மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

75 சென்ட்.... ரூ.87,000... தெம்பான வருமானம் தரும் ராஜஸ்தான் கம்பு..!

நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்

நெசவுதான் எங்களோட பாரம்பர்யத் தொழில். விவசாயத்துக்கும் எங்க குடும்பத் துக்கும் எந்தச் சம்பந்தமுமே கிடையாது. 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, அதுக்கப்புறம் அப்பாவோடு சேர்ந்து நெசவுத் தொழிலைப் பார்த்துக்கிட்டிருந்தேன்

படிச்சோம் விதைச்சோம்

‘‘விவசாயத்து மேல ஏற்பட்ட ஈர்ப்புனால, நிலம் வாங்கிப் போட்டுட்டேன்... ஆனா, எப்படி விவசாயம் செய்யணும்னு எனக்குத் தெரியாததுனால பல வருஷமா தரிசாவே போட்டு வச்சிருந்தேன். பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் விவசாயத்தைப் பத்தின நுட்பங்களைத் தெரிஞ்சுகிட்டு பயிர் பண்ண ஆரம்பிச்சேன்’’ உற்சாகம் பொங்க பேசுகிறார் மெக்கானிக் நடராஜன். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த பத்து ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் வெற்றிநடைபோட்டு வருகிறார். தற்போது, இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ‘துருக்கி’ என்ற நாட்டு ரகக் கம்பு சாகுபடி செய்து லாபகரமான விளைச்சல் எடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது, நடராஜனின் தோட்டம். ஒரு மாலைப் பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். கம்பு அறுவடைப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நடராஜன், புன்னகையோடு நம்மை வரவேற்றார். “இது மானாவாரி நிலம். சிறுதானிய சாகுபடியில எனக்குக் கிட்டத் தட்ட 10 வருஷ அனுபவம் உண்டு. ஆனா, அதெல்லாம்... குதிரைவாலி, இருங்குச் சோளம்னு நம் மண்ணோட பாரம்பர்ய ரகங்கள். இந்தத் தடவை நான் சாகுபடி செஞ்சது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ‘துருக்கி’ங்கற நாட்டு ரகக் கம்பு. 75 சென்ட் பரப்புல இதைப் பயிர் பண்ணினேன். இது நம்ம மண்ணுக்கு சரியா வருமானு இந்தப் பகுதி விவசாயிங்க பலரும் ஆரம்பத்துல சந்தேகத்தோடு கேட்டாங்க. ஆனா, நான் முழு நம்பிக்கையோடு இருந்தேன். என்னோட எதிர்பார்ப்பு வீண்போகல. பெரும்பகுதி அறுவடை முடிஞ்சுடுச்சு. 75 சென்ட்ல 290 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்
நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்

‘‘நெசவுதான் எங்களோட பாரம்பர்யத் தொழில். விவசாயத்துக்கும் எங்க குடும்பத் துக்கும் எந்தச் சம்பந்தமுமே கிடையாது. 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, அதுக்கப்புறம் அப்பாவோடு சேர்ந்து நெசவுத் தொழிலைப் பார்த்துக்கிட்டிருந்தேன். அதுல போதுமான வருமானம் கிடைக்காததால, சமையல் கேஸ் கம்பெனியில மெக்கானிக்கா வேலைக்குச் சேர்ந்தேன். கடந்த 34 வருஷமா அந்த வேலையிலதான் தொடர்ந்து இருந்துகிட்டு இருக்கேன். கேஸ் ஸ்டவ் ரிப்பேர் பார்க்குறதுக்காகப் பல கிராமங் களுக்கும் போறது வழக்கம். பச்சை பசேல்னு இருக்குற பயிர்களைப் பார்க்குறப்ப என்னோட மனசு ரொம்பவே உற்சாகமாயிடும். விவசாயம் செய்யணுங்கற ஆசை வந்ததுனால, 2001-ம் வருஷம், இந்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினேன். ஆனா, விவசாயத்தைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாததுனால 10 வருஷம் நிலத்தை அப்படியே தரிசாவே போட்டுட்டேன். இந்தச் சூழ்நிலையிலதான், வள்ளிக்குளத்தைச் சேர்ந்த சுப்புராஜ்ங்கற வரோட அறிமுகம் கிடைச்சது. நான் விவசாயத்துல இறங்க அவர்தான் எனக்கு உந்துசக்தியா இருந்தாரு. ‘நிலம் இல்லாதவங்க நிறைய பேரு குத்தகைக்கு நிலத்தை வாங்கி விவசாயம் செஞ்சுகிட்டு இருக்காங்க. ஆனா, சொந்தமா நிலம் வச்சுருக்குற நீங்க, அதைச் சும்மா போட்டு வச்சிருக்கீங்களே’னு சொன்னார்.

