Published:Updated:

தமிழகம் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற அரசு செய்யவேண்டியவை என்னென்ன? விரிவான அலசல்!

விவசாயம்
News
விவசாயம்

தமிழக அரசு இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும்போது செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன.

Published:Updated:

தமிழகம் முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற அரசு செய்யவேண்டியவை என்னென்ன? விரிவான அலசல்!

தமிழக அரசு இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும்போது செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன.

விவசாயம்
News
விவசாயம்

தமிழக அரசு இயற்கை விவசாயத்தை சிறப்பாக முன்னெடுக்க உள்ளதை சில சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சிக்கிம் தன்னை முழுமையான இயற்கை விவசாய மாநிலம் என்று அறிவித்து அதை நடத்தியும் காட்டியுள்ளது. உண்மையில் சிக்கிம் முற்றாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லாதல் இருந்தது. அதன் இயற்கைச் சூழல், பசுமைப் புரட்சியால் கபளீகரம் செய்யப்படாத மாநிலமாக இருப்பது போன்றவற்றால் சிக்கிம் தன்னை முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக மாற்றிக்கொண்டது.

ஆனால், தமிழகத்தின் நிலை அப்படியல்ல. பசுமைப் புரட்சியை வேகமாக சுவீகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதன் காரணமாகத் தமிழகம் அனுபவிக்கும் சிரமங்களும் பாதிப்புகளும் அதிகம்.

ஆனால், தமிழகத்தின் நிலை அப்படியல்ல. பசுமைப் புரட்சியை வேகமாக சுவீகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இதன் காரணமாகத் தமிழகம் அனுபவிக்கும் சிரமங்களும் பாதிப்புகளும் அதிகம். விவசாயிகள் இயற்கை விவசாயத்தைத் தாங்களாகவே முன்னெடுத்ததால்தான் இன்று இந்திய அளவில் தமிழகம் இயற்கை விவசாயத்தில் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயப் பரவல் போல் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பது தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதே சமயம் இந்தத் தன்னெழுச்சியான முன்னெடுப்புகளின் காரணமாக எதிர்பார்ப்புகளும் பெரிதாகவே உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது உண்மையில் ஒரு சவாலாகவும் இருக்கும். ஆகவே, தமிழக அரசு இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுக்கும்போது செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன.

விவசாயம்
விவசாயம்

தமிழகம் ஏன் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்?

பருவநிலை மாற்றம் பெரிய அளவில் தாக்கி வருகிறது. காற்றில் சேர்ந்த அதிப்படியான கரிக்காற்றை நிலத்தில் மிக எளிதாக, அதிக செலவில்லாமல் சேர்தப்பதற்கு இயற்கை விவசாயமே சிறந்த வழி. பசுமைப் புரட்சியின் முறைகள் மண்ணில் இருந்த கரிமச் சத்தை காணாமல் போகச் செய்துவிட்டது. 1.5 இருக்க வேண்டிய கரிமச் சத்தின் அளவு 0.3 அளவில் உள்ளது. இதன் காரணமாக விளைச்சல் குறைகிறது. அதிகம் இடுபொருள்களின் தேவை அதிகமாகிறது. செலவு அதிகம் ஆகிறது. விவசாயகள் கடனாளிகளாக உள்ளனர். நிலத்தடி நீர் பல இடங்களில் 1,000 அடி ஆழத்தில் இருக்கிறது. பல பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. அனைத்து ஓடைகளும் வறண்டு போய்விட்டன. அந்தந்த மண்ணுக்கே உரிய விதை வகைகள் காணாமல் போயின. பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு காரணமாக மண்ணும் பாதிக்கப்பட்டுள்ளது, உணவும் பாதிக்கப்படுள்ளது, நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நஞ்சாக உள்ளது, தாய்ப்பாலும் 1980-களிலேயே நஞ்சாக மாறிவிட்டது. விவசாயிகளின், கிராமங்களின் தற்சார்பு முற்றாக இழக்கப்பட்டுவிட்டது. இப்படி பல முன்னோடியான காரணங்கள் இருக்கின்றன.

மிக முக்கியமாக, இந்தியாவில் குறைந்த மழைப் பொழிவு பெறும் மாநிலங்களில் ஒன்றாக உள்ள தமிழகம் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து மண்ணையும் நீரையும் எதிர்கால மக்களையும் காப்பதற்கு இயற்கை விவசாயம் அதி அத்தியாவசியமான கருவியாக உள்ளது.

