
விற்பனை
இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக விளைச்சல் எடுக்க முடியும் என்பதைப் பலரும் நிரூபித்து வருகிறார்கள். ஆனால் அதேசமயம் தங்களுடைய விளைபொருள்களை லாபகரமாகவும் தேக்கம் இல்லாமலும் விற்பனை செய்வதென்பது சிலருக்கு சவாலாகவே உள்ளது. இந்நிலையில்தான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மணி, விளைபொருள்களை உற்பத்தி செய்வதில் மட்டுமல்லாமல், அவற்றை விற்பனை செய்வதிலும் வல்லவராகத் திகழ்ந்து சாதித்து வருகிறார். 10.01.2022 தேதியிட்ட இதழில் ‘குறைவான பராமரிப்பில் நிறைவான மகசூல் தரும் பூசணி’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். பூசணி சாகுபடி மற்றும் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்த தன்னுடைய அனுபவங்களை அக்கட்டுரையில் பகிர்ந்திருந்தார்.
4 ஏக்கர் பரப்பில் பூசணி, சுரைக்காய், வெண்டை, கத்திரி, சீனி அவரைக்காய், பப்பாளி, பாகற்காய், பருத்தி, சாமந்திப் பூ, கீரை வகைகள், மரவள்ளி கிழங்கு, கொய்யா ஆகியவற்றைச் சாகுபடி செய்து வரும் இவர், தன்னுடைய விளைபொருளுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை என்றோ... விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டதாகவோ, ஒருநாளும் புலம்பியது இல்லை என்கிறார்கள், இவரை அறிந்தவர்கள். இவர் கடைப்பிடிக்கும் தனித்துவமான விற்பனை வியூகம் என்பது மற்ற விவசாயிகளுக்குப் பெரிதும் கைக்கொடுக்கக் கூடியது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ள, இவரைச் சந்திக்கச் சென்றோம். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டத்திற்கு ஓர் காலை வேளையில் சென்றோம். அறுவடை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மணி, பெரும் உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார்.

“இன்னிக்கு இயற்கை விவசாயத்தைப் பத்தி நிறைய பேர் பேசுறாங்க. நிறைய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள்னு பல தரப்பினரும் ரொம்ப ஆர்வமா இயற்கை விவசாயத்துக்கு வர்றாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இயற்கை விவசாயம் செய்றதுங்கறது பெரிய கம்பசூத்திரம் எல்லாம் கிடையாது. மண்ணையும், பயிர்களோட தன்மையையும் புரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி இயற்கை இடுபொருள்களைக் கொடுத்துக்கிட்டு வந்தா கண்டிப்பா வெற்றி அடைஞ்சிடலாம். இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைக் கத்துக்குறதும் கூட இப்ப ரொம்ப ஈஸி. யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. பசுமை விகடன் படிச்சாலே நிறைய தெரிஞ்சுக்கலாம். நிறைய வீடியோக்களும் வந்துக்கிட்டு இருக்கு. பயிர்கள்ல ஏதாவது பூச்சி, நோய் பாதிப்புகள் ஏற்பட்டா கூட, மற்ற இயற்கை விவசாயிகள்கிட்ட பேசி, அதுக்கான தீர்வுகளைத் தெரிஞ்சுக்க முடியுது. ஆனா இயற்கை விவசாய விளைபொருள்களைச் சந்தைப்படுத்துறதும், விற்பனையில சாதிக்குறதும் அவங்கவங்க கையிலதான் இருக்கு. இயற்கை விவசாய விளைபொருள்களோட மகத்துவம் பத்தின விழிப்புணர்வு மக்கள்கிட்ட என்னதான் அதிகரிச்சிருந்தாலும் கூட, இயற்கை விவசாயிங்க தங்களோட உற்பத்தி பொருள்களைச் சுணக்கம் இல்லாம, தாங்கள் எதிர்பார்த்த விலையில விற்பனை செய்றதுங்கறது சில நேரங்கள்ல பெரிய சவாலான காரியமாதான் இருக்குனு பலர் புலம்புறாங்க. இதனால மனசோர்வோ, சலிப்போ அடைஞ்சுடக்கூடாது. எல்லாத் தொழில்கள்லயுமே சவால்கள் இருக்கத்தான் செய்யும். விற்பனையில தெளிவான திட்டமிடலும், துல்லியமான