ஏதோ ஒரு ஆர்வத்துல நிலத்தை வாங்கிட்டேன். ஆனா விவசாயத்தைப் பத்தி எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. அதனாலதான் இதுல இறங்க தயக்கமா இருக்கு’னு அவர்கிட்ட சொன்னேன். இந்த புத்தகத்தை வாங்கித் தொடர்ந்து படிங்க... விவசாயத்தைப் பத்தின எல்லா விஷயங்களையும் நீங்க தெளிவா தெரிஞ்சுக்கலாம்னு சொல்லி, பசுமை விகடன எனக்கு அவர் அறிமுகப்படுத்தினாரு. ஏழெட்டு மாசம் தொடர்ச்சியா படிச்சதுமே எனக்கு விவசாயத்தைப் பத்தின புரிதல் வந்துடுச்சு. விவசாயத்துல இறங்க முடிவெடுத்துட்டேன்.

கம்பு அறுவடையில்
கம்பு அறுவடையில்

2012-ம் வருஷம், நிலத்தைச் சீர்படுத்திட்டு, மண்ணை வளப்படுத்த செம்மறியாட்டுக் கிடை அமைச்சேன். நிறைய எருவும் போட்டேன். அந்த வருஷம், புரட்டாசி மாசம் மழை பெய்ஞ்சதும் புழுதி உழவு ஓட்டிட்டு, தலா 75 சென்ட்ல சிவப்பு இருங்குச்சோளம், குதிரைவாலி சாகுபடி செஞ்சேன். முதல் வருஷம் குறைவான மகசூல்தான் கிடைச்சது. அடுத்தடுத்த வருஷங்களும் ஆட்டுக்கிடை அமைச்சு, அதிக அளவு எரு போட்டு... இருங்குச் சோளம், குதிரைவாலியையே சாகுபடி செஞ்சேன். மண்ணு நல்லா வளமான துனாலயும், பசுமை விகடன்ல சொல்லப்பட்ட பஞ்சகவ்யா, மீன் அமிலம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களைத் தயார் பண்ணி, மேலுரமா கொடுத்ததுனாலயும் படிப்படியா மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது.

பசுமை விகடன்ல வெளியாகுற எல்லாக் கட்டுரைகளையுமே நான் விரும்பி படிச்சாலும் கூட, மானாவாரி சாகுபடிக்கேத்த பயிர்களைப் பத்தின விஷங்களா இருந்தா கூடுதல் கவனம் செலுத்துவேன். சம்பந்தப் பட்ட விவசாயிகள்கிட்ட உடனடியா பேசி விவரங்களைத் தெரிஞ்சுக்குவேன்.

இந்த நிலையிலதான் கடந்த வருஷம், ஜூலை மாசம் 25-ம் தேதி வெளியான பசுமை விகடன்ல வந்த ஒரு கட்டுரை என் கவனத்தை ஈர்த்துச்சு. ‘கலக்கல் வருமானம் தரும் ராஜஸ்தான் கம்பு!”ங்கிற தலைப்புல அந்தக் கட்டுரை வெளியாகி இருந்துச்சு. சேலம் மாவட்டம் வாழையந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தனீஸ்வரன்ங்கிற விவசாயி, ராஜஸ்தான் மாநிலத்துல விளையக்கூடிய ‘துருக்கி’ங்கற நாட்டு ரகக் கம்பை, தன்னோட நிலத்துல சாகுபடி செஞ்சிருந்தார். அந்தக் கம்பு பயிர்... ஆறடி உயரத்துக்கும் மேல நெடுநெடுனு வளர்ந் திருந்ததோட மட்டுமல்லாம, அதோட கதிர்கள் ஒவ்வொண்ணும் மூன்றரை அடியில இருந்து 5 அடி நீளத்துக்கு வளர்ந்திருக்குனு அந்த விவசாயி சொன்னதைப் பார்த்து ரொம்பவே ஆச்சர்யப்பட்டுப்போனேன். உடனே, அந்த விவசாயிக்கு போன்போட்டு பேசினேன். அவரோட வார்த்தைகள் ரொம்ப யதார்த்தமானதாவும், உண்மைத் தன்மை யோடும் இருந்துச்சு. தன்கிட்ட உள்ள விதையை விக்கணுங்கறதுக்காக, மிகைப் படுத்தி எதுவும் பேசல. ‘ராஜஸ்தான் கம்பை, இறவை பாசனத்துலதான் நான் சாகுபடி செஞ்சிருக்கேன். ஆனா, மானாவாரியில மகசூல் எப்படி இருக்கும்னு தெரியல. இது உங்க பகுதிக்கு எந்தளவுக்கு உகந்ததா இருக்கும்னு உத்தரவாதம் கொடுக்க முடியலை’னு சொன்னார்.