இயற்கை விவசாயத்துக்கென தனி துறை:

தமிழகம் இயற்கை விவசாயத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமெனில் தனியான துறை ஒன்றின் மூலமே சாத்தியமாகும். இப்படியான ஒரு தனித்த துறையால்தான் முழுமையாக இயற்கை விவசாயத்துக்குரிய எல்லா வேலைகளையும் தொய்வின்றி நடத்திட முடியும்.

வருவாய் இரட்டிப்பாக்குதல் -

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாகவும் மும்மடங்காக்குதலும் தேவை. விவசாயத்தில் செலவு குறைத்தல், மதிப்பு கூட்டி விற்றல் - இருப்பு வைத்திருந்து விற்றல் - உள்ளிட்டவை மூலம் இதை விரைவில் அடைந்திட முடியும்.

இயற்கை விவசாயத்துறை மூலம் மேற்கொள்ள வேண்டியவை:

இயற்கை விவசாயக் கொள்கை:

தமிழக அரசு இயற்கை விவசாயத்தை முதன்மையான விவசாயமாக மாற்ற வேண்டுமெனில் இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதற்கென தனியான இயற்கை விவசாயக் கொள்கை தேவை. பல தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழகத்தின் விவசாயப் பண்பாட்டின் அடிப்படையிலான இயற்கை விவசாயக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.

துறை அலுவலர்களுக்கான பயிற்சிகள்:

வேளாண் துறையில் உள்ள அலுவலர்களுக்கு பல்கலைக்கழகம் வழங்கிய அறிவும், பின்னர் பல்வேறு மைய ஆய்வகங்கள் வழங்கிய அறிவும் ரசாயன உரங்களைப் பயிர்களுக்கு உணவாக வழங்குதல் குறித்தே. மேற்கத்திய இயற்கை வேளாண்மைகூட ரசாயன உரங்களுக்குப் பதிலாக இயற்கை எரு வழங்கும் பார்வையிலேயே உள்ளது. தமிழகத்து இயற்கை விவசாயம் என்பது தமிழர்களுக்கே உரிய இயற்கை புரிதலில் பயிரின் சூழலை மாற்றி அமைப்பதில், மண்ணுக்கு உணவிடுதலில் உள்ள ஒன்றாகும்.

ஆகவே, துறை அலுவலர்களுக்கு தமிழகத்து இயற்கை விவசாயப் போக்குகள் மற்றும் இங்கு கடைப்பிடிக்கப்படும் இயற்கை விவசாய முறைகளின் அறிவியல் குறித்து அறிந்திடவும் பசுமைப் புரட்சி உருவாக்கிய பல மாயைகளையும் மயக்கங்களையும் விட்டு விலகிட (Delearing and Relearing) 3 மாத கால இயற்கை விவசாயிகளுடனான களப் பயிற்சி முறையை உருவாக்கிட வேண்டும்.

பயிற்சிகள் மற்றும் பயிற்றுனர் பயிற்சிகள்

இயற்கை விவசாயம் இன்று தமிழகத்தில் பரவலாக இருப்பத்தற்குக் காரணம் விவசாயிகளே மற்ற விவசாயிகளுடன் அறிவைப் பரிமாறிக்கொண்டதே. விவசாயிகளே பயிற்றுனர்களாக மாறியதே காரணம். ஆகவே இயற்கை விவசாயம் குறித்த குறைந்த பட்ச பாடத்திட்டம் ஒன்றையும், பயிற்சியில் ஈடுபட விரும்பும் விவசாயப் பயிற்றுனர்களுக்கான பயிற்றுனர் பயிற்சியும் அளிக்க வேண்டும். பயிற்றுனர் பயிற்சிக்கான குறைந்த பட்ச பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

Farmer
Farmer
AP / Channi Anand

விரிவாக்க விவசாயிகள்

விவசாயம் அந்தந்த உள்ளூர் சார்ந்த ஒன்று - Agriculture is Location Specific and Individual Specific. அந்தந்த வட்டாரத்து விவசாயிகளுக்கே அவர்களின் விவசாயப் பிரச்னைகள் ஆழமாகவும் விரிவாகவும் தெரியும் என்பதால் அந்தந்த வட்டாரத்து இயற்கை விவசாயிகளை அந்தந்த வட்டாரத்து இயற்கை விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு கௌரவமான ஊக்கத் தொகையையும் வழங்க வேண்டும்.

