மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மாதம் 45,000... ஆட்டுக்கால் கிழங்கு, ஆடாதொடை, ஆவாரம்பூ... 43 வகையான மூலிகை சூப்!

மகாதேவன்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாதேவன்

மூலிகை

எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்... இதன் எதிரில் உள்ள ஜெய் நகர் பூங்காவின் முகப்புப் பகுதியில் பொரித்த சிக்கன், பானி பூரி, சிப்ஸ், குளிர்பானம் கடைகளுக்கு மத்தி யில் வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறது மூலிகை சூப் கடை. அகத்தியர் மற்றும் நம்மாழ்வாரின் படங்களோடு 43 வகை யான மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் பட்டியலிடப் பட்ட போர்டு நம் கவனத்தை ஈர்க்கிறது. இங்கு பல வகையான மூலிகை சூப்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மிகவும் அரிதான மூலிகை சூப்களும் இங்கு கிடைப்பதுதான் கூடுதல் சிறப்பு.

வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள் குழந்தைகள் எனப் பல தரப்பினரும் அந்தக் கடையைச் சூழ்ந்து இருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளைச் சொல்ல சொல்ல, அதற்கேற்ப மூலிகை சூப்பை கொடுத்து, அதன் மருத்துவப் பலன்களை விவரித்தார், அந்தக் கடையின் உரிமையாளர்.

மூலிகை சூப் கடையில்
மூலிகை சூப் கடையில்

முடவாட்டுக்கால் சூப் ஆர்டர் செய்துவிட்டு, கடை உரிமையாளரிடம் பேச்சு கொடுத்தோம். “என் பேரு மகாதேவன். கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்தியூர்தான் என்னோட பூர்வீகம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில எம்.ஏ தமிழ் படிச்சேன். ஏழ்மையின் காரணமா படிக்கும்போதே பகுதிநேரமா வேலையும் செஞ்சுகிட்டு வந்தேன். படிச்சு முடிச்ச பிறகு, மெடிக்கல் ரெப் உள்ளிட்ட சில வேலைகள செஞ்சேன். ஆனா, எங்கேயுமே என்னால நிரந்தரமா வேல செய்ய முடியல. நம்ம இயல்புக்கு ஒருத்தருக்கு கீழ வேல செய்ய முடியாதுனு தெரிஞ்சது. சரி... ஏதாவது, தொழில் செய்வோம்னு திருவேற்காட்டுல டாஸ்மாக் பார்ல கேன்டீன் நடத்தினேன். அதுவும் சரியா வரல. அப்புறம் ஆவடில டீக்கடை நடத்தினேன். ஆனா, அதுவும் என் மனசுக்கு நிறைவு தரலை. எதுதான் நமக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும்ங்கற தேடல்ல இறங்கினப்பதான், மக்கள் நலன் சார்ந்த ஒரு தொழிலை தேர்ந்தெடுக்கணும்ங்கற முடிவுக்கு வந்தேன்.

நம்மாழ்வார் மேல ஏற்கெனவே எனக்கு ஈர்ப்பு அதிகம். பசுமை விகடன் புத்தகத்துல வர்ற இயற்கை உணவு, மூலிகை சார்ந்த விஷயங்கள படிப்பேன். அதுவும் நம்மாழ்வார் மூலிகைகளோட பயன்கள் பத்தி சொன்ன கருத்துகள் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்துச்சு. மூலிகை சூப் விற்பனை செய்யலாம்னு தீர்மானிச்சு இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கடையைத் திறந்தேன்.

மகாதேவன்
மகாதேவன்

ஆரம்பத்துல என்னோட நண்பர்கள், உறவினர்கள் சிலர், ‘இதெல்லாம் சரியா வருமா... அதுவும் சென்னை மாதிரியான சிட்டியில, மக்கள் பாஸ்ட்புட், ஐஸ்க்ரீம் பார்லர்களை நோக்கி ஓடிக்கிட்டு இருக்குற இந்தக் காலத்துல, மூலிகை சூப் கடையெல்லாம் நல்லா போகுமா’னு சந்தேகம் எழுப்பினாங்க. ஆனாலும், நான் சோர்ந்து போயிடலை.

நாம ஒரு நல்ல விஷயத்தைக் கையில் எடுக்கிறோம். கண்டிப்பா இதுல ஜெயிக்க முடியும்ங்கற நம்பிக்கை இருந்துச்சு. ஒரு வேளை இதை வெற்றிகரமா நடத்த முடியாம போனாலுமேகூட, கவலைப்பட கூடாதுங் கறதுல தெளிவோடு இருந்தேன். மக்கள் நலன் சார்ந்த ஒரு தொழில்ல இறங்கியிருக்கோம்ங்கற ஆத்ம திருப்தியோடு இதுல கவனம் செலுத்தினேன்.

