பாரம்பர்ய சமையல்... பசுமையான சூழல்... இயற்கையோடு இயைந்த தங்கும் விடுதி; அசத்தும் 90 வயது பாட்டி!

சூழல்
குடும்பம் மற்றும் பணிச் சூழலின் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங் கிக்கொண்டிருப்பவர்கள், மன அமைதிக்காக, இடையில் ஓரிரு நாள்கள் கேளிக்கை விடுதி களுக்கோ, சுற்றுலா தலங் களுக்கோ சென்று வருவதுண்டு. இது போன்றவர்களுக்காக... கிராமத்து சமையல், அன்பான உபசரிப்பு மற்றும் பசுமையான சூழலுடன்கூடிய ஒரு வித்தி யாசமான தங்கும் விடுதியை நடத்தி வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது நிறைந்த பாட்டி. அவருடைய மகளும் இதில் இணைந்து செயல் படுகிறார்.
இந்த விடுதி இயற்கை விவசாயப் பண்ணையில் நடத்தப் படுவதால் இங்கு தங்குபவர்களுக்கு ஆரோக் கியமான உணவு வழங்கப்படுகிறது.
ஒரு பகல்பொழுதில் இதைப் பார்வையிடச் சென்றோம். விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள இரட்டணை கிராமத்தில் அமைந் துள்ளது ‘வக்சனா ஃபார்ம்ஸ்.’ இப்பண்ணையைச் சுற்றி நான்கு பக்கம் மூங்கில் மரங்கள் செழிப் பாகக் காட்சி அளிக்கின்றன. வாசலை கடந்து உள்ளே சென்றால் மண்பாதை... 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில் ஏராளமான மரங்கள், விதவிதமான மலர் செடிகள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் எனப் பலவிதமான பயிர்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிற்கின்றன. இங்கு நிலவும் இயற்கையான சூழல் நம் மனதை பரவசப்படுத்தியது. இங்குள்ள செம்பருத்தி செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த லக்ஷ்மி பாட்டியும் இவருடைய மகள் கஸ்தூரியும் இன்முகத்தோடு நம்மை வரவேற்றனர்.

மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கிய லக்ஷ்மி பாட்டி, “என்னோட முழுப்பேரு லக்ஷ்மிகாந்தம். எனக்கு இப்போ 90 வயசு ஆகுது. நான் பொறந்தது பண்ருட்டி பக்கத்துல சூரக்குப்பம். விக்கிர வாண்டி யைச் சேர்ந்த எங்க அத்தை, என்னை சின்ன வயசுல இருந்தே எடுத்து வளர்த்து ஆளாக்கி, இரட்டணை கிராமத்தில கட்டிக் கொடுத்தாங்க. நான் வாழ்ந்த குடும்பத்துல நிறைய விவசாய நிலம் இருந்துச்சு. எங்க வீட்டுக்காரர் திடீர்னு ஒருநாள் மாரடைப்பால் இறந்துட்டாரு. அதுக்குப் பிறகு நிறைய கஷ்டங்களைச் சந்திச்சேன். என்னோட ரெண்டு மகன்கள் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. மனசு உடைஞ்சு போயிட்டேன். வாழவே பிடிக்கல. ஆனாலும்கூட என்னோட மகளுக் காகவும் பேரப்பிள்ளைகளுக் காகவும் மனசை தேத்திக்கிட்டு வாழ்க்கை யைத் தொடர்ந்தேன். என் பொண்ணு கூட வசிக்க ஆரம்பிச்சேன்.
