நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

எந்தெந்த மண்ணில் முருங்கை நல்ல மகசூல் கொடுக்கும்!

முருங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
முருங்கை

உலகம் போற்றும் முருங்கை விதை முதல் விற்பனை வரை-8

முருங்கை தொடர்பாக, உலக நாடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, முருங்கையை அதிக அளவில் பயிரிடும் நாடுகள். மற்றொன்று, முருங்கையை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகள். இந்தியா, இந்த இரண்டு பட்டியல்களிலுமே முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, நம் நாடு முருங்கை தொடர்பான ஆராய்ச்சிகளில் பின் தங்கியுள்ளது. மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் வேளாண் துறைகளை நிர்வகிக்கும் உயர் அலுவலர்கள் மத்தியிலும் முருங்கையின் மீதான அரசியல் கண்ணோட்டம் மிகக் குறைவுதான். மற்ற நாடுகளோ... அடுத்த தலைமுறைகளுக்கான ‘அதிதிறன் உணவு’ இதுதான் என்ற கண்ணோட்டத்தில் முருங்கை குறித்து ஏராளமான ஆராய்ச்சி களைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த ஆராய்ச்சிகள்... முருங்கையை எப்படிப் பெருமளவில் எளிமையாக உற்பத்தி பெருக்கம் செய்வது, ஊட்டச்சத்துகள் மிகுந்த அதிக மகசூல் தரும் முருங்கை வகைகளை எவ்வாறு உற்பத்தி செய்வது, முருங்கையின் அசாத்திய திறன்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் மருந்தாக (Drugs) மாற்றுவது என மூன்று வகைகளில் நடந்து வருகின்றன. இதில், மூன்றாவதாகச் சொல்லப்பட்ட ஆய்வு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆங்கில மருத்துவ முறையில் இதன் மூலக்கூறுகளை வைத்து மருந்து தயாரிக்கும் தொழில்நுட்பங்களுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சியில் அந்நாடுகள் வெற்றி பெற்றால், முருங்கை தங்களுடையது என ஒட்டுமொத்தமாக உரிமை கோரும் ஆபத்துள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாகத் தன் சமூக அறிவு சொத்தாகக் காப்பாற்றி வைக்கப் பட்டிருந்த ஒரு தாவரம், ஓர் இனக்குழு விடமிருந்தோ, ஒரு நிலப் பகுதியிலிருந்தோ காணாமல் போவதும், அதை வேறு வடிவத்தில் மற்றொரு நாடோ, சமூகமோ எடுத்துக்கொள்வதும் இந்த நவீன யுகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன.

முருங்கை
முருங்கை

இந்தியாவிலும் முருங்கை தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். குறிப்பாக, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம் சார்ந்து முருங்கையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும், அறிவியல் பூர்வமாக இது இந்தியாவின் பூர்வீக சொத்து என நிலைநாட்டுவதும் மிகவும் அவசியமாகும்.

இது ஒருபுறமிருக்க... முருங்கையை எந்தெந்த வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம். தற்போது முருங்கை, மூன்று வகைகளில் பயிடப்பட்டு வருகிறது. முதலாவது, விதைகளின் மூலம் உற்பத்தி செய்வதாகும். பெரும்பாலும் மேம்படுத்தப் பட்ட (Improved Veraity) முருங்கை வகைகள்... விதைகள் மூலமாகவோ, நாற்றுகள் மூலமாகவோ (Nursury) உற்பத்தி செய்யப்படுகின்றன. இரண்டாவது, நமது பாரம்பர்ய முறையான ‘போத்துகள்’ (Cuttings) நடும் முறை. இதில், முருங்கையின் தண்டுகளை வெட்டி நடவு செய்வார்கள்.

பாரம்பர்ய முருங்கை வகைகள் அனைத் தும் இப்படித்தான் நடவு செய்யப்படுகின்றன. இதில், ‘ஒட்டுக் கட்டுதல்’ முறை, தற்போது அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. மூன்றாவது ‘திசு வளர்ப்பு’ முறையாகும். தற்போது பெரும் வணிக நிறுவனங்களும், சில பல்கலைக்கழகங்களும் இந்த முறையை வரவேற்கின்றன. திசு வளர்ப்பு முறை மூலம் குறுகிய நாள்களில் பெருமளவில் உற்பத்தி பெருக்கம் செய்ய முடியும். இம்முறைதான் பல வகைத் தாவர வகைகளில் பெருமளவில் ஆராய்ச்சிகளில் நடைபெற்று வருகின்றன.

