சினிமா
Published:Updated:

விகடன் பொக்கிஷம்: “எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்!”

விகடன் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் பொக்கிஷம்

விகடன் பொக்கிஷம் தொகுப்பு: ரவி பிரகாஷ்

27.12.2006 ஆனந்த விகடன் இதழில்...

டிசம்பர் 23ம் தேதியை விவசாயிகள் தினமாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இதையொட்டி சிறப்புக் கட்டுரையாக இங்கே மலர்கிறது பாரதப் பிரதமருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!

ஐயா, ‘இரண்டாம் பசுமைப் புரட்சி, இரண்டாம் பசுமைப் புரட்சி’னு நீங்க இப்ப சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. அதைக் கேக்கறப்பவெல்லாம் எங்க மனசு ‘பக்பக்’னு அடிச்சுக்குதுங்கய்யா!

காட்டுமேட்டுல ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு, ‘வெந்ததைத் தின்போம். விதி வந்தா சாவோம்’னு காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்த எங்க மனசுல, முப்பது, நாப்பது வருஷத்துக்கு முன்ன இப்படித் தான் ‘பசுமைப் புரட்சி’னு ஆசைய விதைச்சாங்க. கலப்பு உரம்... கலக்காத யூரியானு அள்ளிவிட்டாங்க. அப்புறமா டிராக்டர்... கருது அடிக்க மெஷினு... களை எடுக்க மெஷினு... அப்படினு கடனை எங்க தலைமேல கட்டினாங்க. கவருமென்ட்டு கடன்தானேனு கணக்கு வழக்கு இல்லாம நாங்களும் வாங்கிப் போட்டோமுங்க. அப்புறம் அடி உரம், மேல் உரம் போட பணம் இல்லீங்க. அதுக்குக் கந்து வட்டிக்காரன்கிட்ட போனோமுங்க. கரும்பு, நெல்லு, கோதுமைனு விதைச்சி... ஆடு, கோழி வளர்த்து... 100 மில்லியன் டன்னு பத்தாக்குறையா இருந்த உணவு தானிய உற்பத்தியை 200 மில்லியன் டன்னா விளைச்சுக் குமிச்சிட்டோம். உணவுப் பஞ்சமும் போச்சுங்க. ஆனா, விலை வீழ்ச்சி எங்களை வீழ்த்திடுச்சுங் கய்யா!

விவசாயி, கடன ஒடன வாங்கிக் கரும்பு போட்டானுங்களா..? கரும்பு மில் முதலாளி, காரு பங்களானு பறக்கறாங்க! கடன வாங்கி, நெல்லு போட்டானுங்களா..? அரிசி ஆலை முதலாளி வந்து அறுவடை செஞ்சுக்கிட்டுப் போயிட்டாருங்க! பருத்தி பொதி பொதியா விளைஞ்சுதுங்க... பஞ்சாலை முதலாளிங்க, ஜவுளிக்கடை அதிபருங்க, பூச்சி மருந்து வித்த கம்பெனி முதலாளிங்க எல்லாம் சுகமா வாழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, விவசாயி வில் வண்டிக்குக்கூட வக்கில்லாம வீதியோரத்துல முடங்கிட்டானுங்க.

விகடன் பொக்கிஷம்: “எப்படி இருந்த நாங்க இப்படி ஆகிட்டோம்!”

அடுத்ததா, மருந்துச் செலவே இல்லாத பி.டி. பருத்தினு ஏதேதோ சொல்லி எங்க கையைப் பிடித்து இழுத்துவிட்டாங்க. அரசாங்கமே சிபாரிசு பண்ணதால எங்க ஜனங்களும் கண்ணு மண்ணு தெரியாம கடன் வாங்கி அந்த பி.டி. பருத்திய நடவு போட்டாங்க. பணக்காரனாகப் போற கனவுல, எல்லைகளைத் தாண்டி ஆகாயத்துல பறந்தாங்க. கடைசியில என்னாச்சு..? பணத்த எண்ணுறதைவிட, இப்பப் பொணத்ததானுங்க பருத்தி விவசாயிங்க அதிகமா எண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஐயா... நீங்களும், எங்க ஜனங்க சாவுறதப் பார்த்து இரக்கப்பட்டு, 17,000 கோடிக்கு ‘சாவு நிவாரண ஃபண்ட்’ கொடுக்கறதா சொன்னீங்க. இருந்தாலும் சாவு மட்டும் நின்னபாடு இல்லீங்க. செத்தவன் மூக்குல சுக்க வச்சு ஊதுறதுல என்னங்க பிரயோசனம்..? உசுரோடு இருக்கும்போதே கொஞ்சம் உதவிக்கு வந்திருக்கலாமுங்க.

ஒரு காலத்துல, தேசிய வருமானத்திலே 55 சதவிகிதமா இருந்த ஜி.டி.பி., உங்க முன்னோடிங்க கொண்டுவந்த ‘பசுமைப் புரட்சி’யால இப்ப 18 சதவிகிதமா நல்லாவே ‘வளர்ந்து’ கிடக்குதுங்க. எங்கள்ல சிலர் விஷத்தைக் குடிச்சுட்டு பாடையில போன பிறகுதாங்க, அரசின் கும்பகர்ணத் தூக்கம் கொஞ்சம்போல கலைஞ்சுதுங்க.