ஒரு கட்டத்துல வீட்ல சும்மாவே உட்கார்ந்து இருக்கப் பிடிக்கல. நாம ஏதாவது, பண்ணணும்னு முடிவு பண்ணினேன். சின்ன வயசுல இருந்தே கிராமத்து முறைப்படி நல்லா சமைப்பேன். நானும் என் பொண்ணும் சேர்ந்து முதல் கட்டமா, இங்க உணவகம் ஆரம்பிச்சோம். என்னோட கைப்பக்குவத்துல கிராமத்து முறைப்படி சமைக்குற சாப்பாட்டைச் சாப்பிட்டவங்க பலரும் ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினாங்க. இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 13 ஏக்கர். இங்க இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கோம். இங்க விளையுற நெல், காய்கறிகள், கீரை களைத்தான் சமையலுக்குப் பயன் படுத்துறோம். இங்க இயற்கையான சூழல் இருக்குறதுனால, தங்கும் விடுதி ஆரம்பிக்கலாம்ங்கற ஒரு யோசனை வந்துச்சு. அதுவும்கூட வழக்கமான ஹோட்டல் ரூம் மாதிரி இல்லாம, வீடு மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்டு, நான் நினைச்சமாதிரி உருவாக்கினேன். இங்க ரெண்டு வீடுகள் இருக்கு. குடும்பமா வந்து பலரும் இங்க தங்கி இருந்துட்டுப் போறாங்க. 6 பேர் கொண்ட ஒரு குடும்பம் 24 மணிநேரம் இங்க தங்கி இருந்துட்டுப் போறதுக்கு, 6,000 ரூபாய் கட்டணம்.
இந்தத் தங்கும் விடுதியில, ஒரு வீட்டுக்கான எல்லா வசதிகளும் இருக்கு. இந்தப் பண்ணையில இரண்டு குளங்கள் இருக்கு. எங்க பண்ணையில வந்து குடும்பமா தங்கக் கூடியவங்க, பசுமையான சூழல்ல, ஆரோக்கி யமான காற்றைச் சுவாசிச்சு, குளத்துல குளிச்சுட்டு, பாரம்பர்ய முறைப்படி செஞ்ச சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு போறதை சந்தோஷமான அனுபவமா உணர்றாங்க. நகர்புறங்கள்ல வசிக்ககூடிய வங்களுக்கு இது புதுவிதமான அனுபவமாவும் புத்துணர்ச்சியாவும் அமையுது’’ எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய லக்ஷ்மி பாட்டியின் மகள் கஸ்தூரி, இந்தப் பண்ணையின் உருவாக்கம், அமைப்பு முறை, கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
“எனக்கு இப்போ 71 வயசாகுது. என்னோட அப்பா-அம்மாவுக்குச் சொந்தமான பூர்வீக நிலம் 8 ஏக்கர் இருந்துச்சு. என்னோட மகன் 5 ஏக்கர் நிலம் வாங்கினாரு. மொத்தம் 13 ஏக்கர். பல வருஷமா காட்டு கருவை மண்டிப் போயி, இந்த நிலம் சும்மாவேதான் கிடந்துச்சு.
இப்படித் தரிசாவே போட்டு வச்சுருக் குமேனு அம்மாவும் நானும் கவலைப்பட்டு 12 வருஷத்துக்கு முன்னாடி இதைச் சீரமைச்சு விவசாயம் செய்ய ஆரம்பிச்சோம். 2 கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற என்னோட சித்தி வீட்டில் இருந்துதான் ஆரம்பத்துல நானும் என்னோட அம்மாவும் இங்க வந்து போயிக்கிட்டு இருந்தோம். மழை, கடுமையான கோடைக்காலங்கள்ல இங்க வர்றது ரொம்ப சிரமமா இருந்துச்சு. அதனால இங்கேயே ஒரு வீடு கட்டி தங்கிட்டா நல்லா இருக்கும்னு, எங்களோட வசதிக்காகத்தான் ஆரம்பத்துல ஒரு வீடு கட்டினோம். மாடுகளும் வளர்க்க ஆரம்பிச்சோம்.