மதிப்பூட்டல் பயிற்சிகள்

காய்கறிகள் தவிர்த்து பிற விளைபொருள்கள் ஏதேனும் ஒரு வகையில் மதிப்பு கூட்டப்பட்ட பிறகே நுகர்வோர் பயன்படுத்தும் வகையை அடைகிறது. மதிப்புக்கூட்டியதுடன் அந்த விளைபொருளின் மதிப்பும் விலையும் அதிகமாகிறது. ஆகவே, விவசாயகிள் தங்களின் விளைபொருள்களைப் பண்ணையிலேயே அல்லது உள்ளூரிலேயே மதிப்பு கூட்டுதற்குரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். மதிப்பு கூட்டு மையங்கள், பயிற்சி மையங்களை ஆகியவற்றையும் அமைக்க வேண்டும்.

பாரம்பர்ய உணவு வகைகள் பதிவு செய்தல்:

தமிழகத்தின் உணவுப் பண்பாடு மிக விரிவானதும், பன்முகத் தன்மை வாய்ந்ததும் ஆகும். பல, கால வெள்ளத்தில் மறைந்து கொண்டிருக்கிறது. பல புதிய வடிவங்களுடன் உருமாறிக் கொண்டிருக்கிறது. புழக்கத்தில் இருக்கும், மறைந்த, மறைந்து கொண்டிருக்கும், மாற்றங்கள் அடைந்துகொண்டிருக்கும் அனைத்தையும் பதிவு செய்வதுடன் அவற்றின் பயன்கள், மருத்துவ வழியிலான பயன்கள் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்திட வேண்டும்.

உள்ளூர் சந்தைகள் உருவாக்கல்:

ஒவ்வொரு விவசாயியும் விவசாயத் தொழிலாளரும் நுகர்வோரே. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் உணவுத் தேவையில் அதிகமான பொருள்கள் கிராமத்துக்கு வெளியே இருந்துதான் வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளூர் சந்தைக்கான சாத்தியங்களை உருவாக்க வேண்டும். இது உணவு தானியங்கள் மட்டுமன்றி சாத்தியமான நுகர்வு பொருள்களையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்து விற்கும் சந்தைகளை உருவாக்கிட வேண்டும்.

PGS குழுக்கள் உருவாக்கம்:

இயற்கை விவசாயத்தில் உள்ள சான்று முறைகளில் மிக எளிதானதும், அதிகம் செலவு பிடிக்காததும், சாதாரண சிறு குறு விவசாயிகளாலும் கடைப்பிடிக்கக் கூடியதும், அதிக நம்பகத் தன்மை கொண்டதுமான PGS எனப்படும் குழு உத்தரவாத முறையை (Participatory Guarenty Scheme) தமிழக அரசு விரிவாக எடுத்துச் செல்ல சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும். இதற்காகவும் பிற சான்று முறைகளுக்காகவும் தனியாக அலுவர்களை நியமிக்க வேண்டும்.

உள்ளாட்சிகள் சான்று அளித்தல்:

இயற்கை விவசாய விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான சான்றளிப்பில் உள்ளாட்சிகளை ஈடுபடுத்த வேண்டும். ஏற்றுமதியைத் தவிர்த்த அனைத்து விற்பனைக்கும் உள்ளாட்சிகளின்/கிராம சபைகள் அளிக்கும் சான்றுகளை ஏற்கும் விதமான கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும்.

விவசாயகளின் கண்டறிதல்களை - கடைப்பிடிப்புகளைப் பதிவு செய்தல்:

இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்கும் விவசாயிகள் தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து தங்களுக்கும், தங்களது பகுதிக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைப்பது, மேம்படுத்துவது, புதிய நுட்பங்களை உருவாக்குவது எனப் பலவற்றைக் கண்டறிந்து பரப்பி வருகின்றனர். மேலும், புதுப்புது உத்திகளையும் கடைப்பிடிக்கின்றனர். தங்களுக்குப் பயனளிக்கும் நுட்பங்களை மற்றவர்களுக்கும் கற்பித்து வருகின்றனர். தமிழக அரசு விவசாயிகளின் கண்டு பிடிப்புகளை, கடைப்பிடிப்புகளை, மேம்படுத்தும் உத்திகள் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்திட வேண்டும். அதை விவசாயிகளே பதிவேற்றம் செய்யும் வகையிலான இணையதளத்தை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

