நாட்டு நடப்பு
Published:Updated:

மாதம் ரூ. 50,000 லாபம்... சிறுதானிய குக்கீஸ்... மதிப்புக்கூட்டலில் அசத்தும் விருதுநகர் விவசாயி!

குக்கீஸ் தயாரிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குக்கீஸ் தயாரிப்பு

மதிப்புக் கூட்டல்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனசேகரன், சிறுதானியங்களில் குக்கீஸ் எனப்படும் பிஸ்கட் வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் கணிசமான லாபம் பார்த்து வரும் இவர், தன்னுடைய தயாரிப்புக்குத் தேவையான சிறுதானியங்களைத் தனது நிலத்தில் சாகுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளிடம் இருந்தும் கொள்முதல் செய்துகொள்கிறார்.

ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். விருதுநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளையங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இவருடைய வீடு. இங்கு சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த தனசேகரன், புன்னகையுடன் நம்மை வரவேற்றார்.

தனசேகரன்
தனசேகரன்

“விவசாயக் குடும்பம்தான். ஆனா, எனக்கு சின்ன வயசுல விவசாயத்துல ஆர்வம் கிடையாது. எம்.ஏ, எம்.பில் முடிச்சிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இங்கிலீஷ் டியூஷன் எடுத்தேன். அடுத்த சில வருஷங்கள்லயே அது எனக்கு சலிப்பு தட்டிடுச்சு. அதனால ஒரு தனியார் இன்ஜினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா வேலைக்குச் சேர்ந்து 10 வருஷம் வேலை பார்த்தேன். சில காரணங் களால், அந்த வேலையில தொடர முடியாத சூழல் உருவாச்சு. 2019-ம் வருஷம் கல்லூரி விரிவுரையாளர் பணியிலிருந்து வெளி யேறினேன். இனிமே பொழப்புக்கு என்ன செய்யப்போறோம்னு, தவிச்சுப் போயி கிடந்தேன்’’ என்று சொன்னவர், தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் குறித்து விவரித்தார்.

குக்கீஸ் தயாரிப்பு
குக்கீஸ் தயாரிப்பு

“அந்தச் சமயத்துலதான் ‘விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர்கள் குழு’வினரோட அறிமுகம் எனக்குக் கிடைச்சது. இதுல நான், என் மனைவி தங்கராணி ரெண்டு பேரும் உறுப்பினரா சேர்ந்தோம். அந்தக் குழுவினர் கொடுத்த ஆலோசனையிலதான், சிறுதானியங்களைப் பயன்படுத்தி, குறைவான முதலீட்டுல, எளிமையான முறையில சுயதொழில் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.

சிறுதானியங்களுக்கு மக்கள்கிட்ட இப்ப வரவேற்பு அதிகமாகிக்கிட்டே இருக்கு. இதை மையப்படுத்தி ஏதாவது தொழில் செய்யணும்னு தோணுச்சு. ஆனா, அதுல என்ன செய்யலாம்னு ஒரு தெளிவான ஐடியா இல்லை.

சிறுதானிய பிஸ்கட்
சிறுதானிய பிஸ்கட்

அப்போதான், ‘விவசாயத் தன்னார்வலர்கள் குழு’ மூலமா சிறுதானியத்துல மதிப்புக்கூட்டு பொருள் தயார்செய்வது எப்படினு பயிற்சி குடுத்தாங்க. அதுல நான் கலந்துகிட்டேன். அந்தப் பயிற்சியில சிறுதானியங்களைப் பயன்படுத்தி எளிய முறையில ‘குக்கீஸ்’ (பிஸ்கட் போன்றது) தயார் செய்றதைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

உடனடியா, என்கிட்ட இருந்த கொஞ்ச பணத்தை முதலீடு செஞ்சு, குக்கீஸ் தயாரிக்குறதுக் கான, 10 விதமான‌ அச்சுகளை வாங்கி, சின்ன அளவுல தொழிலை தொடங்கினேன். வெண்ணெய், சிறுதானிய மாவு, நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாரம்பர்ய முறையில ‘ஹேண்ட் மேட் குக்கீஸ்’ செஞ்சு ‘விருதை சிறுதானிய உழவர் உற்பத்திக்குழு’ மூலமா விற்பனை செஞ்சேன். குக்கீஸோட தரத்தையும் சுவையையும் பார்த்துட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுற வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்தாங்க. அதுமூலமா, வெளிநாடுகளுக்கு 2 டன் அளவுக்குக் குக்கீஸ் ஏற்றுமதி செஞ்சிருக்கேன். உள்ளூர் பேக்கரிகள்லயும் என்னோட சிறுதானிய குக்கீஸுக்கு அதிக வரவேற்பு இருந்துச்சு.

