நாட்டு நடப்பு
Published:Updated:

நீங்கள் கேட்டவை: ஒரு மாட்டில் மாதம் ரூ.10,000

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறாபாண்டி

புறாபாண்டி

‘‘நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து என்ன விதமான பொருள்களைத் தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி எங்கு கொடுக்கப்படுகிறது?’’

ஆதப்பன், தேவகோட்டை.

சேலம் சுரபி கோசாலையைச் சேர்ந்த சுவாமி ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.

‘‘உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்பு, ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். 2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாட்டு மாடு களின் சிறப்புகளையும் சாணம், சிறுநீரிலிருந்து பலவிதமான பொருள் களைத் தயாரிக்க முடியும் என்ற தகவல் எங்களைப் போன்ற கோசாலை நடத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும். இதை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்த பெருமை பசுமை விகடனையே சேரும். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள ‘கோ-விஞ்ஞான்’ கேந்திராவில், நாட்டு மாட்டுப் பொருள்களிலிருந்து அழகு சாதன பொருள்கள் முதல் அரிய மருந்து பொருள்கள் வரை தயாரிக் கிறார்கள். இதைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதும் பசுமை விகடன் இதழ்தான்.

கடந்த 14 ஆண்டுகளில், ஏராள மானவர்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்று வருகிறார்கள். பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருள்களான, சாணம், சிறுநீர், பால், நெய்... ஆகியவற்றின் மூலம் விபூதி, சோப்பு, ஷாம்பு எனக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட பொருள்களைத் தயாரிக்க முடியும். இதில் ஒரே கட்டுப்பாடு என்னவென்றால், நம்மிடம் இருக்கும் மாடுகள் நாட்டு மாடுகளாக இருக்க வேண்டும்.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

ஒரே ஒரு மாடு இருந்தால்கூடப் போதும். தினமும் ஒரு நாட்டுப் பசு 15 கிலோ சாணம், 6 லிட்டர் சிறுநீரைக் கொடுக்கும். இதை ஆதாரமாக வைத்துக்கொண்டு விபூதி, சோப்பு, ஷாம்பு, பஞ்சகவ்யா... போன்ற பொருள்களைத் தயாரிக்க முடியும். இதிலிருந்து மாதம் 10,000 ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். பால் மூலம்கூட இவ்வளவு வருமானம் கிடைக்காது. ஆர்வமுள்ள விவசாயிகள், இதை அற்புதமாகத் தயார் செய்ய முடியும். சுத்தமான விபூதி கிடைப்பது அரிதாக உள்ளது. எட்டு கிலோ சாணத்திலிருந்து, ஒரு கிலோ விபூதி கிடைக்கும். தரம் மற்றும் தேவையைப் பொறுத்து ஒரு கிலோ விபூதி 250 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. நம்மிடம் இருப்பது சுத்தமான விபூதியாக இருக்கும்பட்சத்தில், தேடி வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு விற்பனை வாய்ப்புகள் இருக்கின்றன.

விபூதி
விபூதி

தொடக்கத்தில் அருகில் உள்ள கோயில்கள், ஆன்மிக அமைப்புகளிடம் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விற்கலாம். எங்கள் கோசாலையில் ஆண்டுதோறும், விபூதி, சோப்பு, ஷாம்பு தயாரிப்பு பயிற்சியை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு, கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பயிற்சியை நடத்தவில்லை. இந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் வாக்கில் நடத்த திட்ட மிட்டுள்ளோம். வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே, எங்களைப் போன்ற கோசாலைகள் வைத்திருப்போர் பயிற்சியை நடத்த முடிகிறது. எனவே, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப் பூங்காவில், நாட்டு மாட்டுப் பொருள்களிலிருந்து விபூதி, சோப்பு, ஷாம்பு... தயாரிக்கப் பயிற்சி மையம் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளோம். இதைச் செயல் படுத்தினால், விவசாயிகளின் பொருளா தாரமும் உயரும். நாட்டு மாட்டு இனங்களும் பாதுகாக்கப்படும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94432 29061.

‘‘ஜெர்மென் ஷெப்பர்டு இன நாய் வளர்க்க விரும்புகிறேன். இதன் சிறப்புகளையும் நாய் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் சொல்லுங்கள்?’’

ஆர்.தணிகைவேல், சென்னை.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆ.குமரவேல் பதில் சொல்கிறார்.

ஆத்மானந்தா, குமரவேல்
ஆத்மானந்தா, குமரவேல்

‘‘ஜெர்மென் ஷெப்பர்டு இன நாய், அல்சியேஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாயின் சிறப்பு என்னவென்றால், காவலுக்குக் கெட்டிக்காரன். நம் நாட்டு இனமான ராஜ பாளையம், கோம்பை, சிப்பிப்பாறை நாய்கள்போல, வளர்ப்பவர்கள் மீது அதிக பாசமும் காவல் பணியில் கில்லியாகவும் இருக்கும். எனவேதான், வெளிநாட்டு இன நாய்கள் வளர்க்க விரும்புபவர்கள் ஜெர்மென் ஷெப்பர்டு இனத்தைத் தேர்வு செய்கிறார்கள். பொதுவாக, நம் வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வளர்க்க வேண்டும். பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உண்ணக்கூடியவை. இதனால், செரிமானத் துக்கு ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளும் அதிகம் தேவைப்படும். பெரிய சுற்றுப்புறமும் அவசியம். நாய்க்குத் தோல் நோய்கள் வராமல் இருக்கச் சூரிய ஒளி அவசியம். ஆகையால், காலை, மாலையும் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

நாய்
நாய்

நாய் வளர்ப்புச் சம்பந்தமாகச் சென்னை நந்தனத்தில் உள்ள எங்கள் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பல நூல்களை வெளியிட்டுள்ளார்கள். அதை வாங்கிப் படிக்கவும். மேலும், சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் கட்டாயம் செல்லுங்கள். செல்லப் பிராணிகளுக்காக இந்தியாவிலேயே அதிநவீன மருத்துவக் கருவிகள் உள்ள கால்நடை மருத்துவமனை என்ற பெருமையும் இதற்கு உண்டு. இங்குள்ள சிகிச்சையியல் துறையில் தினமும் ஏராளமான நாய்கள் மருத்துவம் பார்க்க கொண்டு வரப் படுகின்றன. இங்கு காலை நேரத்தில் சென்றால், பல்வேறு இன நாய்கள் வளர்ப்பவர்களைச் சந்திக்க முடியும். நாய் வளர்ப்பு சம்பந்தமான கள நிலவரத் தகவல்களும் கிடைக்கும். இங்குள்ள சிக்கிச்சையியல் துறையின் பேராசிரியர்களும் நாய் வளர்ப்புச் சம்பந்தமாக வழிகாட்டுவார்கள்.’’

தொடர்புக்கு, செல்போன்: 93447 70194.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘பட்டுப்புழு வளர்ப்புக்கு மானியம் பெற யாரைத் தொடர்புகொள்ள வேண்டும்?’’

ஆர்.சுதா, பொள்ளாச்சி.

‘‘சேலம் நகரில் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்புகொண்டால் மானியம் குறித்த விவரங்களை வழங்குவார்கள்.’’

தொடர்புக்கு,
இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, நேதாஜி நகர், அஸ்தம்பட்டி, சேலம் - 636 007 தொலைபேசி: 0427 2313161/64.

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும்,

pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.