ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒன்றரை ஏக்கர்… ரூ.2,76,000 'பலே' லாபம் தரும் பப்பாளி!

பப்பாளியுடன் பால்தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பப்பாளியுடன் பால்தங்கம்

மகசூல்

ற்போதைய தண்ணீர்ப் பற்றாக்குறை சூழலில், குறைந்த தண்ணீர்த் தேவையுள்ள, தொடர் மகசூல் தரும் பயிரைச் சாகுபடி செய்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றிபெற முடியும் என்றாகிவிட்டது. அந்த வரிசையில் குறைவான பராமரிப்பாலும், சந்தையில் எப்போதும் தேவை இருப்பதாலும், விவசாயிகள் பரவலாகப் பப்பாளிச் சாகுபடியில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளிச் சாகுபடியில் சாதித்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் விவசாயி பால்தங்கம். கடந்த 10.1.2020 தேதியிட்ட பசுமை விகடன் பொங்கல் சிறப்பிதழில், வெளியான, ‘பைசா செலவில்லாத பனங்கிழங்கு சாகுபடி’ என்ற கட்டுரையின் மூலம் நம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். ஒவ்வோர் ஆண்டும் பனங்கிழங்கை மட்டுமே சாகுபடி செய்து வந்தவர், தற்போது ஒன்றரை ஏக்கரில் ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார். இடுபொருள் தெளிப்பு, அறுவடை என அனைத்துக்கும் பெண்களையே ஈடுபடுத்தி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம், காயாமொழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அம்மாள்புரம் கிராமத்தில் இருக்கிறது பால்தங்கத்தின் பப்பாளித் தோட்டம். அறுவடை செய்த பப்பாளிப் பழங்களை விற்பனைக்கு அனுப்பும் பணியில் இருந்த அவரைச் சந்தித்தோம். பழுத்த பப்பாளித் துண்டுகளை நறுக்கி நமக்குச் சாப்பிடக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “எனக்கு சொந்த ஊர் காயாமொழி பக்கத்துல இருக்க வள்ளிவிளைதான். கல்யாணமானதும் இதே ஊருலதான். விவசாயம்தான் பூர்வீகத் தொழில்.

பப்பாளியுடன் பால்தங்கம்
பப்பாளியுடன் பால்தங்கம்

இந்தப் பகுதி முழுவதுமே வாழை விவசாயம்தான். என் கணவர், 15 வருஷமா இயற்கை முறையில கற்பூரவள்ளி, ரஸ்தாலி, செவ்வாழை, நாடன் ரக வாழைகளையும், ஒரு ஏக்கர்ல பப்பாளியையும் சாகுபடி செய்துகிட்டு இருக்காரு. நானும் அவரோட சேர்ந்து விவசாய வேலைகளைப் பார்த்துக்கிட்டு வந்தேன். பசுமை விகடன் இதழைத் தொடர்ந்து படிச்சுகிட்டு வர்றேன். அதுல, சில பெண் விவசாயிங்க தன்னந்தனியா நெல், வாழை, பப்பாளி, நிலக்கடலை சாகுபடி செய்யுறதையும், கோழி, ஆடு, மாடு, முயல்னு கால்நடை வளர்ப்புலயும் வெற்றிகரமா ஈடுபட்டு கணிசமான வருமானம் எடுத்துகிட்டு வர்ற கட்டுரைகளையும் படிச்சேன்.

‘நாமும் தனியா விவசாயம் செஞ்சா என்ன’ன்னு எனக்குள்ள யோசனை தோணுச்சு. அதை என் கணவர்கிட்ட சொன்னேன். வரவேற்று ஊக்கப்படுத்தினார். என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு யோசனை வந்துச்சு. ‘ஆழம் தெரியாம காலை விடக் கூடாது’ன்னு சொல்லுற மாதிரி, பப்பாளிச் சாகுபடியில அனுபவம் இருக்குறதுனால பப்பாளியையே போடலாம்னு முடிவெடுத்தேன். புதிதாக வாங்கிய ஒன்றரை ஏக்கர் நிலத்தைச் சீர்படுத்தி, உழவு ஓட்டிக் கொடுத்தாங்க. கன்றுத் தேர்வு, தண்ணி பாய்ச்சுறது, களை நிர்வாகம், இடுபொருள் தயாரிப்பு, தெளிப்பு, அறுவடைனு மத்த எல்லாத்தையும் நானே நின்னு கவனிச்சுக் கிட்டேன்.