இங்கவுள்ள மரங்களோட இலைதழைகள், மாட்டு எரு. வேப்பம் புண்ணாக்கு இதை யெல்லாம் அடியுரமா பயன்படுத்தினதுனால, அடுத்த சில வருஷங்கள்லயே மண்ணோட தன்மை மேம்பட ஆரம்பிச்சது. பழ மரங்களை அதிகமா பயிர் பண்ணினோம்.
கொய்யா முதல் செர்ரி வரை
கொய்யா, சப்போட்டா, சீத்தா, செர்ரி, பப்பாளி, நெல்லி, சாத்துக்குடி, விளாம்பழம், ஆரஞ்சு, மாதுளை, எலுமிச்சை, மா, பலா உட்பட இன்னும் பலவிதமான பழ மரங்கள் இங்க செழிப்பா விளைஞ்சுகிட்டு இருக்கு. சந்தனம், செம்மரம், சவுக்கு, பாதாம் உள்ளிட்ட மரங்களும் நிறைய இருக்கு. அதிகமா ஆக்சிஜன் கொடுக்கக்கூடிய மூங்கில் மரங்களை, இந்தப் பண்ணையைச் சுத்தி நாலு பக்கமும் உயிர் வேலியா உருவாக்கி யிருக்கோம். எங்க பண்ணையோட வெளித் தோற்றம் ரொம்ப அழகா தெரியுறதுக்கு இது ஒரு முக்கியக் காரணம்.
செம்பருத்தி முதல் செண்பகம் வரை
செம்பருத்தி, பன்னீர் புஷ்பம், பவளமல்லி, சங்குப்பூ, செண்பகம், பாரிஜாதம் உள்ளிட்ட இன்னும் பலவிதமான மலர்கள் பயிர் பண்ணியிருக்கோம். இதுமட்டுமல்லாம, நிறை அலங்கார செடிகளும் இங்க வளர்க் குறோம். இங்க தங்குறவங்களுக்குச் செம்பருத்தி ஜூஸ் கொடுப்போம். அரைக் கீரை, புளிச்சக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை, புதினா, துத்திக்கீரை அகத்திக்கீரை, திப்பிலி, மணத்தக்காளி, தூதுவேளை, அம்மான் பச்சரிசி, துளசி, கற்பூரவள்ளி, எருக்கன், நொச்சி உள்ளிட்ட மூலிகைகள், கீரை வகை களும் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கோம். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துறோட மட்டுமல்லாம. சூப், கஷாயம் போட்டு கொடுப்போம்.

கத்திரி, வெண்டைக்காய், சுண்டை, தக்காளி, மிளகாய், பீர்க்கன், சுரை, அவரை, பூசணி உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகள் இங்க பயிர் செஞ்சிருக்கோம். விருந்தினர்களுக் கான இரண்டு விடுதி, எங்களுக்கான வீடு, பழ வகை மரங்கள், காய்கறிகள், கீரை வகைகள், மூலிகைச் செடிகள் இதெல்லாம் சேர்த்து 4 ஏக்கர் பரப்பளவுலதான் அமைஞ்சிருக்கு. இன்னொரு 4 ஏக்கர்ல மாந்தோட்டமும் இரண்டு குளங்களும் அமைச்சிருக்கோம். 3 ஏக்கர்ல, தேக்கு, மகோகனி, மஞ்சள் கடம்பை, நீர்மருது, பூவரசு உள்ளிட்ட மர வேலைப்பாடுகளுக் கான மரங்கள் பயிர் பண்ணியிருக்கோம். எதிர்கால வருமானத்துக்கு இந்த மரங்கள் கைகொடுக்கும். ரெண்டு ஏக்கர்ல நெல்லு, உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்றோம். இங்க விவசாயம் செய்ய ஆரம்பிச்சப்பவே ஒரு தெளிவான முடிவெடுத்துட்டோம்... குறைவான மகசூல் கிடைச்சாலும் பரவாயில்லை, இயற்கை விவசாயம்தான் செய்யணும்ங்கறதுல உறுதியா இருந்தோம். ஆனா, நாங்க எதிர்பார்த்தைவிடவும் கூடுதலான விளைச்சல் கிடைக்குது. இயற்கை விவசாயப் பண்ணையில தங்கும் விடுதியும் அமைச்சுருக்கோம். மக்கள் மத்தியில இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு: கஸ்தூரி,