இதில், நம் தமிழ்நாட்டு விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால், முருங்கை விதைகளை ஊன்றும் போது வரும் முளைப்புச் சதவிகிதம், தழைத்தலின் சதவிகிதம் ஆகிய இரண்டை மட்டுமே நாம் நடைமுறையில் பார்க்கிறோம். சமீபகாலங்களில் விதைகள் மூலம் நடைபெறும் உற்பத்தி பெருக்கத்தில், முளைப்புத்திறன் சதவிகிதம் குறைவாக உள்ளது எனப் பல விவசாயிகள் தங்கள் கருத்துகளாகப் பதிவிட்டு வருகின்றனர். பல்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணுக்கேற்ற மேம்படுத்தப்பட்ட முருங்கை ரகங்களை உருவாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, எஸ்.டி.எக்ஸ்-2’ (STX-2) என்ற பெயரில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இதற்கான ஆராய்ச்சிகள் பிரபலமாகி வருகின்றன.

நம் நாட்டு பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி மையங்களிலும் முருங்கை சார்ந்த மிகச் சிறந்த கண்டுபிடிப்புகள் உள்ளன. அவை விவசாயிகளைச் சென்றடைய வேண்டுமென்றால், முதலில் அதற்கான செயலாக்க நடைமுறைகளை (Standard Operating Procedure) பிரபலப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு வகையான நடைமுறை இருப்பதால் விவசாயிகள் குழப்பமடைகிறார்கள்.

முருங்கை
முருங்கை

சமீப காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில் (பசுமைக் குடில்) முருங்கையை வளர்க்கும் முறை அதிகமாகி வருகிறது. இது, பெரும்பாலும் இலை மகசூலுக்காக மட்டுமே அதிகம் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், முருங்கைப் பயிரின் அடிப்படைக் கூறுகளான மண், நீர், சீதோஷ்ணநிலை, காற்று போன்ற அனைத்தும் முருங்கை மகசூலுக்குச் சாதகமாகவே உள்ளது. எனவே, கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ணநிலை வளர்ப்பு முறை நமக்குத் தேவையில்லை. மேலும், அதன் உற்பத்திச் செலவும் அதிகம்.

முருங்கை, பொதுவாக மூன்று விதமான பொருள்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இலை, காய் மற்றும் விதை ஆகிய மூன்றைத் தான் விவசாயிகள் சந்தைக்கு அனுப்பு கின்றனர். அனைத்து முறைகளும் மேம்படுத்தப்பட்ட முருங்கைக்கும், பாரம் பர்ய முருங்கைக்கும் எனத் தனித் தனியாக இருக்க வேண்டும்.

பொதுவாக முருங்கை, அது பாரம்பர்ய வகையாக இருந்தாலும் சரி அல்லது மேம்படுத்தப்பட்ட வகையாக இருந்தாலும் சரி, அனைத்து மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், குறிப்பிட்ட சில மண் வகைகளில் உதாரணமாகக் களிமண், உவர்மண் ஆகிய மண்களில் வளரும் முருங்கையில் மகசூல் (இலை, காய், விதை) மிகமிகக் குறைவாக இருப்பதோடு அல்லாமல் வளரும் வேகமும், பயிரின் ஆரோக்கியமும் மிகக்குறைவாகவே இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 4 வகையான மண் வகைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட் டங்களில் முருங்கை சாகுபடிக்கு உகந்த மண் வகைகளே உள்ளன. இருப்பினும், முருங்கை இலையின் தரத்தை நிர்ணயிப்பதில் சீதோஷ்ண நிலையும் ஒரு பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. தாவர உற்பத்தி பெருக்கத்தின்போது தாய்த்தாவரம் எப்படி உள்ளதோ அதே போன்றுதான் உற்பத்தி பெருக்கமும் நடைபெறும். இதுவரையில் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளில் முருங்கையில் அதிக மகசூலுக்கு உகந்த மண், ‘மணல் கலந்த களிமண்’ என்று பரிந்துரைக்கப் படுகிறது. ஆனாலும், எந்த மண்ணாக இருந்தாலும் முருங்கையை வளர்ப்பதற்கு அதன் PH அளவின் குறியீடும் முக்கியம். ‘PH’ என்றால் மண்ணில் கலந்திருக்கும் அமில மற்றும் காரத்தன்மையாகும்.

