
மகசூல்
தமிழ்நாட்டின் பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது நம்மாழ்வாரின் பெரும் கனவு. இதற்காக அரும்பாடுபட்டார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவருடைய எண்ணம் வேகமாக ஈடேறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஏராளமான இளைஞர்கள் பாரம்பர்ய நெல் சாகுபடியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கீழ நெடார் கிராமத்தைச் சேர்ந்த இளந்திரையன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் கருத்துகள் மீது மிகுந்த பற்றுக்கொண்ட இவர்... 7 ஏக்கரில் தூயமல்லி, சிவன் சம்பா, கட்டுயானம், ரத்தசாலி, கறுப்புக் கவுனி, கருடன் சம்பா, சீரகச் சம்பா, பால்குடவாலை, ஆத்தூர் கிச்சலிச் சம்பா, பூங்கார், குள்ளக்கார், கருங்குறுவை, கருத்தக்கார் உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும், நம்மாழ்வார் மரபு வழி வேளாண்மை மற்றும் மரபு விதை பாதுகாவலர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி மற்ற விவசாயிகளிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவருடைய அனுபவம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் இவருடைய பண்ணைக்குச் சென்றோம். வயலில் தேங்கிக் கிடந்த மழைநீரை வடித்துக்கொண்டிருந்த இளந்திரையன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பாரம்பர்ய நெல் ரகங்கள்ல நிறைய மருத்துவக் குணங்கள் நிறைஞ்சிருக்குனு நம்மாழ்வார் சொல்வார். அதை நான் அனுபவபூர்வமா உணர்ந்துகிட்டு இருக்கேன். எனக்குச் சர்க்கரை வியாதி இருக்கு. அதுக்காக நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். காட்டுயானம், கருடன் சம்பா சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, சர்க்கரை அளவு சீராகி இருக்கு. கடந்த 4 வருஷமா மருந்து மாத்திரைகளே தேவைப்படலை. நான் மட்டுமல்ல... என்னோட உறவினர்கள், நண்பர்களும்கூட இதைச் சாப்பிட்டு பார்த்துட்டு ஆச்சர்யப்படுறாங்க. மலச்சிக்கல் உள்ளவங்க தூயமல்லி சாப்பிட்டா, அந்தப் பிரச்னை சரியாகிடும். இதுவும் கூட என்னோட நேரடி அனுபவம்’’ என இவற்றின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

‘‘நாங்க விவசாயக் குடும்பம். எங்களுக்கு 38 ஏக்கர் நிலம் இருக்கு. என்னோட அப்பா தான் விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருந்தார். நான் எம் காம், எம்.ஃபில், பி.எட் படிச்சிட்டு சென்னையில உள்ள ஒரு தனியார் நிறுவனத்துல வேலைபர்த்துக்கிட்டு இருந்தேன். 2009-ம் வருஷம் எனக்குத் திருமணம் ஆனதும் சொந்த ஊருலயே வசிக்க வேண்டிய சூழல் உருவாச்சு. விவசாயத் தைக் கவனிச்சிக்கிட்டே, தஞ்சாவூர்ல உள்ள ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை புற்றுநோய் ஆய்வு மையத்துல கணக்குப் பிரிவு மேலாளரா வேலை பார்க்க ஆரம்பிச்சேன். நாளுக்கு நாள் புற்றுநோயாளிகளோட எண்ணிக்கை அதிகமாகிட்டே இருக்குறதையும் அவங்க படக்கூடிய வேதனையையும் பார்க்குறப்ப மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. புற்றுநோய் அதிகரிக்கப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும்கூட, அதிக அளவு ரசாயன இடுபொருள்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படுற உணவுப் பொருள்களைச் சாப்பிடுறதும்கூட, ஒரு முக்கியக் காரணம்னு மருத்துவர்கள் சொல்றதைக் கேட்டேன். அந்தச் சமயத்துல தான், இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் ரகங்களோட மகத்துவம் பத்தி நம்மாழ்வார் பேசின கருத்துகள் என் மனசுல மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினுச்சு.

2015-ம் வருஷம் இயற்கை விவசாயத்துல இறங்கி பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். எங்க குடும்பத்துக்குச் சொந்தமான 38 ஏக்கர்லயுமே இதைச் செய்யணும்னுதான் ஆசைப்பட்டேன். ஆனா, படிப்படியா அதிகப்படுத்தலாம்னு எங்க வீட்ல உள்ளவங்க சொன்னதால, முதல்கட்டமா 7 ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். குறுவை, சம்பா இருபோகம் பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்றேன். ஒரு ஏக்கருக்கு சராசரியா 20 மூட்டை (60 கிலோ) நெல் மகசூல் கிடைக் குது. கோடைப்பட்டத்துல உளுந்து. பச்சைப் பயறு சாகுபடி செய்வேன்.