பாரம்பர்ய விதைகள் அறிதல் - பதிவு செய்தல் :

ஒவ்வொரு வட்டாரமும் அந்தந்த வட்டாரத்துக்கு ஏற்ற பயிர் ரகங்களையும் தாவரங்களையும் கொண்டுள்ளது. பெரும்பாலான பாரம்பர்ய பயிர் ரகங்கள் பசுமைப்புரட்சியின் விளைவாகக் கைவிடப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களின் விதை சேமிப்பு மையங்களிலும் இல்லை. இருப்பினும் பல பாரம்பர்ய ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள பயிர் வகைகள், பிற மாநிலத்து பாரம்பர்ய வகைகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் அந்தந்த உள்ளாட்சிகளில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே உள்ளாட்சிகளில் பராமரிக்கப்பட வேண்டிய உயிரினப் பன்மயப் பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பாரம்பர்ய வகைகளின் இனத்தூய்மை பராமரிப்பு பயிற்சி:

பாரம்பர்ய வகைப் பயிர்களின் ஒவ்வொரு ரகங்ளுக்கும் அதற்கேயான இனத் தன்மைகள் காக்கப்பட வேண்டும். மேலும், அவற்றில் நடக்கும் கலப்பினங்களையும் கண்டறிய வேண்டும். தம் முன்னோர்களிடம் இருந்த இந்த அறிவை நாம் இழந்து விட்டோம். இந்த அறிவை விவசாயிகளிடம் மீண்டும் கொண்டு சேர்க்க ஒவ்வொரு வகைப் பயிர்களில் உள்ள பல ரகங்களின் இனத்தூய்மை அறிதல், பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை தமிழக அரசு இயற்கை விவசாயத்துறை மூலம் அளிக்க வேண்டும்.

விதைக் கிராமங்கள் :

அந்தந்த வட்டாரத்திலேயே அந்தந்த வட்டாரங்களுக்குத் தேவையான விதை வகைகளை உருவாக்கிட ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சியிலும் பாரம்பரிய விதை கிராமங்களை உருவாக்கிட வேண்டும். இதில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வணிக நிறுவனங்களுடன் போட்டி போடக்கூடிய அளவற்கு தரமான விதைகளை விளைவிக்குமளவுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

உள்ளாட்சிகளில் கலவை எரு தயாரித்தல் - கழிவுகளை எருவாக்கல்:

ஒவ்வொரு உராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிறைய தாவரக் கழிவுகளும் பண்ணைக் கழிவுகளும் கிடைக்கின்றன. இவைகளில் பெருமளவு எரிக்கப்பட்டே வருகிறது. அந்தந்த உள்ளாட்சி அரசுகள் இவற்றை எருவாக்கிடச் செய்ய வேண்டும். அந்தந்த உள்ளாட்சிகளின் உள்ளூர் நிலைகளுக்கேற்ற எருவாக்கும் நுட்பங்களை ஆய்வு மையங்கள் உருவாக்கித் தர வேண்டும்.

சூரிய மின்சாரப் பயன்பாடு - தண்ணீர் முதல் மதிப்பு கூட்டல் வரை

கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைத்தல் முதல் மதிப்பு கூட்டுதல் வரை அதிகம் மின் சக்தி - எரி சக்தி தேவைப்படுகிறது. இந்த விதவிதமான சக்தித் தேவைகளுக்கு மாற்று எரி மற்றும் மின் சக்தி வழிகளில் உருவாக்கிப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மின் தகடுகள், சிறிய காற்றாலைகள் கொண்டு கிணற்று மேடுகள், வீட்டுக் கூரைகள் போன்ற இடங்களில் பொருத்தியும், மதிப்பு கூட்டல் மையங்களில் கூரைகளில் மின் உற்பத்தி செய்திட வகை செய்ய வேண்டும். இது ஒவ்வொரு விவசாயியையும் மின் உற்பத்தியிலும் தற்சார்பு அடைய உதவும்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் தரும் மேம்பாட்டு வேலைகளுக்கு தொகை

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மேம்படுதல்-நீர் சிக்கனம், அதன் காரணமாக மின்சாரச் சிக்கனம், உயிரினப் பன்மயம் பெருகுதல், பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்தல் என எண்ணற்ற பலன்களைத் தருகிறது. இப்பலன்களில் அதிகம் சமூகத்துக்கானதாகவே இருக்கிறது. இயற்கை விவசாயியின் இந்தச் சூழல் மேம்பாட்டு சேவையை அரசு செய்வதென்றால் மிகுந்த பணச் செலவும், பெரும் நிர்வாக அமைப்பும் தேவை. இந்தச் சுமையை அரசுகளுக்குத் தராமல் தன் தலையில் ஏற்றிக் கொள்ளும் இயற்கை விவசாயிகளுக்கு இதற்கான சூழல் சேவைத் தொகை (Ecological Services Cost) வழங்கப்பட வேண்டும்.

