Published:Updated:

முதலமைச்சரே... எங்களுக்கு முதுகெலும்பு ரொம்ப ரொம்ப முக்கியமுங்கோ!

குண்டு குழியுமான சாலை
News
குண்டு குழியுமான சாலை

அடுத்தவேளை உணவுக்கே அல்லாடுபவர்கள் தொடங்கி, ஓரளவுக்கு மூன்று வேளை திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்குச் சம்பாதிப்பவர்கள் வரை அனைவருமே இந்தச் சாலைகளில்தான் சைக்கிள், டூவீலர், ஷேர்ஆட்டோ, வெள்ளை வேன், மாநகரப் பேருந்து என்றுதான் பெரும்பாலும் பயணிக்கிறார்கள்.

Published:Updated:

முதலமைச்சரே... எங்களுக்கு முதுகெலும்பு ரொம்ப ரொம்ப முக்கியமுங்கோ!

அடுத்தவேளை உணவுக்கே அல்லாடுபவர்கள் தொடங்கி, ஓரளவுக்கு மூன்று வேளை திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்குச் சம்பாதிப்பவர்கள் வரை அனைவருமே இந்தச் சாலைகளில்தான் சைக்கிள், டூவீலர், ஷேர்ஆட்டோ, வெள்ளை வேன், மாநகரப் பேருந்து என்றுதான் பெரும்பாலும் பயணிக்கிறார்கள்.

குண்டு குழியுமான சாலை
News
குண்டு குழியுமான சாலை

உங்கள் அப்பா முத்துவேல் கருணாநிதியின் கருத்துகளை, `பராசக்தி’ படத்தில் நீதிமன்றக் காட்சி மூலம் வசனமழையாகக் கொட்டித் தீர்த்திருப்பார் சிவாஜி கணேசன். தமிழ் கூறும் நல்லுலகம் இன்று வரை பெருமையுடன் பேசும் `பராசக்தி’ வசனங்களை, தன் பாணியில் மாற்றி, `பாளையத்து அம்மன்’ படத்தில் நவீன சென்னையைக் கிண்டலடித்திருப்பார் நடிகர் விவேக்.

`ஓடினேன்... ஓடினேன்...

இன்டர்நெட்காரர்கள் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து ஓடினேன்

பிடபுள்யுடிகாரர் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து ஓடினேன்

ஹைவேஸ் டிபார்ட்மென்ட் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து ஓடினேன்

டெலிபோன்காரர் வெட்டி வைத்திருந்த குழியில் விழுந்து ஓடினேன்

எத்தனை வழிகளடா... அதில்தான் எத்தனை குழிகளடா?’

என்று சிரிக்கவும் வைத்திருப்பார்... சிந்திக்கவும் வைத்திருப்பார் விவேக்.

பராசக்தி
பராசக்தி

இந்தப் படம் வந்தது 2000-ம் ஆண்டில். அப்போது ஆட்சியிலிருந்தது உங்கள் அப்பா கருணாநிதிதான். அப்போது சென்னை மாநகரின மேயர் நீங்கள்தான். இப்படி வசனம் எழுதிக் கிண்டலடித்தவர், உங்கள் கட்சியின் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவரும் பிரபல டைரக்டருமான ராம.நாராயணன்தான். 22 ஆண்டுகள் உருண்டுவிட்டபிறகும், சென்னையின் நிலை மாறவே இல்லை.

அப்போது, `சிங்காரச் சென்னை’ என்று புயல் வேகத்தில் மேயராகப் புறப்பட்ட நீங்கள், இப்போது `சிங்காரச் சென்னை 2.O’ என்று செயல்வேகத்தில் முதல்வர் பதவியிலும் வந்து உட்கார்ந்து விட்டீர்கள். ஆனால், சென்னையின் நிலை மட்டும் மாறவே இல்லை.

இடையில் ஜெயலலிதா மூன்று தடவை முதல்வராக இருந்தார். கருணாநிதி மீண்டும் ஒரு தடவை முதல்வராக வந்தார். அப்புறம் இணை, துணை என்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் எல்லாம்கூட முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட்டார்கள். ம்ஹூம்... எதுவும் அசைந்தபாடில்லை. விவேக் கிண்டலடித்தபடி அதே கேவலமான சாலைகள்தான் சென்னை நெடுகவே நீள்கின்றன, நீங்கள் முதல்வராக வந்தமர்ந்த பிறகும். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை மக்கள் படும் அவதிகளுக்கு அளவே இல்லை.