நம்மாழ்வார் வலியுறுத்திய பல தானிய விதைப்பு
எங்ககிட்ட தஞ்சாவூர் குட்டை ரகத்தைச் சேர்ந்த 2 நாட்டு மாடுகள், 1 சாஹிவால், 4 கலப்பின சீமைமாடுகளும் இருக்கு. இதனால போதுமான அளவுக்கு எரு கிடைக்குது. கோடைப்பட்டத்துல உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செஞ்சு முடிச்ச பிறகு, இந்த 7 ஏக்கர்லயும் கீதாரிகள் மூலம் ஆட்டுக்கிடை அமைச்சுட்டு, ஒரு ஏக்கருக்கு 5 டன் வீதம் எரு போட்டு, புழுதி உழவு ஓட்டுவேன். நிலத்தை விரைவா வளப்படுத்த பல தானிய விதைப்பு அவசியம்னு நம்மாழ்வார் சொன்ன தைக் கடைப்பிடிச்சுக்கிட்டு இருக்கேன்.
சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழிஞ்சி, ஆமணக்கு, எள், நிலக்கடலை, கடுகு, வெந்தயம், ஜீரகம், கொத்தமல்லி, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, கொள்ளு, சோளம்... இதெல்லாம் கலந்து ஒரு ஏக்கருக்கு தலா 20 கிலோ வீதம் விதைப்பு செய்வேன். 45 - 50 நாள்கள்ல வயல்ல தண்ணி கட்டி, பல தானிய பயிர்களை மடக்கி உழுவேன். இதனால மண்ணு நல்லா வளமாகுறதோட மட்டுமல்லாம, களைகளும் கட்டுப்படுத்தப் படுது. அடுத்த 10 நாள்கள் கழிச்சி நாற்று நடவு செய்வேன்.
பாய் நாற்றங்கால்
இயந்திர நடவு
விவசாயத்தைப் பொறுத்த வரைக்கும் வேலையாள்களை அதிகமா சார்ந்திருக்குற தையும், நிறைய செலவு செய்றதையும் இயன்ற வரைக் கும் குறைச்சாதான் நிறை வான லாபம் பார்க்க முடியும். நான், பாய் நாற்றங்கால்ல நாற்றுகளை உற்பத்தி செஞ்சு. இயந்திரம் மூலம் நடவு செய்றேன். இது எனக்குப் பல வகைகள்லயும் ஒத்தாசையா இருக்கு. செலவு குறையுற தோட மட்டுமல்லாம, ஒரே சீரான இடைவெளியில நாற்றுகளை நடவு செய்ய முடியுது. இதனால கோனோவீடர் மூலம் களை ஓட்டுறதுக்கு வசதியா இருக்கு.

பாசனநீர் மூலம் இடுபொருள்
மூலிகை பூச்சிவிரட்டியை மட்டும்தான் தெளிப்பான் மூலம் நெற்பயிர்கள் மேல தெளிப்பேன். மீன் அமிலம், பஞ்சகவ்யா, திறன்மிகு நுண்ணூயிரி திரவம்... இதை யெல்லாம் பாசனநீர்லதான் கலந்துவிடுவேன். இதனால் இடுபொருள் தெளிப்புக்கான ஆள் கூலி மிச்சமாகுது. மீன் அமிலம் பயன் படுத்துறனால பயிர்கள் நல்லா செழிப்பா வளர்றதோடு மட்டுமல்லாம, எலி வெட்டு, பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுது’’ என்று தெரிவித்தவர் மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
வருமானம்
“7 ஏக்கர்ல இருபோகமும் பாரம்பர்ய நெல் ரகங்கள்தான் சாகுபடி செய்றேன். குறுவையில... பூங்கார், கருங்குறுவை, கருத்தக்கார், குள்ளக்கார், ரத்தசாலி, சொர்னமசூரி உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்றேன். சம்பா பட்டத்துல... தூயமல்லி, ஆத்தூர் கிச்சலிச் சம்பா, சீரகச்சம்பா, சிவன் சம்பா, கறுப்புக் கவுனி, வாசனை சீரகச்சம்பா உள்ளிட்ட ரகங்கள் பயிர் பண்ணுவேன். ஒரு ஏக்கருக்கு சராசரியா 20 மூட்டை (60 கிலோ) வீதம் வருஷத்துக்கு மொத்தம் 280 மூட்டை நெல் மகசூல் கிடைக்குது. இதுல 40 சதவிகிதத்தை விதைநெல்லா விற்பனை செய்றேன். ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் வீதம் 6,720 கிலோ விதைநெல் விற்பனை மூலம் 5,37,600 ரூபாய் வருமானம் கிடைக்கும். 60 சதவிகித நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். 10,080 கிலோ நெல்லை அரிசியா அரைச்சோம்னா, 6,384 கிலோ அரிசி கிடைக்கும்.