சிறுதானிய பிஸ்கட்
சிறுதானிய பிஸ்கட்

இந்தத் தொழில் நல்ல முறையில நடந்து கிட்டு இருந்த சமயத்துலதான், கொரோனா பொது முடக்கத்தால, எல்லாக் கடைகளும் மூடப்பட்டு, என்னோட குக்கீஸ் வியாபாரம் தடைப்பட்டுப் போச்சு. ஆனாலும் நான் சோர்வு அடையல. கொரோனா பிரச்னை முடிஞ்சதும், என்னோட குக்கீஸ் தயாரிப்பு தொழிலை, கொஞ்சம் பெரிய அளவுல தொடங்குறதுக்கான முயற்சிகள்ல இறங்கினேன்.

அதுக்கு நிறைய பணம் தேவைப்பட்டுச்சு. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறு பொருள் உற்பத்தியாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட வேளாண்மைத்துறை மூலமா, முழு மானியத்துல ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுக்குறாங்கனு தெரிஞ்சு அதுக்கு முயற்சி பண்ணினேன். என்னோட முயற்சிக்கு பலன் கிடைச்சது.

குக்கீஸ் தயாரிப்பு
குக்கீஸ் தயாரிப்பு

அந்தக் கடன் திட்டம் மூலமா, 2020-ம் வருஷம், குக்கீஸ் தயாரிக்குறதுக்கான மாவு பிசையுற மெஷின், வேற சில உபகரணங்கள் எல்லாம் வாங்கி மறுபடியும் குக்கீஸ் தயாரிப்பை ஆரம்பிச்சேன். பேக்கரிகள் மட்டுமல்லாம... மளிகைக் கடைங்க. உழவர் சந்தையில உள்ள காய்கறி கடைகள்ல எல்லாம் என்னோட குக்கீஸை விற்பனைக்கு வச்சேன். ஆரோக்கியம் சார்ந்த விஷயங் கிறதால சிறுதானிய குக்கீஸுக்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருந்துச்சு.

நான் இந்தத் தொழில்ல அடுத்தகட்டத்துக்கு முன்னேற வேளாண்மைத் துறை அதிகாரிகள் முக்கியமான ஒரு உதவி பண்ணினாங்க. பாரதப் பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்துல எனக்கு 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சு தந்தாங்க. அந்த 10 லட்சம் ரூபாய்ல 35 சதவிகிதம் மானியம். மீதி ஆறரை லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தினா போதும். ஆனா, அந்தளவுக்கு இந்தத் தொழில்ல வருமானம் ஈட்ட முடியுமாங்கற ஒரு சின்ன பயம்கூட எனக்கு வரலை. மாசம் 21,000 ரூபாய் கடன் தவணை செலுத்திக்கிட்டு இருக்கேன்.

தனசேகரன்
தனசேகரன்

வங்கிக் கடன் கிடைச்சதுனால, என்னோட தொழிலை நவீன முறையில இன்னும் பெரிய அளவுல விரிவுப்படுத்த முடிஞ்சது. ஆள்கள் மூலம் குக்கீஸ் தயார் செய்றதா இருந்தா, அதிக நேரம் பிடிக்கும். ரொம்பக் குறைவான நேரத்துல அதிக எண்ணிக்கையில குக்கீஸ்கள் தயார் செய்றதுக்காக, தானியங்கி முறையில செயல்படும் இயந்திரங்களை வாங்கினேன். ஓவன், பிஸ்கட் ஷேப் வெண்டிங் மெஷின், பட்டர் பீட்டர், பேக்கிங் மெஷின் உட்பட இன்னும் பல முக்கியமான இயந்திரங்களை வாங்கி, எங்க வீட்டுக்கு முன்னாடியே ஒரு பெரிய ஷெட் அமைச்சு, சிறுதானிய குக்கீஸ் தயாரிப்பை, ஒரு நிறுவனமா மேம்படுத்தி, தொடர்ந்து வெற்றிகரமா நடத்திக்கிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், சிறுதானிய சாகுபடி மற்றும் கொள்முதல் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு சொந்தமா 3 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல குதிரைவாலி, தினை, கேழ்வரகு, கம்பு சாகுபடி செஞ்சு, என்னோட தொழிலுக்கு மூலப்பொருளா பயன்படுத்திக்கிறேன். இது போக, கூடுதல் தேவைக்கு மற்ற விவசாயிகள்கிட்ட இருந்தும் சிறுதானி யங்கள் கொள்முதல் செஞ்சுக்குவேன். எங்க பகுதியில சிறுதானிய சாகுபடிக்கு பெரும்பாலும் ரசாயனம் பயன்படுத்த மாட்டோம். மானாவாரிங்கறதுனால, அதிக செலவு செய்ய மாட்டோம். மாட்டு எரு, ஆட்டுப்புழுக்கை, வேப்பங்கொட்டை தூள், வேப்ப எண்ணெய்... இதுமாதிரியான இயற்கை இடுபொருள்கள்தான் பயன் படுத்துவோம்’’ என்று சொன்ன தனசேகரன், விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

