நாட்டு நடப்பு
Published:Updated:

வாய்ப்பந்தல் பட்ஜெட்... ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ என்னவானது?

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வழக்கம்போல வாய்ப்பந்தல் போட்டுள்ளது, மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.

‘ஜெய் கிஷான் ஜெய் ஜவான்’ என்று மேடையில் முழங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கீழே இறங்கியவுடன் விவசாயிகளை மறந்துவிடுகிறார். ‘2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்’ என்று 2018-ம் ஆண்டே பிரதமர் அறிவித்திருந்தார். இதற்குச் சுதி சேர்க்கும் வகையில் மத்திய அமைச்சர்களும் வாய்க் கூசாமல் செல்லும் இடங்களிலெல்லாம் சொல்லி வந்தார்கள்.

திரும்பத் திரும்ப இவர்கள் சொல்வதைக் கேட்டபோது, ‘உண்மையாகவே விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகிவிடும்’ என்று நம்பும்படியாகவே செய்தார்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை. இதோ 2023-ம் ஆண்டு வந்துவிட்டது. இரண்டு மடங்கு வருமானம் எடுத்த விவசாயிகள் பற்றி மத்திய அரசு வாய்திறக்காமல் உள்ளது. சட்டியிலிருந்தால்தானே, அகப்பையில் வரும்?

சரி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு பெருக்க முடியாதா? என்று கேட்டால், நிச்சயம் முடியும். அதற்கு நாடு முழுவதும் பல இயற்கை வேளாண்மைப் பண்ணைகள் பாடமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், 2019-20-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’யை முழுமையாகச் செயல்படுத்தியிருந்தால், இரண்டு மடங்கு அல்ல; மூன்று மடங்கு வருமானம்கூடக் கிடைத்திருக்கும். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்ததுபோல, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கப் பல வழிகள் இருந்தும், மத்திய அரசு அதில் ஏனோ அக்கறை காட்டவில்லை.

‘இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 3 ஆண்டுகளில்1 கோடி விவசாயிகளுக்கு நிதிஉதவி அளிக்கப்படும்’ என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அறிவித்த ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்’ என்னவானது என்றே தெரியவில்லை. இந்நிலையில், புதிதாக இப்படியோர் அறிவிப்பு.

சொன்னதைச் செய்யாமல், புதிது புதிதாக வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டே இருப்பதால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும், நாட்டை ஆளும்பி.ஜே.பி-க்கும் எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை.

-ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்