ஒரு கிலோவுக்குச் சராசரியா 80 ரூபாய் வீதம், அரிசி விற்பனையில மொத்தம் 5,10,720 ரூபாய் வருமானம் கிடைக்கும். தவிடு, குருணை, வைக்கோல்... இதோட விலைமதிப்பு 85,680 ரூபாய். ஆக மொத்தம் 7 ஏக்கர்ல இருபோகம் நெல் சாகுபடி மூலம் எனக்கு வருஷத்துக்கு மொத்தம் 11,34,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல சாகுபடி செலவு, அரிசி மதிப்புக்கூட்டுறதுக்கான செலவுகள் 4,20,000 போக மீதி 7,14,000 ரூபாய் நிகரலாபமா கையில கிடைக்கும். இது எனக்கு நிறைவான லாபம்’’ என மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு, இளந்திரையன்,
செல்போன் 96989 85590
விதை நெல்... அதிக லாபம்!
‘‘7 ஏக்கர்ல பலவிதமான நெல் ரகங்கள் உற்பத்தி செய்றதுனாலதான் எனக்கு விற்பனை எளிதா இருக்கு. விதைநெல்லா இருந்தாலும் அரிசியா இருந்தாலும் யாருக்கு எந்த ரகம் பிடிக்குமோ அதை வாங்கிக்கிட்டு போறாங்க. ஒரு ரகம் அல்லது ரெண்டு ரகங்களை மட்டும் அதிகப் பரப்புல சாகுபடி செஞ்சா விற்பனை செய்றது ரொம்பச் சிரமம்.
விதைநெல் விற்பனை
உற்பத்தி செஞ்ச நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றதைவிட விதை நெல்லா விற்பனை செஞ்சா அதிக லாபம் கிடைக்கும். அதுக்காக, நான் உற்பத்தி செய்யக்கூடிய நெல் எல்லாத்தையுமே விதைநெல்லா விற்பனை செஞ்சிட முடியாது. என்னால 40 சதவிகிதம்தான் விதைநெல்லா விற்பனை செய்ய முடியுது. இந்தளவுக்குத்தான் விதைநெல்லுக்கான தேவை இருக்கு. அதுமட்டுமல்லாம, விதைநெல்லா விற்பனை செய்யணும்னா, என்னோட வீட்டுல குறைந்தபட்சம் 90 நாள்கள் விதை உறக்கத்துல வச்சிருந்து, இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை அமாவாசை சமயத்துல இரண்டு மூன்று நாள்கள் நல்லா வெயில்ல காய வைக்கணும். 90 நாள்கள்ல விதை உறக்கம் கலைஞ்ச பிறகு, படிப்படியாதான் விற்பனை செஞ்சாகணும்’’ என்கிறார் இளந்திரையன்.

மரபு நெல் பகிர்வு விழா
‘‘கடந்த ஆகஸ்ட் மாசம், என்னோட பண்ணையில தமிழர் வேளாண்மை-மரபு நெல் பகிர்வு விழா நடத்தினோம். பாரம்பர்ய நெல் ரகங்கள் மீட்புல கடந்த பல வருஷங்களா ஈடுபட்டுக்கிட்டு இருக்குற காரைக்கால் பாஸ்கர், வேதாரண் யத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சரவணக்குமார் இவங்க ரெண்டு பேரும் 100 விதமான பாரம்பர்ய நெல் ரகங்கள் கொண்டு வந்திருந்தாங்க.
