Published:Updated:

`இது யோகிக்கான எச்சரிக்கை!' - உ.பி-யில் கூடிய விவசாயிகளின் மகா பஞ்சாயத்து; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து
News
உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து

``வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தென்னிந்தியாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்கிற கருத்தை வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாகப் பரப்பி வைத்திருந்தது. நாங்கள் மகா பஞ்சாயத்தில் மேடையேறிப் பேசியபோது...''

Published:Updated:

`இது யோகிக்கான எச்சரிக்கை!' - உ.பி-யில் கூடிய விவசாயிகளின் மகா பஞ்சாயத்து; என்ன நடந்தது?

``வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தென்னிந்தியாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்கிற கருத்தை வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாகப் பரப்பி வைத்திருந்தது. நாங்கள் மகா பஞ்சாயத்தில் மேடையேறிப் பேசியபோது...''

உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து
News
உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வேண்டுமென்றும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து 10 மாதங்களாகப் போராடிக்கொண்டிருந்த விவசாயிகள், அதன் முக்கிய கட்டமாக சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியான முசாஃபர் நகரில் அண்மையில் மகா பஞ்சாயத்தை நடத்தினார்கள்.

உத்தரப்பிரதேசத்திலிருந்து கிட்டத்தட்ட 90 சதவிகித விவசாயிகள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் அருகிலிருக்கிற 7 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில், இந்திய விவசாயிகள் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன் முருகசாமியும், கொள்கை பரப்பு செயலாளர் தாராபுரம் சிவகுமாரும் கலந்துகொண்டனர்.

உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து
உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து

இது குறித்து ஈசன் முருகசாமியிடம் பேசினோம். ``சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற டெல்லி விவசாய போராட்டக் குழுவின் சார்பில், இந்தியாவின் மாபெரும் உழவர்கள் சங்கத் தலைவர் ராகேஷ் தியாகத் அவர்களின் தலைமையில் இந்த மகா பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் பஞ்சாப், ஹரியானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த உழவர் சங்கத்தலைவர்கள் கலந்துகொண்டார்கள். காலை 10.30-க்கு ஆரம்பித்த இந்த மகா பஞ்சாயத்து மாலை 3 மணி வரை நீடித்தது.

உத்தரப்பிரதேச விவசாயிகள் மிகப்பெரும் எழுச்சியுடன் இந்த மகா பஞ்சாயத்தில் திரண்டிருந்தார்கள். நாங்கள் திரண்டிருந்த மைதானத்தில் 4 லட்சம் பேர் வரை உட்கார முடியும். முசாஃபர் நகருக்கு வருகிற அத்தனை வழிகளிலும் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டருக்கு மக்கள் தலைகளாக இருந்தன. செல்லும் வழியெல்லாம் தங்கள் நகருக்கு வந்த விவசாயிகளுக்கு அந்த நகரின் மக்கள் உணவு, இனிப்பு என வழங்கிக்கொண்டிருந்தார்கள். டிராக்டர்களில் பழம், தண்ணீர் பாட்டில், சப்பாத்தி, சமோசா என்று கொண்டுவந்து வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் முசாஃபர் நகரமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிட்டதால், பின்னால் வந்தவர்களால் முசாஃபருக்குள் நுழைய முடியவில்லை. அவர்கள் மகா பஞ்சாயத்தைக் காண்பதற்காகவும் கூட்டத்தில் பேசிய உழவர் சங்கத் தலைவர்களின் உரைகளைக் கேட்பதற்காகவும் நகரின் முக்கியமான தெருக்களில் தொலைக்காட்சியை வைத்து, யூ டியூப் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்தார்கள்.

உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து
உத்தரப்பிரதேசத்தின் மகா பஞ்சாயத்து

மகா பஞ்சாயத்துக்கு முந்தின நாளே இந்தியா முழுக்க இருந்து 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முசாஃபருக்குள் குவிந்துவிட்டார்கள். அந்த நேரத்தில் மழை பெய்ய ஆரம்பிக்க, கழிவு நீரை உறிஞ்சும் கருவியைக் கொண்டு வந்து மழைநீரை வெளியேற்றி, வந்த விவசாயிகளுக்குத் தங்குவதற்கு இடமளித்து, உணவளித்தனர்.

மறுநாள் போராட்டம் ஆரம்பித்த அன்று காலையில் ஒரு மணி நேரம் இணையதள வசதியைத் துண்டித்தது உத்தரபிரதேச அரசு. உடனே விவசாயிகள் ரயில் மறியல் செய்ததும் மறுபடியும் இணையதள வசதிக் கொடுக்கப்பட்டது. 1983-க்குப் பிறகு இந்திய வரலாற்றில் ஒரே இடத்தில் விவசாயிகள் கூடிய மிகப்பெரிய கூட்டம் இதுதான். இது யோகி ஆதித்யநாத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் இருந்தது என்றால் அது மிகையல்ல.

ஈசன் முருகசாமி
ஈசன் முருகசாமி

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தென்னிந்தியாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்கிற கருத்தை வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாகப் பரப்பி வைத்திருந்தது. நாங்கள் மகா பஞ்சாயத்தில் மேடையேறிப் பேசியபோது உண்மையைப் புரிந்துகொண்ட விவசாயிகள், தாங்கள் கட்டியிருந்த தலைப்பாகையை மேலே சுழற்றி ஆரவாரம் செய்தார்கள்.

இதேபோல இன்னும் 17 மகா பஞ்சாயத்துக்களை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். தவிர, வரும் 14, 15 தேதிகளில் பூனா, ஹரியானா மற்றும் பஞ்சாபிலும் மகா பஞ்சாயத்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

மகா பஞ்சாயத்து
மகா பஞ்சாயத்து

உழவர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வதற்கான திட்டத்தை அரசு வகுத்து அளிக்க வேண்டும் என ஒட்டுமொத்த கூட்டமும் ஒருசேர வலியுறுத்தியது. தங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக வாக்களிப்பது என்கிற முடிவிலும் விவசாயிகள் இருக்கிறார்கள்'' என்கிறார் ஈசன் முருகசாமி.