சிறுதானிய பிஸ்கட்
சிறுதானிய பிஸ்கட்

“100 கிலோ குக்கீஸ் தயார் செய்றதுக்கு... சிறுதானிய மாவு, நாட்டுச் சர்க்கரை, பால் பவுடர், பால், வெண்ணெய், எல்லாம் சேர்த்து 120 கிலோ தேவைப்படுது. ஒரு மாசத்துக்கு 650 - 700 கிலோ குக்கீஸ் தயார் செஞ்சு விற்பனை செய்றேன். ஒரு கிலோவுக்கு 450 ரூபாய் வீதம் சராசரியா 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல சிறுதானியம், நாட்டுச்சர்க்கரை, பால் பவுடர், பால், வெண்ணெய் உள்ளிட்ட மூலப் பொருள்கள், பேக்கிங் செலவுகள் எல்லாம் போக, மீதம் 50,000 ரூபாய் நிகர லாபம் கிடைக்குது. இது எனக்கு நிறைவான லாபம்’’ என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தொடர்புக்கு, தனசேகரன்,

செல்போன்: 80568 38328

கடனுதவித் திட்டங்கள்

கடனுதவித் திட்டங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநர் (வணிகம்) ரமேஷிடம் பேசினோம். “சமீபகாலமா பலரும் சிறுதானியங்கள்ல குக்கீஸ் தயாரிக்குறாங்க. ஆனா, அவங்களால பெரிய நிறுவனங்களோட போட்டி போட முடியலை. தரம், பேக்கிங் ரெண்டுலயும் அதிக கவனம் செலுத்தினாதான், இதுல பெரிய அளவுல சம்பாதிக்க முடியும். மத்திய அரசு திட்டத்தின் கீழ், இந்த மாவட்டத்துல 24 பேருக்குக் கடனுதவி வாங்கிக் கொடுத்திருக்கோம். தொழில் தேவையைப் பொறுத்து 2 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கிருக்காங்க. கடன் வாங்கின விவசாயிகள்ல பலர் வெற்றிகரமா இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு இருக்காங்க. சிறுதானியங்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்றதுக்காக வேளாண் உற்பத்தியாளர்கள் குழு அமைக்கப்பட்டுருக்கு. விருதுநகர் மாவட்டத்துல மொத்தம் 35 குழுக்கள் இருக்கு.‌ அதுல 11 குழுக்கள் வேளாண்மைத் துறையின் வழிகாட்டுதல்படி செயல்படுது. மீதி குழுக்கள் நபார்டு வங்கி வழிகாட்டுதல்ல செயல்படுது’’ எனத் தெரிவித்தார்.

ரமேஷ், சுப்புலட்சுமி
ரமேஷ், சுப்புலட்சுமி

பயன் அடையும் விவசாயிகள்

தனசேகரன் இந்தப் பகுதி விவசாயிகளிடம் சிறுதானியங்கள் கொள்முதல் செய் கிறார். இதனால் பல விவசாயிகள் பலன் அடைந்து வருகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய விவசாயி சுப்புலட்சுமி, “நான் சாகுபடி செஞ்சிகிட்டு இருக்குற குதிரைவாலி, சாமை இரண்டையும் தனசேகரன்கிட்ட விற்பனை செய்றேன். இதனால எனக்கு உத்தரவாதமான விலை கிடைக்குது. வியாபாரிங்க வாங்குவாங்களா... மாட்டாங்களா... நியாயமான விலை கொடுப்பாங்களானு பயந்துகிட்டு இருக்க வேண்டியதில்லை’’ எனத் தெரிவித்தார்.