தோட்டத்தில்தான் ஓய்வெடுப்பேன். இங்குள்ள இயற்கையான சூழல் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். என்னுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர் களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்கான அரசியல் பயிலரங்கம் ஒன்றையும் இங்கு கட்டிக்கொண்டிருக்கிறேன்.
கவிஞர் அறிவுமதி
இங்கு வந்து பாடல் எழுதுவார்
அரசியல் பணிகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போதெல்லாம், இங்கு நான் வந்து செல்வேன். என்னுடைய சகோதரர் திருமால் வளவன்தான் முழுநேரமாக இங்கிருந்து விவசாயத்தைக் கவனித்துக் கொள்கிறார். ஒவ்வோர் ஆண்டும் ஊர் மக்களை இங்கு வரவழைத்து பொங்கல் விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும் உடைகளும் கொடுப்போம். இந்தப் பொங்கலுக்குக்கூட மாடுகளைக் குளிப் பாட்டி, அலங்கரித்து மிகச் சிறப்பாகப் பொங்கல் விழாவை நடத்தினேன். திரைப் படப் பாடலாசிரியர் அண்ணன் அறிவுமதி பலமுறை இங்கு வந்து தங்கி கவிதைகளும் பாடல்களும் எழுதியிருக்கிறார்.

இந்தத் தோட்டத்தின் மொத்த பரப்பு 100 ஏக்கர்... 50 ஏக்கரில் முந்திரிக் காடு அமைந் துள்ளது. மீதி 50 ஏக்கரில் பலா, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழ வகை மரங்கள், மர வேலைப்பாடுகளுக்கான மரங்கள், காய் கறிகள், மூலிகைகளும் சாகுபடி செய்து வருகிறோம். இதில் ஒரு பகுதிதான் ரசாயன விவசாயம். மற்றவையெல்லாம் இயற்கை விவசாயம்தான். இந்தப் பண்ணையில் ஒரு ஏக்கர்கூட நான் வாங்கியது கிடையாது. எல்லாமே என்னுடைய முன்னோர்கள் வாங்கி உருவாக்கிய பூமி” என்று சொன்னவர், ஏராளமான மரங்கள் அடர்ந்து காடுபோல் காட்சி அளித்த ஒரு பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

தேக்கு முதல் ஈட்டி வரை
‘‘5 ஏக்கரில் இந்தக் குறுங்காட்டை உருவாக்கியுள்ளோம். மகோகனி, சந்தனம், தேக்கு, செம்மரம், ஈட்டி, வேங்கை என 30-க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த சுமார் 2,500 மரங்கள் இங்கிருக்கின்றன. நானும் என் சகோதரர்களும்... தெற்காசியாவில் இருக்கும் அனைத்துவகை மரங்களையும், குறிப்பாக இந்தியாவின் அனைத்து மாநிலங் களிலும் இருக்கக்கூடிய மரங்களையும் தேடித் சென்று, அவற்றின் கன்றுகளை வாங்கி வந்து இங்கு பயிர் செய்து வருகிறோம். இது போன்ற அரியவகை மரங்களைப் பெரும் புயல் வேரோடு கீழே சாய்த்துவிட்டது. அதில் சில மரங்கள் அதன் வேர்களிலிருந்து துளிர்த்து வளர ஆரம்பித்திருக்கின்றன. மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவற்றை எங்களுடைய சொந்த தேவைக்காகவும்... நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்காகவும் பயிர் செய்கிறோம்.

இந்தத் தோட்டத்தில் பல ஏக்கரில் கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களையும் சாகுபடி செய்கிறோம். நம் முன்னோர்கள் காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தட்டைப் பயறு, பச்சைப் பயறு, கொள்ளுப் பயறு, எள் ஆகிய பயிர்களை விவசாயிகள் பரவலாகச் சாகுபடி செய்து வந்ததைப் பார்க்க முடிந்தது. சமீபகாலமாக இந்தப் பயிர்களைக் காண்பதென்பது அரிதாகி விட்டது. ஆனால், இந்தப் பயிர்கள் அனைத் தையும் நாங்கள் இங்கு சாகுபடி செய்து வருகிறோம்.

