`விவசாயிகளோட வலிதான், பசுமை வழிச்சாலை படம்!' - இயக்குநர் சந்தோஷ் கோபால் பேட்டிSponsoredசேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட 91 சதவிகிதம் முடிந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். `இன்னும் 9  சதவிகிதமே பணிகள் உள்ளன' என அவர் கூறியுள்ளார். இத்திட்டத்துக்கு எதிராக ஐந்து மாவட்ட மக்கள் உணர்வுபூர்வமாகப் போராடி வருகிறார்கள். ஆனால், திட்டத்தைப் பற்றி யார் எதிர்க்கேள்வி எழுப்பினாலும், எழுதினாலும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தாலும் கைது என்கிற மனநிலையிலேயே அரசு இருந்து வருகிறது. தொடரும் இந்தக் கைது படலத்தால் பொதுமக்களிடையே அச்சம் உருவானாலும், ஒருபோதும் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என விவசாயிகள் உறுதிபடக் கூறியுள்ளனர். விவசாயிகளின் உணர்வுபோராட்டமாக மாறியுள்ள இத்திட்டம் குறித்து திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. `பசுமை வழிச் சாலை சேலம் - சென்னை' என்ற பெயரிலேயே அந்தத் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை சந்தோஷ் கோபால் என்பவர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்த சந்தோஷ், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் கோபாலிடம் பேசினோம். 

எப்படி இந்தப் பிரச்னையைப் படமா எடுக்கணும்னு தோணுச்சு?

Sponsored


சென்னை வெள்ளம் டைம்ல எல்லாருடனும் சேர்ந்து சில உதவிகளைச் செய்தோம். அப்ப ஏற்பட்ட பழக்கத்துல்ல நண்பர்களுடன் சேர்ந்து, தொடர்ந்து உதவிகளைச் செய்யணும்னு முடிவு செஞ்சோம். அப்ப எடுத்த முடிவுப்படி ட்ரெய்னிங் சென்டர் ஒன்றை சேலம் அரூர் அருகே நடத்திட்டு வர்றோம். அப்படி அந்த சென்டருக்குப் போனமுறை செல்லும்போது, பசுமை வழிச் சாலைக்காக அந்த சென்டர் அருகே அளந்துகொண்டிருந்தார்கள். ஒரு வரைமுறை என்பது இல்லாம, அங்கு அரசு நிலங்களை அளந்து வருகிறது. பள்ளிக்கூடம், கிணறு, வீடு, விவசாய நிலம் என எதைப் பத்தியும் கவலைப்படாம நிலத்தை அளக்கிறாங்க. இதைத் தாங்கமுடியாம அங்குள்ள விவசாய கிராமமே அழுதது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்க போராடுறாங்க. எந்தத் துயர் வந்தாலும் அதை எதிர்த்து தைரியமாப் போராடுறாங்க. இது என் மனச ரொம்ப பாதிச்சது. அதனால இதைத் திரைப்படமாக எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். 

Sponsored


படத்துல யார் எல்லாம் நடிக்கிறாங்க?

நடிகர்கள் பசுபதி மற்றும் கிஷோரை படத்துல நடிக்க ஒப்பந்தம் செஞ்சுருக்கோம். இதுபோக ஒரு முக்கிய வேடத்துல நாகர்ஜுனாவை நடிக்க பேச்சுவார்த்தை நடத்திட்டு வர்றோம். அவர்கிட்ட இது தொடர்பா பேசியிருக்கோம். அவரும் ஆர்வமா இருக்காரு. ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கிட்டு இருக்கும் நாகர்ஜுனா, இன்னும் ஓரிரு நாள்ல அவர் முடிவு என்னனு சொல்லிருவாரு. சத்வா புரொடக் ஷன்ஸ் தயாரிக்காங்க. ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். அதுபோக இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் இதுல நடிக்க வைக்கப்போறோம். ஏற்கெனவே, அங்கு நடந்த காட்சிகளை வெச்சு 20 சதவிகிதம் காட்சிகளைப் படமாக்கிட்டோம். 

முதல்ல ஜல்லிக்கட்டு, இப்போ பசுமை வழிச் சாலை திரைப்படம்னு தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை திரையில் காட்டுறீங்களே?

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. இத்திட்டம் ஆரம்பிச்சதுல இருந்து அங்கதான் இருக்கேன். அங்க நான் பார்த்த விவசாயிகளோட வலி, வேதனைதான் இந்தப் படத்தை எடுக்கணும்னு தோணுச்சு. அதனால்தான் இந்த முயற்சில ஈடுபட்டிருக்கேன். 

தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறதா சொல்றீங்க. அங்குள்ள மக்கள் இத்திட்டத்தை எப்படிப் பாக்குறாங்க? 

அரசாங்கம் பசுமை வழிச் சாலை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கல. அதுதான் உண்மை. அங்குள்ள மக்களுக்கு எதுக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்படுது ஒரு தெளிவு இல்லாம இருக்காங்க. அத யாராலும் கண்டுபிடிக்க முடியல. யாருக்காக, எதுக்காக இத்திட்டம் கொண்டுவர்றாங்கன்னு தெரியல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லுறாங்க. சாட்டிலைட் மூலமா நிலத்தை அளந்துட்டு இருக்காங்க. விவசாயிகளை அவங்க இடத்தைவிட்டு வேறு இடத்துக்குப் போய் வாழச் சொல்றாங்க. 50 லட்சத்தைக் கொடுத்து ஒரு தெரியாத இடத்துல போய், தெரியாத தொழில பண்ணிட்டு இருங்கனு சொன்னா, அது எப்படிப் பொருத்தமாகும். இந்த விஷயங்களை மையக் கருவா வெச்சு சில கற்பனைக் காட்சிகளுடன்  இந்தப் படத்தை எடுக்கப்போறேன்.

இந்தத் திட்டத்தைப் பற்றி யார் பேசினாலும், எழுதினாலும் கைது செய்யப்படுறாங்க. அப்படி இருக்க உங்களுக்கு ஏதும் பிரச்னை வரும்னு நினைக்கிறீங்களா?

இதுல ஏதும் என்னோட கருத்த நான் சொல்லப்போறது இல்ல. அங்கு நடக்குற விஷயங்களை, அங்குப் பாதிக்கப்படுற மக்களை மையமாக வைத்து, விவசாயிகளின் பார்வையிலிருந்துதான் இப்படத்தைச் சொல்லப்போறோம். யாருக்கு எதிராகவும் படம் எடுக்கல. நான் எந்த அமைப்புலயும் இல்லை. முழுக்க முழுக்க அப்பகுதி மக்களின் வலி, கஷ்டங்களையும், நான் கேட்ட தகவல்களை வைத்தே கதை எழுதியிருக்கேன். முக்கியமா இது ஒரு ஆவணப்படம் கிடையாது.Trending Articles

Sponsored