ஒவ்வொரு வருஷமும் சீஸன் முடிஞ்சதும் பனைமரத்துல இருந்து கீழே விழுகுற பனம் பழங்களைச் சேகரிப்பேன். அதை வெச்சு, 2 சென்ட் நிலத்துல பனங்கிழங்கு சாகுபடி செய்யுறதை மட்டும் செஞ்சுகிட்டு வந்த நான், தன்னந்தனியா நின்னு ஒன்றரை ஏக்கர்ல பப்பாளியை வெற்றிகரமாச் சாகுபடி செஞ்சுருக்கேன்னா அதுக்கு காரணம் பசுமை விகடன்தான்’’ என்றவர்,

பப்பாளியை விற்பனைக்கு அனுப்பும் பணியில்
பப்பாளியை விற்பனைக்கு அனுப்பும் பணியில்

பப்பாளி பயிர் பற்றிப் பேசினார். ‘‘இது ரெண்டு ஏக்கர் நிலம். ஒன்றரை ஏக்கர்ல ரெட் லேடி ரகப் பப்பாளி அறுவடையில இருக்கு. இப்போ 6 மாசமா பழங்கள் பறிச்சுகிட்டு இருக்கேன். திருச்செந்தூர், உடன்குடி, குரும்பூர், சாத்தான்குளம், தூத்துக்குடி, திருநெல்வேலியில உள்ள பழக்கடைகளுக்கும், சென்னையிலுள்ள சில இயற்கை விவசாயக் கடைகளுக்கும் பழங்களை விற்பனைக்காக அனுப்புறேன்.

ஒரு பழத்தோட எடை, குறைந்தபட்சம் 750 கிராம் முதல் அதிகபட்சமா 2 கிலோ வரைக்கும் இருக்குது. இதுவரைக்கும் (11.11.21 வரை) 43 பறிப்புகள் மூலமா 21,340 கிலோ பழங்கள் பறிச்சிருக்கேன். ஒரு கிலோ 20 ரூபாய்னு விற்பனை செய்றேன். விலையில எந்தச் சமரசமும் செய்யுறதில்ல. ஒரே விலை தான். அந்த வகையில 4,26,800 ரூபாய் வருமானமாக் கிடைச்சிருக்கு. இதுல, உழவு, கன்றுச் செலவு, குழி நடவு, களை, இடுபொருள் தயாரிப்பு, தெளிப்பு, அறுவடைனு 1,50,500 ரூபாய் வரைக்கும் செலவாகிடுச்சு. செலவு போக 2,76,300 ரூபாய் நிகர லாபமாக் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக,

செலவு/வரவு கணக்கு
செலவு/வரவு கணக்கு

‘‘அதே நேரம் இன்னும் மகசூல் முடியவில்லை. இன்னும் ஒரு வருடத்திற்கு மகசூல் வரும். அது கூடுதல் லாபம் அதுமூலமா 40,000 கிலோ வரைக்கும் எதிர்பார்க்குறேன். கொரோனா தாக்கத்துக்குப் பிறகு, மக்கள் மத்தியில பப்பாளிப் பழத்தின் பயன்கள் பற்றிய விழிப்புணர்வும் தேவையும் அதிகரிச் சிருக்குது. குறைவான பராமரிப்புல கணிசமான வருமானம் தர்றதுல பப்பாளியும் ஒண்ணு” எனப் பப்பாளிப் பழத்தை காண்பித்தபடியே விடை கொடுத்தார்.