முருங்கை சாகுபடி வெற்றிகரமாக நடைபெற PH-ன் அளவு, 6.5 முதல் 8 வரை இருப்பது மிகப் பொருத்தமானது. அதிலும் சுண்ணாம்புச்சத்தும் அதனுடன் இருக்கும் பட்சத்தில் மிகச்சிறப்பான மகசூலும் கிடைக்கும் என்கிறார்கள். நம்மிடத்தில் இருக்கும் முருங்கை வகைகளை அனைத்து மண் வகைகளில் உற்பத்தி பெருக்கம் நடைபெறுவதற்கும், அதிகப்படியான மகசூல் எடுப்பதற்கும் ஏதுவாக மாற்ற வேண்டும். எந்த வேளாண் சமூகம், விதைகளையும் இனப்பெருக்க நுட்பங்களையும் பாது காக்கிறதோ, அந்த சமூகமே வேளாண்மையில் வெற்றியடைகிறது.

முருங்கை விதை
முருங்கை விதை

இயற்கையும் அதன் மரபுவழி சக்தியும் என்றும் மாறாத அற்புத சக்தி. அதை அடுத்த தலைமுறைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். உலகில் மாபெரும் வெற்றியடைந்த வேளாண் சமூகங்கள், தங்களின் விதைகளையும் உற்பத்திப்பெருக்க நுட்பங்களையும் கட்டிக் காத்து வருகின்றன. அதிக முளைப்புத்திறன் கொண்ட, அனைத்து வகையான மண்ணிலும் அதிக மகசூல் தரக்கூடிய விதைகளை உருவாக்க இங்குள்ள ஆராய்ச்சி நிறுவனங் களும், விவசாயிகளும் முனைப்புக்காட்ட வேண்டும். விவசாயிகளும், தாவர உற்பத்தி பெருக்க நிலையங்களையும் (Propagation Centres) அமைக்க வேண்டும். உலகின் அதிக திறன் கொண்ட ஒரு தாவரத்தைக் கட்டிக் காப்பதில் நாமே முன்னோடிகள் என்பதில் அடுத்த தலைமுறை பெருமை கொள்ளட்டும். தரமான முருங்கை சாகுபடி எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

- தழைக்கும்

போட்டிபோடும் மாநிலங்கள்!

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் முருங்கை விதை உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. கடந்த ஆண்டிலிருந்து தெலங்கானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், முருங்கையைப் பெருமளவில் பயிரிடுவதற்குத் திட்டமிட்டு வருகின்றன. இதற்குத் தேவைப்படும் விதைகளையும், நாற்றுகளையும் உற்பத்தி செய்து கொடுக்கும் வாய்ப்புகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில்தான் அதிகமுள்ளது. காரணம் இந்த இரு மாநிலங்களிலும்தான் முருங்கை மற்றும் நாற்றுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள தனியார் கம்பெனிகள் இதில் போட்டிக்கு வந்துள்ளன.

முனைவர்.எம்.நாச்சிமுத்து
முனைவர்.எம்.நாச்சிமுத்து

முருங்கை விதை வங்கிகளை ஊக்கப்படுத்த வேண்டும்...

தமிழ்நாடு அரசு, ஒவ்வோர் ஆண்டும் விதைகளை, இங்குள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கி விவசாயிகளுக்கு விநியோகம் செய்கிறது. முருங்கை விதைகளையும் முருங்கை நாற்றுகளையும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்பதும் முருங்கை விதை வங்கிகளை (Seed bank) அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் வேண்டுகோள்.