வாகன ஓட்டிகள்
வாகன ஓட்டிகள்

`மெட்ரோ ரயிலுக்காக வெட்டியிருக்கும் குழியில் விழுந்து ஓடுகிறோம்...

கார்ப்பரேஷன்காரர்கள் வெட்டி வைத்திருக்கும் குழியில் விழுந்து ஓடுகிறோம்

பி.டபுள்யு.டி டிபார்ட்மென்ட் வெட்டி வைத்திருக்கும் குழியில் விழுந்து ஓடுகிறோம்

மின்சாரவாரியம் வெட்டி வைத்திருக்கும் குழியில் விழுந்து ஓடுகிறோம்.

ஓடுகிறோம்... ஓடுகிறோம்... சென்னையின் எல்லைக்கு வெளியேயும் ஓடுகிறோம். எங்கு திரும்பினாலும் குழிகள் குழிகள் குழிகளைத் தவிர வேறில்லை’

- இதுதான் நிதர்சனம்.

சென்னையில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தினம் தினம் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக டூ வீலர்களிலும் ஷேர் ஆட்டோக்களிலும் பயணிப்பவர்கள்தான். மிச்சமிருப்பவர்களிலும் 20 சதவிகிதம்பேர் பேருந்து, ஆட்டோ மற்றும் வேன்களில் பயணிப்பவர்கள்தான். ஆனால், எந்தவொரு சாலையாவது ஒழுங்காக இருக்கிறதா என்று கேட்டால்? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.

`இன்றைய சிரமம்... நாளைய வசதி’ என்றபடி பல்வேறு பணிகளும் சென்னையில் நடத்தப்படுகின்றன. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது எப்போதுமே நிரந்தரமாகிவிட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த வேலைகள் நிறைவேற்றப்படுவதுதான் மொத்த பிரச்னைக்கும் காரணம். ஆம், ஒரே நேரத்தில் பல பணிகளையும் ஆரம்பித்து, `டேக் டைவர்ஷன்... டேக் டைவர்ஷன்’ என்று திருப்பதி பாலாஜி தரிசனம் (வெங்கட் நாராயணா சாலை) வரை போய்க் கொண்டிருக்கிறது.

பள்ளம்
பள்ளம்

`நாளைய வசதி’ என்பதை நினைத்து இதையெல்லாம்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், `உங்களுக்காக உங்களுக்காக’ என்று சொல்லிச் சொல்லி நீங்கள் செய்துகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகளையெல்லாம் அனுபவித்துப் பார்ப்பதற்கு நாளைக்கு உயிரோடு இருப்போமா என்பதே கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் போரூரைச் சேர்ந்த மென்பொறியாளரான ஷோபனா, தன் தம்பியை பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டியில் சென்றபோது மதுரவாயல் பகுதியில் சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்த பள்ளத்தின் காரணமாக வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழ, மின்னல் வேகத்தில் வந்த மணல் லாரி அவர் மீது ஏறியதால் பரிதாபமாக இறந்துபோனார்.

எத்தனை எத்தனை கனவுகளோடு கல்வியை முடித்து, `ஸோகோ’ எனும் சிறப்பான மென்பொருள் நிறுவனத்தில் பணியையும் பெற்று, குடும்பத்தை முன்னேற்றுவோம் என்று கனவுகளை நனவாக்கப் புகுந்த சமயத்தில், அந்த இளம்பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது, உங்கள் அரசாங்கத்தின் அலட்சியத்தின் காரணமாக... ஒட்டுமொத்த அரசுத்துறைகளின் அதிகார மமதை காரணமாக.

ஆனால், அதையெல்லாம் நினைத்து வீட்டுக்குள் ஒடுங்கிவிடாமல், அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக லட்சக்கணக்கானவர்கள் தினம் தினம் உயிர் பயத்துடன்தான் சென்னையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா
சாலை விபத்து - உயிரிழந்த ஷோபனா

அடுத்தவேளை உணவுக்கே அல்லாடுபவர்கள் தொடங்கி, ஓரளவுக்கு மூன்று வேளை திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்குச் சம்பாதிப்பவர்கள் வரை அனைவருமே இந்தச் சாலைகளில்தான் சைக்கிள், டூவீலர், ஷேர்ஆட்டோ, வெள்ளை வேன், மாநகர பேருந்து என்றுதான் பெரும்பாலும் பயணிக்கிறார்கள். குறிப்பாக, இந்த ஷேர் ஆட்டோ மற்றும் டூ வீலர்களில் பயணிப்பவர்களின் நிலை பரிதாபமோ பரிதாபம்.