பண்ருட்டி பலாவில் சுவை அதிகம்
மிகவும் சுவையான பலா என உலக அளவில் பலரும் வியந்து பாராட்டக்கூடிய பலா எதுவென்றால்... அது எங்களுடைய பண்ருட்டி பலாதான். அதிலும் எங்கள் தோட்டத்தில் எந்தவித ரசாயன இடுபொருள் களும் போடாமல், இயற்கையாக விளையும் பலாப்பழங்கள் கூடுதல் சுவையோடு இருக்கும்.

ஒவ்வொரு சீஸனிலும் என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமல்லாமல்... அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரி களுக்கும் பலாப் பழங்கள் கொடுப்பது வழக்கம். இப்படியொரு சுவையான பலாச் சுளையைச் சாப்பிட்டதே இல்லை எனச் சிலாகித்துப் போவார்கள். குறிப்பாக, மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி ‘சுவையில் பண்ருட்டி பலாவை அடிச்சுக்கவே முடியாதுய்யா’ என்பார்.

வகையான மாமரங்கள்...
விதவிதமான வாழை ரகங்கள்...
மல்கோவா, பங்கனப்பள்ளி, அல்போன்சா, செந்தூரம் உள்ளிட்ட 10 வகையான மாமரங்கள் இங்கு இருக்கின்றன. கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி என அனைத்து வகை வாழைகளையும் இங்கு சாகுபடி செய்கிறோம். வெண்டி, கத்திரி, தக்காளி, அவரைக்காய், சுரைக்காய், பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளும் இங்கு சாகுபடி செய்கிறோம். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேசங் களில் மட்டும்தான் கேரட் விளையும் என்பார்கள். ஆனால், எங்கள் தோட்டத் திலும்கூட கேரட் நன்றாக விளைகிறது. குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடிய மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட பழ மரங்களும் இங்கு பயிர் செய்துள்ளோம். மஞ்சளும் இங்கு பயிர் செய்கிறோம். சோளமும் பயிர் செய்வோம்.

இந்தத் தோட்டத்தில் மூலிகைகள் அதிகம். ஒருநாள், சித்த மருத்துவ நண்பர்கள் இருவரை அழைத்து வந்து தோட்டத்தைச் சுற்றிக் காட்டினேன். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கு இருப்பதாக வியந்து போனார்கள். ஆனால், இந்த மூலிகைச் செடிகளை நாங்கள் பயிர் செய்யவில்லை. இயற்கையாகவே வளர்ந்து இங்கு பரவிக் கிடக்கின்றன.
முந்திரிதான் எங்களின் பொருளாதாரத்தை ஈடு செய்யக்கூடிய பணப்பயிர். இது வானம் பார்த்த பூமி என்பதால், ஆண்டுக்கு ஒரு முறைதான் எங்களுக்கு வருவாய். அதைத் தவிர இங்கு விளையும் அனைத்தும் எங்களுடைய வீட்டுத் தேவைக்கும் நண்பர் களுக்கும்தான்.

கால்நடை வளர்ப்பு
தாத்தா, அப்பா காலத்தில் நூற்றுக் கணக்கான ஆடுகள் வைத்திருந்தார்கள். தற்போது மேய்ச்சலுக்கு இடம் இல்லாததாலும், பராமரிக்க முடியாததாலும் சுமார் 60 ஆடுகள் மட்டுமே வளர்க்கிறோம். 30 நாட்டு மாடுகளும், நூற்றுக்கணக்கில் நாட்டுக் கோழி களும் இங்கு வளர்க்கிறோம்.

எங்கள் தோட்டத்தில் விளையும் பயிர் களுக்கு மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எரு, இலைதழைகள், பஞ்சகவ்யா உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ‘நஞ்சில்லாத உணவு, நோயில்லாத வாழ்வு, கடனில்லாத வாழ்க்கை’ என்ற நம்மாழ்வாரின் வரிகளை என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் சார்ந்த பொது வாழ்க்கையிலும் கோட்பாடாக, தாரக மந்திரமாக உறுதி ஏற்றுப் பயணிக்கிறேன்’’ என உற்சாகமாகத் தெரிவித்து, விடை கொடுத்தார்.