ஏற்கெனவே நான் சேகரிச்சு வச்சிருந்த 60 ரகங்களையும் சேர்த்து, அந்த விழா வுக்கு வந்திருந்த சுமார் 500 விவசாயி களுக்குக் கொடுத்தோம். ஒரு நபருக்கு அரை கிலோவுல இருந்து ஒரு கிலோ வரைக்கும் கொடுத்தோம். அதைப் பயிர் செஞ்சு அடுத்த வருஷம் இருமடங்கா கொடுக்கணும்னுங்கற ஒப்பந்தம். பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவலாக்கம் செய்யணும்ங்கற நோக்கத்தோடு, ஒவ்வொரு வருஷமும் இந்தப் பண்ணை யில மரபுநெல் பகிர்வு விழா நடத்தலாம்னு முடிவெடுத்திருக்கோம்’’ என்கிறார் இளந்திரையன்.
இப்படித்தான் சாகுபடி
ஒரு ஏக்கர் பரப்பில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய இளந்திரையன் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப் பட்டுள்ளன.
நாற்று உற்பத்தி
5 சென்ட் பரப்பில் பாலித்தின் விரிப்பு மூலம் பாய் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். இதற்குத் தேவையான அளவு சேறு தயார் செய்து அதனுடன் 50 கிலோ மாட்டு எரு. 500 மி.லி மீன் அமிலம், தலா 250 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்டெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து பாலித்தின் விரிப்பு மீது நிரவி விட வேண்டும். 25 கிலோ விதைநெல்லை நாற்றங் காலில் பரவலாகத் தூவிவிட்டு, இதன் மீது நிழல் வலையை விரித்து, அதற்கு மேல் வைக்கோல் போட்டு மூட வேண்டும். தினமும் காலை, மாலை இருவேளை தண்ணீர் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் வைக்கோலையும் நிழல் வலையையும் எடுத்து விட வேண்டும். அப்போது 3 - 5 இன்ச் உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்திருக்கும். 8-ம் நாள் 200 மி.லி மீன் அமிலமும் 14-ம் நாள் 200 மி.லி பஞ்சகவ்யாவும் பாசனநீரில் கலந்து விட வேண்டும். 17-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மூலிகை பூச்சிவிரட்டி கலந்து தெளிப்பான் மூலம் நாற்றுகள் மீது தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகளை இயந்திரம் மூலம் சாகுபடி நிலத்தில் நடவு செய்ய வேண்டும்.

சாகுபடி நிலம்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து, அதன் பிறகு ஏக்கருக்கு 5 டன் வீதம் மாட்டு எரு போட்டு புழுதி உழவு ஓட்டி, 20 கிலோ பலதானிய விதைப்புச் செய்ய வேண்டும். பல தானிய பயிர்கள் நன்கு வளர்ந்த பிறகு, பூ பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். 10 நாள்கள் கழித்து மீண்டும் உழவு ஓட்டி நிலத்தை நன்கு சமப்படுத்தி, இயந்திரம் மூலம் வரிசைக்கு வரிசை 30 செ.மீ, குத்துக்குக் குத்து 22 செ.மீ இடைவெளிவிட்டு, 3 - 5 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 10-ம் நாள் 200 லிட்டர் தண்ணீரில் தலா 1 லிட்டர் பஞ்ச கவ்யா, மீன் அமிலம், திறன்மிகு நுண்ணுயிரி திரவம் ஆகியவற்றைக் கலந்து பாசனநீரில் விட வேண்டும். இதுபோல் 10 நாள்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். 15-ம் நாள் கோனாவீடர் மூலம் களைகளை மண்ணுக்குள் புதைக்க வேண்டும்.
18-ம் நாள் தலா 5 கிலோ கடலைப்பிண்ணாக்கு, தேங்காய் பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு, ஆமணக்கு பிண்ணாக்கு ஆகியவற்றை நன்கு தூளாக்கி, இவற்றுடன் தலா 500 மி.லி பஞ்சகவ்யா, மீன் அமிலம், திறன்மிகு நுண்ணுயிரி திரவம்... தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து நிலம் முழுவதும் பரவலாகத் தூவ வேண்டும். இதனால் நுண்ணு யிரிகள் பெருக்கம் அதிகரிக்கும். 30-ம் நாள் ஆட்கள் மூலம் களையெடுக்க வேண்டும். 45 மற்றும் 60 ஆகிய நாள்களில் 150 கிலோ செறிவூட்டப்பட்ட எருவை நிலம் முழுவதும் பரவலாகத் தூவ வேண்டும். பூச்சித்தாக்குதல் தென்பட்டால், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மி.லி வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். பூ பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மி.லி வீதம் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.