தொடர்புக்கு, பால்தங்கம்,

செல்போன்: 95438 44600

பப்பாளிக்கு முட்டுக் கொடுக்கப் பனைமட்டை

‘‘காய்ப்பு அதிகரிக்கும் நேரத்தில் மரம் வளையலாம். இந்த வளைவைக் கம்புகள் ஊன்றித் தடுக்காவிட்டால் முறிந்து விழுந்துடும். இதைத் தடுக்க, ஒரு பப்பாளி மரத்துக்கு ரெண்டு பனைமட்டைகளை முட்டாகக் கொடுக்கலாம். பனைமட்டையில் இருக்கும் ஆங்கில எழுத்தின் ‘V’ போன்ற அமைப்பு பப்பாளி மரத்தை வளையாமல் பிடித்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாம, இந்த மட்டைகளை, தோட்டத்துக்குள்ள ஆங்காங்கே நட்டா, பறவைகள் உக்கார ‘வாட்சிங் டவர்’போல இருக்கும். இதுமேல அமரும் பறவைகள், தீமை செய்யும் பூச்சிகளைச் சுலபமா அடையாளம் கண்டு கொத்திட்டுப் போயிடும். அதோட, இதே மட்டைகள்ல ரோஸ், பச்சை, வெள்ளை, ஊதா, கறுப்பு நிற பாலித்தீன் பைகளைக் கட்டிவிட்டா, பயிர்களை நாசம் செய்யுற பறவைகள் வர்றதில்ல. பனைமரங்கள் அதிகமுள்ள பகுதிகள்ல மட்டை சுலபமா கிடைக்கிது. ஒரு மட்டை 5 ரூபாய் விலைக்கு வாங்கிடலாம். முட்டுக் கொடுக்க அதிக விலை கொடுத்து மூங்கில், சவுக்குக் கம்புகள் வாங்க வேண்டிய அவசியமில்ல” என்கிறார் பால்தங்கம்.

பப்பாளியுடன் பால்தங்கம்
பப்பாளியுடன் பால்தங்கம்

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒன்றரை ஏக்கரில் இயற்கை முறையில் ரெட்லேடி ரகப் பப்பாளிச் சாகுபடி செய்வது குறித்துப் பால்தங்கம் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

பப்பாளியைப் பொறுத்தவரையில் பட்டம் கிடையாது. ஆனால், வைகாசிப் பட்டத்தில் நடவு செய்வது ஏற்றது. தண்ணீர் தேங்காத எல்லா மண்ணுமே ஏற்றது. 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 7 அடி, செடிக்குச் செடி 7 அடி இடைவெளியில், அரையடி ஆழத்தில் குழி எடுத்து, குழிக்குள் ஒரு கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ஒரு வாரம் காய விட வேண்டும். இதற்கிடையில், சொட்டுநீர்ப் பாசன அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

40 முதல் 60 நாள்கள் வரையுள்ள கன்றுகள் நடவுக்கு ஏற்றது. இந்த நாள்களில் உள்ள கன்றுகளை நட்டால், வளர்ச்சி வேகமாக இருக்கும். பப்பாளி நாற்று பிளாஸ்டிக் பாக்கெட்டில் இருக்கும். அதனை பிரித்து நடவு செய்து மண் அணைக்கும்போது, பிரமிடுபோல கூம்பு வடிவில் அமைக்காமல் தரைமட்டத்திற்கு அணைக்க வேண்டும். வாழைக்கன்றுக்கு மண் அணைப்பதுபோல் மண் அணைத்தால், தண்டு அழுகல் ஏற்பட்டு பட்டுப்போக வாய்ப்புள்ளது. 2 மாதங்கள் வரை ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் மட்டும் பாய்ச்சி வந்தாலே போதுமானது. 2 மாதங்களுக்குப் பிறகு, களை எடுத்துவிட்டு ஒரு கன்றுக்கு 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 50 கிராம் கடலைப் பிண்ணாக்கை அடியுரமாக, கன்றிலிருந்து அரை அடி தூரத்தில் வைக்க வேண்டும்.

அதேபோல, 10 நாள்களுக்கு ஒருமுறை, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 3-வது மாதத்திலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா மற்றும் 10 லிட்டர் தண்ணீரில் 200 மி.லி மீன் அமிலம் கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளித்து வர வேண்டும். 5-வது மாதத்தில் பூப்பூக்கும். 8-வது மாதத்தில் காய் பறிக்கத் தொடங்கலாம். 10-வது மாதத்தில் மகசூல் படிப்படியாக அதிரிக்கத் தொடங்கும். 10 முதல் 12-வது மாதத்தில் கன்றுக்குத் தலா 2 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைத் தூரிலிருந்து அரை அடி தூரத்தில் அடியுரமாக வைக்க வேண்டும்.