பண்ணைக் குட்டைகள்:

தமிழகம் இயற்கையாகவே மழை குறைவாகப் பெறும் மாநிலம். மேலும் தமிழக விவசாயம் பெருமளவு நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் விவசாயமாக உள்ளது. விவசாயத்தில் உயரங்களை அடைந்த தமிழக விவசாயிகள் 800 முதல் 1,000 அடி ஆழத்துக்குள் இருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துமளவுக்கு விவசாயிகள் நிலை உள்ளது. பருவநிலை மாற்றம் தற்போதுள்ள நிலையை இன்னும் மோசமாக்கிடும் நிலையும் உள்ளது. மேலும், 50% க்கு அதிகமான அளவு பருவ மழையை நம்பிய மானாவாரி விவசாயம் உள்ளது. பருவ மழை அடிக்கடி உரிய காலத்தில் பெய்யாமல் போகும்போது மானாவாரி விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவும், ஒவ்வொரு பண்ணையிலும் பண்ணைக் குட்டைகள் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும். அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலமாகவும் வேறு வழிகளிலும் எல்லா பண்ணைகளிலும் மழை நீர் சேகரிப்பு குட்டைகளை அமைக்க வேண்டும். மேலும் ஆர்வமுள்ள பெரிய விவசாயிகள் நிலத்தில் பெரிய அளவிலான குளங்களை அரசே அமைத்திடல் வேண்டும்

உள்ளூர் நீராதாரங்கள்:

தமிழகத்தின் கிராமப்புறத்தின் விவசாயத்துக்கான மற்றும் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்தின் தண்ணீர் ஆதாரமும் அந்தந்தக் கிராம அளவிலேயே உருவாக்குவதும், மேம்படுத்துவதும் தேவை. ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள மழை நீர் ஓடைகளை உயிர்ப்பித்து அவற்றில் முன்பிருந்தது போல குறைந்தது 3 மாத அளவிலாவது தண்ணீர் ஓடச் செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்கள்:

ஏற்கெனவே தமிழகத்தின் சமச்சீரான வளர்ச்சியின் காரணமாக ஊரகப்புறத்து இளைய தலைமுறை வேலையாட்கள் நகர்ப்புறம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாய வேலைகள் இருக்கும் காலத்திலும் நடைமுறைப்படுத்துவதால் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. இது கிராமப்புறத்தில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாய வேலைகள் இருக்கும் காலத்தில் நடைமுறைப் படுத்தாமலிருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் விவசாய காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக இருக்கும் நிலையில் அப்பணியாட்களை விவசாயப்பணியில் ஈடுபடுத்திட வேண்டும். இதில் சிறு-குறு மற்றும் பெரிய விவசாயிகள் என்ற பாகுபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

பண்ணை வேலைகளை எளிமையாக்கும் சிறு கருவிகள்

தமிழகத்து வளர்ச்சி முறை கல்வி முதல் வேலை வாய்ப்பு வரை சமூக நீதியுடன் கொண்ட வளர்ச்சியாக இருந்ததால் கிராமப்புறத்து உழைப்பு சக்தியை நகர்ப்புற உழைப்பு சக்தியாக மாற்றிவிட்டது. மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் பண்ணை வேலைகளுக்கு உழைப்பாளிகள் கிடைப்பதை சிரமப்படுத்தி வருகிறது. விவசாய வேலைகள் உரிய காலத்தில் தடைபடாது நடக்கவும், செலவுகள் குறைக்கவும், வேலையாட்களின் சிரமம் குறைக்கவும் எளிய உள்ளூர் அளவிலேயே தயாரிக்கவும், சரி செய்து கொள்ளும் வகையிலுமான கருவிகளை உருவாக்கித் தர தமிழகத்தில் உள்ள பல நூறு பொறியியல் கல்லூரிகளையும் மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