வானத்தைத் தொட்டு நிற்கும் கம்பு
வானத்தைத் தொட்டு நிற்கும் கம்பு

விளைச்சல் எப்படி இருந்தாலும் பரவா யில்லை. இதைச் சோதனை முயற்சியா செஞ்சு பார்க்கிறேன்னு சொல்லி... அவர் கிட்ட இருந்து ஒரு கிலோ விதை வாங்கி, 75 சென்ட் பரப்புல இதைப் பயிர் பண்ணினேன். வழக்கமா சிறுதானிய பயிர்களுக்கு என்னென்ன இடுபொருள்கள் கொடுப் பேனோ, அதே மாதிரிதான் இதுக்கும் கொடுத்தேன். போதுமான அளவுக்கு மழையும் பெய்ஞ்சதுனால பயிர்கள் நல்லா கிடுகிடுனு உயரமா வளர ஆரம்பிச்சது குறைந்தபட்சம் 1 அடி நீளத்துக்கும் அதிக பட்சமா நாலு அடி நீளத்துக்கும் கதிர்கள் வந்துச்சு. இதைப் பார்த்து எங்க பகுதி விவசாயிகள் ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. 75 சென்ட் பரப்புல, அதுவும் மானாவாரியில 290 கிலோ மகசூல் கிடைச்சுருக்குனா, இது பெரிய விஷயம்’’ என்று சொன்னவர், இதற்கான விற்பனை வாய்ப்பு மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘பயிர் நல்லா உயரமா வளர்ந்ததுனால, இதோட தட்டைகளை மாடுகளுக்கு உலர் தீவனம் பயன்படுத்திக்கலாம்ங்கற எண்ணத் துனாலயும், கதிர்கள் நல்ல நீளமா உருவாகி, ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைச்சதுனாலயும், எங்க பகுதி விவசாயிங்க நிறைய பேர், என்கிட்ட விதை கேட்டுருக்காங்க. ஒரு கிலோ விதைக்கம்பு 300 - 400 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு விற்பனை செய்யலாம்னு திட்டமிட்டுருக்கேன். இப்ப எனக்குக் கிடைச்சுருக்குற 290 கிலோ கம்பு விற்பனை மூலம், குறைந்தபட்சம் 87,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆட்டுக்கிடை கட்டினது, உழவு ஓட்டினது, விதைப்பு செஞ்சது, களையெடுப்பு, அறுவடை வரைக்குமான எல்லாச் செலவுகளையும் சேர்த்து கணக்கு பண்ணினா, மொத்தம் 17,000 ரூபாய்தான் செலவாகியிருக்கு. உற்பத்தி செலவு போக, மீதி 70,000 ரூபாய் லாபமா கிடைக்கும். அடுத்த வருஷம் 5 ஏக்கர்ல இதைச் சாகுபடி செஞ்சு, மக்கள்கிட்ட தானியமா, ஒரு கிலோ 150 ரூபாய்னு விற்பனை செய்யலாம்ங்கற யோசனையில இருக்கேன்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, நடராஜன்,

செல்போன்: 92453 83687

நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்
நீளமான ராஜஸ்தான் கம்புடன் நடராஜன்

இப்படித்தான் சாகுபடி!

மானாவாரி நிலத்தில்... 75 சென்ட் பரப்பில் ராஜஸ்தான் கம்பு சாகுபடி செய்ய, நடராஜன் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வழக்கமாக விளையும் நாட்டு ரகக் கம்பு போலவே, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த துருக்கி ரகக் கம்பும் வறட்சி தாங்கி வளரும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் சுமார் 500 செம்மறி ஆடுகளைக் கொண்டு, நிலம் முழுக்கப் பரவலாகக் கிடை அமைக்க வேண்டும். அதன் பிறகு 5 நாள்கள் இடைவெளியில் 2 முறை உழவு செய்ய வேண்டும். மழை பெய்ததும் கம்பு விதையைப் பரவலாகத் தூவ வேண்டும். 75 சென்ட் பரப்பளவில் சாகுபடி செய்ய ஒரு கிலோ விதை தேவைப்படும். 7 முதல் 10 நாள்களில் முளைப்பு தெரியும். 15 மற்றும் 30 ஆகிய நாள்களில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 நாள்களில் பூத்து 40 நாள்களில் கதிர் பிடித்துவிடும். 50 நாள்களில் மணி பிடித்து 80 நாள்களில் முற்றி அறுவடைக்கு வந்துவிடும். 80 - 90 நாள்களில் அறுவடை செய்யலாம். நாட்டு ரகக் கம்பு சாகுபடியைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்கலாம்.

வைக்கோலை விட
சத்துகள் அதிகம்!

“பொதுவாக, நாட்டுரகக் கம்பு வறட்சி தாங்கி வளரும். மண்ணின் இறுக்கத்தைக் குறைக்கும். மண்ணில் உள்ள கால்சியம் சத்து மட்டுமே இதற்குப் போதுமானது. இதன் தட்டைகளைக் காய வைத்துக் கால்நடைகளுக்கு உலர் தீவனமாகக் கொடுக்கலாம். வைக்கோலை விட இதில் சத்துக்கள் அதிகம்’’ என்கிறார் நடராஜன்.