`இன்றைய சிரமம்... நாளைய வசதி’ என்று சொல்வது, வசதியானவர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு இனிப்பதே இல்லை. நீங்கள் போடும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் அளவுக்குக்கூட வசதியற்றவர்கள்தான் இங்கே அதிகம்.

ஒவ்வொரு சாலையிலும் அடிக்கொரு குழி, பள்ளம், பாதாளம் என்று மிரட்டும் சாலையில் பயணிப்பதால் முதுகைப் பிடித்துக்கொண்டுதான் பலரும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். எங்களில் பலருக்கும், `நம்முடைய பிரச்னைகளுக்குக் காரணமே இந்தச் சாலைகள்தான்’ என்றுகூட தெரியவில்லை என்பதுதான் உங்களுக்கெல்லாம் வசதியாக இருக்கிறது. `நேத்து உருளைக்கிழங்கு சாப்பிட்டேன்... அதான் இடுப்புப் பிடிச்சுக்கிச்சோ...’, `முந்தாநேத்து முள்ளங்கி சாப்பிட்டேன்... முதுகுப் பிடிச்சுக்கிச்சு போல’ என்று ஆளாளுக்குத் தாங்களாகவே சமாதானம் சொல்லிக்கொண்டு, அடுத்தடுத்த வேலைகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆபத்து முதுகெலும்புக்குதான் என்று பலருக்கும் தெரியவே இல்லை என்பதுதான் பரிதாபம்.

சென்னை
சென்னை
வி.ஸ்ரீனிவாசுலு

மருத்துவர்களிடம் போனால், `சின்ன பள்ளத்துல வண்டி ஏறி இறங்கினாகூட ஆபத்துதான். பார்த்து ஜாக்கிரதையா வண்டியை ஓட்டணும். ஸ்பீட் பிரேக்கர்ல வேகமா ஓட்டக்கூடாது. பள்ளம் மேடு பார்த்துதான் ஓட்டணும். இல்லனா... முதுகெலும்பு புட்டுக்கும்’ இப்படியெல்லாம் எச்சரிக்கிறார்கள். ஆனால், அனைத்துச் சாலைகளும் தெருக்களும் பள்ளம் மற்றும் மேடுகளாக மட்டுமே இருக்கும் பரிதாபச்சூழலில், எதைப்பார்த்து வண்டியை ஓட்டுவது?

வேலைகள் நடக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற இடங்களில் முழுமையாக சாலைகளைப் போடலாமே?

மெட்ரோ வேலை நடப்பது சாலைக்கு நடுவேதான். அப்படியிருக்க இருபுறமும் இருக்கும் சாலைகளை சரிப்படுத்தலாமே?

மழைநீர் கால்வாய் பணிகள் நடப்பது சாலைகளின் ஓரங்களில்தான். மையப்பகுதியில் சாலைகளைச் சரிப்படுத்தலாமே!

பேருந்து பயணம்
பேருந்து பயணம்

பாலங்களைச் சீரமைக்கிறோம் என்று பல கோடிகளுடன் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதெல்லாம் பாலங்களின் பக்கவாட்டில்தானே நடக்கிறது. மேலேயும் கீழேயும் சாலைகளைச் சரிப்படுத்தலாமே!

எல்லாவற்றையும்விட கொடுமை, எந்தவித பணிகளுமே நடக்காத சாலைகளும் தெருக்களும்கூட பள்ளம், மேடு என பரிதாபமாகத் தான் கிடக்கின்றன... அது ஏன்?

தார் ரோடு மண் ரோடாக மாறும் நிலை
தார் ரோடு மண் ரோடாக மாறும் நிலை

இவற்றையெல்லாம் கேட்டால், `சங்கி, மங்கி’ என்று கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து கண்டகண்ட முத்திரையைக் குத்தி ஜோலியை முடிக்கப் பார்க்காதீர்கள்.

உண்மையை உணர்ந்து உடனடியாகச் செயலாற்றப் பாருங்கள். இல்லையென்றால், உங்கள் ஜோலியை முடிக்கத் தயங்க மாட்டார்கள் மக்கள்! ஏனென்றால், எங்களுக்கு முதுகெலும்பு ரொம்ப முக்கியம். அதுதான் எங்களின் மிகப்பெரிய சொத்து. தன்மானத்தோடும், தற்சார்போடும் வாழ, எங்களுக்கெல்லாம் முதுகெலும்பு ரொம்ப ரொம்ப முக்கியம் முதலமைச்சரே!

- ஜூகோ