100 நாள் வேலை
100 நாள் வேலை

பல்லுயிர் பதிவேடுகள்

தன்னைச் சுற்றியுள்ள தாவரங்கள், தமது பண்ணையில் உள்ள தாவரங்கள் பற்றிய அறிவு மிகுந்தவராகவும், எவையெவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு கொண்டவராக இருக்கிறார் என்பதை எடின்பரோ பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பேராசிரியர் ராபர்ட் வாலஸ், ``இந்திய விவசாயிகளின் தங்களது அன்றாட வாழ்வில் காண்பவற்றைக் கூர்ந்துநோக்கும் தன்மை மிகப் பெரியது. அவர்களது காலடியில் இருக்கும் ஒவ்வொரு தாவரத்தின் பயன் பற்றி தலை அசைப்பில் இருந்தே அறிந்துகொள்ள முடியும்" என 1887-ல் தனது அறிக்கையில் பதிவிடுகிறார். பசுமைப் புரட்சியின் துணை விளைவாகவும் உள்ளூர் அறிவு மீது அவநம்பிக்கை வளர்ந்த காரணத்தாலும் மக்களிடம் கிராமப்புறங்களில் உள்ள தாவரங்கள் பற்றிய அறிவு குறைந்து வருகிறது. மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தாவர மற்றும் பிற உயிரினங்கள் குறித்து பதிவுகள் இன்றி உள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சியிலும் இவை பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகு பல்லுயிர் பதிவேடு ஒன்றை உருவாக்கித் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

இயற்கை விவசாயிகள் பதிவேடு

தமிழகத்தில் நம்மாழ்வாரும் பல தொண்டு அமைப்புகளும் விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை ஏறத்தாழ முப்பதாண்டுகளாகப் பரப்பும் பணியைச் செய்தனர். இதன் விளைவாக இயற்கை விவசாயம் தன்னிச்சையாக, தன்னெழுச்சியாகப் பரவி வருகிறது. பயன் பெற்ற விவசாயிகள் தானாகவே பிறரையும் இயற்கை விவசாயத்துக்கு ஈர்க்கின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் தங்களை இயற்கை விவசாயி எனப் பதிவும் செய்துகொள்ளவில்லை. இதன் காரணமாகத் தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயிகளின் எண்ணிக்கை என்ன என்று எவருக்கும் தெரியாத நிலை உள்ளது. அரசு தமிழகத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் பதிவேடு ஒன்று உருவாக்கிட வேண்டும். இத்தகைய பதிவேடுதான் வருங்காலத்தில் தமிழகத்து இயற்கை விவசாயத்தின் தேவை மற்றும் இயற்கை விவசாயிகளின் தேவையை அறிந்திட முடியும்.

உள்ளாட்சிகளின் ஒப்படை நிலத்தில் இயற்கை விவசாயம்:

குடியிருப்புகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க 10% நிலம் உள்ளாட்சிகளிடம் ஒப்படை செய்யப்படுகிறது. எவ்விதப் பயன்பாடும் இன்றி இருக்கும் இந்த நிலத்தில் அந்தந்த உள்ளாட்சிகளில் உள்ள தனித்த பெண்கள், பெண்கள் குழுக்கள் இயற்கை விவசாயம் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

பயிர் விளைச்சல் போட்டிகள்

ஒவ்வொரு பாரம்பர்ய பயிர் வகையிலும் இயற்கை விவசாய விளைச்சலை போட்டிகளை மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் நடத்த வேண்டும்.

விதை - உணவுத் திருவிழாக்கள்

மாவட்ட அளவில் அந்தந்த மாவட்டத்திலும் பாரம்பர்ய விதைகள் பரவலாக்கல் விழாவும் - பாரம்பர்ய உணவுத் திருவிழாக்கலும் நடத்த வேண்டும்.

பூச்சிக் கொல்லிகள் பயன்பாட்டை 5 ஆண்டுகளில் இல்லாமல் செய்தல்:

பூச்சிக் கொல்லிகள் மண்ணை மட்டுமன்றி உணவையும் நஞ்சாக்கி வருவதால் பூச்சிக்கொல்லிகளை படிப்படியாகப் பயன்பாட்டில் இருந்து நீக்கும் வகையில் பூச்சிக்கொல்லிகள் இல்லாத விவசாய முறையைப் பரவலாக்க வேண்டும். இத்தகைய முறையில் ஆந்திர அரசு சுமார் 70 லட்சம் ஏக்கரில் பூச்சிக் கொல்லிகள் இல்லாத பூச்சிக் கட்டுப்பாட்டு முறையை நடைமுறைப்படுத்தி வருவது நமக்கான நல்ல முன்னுதாரணமாக உள்ளது.