வியூகமும் இருந்தா, இயற்கை விவசாயத்துல நிச்சயம் சாதிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை கமிஷன் மண்டி, மொத்த வியாபாரிங்ககிட்ட போனா, நம்மோட விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காது. விவசாயிகள் தங்களோட விருப்பம் போல, விளைபொருள்களை உற்பத்தி செஞ்சுட்டு, மொத்த வியாபாரிகள்கிட்ட போயி நின்னா, பல நேரங்கள்ல நமக்கு விரக்தியும் ஏமாற்றமும்தான் மிஞ்சும். யார்க்கிட்ட விற்பனை செய்யப்போறோம், அவங்களுக்கு எந்தெந்த பொருள்கள், எவ்வளவு தேவைங்கறதை முன்கூட்டியே பேசி தீர்மானிச்சுக்கணும். நம்ம விளை்பொருள்களுக்கான விலையையும் முன்கூட்டியே உத்தரவாதப்படுத்திக்கணும். இதைத்தான் நான் கடைப்பிடிக்குறேன். நம்மோட விளைபொருள்களை விற்பனை செய்ய ஒரு சில நபர்களை மட்டுமே முழுமையா சார்ந்திருக்கக் கூடாது. அதுமாதிரி இருந்தா, கண்டிப்பா பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். நான் என்னோட விளைபொருள்களை மூன்று விதமா விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன்’’ என்றவர் அதுகுறித்த தகவல்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

“என்னோட பண்ணையில விளையுற காய்கறிகள்ல 75 சதவிகிதத்தைச் சென்னை, கோயம்புத்தூர்ல உள்ள இயற்கை அங்காடி, டிபார்ட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அனுப்புறேன். எப்படியும் வாரத்துல 4 நாள்கள் என்னோட காய்கறிகள், பழங்கள் வெளியூர்களுக்குப் போய்கிட்டே இருக்கும்.
சந்தைகள்ல காய்கறி, பழங்களுக்கு விலை நிரந்தரமா இருக்காது. அதை நான் கணக்குல எடுத்துக்குறதே கிடையாது. எங்கிட்ட வாடிக்கையா காய்கறிகள், பழங்கள் வாங்குற இயற்கை அங்காடிகள், பழமுதிர் சோலை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர்களோடு... குறைந்தபட்சம் 3 மாசத்துக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி, என்னோட விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயம் செஞ்சு, ஒப்பந்தம் போட்டுக்குவேன்.
அந்த 3 மாசத்துக்குள்ள, நான் விற்பனை செய்யக்கூடிய விளைபொருள்களோட விலை, வெளிச்சந்தையில என்னதான் அதிக விலை இருந்தாலும், என்னோட பொருளுக்கான விலையைக் கூட்டிக்கொடுங்கனு கேட்கமாட்டேன். அதேபோல, வெளிச்சந்தையில என்னதான் விலை ரொம்பக் குறைவா இருந்தாலும், ஒப்பந்ததாரர் விலையைக் குறைச்சி கொடுங்கனு கேட்கமாட்டார். எல்லாமே ஏற்கெனவே, போட்டு வச்ச ஒப்பந்த விலையின்படிதான் காய்கறிகள் அனுப்புறேன்.
நான் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், பழங்கள்... ஒரு கிலோ குறைந்தபட்சம், 25 ரூபாய்னு விலை நிர்ணயம் செய்றேன். இதுக்குக் கீழ விலையைக் குறைச்சிக் கேட்டா, என்னோட விளைபொருள்களைத் தரமாட்டேன். இது குறைந்தபட்ச விலை. பெரும்பாலும் இதை விட அதிக விலைக்குதான் என்னோட விளைபொருள்களை விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
வெளியூர்களுக்கு அனுப்பினது போக, மீதமுள்ள 25 சதவிகித விளைபொருள்களைப் பாவூர்சத்திரம் காய்கறிச் சந்தையில உள்ள கடைக்காரங்களுக்கு விற்பனை செய்றேன். புதன்கிழமையும், சனிக்கிழமையும் சந்தைக்குப் போயி காய்கறிகளைக் கொடுப்பேன். எங்க பகுதி மக்கள், நண்பர்கள், உறவினர்களை என்னோட பண்ணைக்கு அழைச்சிக்கிட்டு வந்து பார்வையிடச் செய்றேன். இதை நான் வழக்கமாவே வச்சிருக்கேன். இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட விதவிதமான காய்கறிகளைச் செடிகள்ல செழிப்பா பார்க்குறப்ப, அதை வாங்கிச் சாப்பிடணும்ங்கற ஆசையும் ஆர்வமும் அதிகமாகும்.