‘‘இந்தக் கடையைத் திறந்த புதுசுல சில நாள்கள் வரைக்கும்... 11 வகையான மூலிகைப் பொடிகளை விலைக்கு வாங்கிட்டு வந்து சூப் தயாரிச்சு விற்பனை பண்ணிகிட்டு இருந்தேன். வியாபாரம் நல்லா சூடு புடிக்க ஆரம்பிச்ச நேரத்துல... மூலிகைப் பொடி களோட விலை ஏறிப்போயிடுச்சு. அதிக விலை கொடுத்து மூலிகைப் பொடிகளை விலைக்கு வாங்கினா, நமக்குக் கட்டுப்படி யாகாதுனு நாமே மூலப்பொருள்களை வாங்கிப் பொடி தயார் பண்ணலாம்னு முடிவெடுத்தேன்.

சைவ ஆட்டுக்கால் சூப்
சைவ ஆட்டுக்கால் சூப்

சித்த மருத்துவ நூல்களைப் படிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு மூலிகையோட நன்மையையும், அதை எப்படிப் பொடியா தயார் செய்றதுனும் தெரிஞ்சுகிட்டேன். கொல்லிமலை, கேரளா, கன்னியாகுமரினு பல இடங்கள்ல இருந்து மூலிகைகளை வரவழைச்சேன். அதைக் காயவெச்சு பக்கத் துல இருக்குற மில்லுல கொடுத்து அரைச்சு பொடி தயாரிக்க ஆரம்பிச்சேன். இதனால சூப் உற்பத்திக்கான செலவு குறைஞ்சதுனால, நிறைவான லாபம் கிடைக்க ஆரம்பிச்சது’’ எனச் சொன்னவர், தன்னுடைய சூப் கடையின் தனித்துவம் குறித்து விவரித்தார்.

‘‘சென்னையில ஏற்கெனவே நிறைய இடங்கள்ல சூப் விற்பனை செய்ற கடைகள் இருக்கு. அங்கெல்லாம்... ஒரு சில மூலிகை சூப், காளான், வாழைத்தண்டு, கீரை, காய்கறி சூப் வகைகள்தான் கிடைக்குது. ஆனா, நாம பலவிதமான மூலிகைகள்ல சூப் விற்பனை செய்யணும்னு முடிவெடுத்தேன். குறிப்பா, வேற எந்தச் சூப் கடைகள்லயும் கிடைக்காத ரொம்ப அரிதான மூலிகை சூப் வகைகள், இங்க விற்பனை செய்யணும்னு ஆசைப்பட்டேன். இப்ப என் கடையில 43 வகையான மூலிகை சூப்கள் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். சித்தரத்தை, சிறியா நங்கை சூப் உடல் குளிர்ச்சிக்கு நல்லது. அறுகம்புல் சூப், உடம்பு வலியை போக்கும். சர்க்கரை நோய் உள்ளவங்க ஆவாரம்பூ சூப் குடிக்கலாம். உடல் இழைப்புக்கு கொள்ளு சூப், மன அழுத்தத்தைப் போக்குற துக்கு வில்வம் சூப், பசியைத் தூண்டுறதுக்குக் கீழாநெல்லி சூப், நெஞ்சு சளியை சரி பண்ண ஆடாதொடை சூப் குடிக்கலாம். இப்படி ஒவ்வொரு மூலிகையிலயுமே பிரத்யேக மருத்துவக் குணம் நிறைஞ்சிருக்கு.

பிரண்டை சூப், நாவல் பழக் கொட்டை சூப், கடுக்காய் சூப், ஜாதிக்காய் சூப், ஓரிதழ் தாமரை சூப், மணத்தக்காளி சூப், கண்டங்கத்திரி சூப் உட்பட இன்னும் பலவிதமான மூலிகை சூப்கள் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். அதிமதுரம், மஞ்சள், பட்டை, சித்தரத்தை, சீரகம், இஞ்சி அனைத்தையும் சேர்த்து கொதிக்க வச்சு, வடிகட்டி... இங்க குடிதண்ணியா வச்சிருக்கேன். சூப் தயாரிக்குறதுக்கும் இந்தத் தண்ணியைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். சாயந்திரம் 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் இந்தச் சூப் கடை திறந்திருக்கும். நான் எதிர்பார்த்ததை விடவும் மக்கள்கிட்ட பல மடங்கு வரவேற்பு அதிகமா இருக்கு. சமீபகாலமா மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில அதிகமா இருக்கு” என்றவர், நிறைவாக வருமானம் குறித்துப் பேசினார்.