செல்போன்: 99947 10137
சிகரெட், மதுவுக்கு அனுமதி கிடையாது
“பிற ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள்ல இருக்கிற மாதிரி எல்லாம் இங்க ரொம்ப சொகுசான அறைகள் (rooms) ஏதும் கிடையாது. வழக்கமான வீடுகள் மாதிரிதான் இருக்கும். ஓய்வுக்காக இங்க வரக்கூடியவங்க, சிகரெட், மது பயன்படுத்த அனுமதி கிடையாது. முன்கூட்டியே இதைத் தெரிவிச்சுடுவோம். சாப்பாட்டைப் பொறுத்தவரை, இங்க சைவ வகைகள்தான் கொடுப்போம். விருந்தினர், வேலையாட்கள், எங்களுக்குன்னு நாங்க தனித்தனியே உணவு சமைக்கிறது கிடையாது. பாரம்பர்ய முறைப்படி எல்லோருக்குமே ஒரே மாதிரியான சாப்பாடுதான். அரிசி, காய்கறிகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் உட்பட இயன்றவரைக்கும் இந்தப் பண்ணையில விளையுறதைத்தான் பயன்படுத்துறோம். இங்க வளர்க்குற மாடுகளோட பாலைதான் காபி, டீ-க்குப் பயன்படுத்துறோம்’’ எனத் தெரிவித்தார்.
அலுவலக மீட்டிங் முதல் இலக்கியக் கூட்டம் வரை
‘‘பண்ணை பராமரிப்பு, சமையல் பணிக்காக இப்ப இங்க மொத்தம் 9 பேர் வேலைபார்க்குறாங்க. நானும் என்னோட அம்மாவும்தான் இந்தப் பண்ணையை நிர்வாகம் பண்றோம். என்னோட கணவரும் ஒத்துழைப்பு கொடுக் குறாரு. உயர் பதவிகள்ல இருக்குறவங்க தங்களோட குடும்பத்தோடு இங்க ஓய்வெடுக்க வர்றாங்க. அலுவலக மீட்டிங், இலக்கியச் சந்திப்புகளுக்காகவும் இங்க நிறைய பேர் வந்து தங்குறாங்க. மனசும் உடம்பு உற்சாகமடையுறதுக்காக, ரொம்ப ஆர்வத்தோடு விவசாய வேலைகள் செய்வாங்க’’ என்கிறார் கஸ்தூரி.
பராமரிப்புக்கு பழமோர் கரைசல்!
“பழ மரங்கள்லயும் காய்கறிச் செடிகள் லயும்... பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், காய்கள் நிறைய பிடிக்கிறதுக்கும், 15 நாளுக்கு ஒரு தடவை பழமோர் கரைசல் தெளிப்போம். வாழைப்பழ மண்டியில இருந்து குறைவான விலைக்கு 50 கிலோ வாழைப்பழங்களை வாங்கிகிட்டு வந்து, அதோடு ஒரு கிலோ வெல்லம், தலா ஒரு லிட்டர் மோர், மாட்டுச்சிறுநீர் கலந்து பிளாஸ்டிக் கேன்ல வச்சிடுவோம். தினமும் மூணு வேளை கலக்கி விடுவோம். அடுத்த ஏழு நாள்கள்ல கரைசல் தயாராகிடும். 15 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் வீதம் கரைசல் கலந்து பயிர்கள் மேல தெளிப்போம். பயிர்களோட தன்மைக்கு ஏற்ப, அப்பப்ப எரு, பஞ்சகவ்யா, மூலிகை பூச்சிவிரட்டியும் பயன்படுத்துவோம்’’ என்கிறார் கஸ்தூரி.