அவங்க கண் முன்னாடியே அந்தக் காய்கறிகளைப் பறிச்சிக் கொடுக்குறப்ப அவங்க ரொம்பவே சந்தோஷப்பட்டுப் போறாங்க. மக்கள்தான் இயற்கை விவசாயிங்களோட விளம்பரத் தூதுவர்கள். ஒரு தடவை எங்ககிட்ட காய்கறிகளை வாங்கி சாப்பிட்டு பார்த்துட்டா, அவங்க தங்களுக்குத் தெரிஞ்ச பலரையும் என்னோட பண்ணைக்கு வரவழைச்சிடுறாங்க. இதனால என்னோட பண்ணையில நேரடி விற்பனையும் நல்லா நடந்துக்கிட்டு இருக்கு” என்றவர் வருமானம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டார்.

வருமானம்
“4 ஏக்கர்ல பல பயிர்கள் சாகுபடி செய்றது மூலமா, ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்குது. இடுபொருள்கள், களையெடுப்பு, பறிப்புக்கூலி, போக்குவரத்துச் செலவு எல்லாம் போக, மாசம் 50,000 ரூபாய் நிகரலாபமா கிடைக்குது. இது எனக்கு உத்தரவாதமான லாபம். பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்கள்ல இன்னும் கூடுதலா லாபம் கிடைக்கும்’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்புக்கு, மணி,
செல்போன்: 99524 21562.
ராஜபாளையம் சந்தையில் இலவச பயிற்சி
‘‘இயற்கை விவசாயம் செய்ய ஆசைப்படுறவங்க, இயற்கை விவசாயத்துல புதுசா காலடி எடுத்து வச்சவங்களுக்கு ஏற்படக்கூடியவங்களுக்கு வழிகாட்டுறதுக்காக, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையம் சந்தையில இலவசமா பயிற்சி நடத்துறேன். என்னோட பண்ணையைப் பார்வையிட வர்ற விவசாயிகள், மாணவர்களுக்கு... இடுபொருள்கள் தயாரிப்பு பத்தி சொல்லித் தர்றேன். மற்ற சந்தேகங்களுக்கும், தேவைகளுக்கும் என்னை எப்போ வேணும்னாலும் அழைக்கலாம்’னு சொல்லி என்னோட செல்போன் நம்பரை அவங்கக்கிட்ட கொடுத்திருக்கேன்’’ என்கிறார் மணி.
அடுத்தகட்டம்
‘‘இப்ப வர்ற லாபமே எனக்கு நிறைவானதுதான். இருந்தாலும் இன்னும் கூடுதலா லாபம் பார்க்குறதுக்காகவும், விற்பனை வாய்ப்பை இன்னும் கூடுதலா உத்தரவாதப்படுத்துறதுக்காகவும்... தினசரி சந்தை, வாரச்சந்தைகள்ல நானே நேரடியா கடை அமைச்சி, என்னோட காய்கறிகளையும் பழங்களையும் வியாபராம் செய்யலாம்னு திட்டமிட்டிருக்கேன். அதுக்கான ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டுருக்கு. சந்தையில உட்கார்ந்து காய்கறி விக்கிறதுக்குக் கூச்சப்பட்டோம்னா விவசாயத்துல சாதிக்க முடியாது. ஒரு விவசாயி தன்னோட விளைபொருள்களுக்கு, நியாயமான விலை கிடைக்க, தேடலும் கடும் உழைப்பும் ரொம்ப அவசியம். சந்தையில நான் நேரடியா கடை அமைச்ச பிறகு, மக்களை என் பக்கம் ஈர்க்க சில விளம்பர யுக்திகளைக் கையாளலாம்னு இருக்கேன். குறிப்பா சொல்லணும்னா, இயற்கை முறையில் விளைவிச்ச காய்கறிகள்ல கிடைக்கும் பலன்களை ஒரு சார்ட்டில் எழுதி வைக்கலாம்னு இருக்கேன். ஒவ்வொரு காய்கறிக்கும் உள்ள மருத்துவப் பலன்களையும் அதுல பட்டியலிடப் போறேன்’’ என்கிறார் மணி.