நாட்டு நடப்பு
Published:Updated:

கடன் தள்ளுபடி யாருக்குக் கிடைக்கும்?

கடன் தள்ளுபடி
பிரீமியம் ஸ்டோரி
News
கடன் தள்ளுபடி

விளக்கம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பைக் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வெளியிட்டார்.

இது யாருக்குக் கிடைக்கும் என்பதில் விவசாயிகளிடம் குழப்பம் நிலவுகிறது.

இந்த அறிவிப்புமூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்ற முதல்வரின் அறிவிப்பைக் கேட்டு சில விவசாயச் சங்கத் தலைவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்கள். ஆனால், யார் யாருக்குக் கடன் தள்ளுபடி கிடைக்கும். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் அனைவரின் கடனும் தள்ளுபடியாகுமா? இது போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் விவசாயிகள்.

‘‘குறுகிய காலப் பயிர்க்கடன்களும், நகை அடகு வைத்துப் பெறப்பட்ட குறுகியகாலப் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.’’

இது தொடர்பாகத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “விவசாய நிலத்தைக் காட்டிதான் பயிர்க்கடனைக் கூட்டுறவுச் சங்கத்தில் வாங்க முடியும். கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதல் வாங்கி அதைக் கூட்டுறவு சங்கத்தில கொடுத்துக் கடன் வாங்குறாங்க விவசாயிகள். இந்த விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்ங்குறதுல எந்தக் குழப்பமும் இல்லை. அதேபோன்று நகையை வைத்து பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், பயிர்க்கடன் இல்லாமல் நகையை அடமானம் வெச்சு கடன் வாங்குனவங்களும் இருக்காங்க. அந்தக் கடன், விவசாயக் கடன் பிரிவுல வராது. விவசாயத்துக்குனு சொல்லி, பட்டா, சிட்டா, சிறு குறு விவசாயினு சான்றிதழ் கொடுத்து வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள்ல வாங்குற கடன் மட்டும்தான் விவசாயக் கடன் பிரிவுல வரும்.

கடன் தள்ளுபடி சலுகை வாங்குறதுக்கு என்ன செய்யணும்னு கேள்வியும் விவசாயிகள்கிட்ட இருந்து வருது. கடன் வாங்குன விவசாயிகள் இதுக்காக எதுவும் செய்ய வேணாம். கூட்டுறவு சங்கங்களே குறிப்பிட்ட காலத்திற்குள் யார் யார் கடன் வாங்கியிருக்காங்கனு பார்த்து, அவங்களோட பட்டியலைத் தயார் பண்ணி விவசாயிகளோட வீடுகளுக்கே, நோட்டீஸ் அனுப்புவாங்க. அந்த நோட்டீஸ்ல, ‘நீங்க எங்ககிட்ட வாங்குன விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுது’னு சொல்லப்பட்டிருக்கும். இந்த அறிவிப்பை விவசாயிகள் பத்திரமா வெச்சுக்கணும். வருங்காலத்தில் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா இது ஒரு ஆவணமா பயன்படும்.

விவசாயம்
விவசாயம்

இப்போதைக்கு 22 மாவட்டங்கள்ல இருக்குற மத்திய கூட்டுறவு வங்கிகள்ல 16.43 லட்சம் விவசாயிகளோட பயிர்க்கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி ஆக இருக்கு. முதல்வர் வெளியிட்ட அறிவிப்புல நகை வைத்துக் கடன் வாங்கின விவசாயிகள் தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை.

அதனால நகைக்கடன் தள்ளுபடி இப்போதைக்கு இல்லை. இனி வரும் காலங்களில் அதற்கான அறிவிப்பு வரலாம். ‘கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியோட இணைச்சுட்டாங்க. அதனால மாநில அரசு தள்ளுபடி பண்ண முடியாது’னு சிலருக்குச் சந்தேகம் வரலாம். ஆனால் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளை மட்டுமே ரிசர்வ் வங்கி தன்னோட கட்டுப்பாட்டுல கொண்டு வந்துருக்கு. மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் எல்லாமே மாநில அரசுகளோட அதிகாரத்துக்குக் கீழதான் வருது. அதனால நிச்சயமாக அரசு சொன்ன கடன் தள்ளுபடி கிடைக்கும். தனியார் வங்கிகளிலோ மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் வங்கிகள்லயோ வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி ஆகாது’’ என்றார்.

விமல்நாதன்
விமல்நாதன்

இதுகுறித்துத் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதனிடம் பேசியபோது, “குறுகிய காலப் பயிர்க்கடன்களும், நகை அடகு வைத்துப் பெறப்பட்ட குறுகியகாலப் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் மட்டுமல்லாமல் 5 ஏக்கருக்கு மேல் நிலமுள்ள பெரு விவசாயிகளுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும். ஆனால் 2016-17-ம் ஆண்டு வறட்சியின்போது குறுகிய காலக் கடன்களை மத்தியகால மறு கடனாக ஒத்தி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. அந்தக் கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்தார்கள். தற்போது வெளியிடப்பட்டுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அரசாணையில், இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை. மத்தியகாலக் கடன் 450 கோடி ரூபாய்தான். இதையும் சேர்த்து தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

மேலும், கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைப்பதில்லை. இதனால் சுமார் 80 சதவிகித விவசாயிகள், சாகுபடி செலவுகளுக்கு தேசிய மற்றும் வணிக வங்கிகளில்தான் கடன் வாங்கியுள்ளார்கள். இந்தக் கடனையும் அரசு தள்ளுபடி செய்திருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்’’ என்றார்.