‘வரித் திலகம்’ நிதி மந்திரி சிதம்பரம்கூட இந்த தடவை கொஞ்சம் இறங்கி வந்து, எங்க மேல கருணைப் பார்வை பார்த்து இருக்காரு. ‘விவசாயிகள் வீட்டுல வக்கிரமெடுத்த சனி உட்கார்ந்து 9 வருஷம் ஆகிடுச்சு. ஒரே நாள்ல அதை விரட்ட நான் ஒண்ணும் அனுமான் இல்லீங்களே’னு கேட்டிருக்கார். எப்படியோ, சனி இருக்குங்கிறதை ஒப்புக்கிட்டாரே!

ஆனா பாருங்க, ‘குடிச்சுட்டுச் சாகுற வனையெல்லாம் குடியானவன்னு கணக்குல சேர்க்கக் கூடாது’னு குறும்பு பேசறாரு விவசாய மந்திரி சரத் பவாரு. தென் ஆப்பிரிக்காவுல நடந்த கிரிக்கெட் போட்டியில இந்தியா தோத்துப்போச்சுனு கண்ணீர் வடிக்கிறவர், அவரோட மகராஷ்டிர மாநிலம் விதர்பாவுல பருத்தி விவசாயிகள் கொத்துக் கொத்தா தற்கொலை பண்ணிக்கிறதை நினைச்சுக்கூடப் பார்க்க மாட்டேங்குறாரு.

அந்தக் காலத்துல, எங்க பாட்டன் பூட்டனெல்லாம் மீசையை முறுக்கிக்கிட்டு வயல் வரப்புல நடந்து போனா, ‘சோறுபோடும் மவராசன் போறான் பாரு’னு பார்க்குற சனமெல்லாம் கையெடுத்துக் கும்பிடும். கன்னத் திலேயும் போட்டுக்குவாங்க. பெருமையா இருக்கும். இப்ப என்னடான்னா, கால் காசுக்குப் பொறாதவனெல்லாம் ‘கடன்காரன் போறான் பாரு... கடன் கட்டாதவனுக்கு உதட்டு மேல மீசை எதுக்கு?’னு எகத்தாளம் பேசறானுங் கய்யா. நாண்டுக்கிட்டு சாகலாம்னு தோணுதுங்கய்யா!

‘நிலம் என்பது விவசாயிகளுக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து அல்ல... அதன் வரப்புகள் விவசாயிகளின் கரங்களிலே பூட்டப்பட்டு இருக்கும் விலங்கு’னு சமூக விஞ்ஞானி காரல் மார்க்ஸ் அப்பவே சொன்னாருங்க.

நல்லா இருந்தவன் வாழ்க்கையில கடன் எப்படி வந்துச்சு? எப்படியோ... அரசு போட்ட திட்டத்திலே கோளாறு ஆகிப்போயிடுச்சு. ‘பசுமைப் புரட்சி’னு குண்டைத் தூக்கிப் போட்டு, எங்க கிராமத்தையே கொன்னுப்புட்டாங்கய்யா! வாழ்க்கையை வயல்ல தொலைச்சுட்டு, நகரத்துத் தெருக்கள்ல, வீதி ஓரங்கள்ல நடைமேடைகள்ல... அரை வயித்துக் கஞ்சிக்கு ஆலாப் பறக்குறாங்கய்யா. விவசாயம் மட்டும் பசுமையா மாறினா போதாதுங்கய்யா... விவசாயிகளின் வாழ்க்கையும் பசுமையா மலர்ந்தாதானுங்களே, அது உண்மையான பசுமைப் புரட்சி! அதனாலதானுங்க, நீங்க ‘இரண்டாவது பசுமைப் புரட்சி’னு சொன்னதும், இதயத்துல இடி இறங்கினது மாதிரி துடிச்சுப்போயிட்டோமுங்க.

முதல் பசுமைப் புரட்சி இந்திய பூமியையே பொட்டல் காடா மாத்திக்கிட்டு இருக்குதுங்கய்யா. 20 வருஷங்களுக்கு முன்னால கண்ட விளைச்சல், இப்போ எவ்வளவு உரம், உப்பு, யூரியா கூட்டினாலும் கிடைக்கலீங்க. மண்ணுல உயிர் இல்லைனு சொல்றாங்க. இந்த நேரத்துல... நீங்க வேற சும்மா இருக்காம இம்சை அரசனா மாறி, ‘இரண்டாம் பசுமைப் புரட்சி’னு கூப்பாடு போடறீங்க. கையெடுத்துக் கும்பிடுறோமுங்க... உங்க உலகமயமாக்கும் பேராசையில எங்களைக் கொன்னுப்புடாதீங்க. பூமித்தாயின் கர்ப்பப் பையில விஷத்தைக் கொட்டிப்புடாதீங்க. நம்ம பிள்ளைங்களுக்கும் இந்த பூமியைக் கொஞ்சம் விட்டு வைக்கணுமுங்க.

இந்தியாவோட விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்கூட, ‘இரண்டாவது பசுமைப் புரட்சி’யைப் பத்தி மவுனத்தைதான் பதிலா கொடுக்கறாரு. ‘இனிமே விவசாயிகளுக்காக ஐந்தாண்டுத் திட்டத்தைப் போடுங்க’னு சொல்லியிருக்காரு. அதையும் மனசுல வெச்சுக்கங்க.

நன்றிங்கய்யா!

- சி.நல்லாகவுண்டர்