பாரம்பர்ய விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும்
“காடும் காடு சார்ந்த இடத்தையும், மலையும் மலை சார்ந்த இடத்தையும் சீர்ப்படுத்தி நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள். இப்போது அனைத்து துறைகளையும் போல் விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுந்துவிட்டதால், ரசாயன இடுபொருள்கள் விவசாயிகளிடம் அளவுக்கு அதிகமாகவே திணிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட விவசாயிகளால் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள். நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பர்ய விவசாயத்தை அடுத்த தலைமுறையினருக்காக நாம் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்கிறார் வேல்முருகன்.
தப்பிட்ட காய்
இங்குள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தைப் பறித்து நம்மிடம் காட்டிய வேல்முருகன், “இதுக்குப் பேரு, தப்பிட்ட காய். பருவம் தவறி காய்க்கக்கூடிய பழங்களை இப்படி அழைப்பார்கள். பெரும்பாலும் இப்படியான பழங்கள் சுவையாக இருக்காது. ஆனால், எங்கள் தோட்டத்தில் பருவம் தவறி காய்த்த, இந்தப் பழம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்” என அதை வெட்டி, சுளைகளை நமக்குக் கொடுத்து அவரும் சாப்பிட்டார். அந்தப் பலாச்சுளை சுவையாக இருந்தது.

நரி முதல் மயில் வரை
25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மான்கள் இருந்தன. இப்போது நரி, முயல், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இங்கு வசித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் எச்சங்களாலும், இங்குள்ள மரங்களின் இலைதழைகளாலும் எங்கள் தோட்டம் நாளுக்கு நாள் செழிப்படைந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு சீஸனிலும் முந்திரி, பலா, வாழை, சப்போட்டா, பப்பாளி போன்றவற்றை வேனில் ஏற்றிக்கொண்டு போய் நண்பர்களுக்குக் கொடுப்பதில்தான் எனக்கு மன நிறைவு’’ என்கிறார் வேல்முருகன்.

ஆர்ட்டீசியன் ஊற்றுகளுக்கு
வேட்டு வைத்த நிலக்கரி சுரங்கம்
‘‘தெற்குவெளி என்ற கிராமத்திலும் எங்களுக்கு நிலம் இருக்கிறது. அங்கிருக்கும் கேணியில் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகுவதை என்னுடைய சிறிய வயதில் பார்த்துள்ளேன். பல வகையான மீன்களும் அந்தக் கிணற்றுத் தண்ணீரில் நீந்திச் செல்வதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். ஆர்ட்டீஷியன் ஊற்று என்று சொல்லப்படும் பொங்கு நீரூற்று... பண்ருட்டி மற்றும் நெய்வேலியைச் சுற்றியுள்ள பகுதி களில் முன்பு காணப்பட்டது. மழைக் காலங்களில் குமிழ் குமிழாக நிலத்திலிருந்து தண்ணீர் வெளியேறி அடுக்கடுக்காக மண் சரியும். சிறுவயதில் தரையில் படுத்து அந்தத் தண்ணீரை நான் குடித்திருக்கிறேன்.
ஆனால், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான அடி ஆழத்துக்கு ராட்சத போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால் ஆர்ட்டீஷியன் ஊற்று, காணாமல் போய்விட்டது. மேலும் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 450 முதல் 1,000 அடி வரை கீழே சென்றுவிட்டது” என ஆதங்கப்படுகிறார், வேல்முருகன்.

முள்ளங்கியில் அனைத்து சுவையும் இருக்கும்...
ஒரு முள்ளங்கிச் செடியைப் பிடுங்கி அதன் மீதிருந்த மண்ணைத் தட்டிவிட்டு அப்படியே சாப்பிட்ட வேல்முருகன், ‘‘இந்த முள்ளங்கியில் துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு, காரம் என அனைத்து சுவைகளும் இருக்கும். என்னுடைய தோட்டத்தில் எலுமிச்சை, புளி, தென்னை உள்ளிட்ட மரங்களும் இருக்கின்றன. எங்கள் வீட்டு சமையலுக்குத் தேவையான எந்த ஓர் உணவுப் பொருளையும் நாங்கள் வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய கிராம்பையும் இங்கு பயிர் செய்துள்ளோம். செடி நன்றாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் மகசூல் கொடுக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கிறேன். இங்கு மிளகும் பயிர் செய்துள்ளோம். அது நன்றாகக் காய்க்க ஆரம்பித்துவிட்டது” என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வேல்முருகன்.