` திறனறி தேர்வில் அப்படியென்ன இருக்கிறது?!' - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை



Sponsored



முதன்மை தேர்வுகள் - திறனறி (Aptitude) தேர்வு ஸ்பெஷல்  

பகுதி-1 

Sponsored


முதன்மைத் தேர்வுகளில் நமது அணுகுமுறையையும் புத்திக் கூர்மையையும் சோதிக்கும் திறனறி (Aptitude) தாள், 2011-ம் ஆண்டு முதல் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளில் இடம் பெற்றுவருகிறது. 2010-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுகள் வரையிலும் இந்தத் திறனரி சார்ந்த கேள்விகள் அனைத்தும் பொதுப் பாடங்களோடு சேர்த்தே கேட்கப்பட்டு வந்தன. தகுதித் தாளான இந்தத் திறனறி (Aptitude) தாளில் 200 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும் கேள்விகளுக்கு 66 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் போதுமானது. இந்தத் தாளில் நாம் பெறும் மதிப்பெண்கள் நமது இறுதி ரேங்கிங் (Ranking) அல்லது மெயின் தேர்வுக்கும் தேவையான கட் ஆஃப் என எதையும் நிர்ணயம் செய்வதில்லை. அதேசமயம் 66 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை என்றால் மெயின் தேர்வுக்கு நாம் தகுதியே பெறப்போவதில்லை. ஆக, யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளைப் பொறுத்தவரை, நமக்குத் தேவை பொதுப் பாடங்களில் கட் ஆஃபைவிட அதிக மதிப்பெண்கள் மற்றும் திறனறி தாளில் 66க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள். இவை இரண்டும் இருந்தால் நாம் அடுத்த நிலையான மெயின் தேர்வுக்குத் தகுதி பெறலாம். டி.என்.பி.எஸ்.சியைப் பொறுத்தவரை திறனறி (aptitude) என்று தனியாக தாள் எதுவும் இல்லை. பொதுப் பாடங்களுக்கான தாளிலேயே திறனறி சார்ந்த கேள்விகள் இடம்பெறுகின்றன. 

Sponsored


' திறனறி தேர்வில் அப்படியென்ன இருக்கிறது; என்ன மாதிரியான கேள்விகள் எல்லாம் கேட்கப்படும்?' என்ற கேள்விகள் இயல்பாக எழும். அது தொடர்பான தலைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு, புரிதல் (Comprehension ). அதாவது கொடுக்கப்பட்ட பத்தி அல்லது வரிகள் அல்லது தகவல் ஆகியவற்றின் மீதான நமது புரிதலை சோதிக்கும் வகையிலான கேள்விகள் இந்தப் பகுதியில் இடம்பெறும். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க நமக்கு முதலில் வரிகளில் உள்ள வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். பத்தியிலோ அல்லது வரியின் அடிப்படையில் அந்த வார்த்தை எதைக் குறிக்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பத்தி சார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியும். இதைத்தான் `புரிதல்' என்கிறோம். ஆக, இந்தப் புரிதல் சார்ந்த கேள்விகளை எளிதில் சமாளிக்க, புதிய ஆங்கில வார்த்தைகளை தினமும் தெரிந்துகொள்வது மிக அவசியம். வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தால்தான் அதில் உள்ள நியாய வாதத்தையும் (logic) அறிந்துகொள்ள முடியும். ஒரு நல்ல அகராதி (dictionary)யினை வைத்துக்கொண்டு தினமும் படிக்கும் செய்தித்தாளில் இருந்தே 5 புதிய வார்த்தைகளை தினமும் கற்றுக்கொள்ளுங்கள். தேர்வு எழுதும் முன் சுமார் 2,000 புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு இன்னும் தெம்பாக தேர்வை எதிர்கொள்ளலாம். 