மூலிகை சூப் கடையில்
மூலிகை சூப் கடையில்

“மூலிகைகள்ல கசப்பு, துவர்ப்புத் தன்மை அதிகமா இருக்கும். மக்கள் விரும்பி குடிக்குற அளவுக்குச் சுவையான சூப்பா தயார் செய்றது சவாலான விஷயம். இதுல கலக்குற பொருள்கள் சரியான விகிதத்துல இருந்தாகணும். சுவைக்காகவோ, நிறத்துக்காகவோ எந்த ஒரு ரசாயன பொருளையும் நான் இதுல சேர்க்குறதில்லை. இப்போ தினசரி வாடிக்கையாளர்கள் வர்றாங்க. அவங்களோட உடல் பிரச்னைக்கு ஏத்த மாதிரி சூப்பை வாங்கிக் குடிச்சிட்டு போறாங்க. ஒரு நாளைக்குச் சராசரியா 100 சூப் விற்பனை செய்றேன். ஒரு சூப் 30 ரூபாய்னு விக்குறது மூலமா 3,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மூலிகைகள் கொள்முதல் செய்ய, அதை அரைக்க, மற்ற சமையல் பொருள்கள் சேர்க்கனு எல்லாச் செலவுகளும் போக, ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் லாபமா கிடைக்குது. மாசம் சராசரியா 45,000 ரூபாய் நிகர லாபமா கிடைச்சுகிட்டு இருக்கு.

இதைத் தவிர மூணு இடத்துல கிளைகள் தொடங்குறதுக்கு பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. எனக்கு ஒரு ஆசை அரசு மருத்துவ மனைகள், பூங்காங்கள், பேருந்து நிலையங் கள்னு பல இடங்கள் இருக்கு. இங்கெல்லாம் அரசே மூலிகை சூப் கடைகளைத் திறந்தால் மக்களுக்குப் பயனுள்ளதா இருக்கும். பசுமை விகடன் மண்ணுக்கு இயற்கையான உரங்கள கொடுத்து விளைபொருள்கள உற்பத்தி செய்யணும்னு சொல்லுது. மண்ணுடைய நலம்போலவே மக்களுடைய உடல் நலமும் முக்கியம். என்னால மண் நலத்தை காக்க முடியவில்லையென்றாலும், மக்களுடைய உடல் ஆரோக்கியத்தை என்னோட தொழில் மூலமா பாதுகாத்துட்டு வர்றேன்ங்கறதுல சந்தோஷம்” என்று விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, மகாதேவன்,

செல்போன். 90803 63131.

சங்கரன்
சங்கரன்

சைவ ஆட்டுக்கால் கிழங்கு சூப்!

வாடிக்கையாளரான சங்கரனிடம் பேச்சு கொடுத்தோம். “மத்த சூப் கடைகளுக்கும் இந்தக் கடைக்கும் என்ன வித்தியாசம்னா... சூப்போட சுவையைக் கூட்டுறதுக்காக அஜினோமோட்டோ மாதிரியான எந்த ஒரு ரசாயனத்தையும் இந்தக் கடைக்காரர் சேர்க்க மாட்டார். நாம கேட்டதும் நம்ம கண் முன்னாடியேதான் சூப் தயார் பண்ணி கொடுப்பார்’’ என்றார்.

பிரபலமாகி வரும் சைவ ஆட்டுக்கால் கிழங்கு சூப்

ஆட்டுக்கால்சூப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இதென்ன சைவ ஆட்டுக்கால் கிழங்கு சூப்? இது குறித்துப் பேசிய மகாதேவன், “கை, கால் முடமானவர்கள் சாப்பிட பரிந்துரைக்கப்படுபறதால இதை ‘முடவன் கிழங்கு’னு அழைக்கிறாங்க. இது தவிர பித்தம், கபம், வாதத்தைச் சமநிலையில் வைக்க உதவுதால சைவ ஆட்டுக்கால், முடவாட்டுக்கால், ராஜமுக்தி கிழங்கு, கொல்லிமலைக் கிழங்கு என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. இந்தக் கிழங்குகளோட விலை ஒரு கிலோ 300 - 350 ரூபாய். அதிக சத்துகள் நிறைஞ்ச இந்த ஆட்டுக்கால் கிழங்கை நான் கொல்லிமலையிலிருந்து வாங்குறேன். அங்க பாறை இடுக்குகள்ல இருந்து பறிச்சு விற்பனைக்குக் கொடுக்குறாங்க.

முடவாட்டுக்கால்
முடவாட்டுக்கால்

அங்கயிருந்து இதை வாங்கிக்கிட்டு வந்து பொடியாகவும், சூப்பாகவும் தயாரிச்சு விற்பனை செய்றேன். இந்தக் கிழங்கை பசை போல அரைச்சு சிறிதளவு தண்ணீர், சீரகம், சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைச்சு கொதிக்க வச்சு சூப் தயாரிக்கிறேன். இதுவொரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறதால, வாடிக்கையாளர்கள் விரும்பி சாப்பிடுறாங்க. குறிப்பா, சபரி மலைக்கு மாலை போட்டிருக்கிறவங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க. அதனால ஆட்டுக்கால் சூப்புக்குப் பதிலா இந்தச் சைவ ஆட்டுக்கால் சூப்பை சாப்பிடறாங்க.

மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல், செரிமானக் கோளாறுகள்னு பல உடல் உபாதைகள இது சரிசெய்யுதுனு சித்த மருத்துவம் சொல்லுது. ஆட்டுக்கால் கிழங்கோட சுவை இப்ப நிறைய பேருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார்.