இதேபோல, 6 மாதத்துக்கு ஒரு முறை அடியுரமாக வைத்து வர வேண்டும். பப்பாளியைப் பொறுத்தவரையில் வைரஸ் தாக்குதலால் இலையில் பழுப்பு, இலைப்புள்ளி ஆகியவை ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் மோர், 200 மி.லி மீன் அமிலம் கலந்து 7 நாள்கள் இடைவெளியில் 4 முறை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வெயில் நேரத்தில் மாவுப்பூச்சியின் தாக்குதல் ஏற்படும். மரத்தில் மாவுப்பூச்சி தென்படும் பகுதிகளில் தண்ணீரால் பீய்ச்சி அடிக்க வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் மோர், 200 மி.லி மீன் அமிலம் கலந்து கைத்தெளிப்பானால் தெளித்தால் போதும். இதேபோல 7 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

பப்பாளித் தோட்டம்
பப்பாளித் தோட்டம்

உரமாகும் சேதமான பழங்கள்

தோட்டத்தில் பப்பாளிப் பழங்கள், மரத்திலேயே பழுத்தும், கீழே விழுந்தும் கிடக்கும். இந்தப் பழங்களில் பழ ஈக்கள் அதிகம் உற்பத்தியாகி, நல்ல நிலையில் உள்ள பழங்களையும் தாக்கும். இதைக் கட்டுப்படுத்திட சேதமான, அழுகிய பழங்களைச் சேகரித்து, தோட்டத்திலேயே குழி எடுத்து மூடுவார்கள். ஆனால், இப்படியான பழங்களைச் சேகரித்து 200 லிட்டர் கொள்ளவுள்ள பிளாஸ்டிக் டிரம்மில் பாதியளவு போட்டு 500 கிராம் நாட்டுச்சர்க்கரைத் தூளைக் கலந்து மூங்கில் கம்பினால் நன்கு கிளறி மூட வேண்டும். இப்படி 5 நாள்களுக்கு ஒருமுறை 500 கிராம் நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவேண்டும். இப்படி 5 நாள்களுக்கு ஒருமுறை என்கிற கணக்கில் மூன்று முறை கலந்துவிட்டால் போதும். இதன் மூலம் நுண்ணுயிர்கள் வேகமாக பெருக்கமடைய தொடங்கிவிடும். 20 முதல் 25-வது நாளில் பழக்காடிப்போல மாறியிருக்கும். இதை மரத்தின் தூர்களில் ஒரு கப் அளவில் (1 லிட்டர்) ஊற்றலாம். அதேபோல, செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தயார் செய்யும்போது, தொழுவுரத்துடன் இந்த பப்பாளிப்பழக் கரைசலை (2 டன் தொழுவுரத்தில் அரை டிரம் பப்பாளிக் கரைசல்) சேர்த்துக் கலவையாக்கலாம். ஒரு டிரம்மில் பாதியளவு மட்டுமே சேதமான பழங்களைப் போட வேண்டும். அப்போதுதான் கிளறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு டிரம்மில் பழங்களை நிரப்பியதும், அடுத்த டிரம்மில் பழங்களை நிரப்பலாம்.

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரை ஊற்றி அதனுடன் 2 லிட்டர் அசோஸ்பைரில்லம், 2 லிட்டர் பாஸ்போ பாக்டீரியா, 1 லிட்டர் சூடோமோனஸ், 1 லிட்டர் டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ நாட்டுச்சர்க்கரைத் தூள் ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பெரிய பிளாஸ்டிக் தாளை விரித்து 4 டன் தொழுவுரத்தைக் கொட்டி அதன் மீது டிரம்மில் கலந்து வைத்துள்ள கரைசலைத் தெளித்துப் பிட்டுப் பதத்தில் கலவையாக்கி சணல் சாக்கு களால் மூடி, 15 நாள்கள் வரை வைத்திருந்தால் செறிவூட்டப் பட்ட தொழுவுரம் தயார்.