அடுத்த முக்கிய தலைப்பு, மென் திறன்கள். அதாவது, பிறருடன் பழகுவது, செயல்படுவது, தொடர்பில் இருக்கும் திறமை ஆகியவை (Interpersonal skills and communication). இதில் நம்மிடம் உள்ள கவனிக்கும் திறன், முடிவெடுக்கும் தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன், தன்முனைப்பு (Assertiveness ) மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் பாங்கு ஆகியவை முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன. பாடத்திட்டத்தில் communication என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தொலைதொடர்பு சார்ந்த கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.

உதாரண கேள்வி : 

# நவீன தொலைதொடர்பு முறைகளின் பயன்களை கிராமப்புற மக்களிடம் எடுத்துச் செல்ல, இவற்றில் எது சிறந்த முறை? 

கிராம அறிவு பரப்பு மையங்கள் (பதில்)

மலிவு விலை கைபேசி விநியோகம் 

கிராமிய சினிமாக்கள்

ஆங்கிலக் கல்வி 

அடுத்ததாக, நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தர்க்கரீதியான நியாயவாதம் (logical reasoning) மற்றும் பகுப்பாய்வுத் திறன் (Analytical Ability). இந்தத் தலைப்பில் இருந்து பலமுறை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குறியீடு மற்றும் குறிவிலக்கம் (Coding and Decoding), ஏற்பாடுகள், அமைப்புகள், மாற்றங்கள் சார்ந்த புதிர்கள், சில்லாஜிஸம்(syllogism) - அனைத்தும், எதுவும் இல்லா, சில நிலைகளையும், கொடுக்கப்பட்ட நிலைகளையும் வைத்து நியாயவாத அடிப்படையில் நாம் எடுக்கும் முடிவுகளைச் சோதிக்கும் கேள்விகள், ஏராளமாக அமையும். 

உதாரண கேள்வி:

#கூற்று : எந்தக் குரங்கும் சிறுத்தை இல்லை அனைத்து சிறுத்தைகளும் ஆமைகள் அனைத்து ஆமைகளும் நரிகள்

முடிவு : 

அனைத்து ஆமைகளும் குரங்குகளாக இருக்க முடியாது

அனைத்து குரங்குகளும் நிச்சயம் நரிகள்தான்

இவற்றில், முடிவு 1 மட்டும் கூற்றைப் பின்பற்றுகிறது (பதில்) 

முடிவு 2 மட்டும் கூற்றைப் பின்பற்றுகிறது

முடிவு 1 அல்லது 2 கூற்றைப் பின்பற்றலாம்

முடிவு 1 மற்றும் 2 ஆகியவை கூற்றைப் பின்பற்றுகின்றன.

விளக்கம் : அனைத்து ஆமைகளும் நரிகள் என்பது தெரியும். ஆக, அனைத்து ஆமைகளும் குரங்குகளாக இருக்க முடியாது (முடிவு-1 சரி) முடிவு- 2 குரங்குகள் சிறுத்தை இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், அனைத்து குரங்குகளும் நரிகளா என்பது நமக்குத் தெரியாது. ஆக, கொடுக்கப்பட்ட தகவலின்படி முடிவு 1 மட்டும்தான் கூற்றைப் பின்பற்றுகிறது. 

அதேபோல், உறவுகளை வைத்துத் தகவல்களைக் கொடுத்து உருவாக்கப்படும் புதிர்கள், விடுபட்ட சொல் / எண்/ படங்கள்/ குறியீடுகள் உள்ளிட்ட தொடர்களை நிரப்புதல் போன்ற கேள்விகளை இந்தப் பகுதியில் இருந்து எதிர்பார்க்கலாம். 

உதாரண கேள்வி ( UPSC 2016 ) 

# ஒரு ராணுவ குறியீட்டின்படி SYSTEM என்பது SYSMET என்றும், NEARER என்பது AENRER என்றும் குறிப்பிடப்படுகிறது. அதே குறியீட்டின் படி FRACTION என்னும் சொல் எப்படி குறிப்பிடப்படும் ? 

CARFTION

FRACNOIT

NOITCARF

CARFNOIT ( பதில் ) 

இதேபோல், பல தலைப்புகள் மற்றும் கேள்விகளுடன் அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.



Trending Articles

Sponsored