அறச்சலூர் ரா.செல்வம்
அறச்சலூர் ரா.செல்வம்

ஊராட்சிகளின் ஆண்டுத் திட்டம்

உள்ளாட்சிகளின் ஆண்டுத் திட்டம் தயாரிப்பில் இயற்கை விவசாயத்துக்கான இடுபொருள்கள் தயாரிப்பு, விளைபொருள்கள் மதிப்புக்கூட்டல், உள்ளூர் தேவைகள் மதிப்பிடல், மதிப்புக்கூட்டலுக்கான தேவைகள் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கிய ஆண்டுத்திட்டத்தைத் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.

நிலப் பயன்பாடு

நிலவளத்தை சரியாகப் பயன்படுத்தவும், எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுக்காக மேம்படுத்துவதற்காகவும் நிலவளப் பயன்பாட்டுக் கொள்கை ஒன்று உருவாக்க வேண்டும்.

இயற்கை விவசாய சிறப்பு மண்டலங்கள்

தமிழகத்தின் மலைவளம்-கானக வளமிக்க பகுதிகளில் உள்ள உயிரினப் பன்மயத்தைக் காப்பதற்காகவும், மண்-நீர்வளம் காக்கவும் இயற்கை விவசாய மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு உதவித் திட்டங்களை அந்தந்த வட்டார விவசாயிகளுடன் பங்களிப்புடன் வடிவமைக்க வேண்டும்.

இயற்கை விவசாயிகளின் கண்டறிதல்கள், விவரங்கள், சந்தேகங்கள் பதிவு செய்ய இன்டர் ஆக்டிவ்வான இணைய தளம்

இயற்கை விவசாயம் விரிவாகி வருவதால் விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் - புதிய புதிய புரிதல்கள் - அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் - சவால்களை சமாளித்த விதங்கள் உள்ளிட்ட பல விவரங்களை பிற விவசாயிகளுக்கு உதவுவதற்காகவும் அவர்களின் அறிவுத்தளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளே பதிவேற்றும் வகையிலான (Inter active website) இணைய தளம் ஒன்றை அரசே அமைத்திட வேண்டும்.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி இல்லை என சட்டமன்றத் தீர்மானமும் அரசின் கொள்கையாக அறிவிப்பும்:

2010-ல் முதல்வர் திருமிகு. கலைஞர் அவர்கள் தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் வேண்டுகோள்களை ஏற்று பி.டி கத்தரிக்கு அனுமதி இல்லை என்று அறிவித்தார். திருமிகு. ஜெயலலிதா அவர்கள் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தார். மேலும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளும் புதிய மரபணு மாற்றுப் பயிர்களுக்கும் பண்டங்களுக்கும் தமிழகத்தில் அனுமதி அளிக்கக் கூடாதென வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தனைக்குப் பிறகும் ஒன்றிய அரசின் மரபணு மாற்று அங்கீகாரக் குழு தமிழகத்தில் மரபணு மாற்றும் பயிர்களின் வயல் வெளி சோதனைகளுக்கு அனுமதி அளித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் தற்போது உள்ள பி.டி பருத்தி தவிர வேறு எந்தப் புதிய பயிர்களுக்கும், பண்டங்களுக்கும் இடமில்லை என்றும், வயல்வெளி சோதனைகளுக்கும் அனுமதியில்லை என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

பண்ணைகளின் இயற்கை விவசாயத் தன்மை மதிப்பீடு இணைய தளம் (Grading of Oragnicness of farms):

தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவதை விவசாயிகளே முன்னெடுக்கின்றனர். இயற்கை விவசாயத்துக்குள் வந்தவர்கள் இயற்கை விவசாயத்தின் அனைத்து கூறுகளையும் தங்களது பண்ணையில் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு பண்ணையும் இயற்கை விவசாயத் தன்மையில் எந்தளவு உள்ளது என்பதையும் மேலும் மேம்படுத்திட செய்ய வேண்டியவற்றை அறிந்துகொள்ள இயற்கை விவசாயப் பண்ணைகளின் தர அளவை அறிவதற்கான இணைய தளம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

- அறச்சலூர் ரா.செல்வம்,

ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு.