உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கரில் மட்டுமல்ல... தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளின் நிலை அவலம்தான்!Sponsoredமத்திய, மாநில அரசுகள், மக்களின் ஆரோக்கியம் காப்பதில் எந்த அளவுக்கு அலட்சியம் செலுத்துகின்றன என்பதற்கு உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் நடந்துள்ள துயரச் சம்பவமும், அடுத்த சில நாள்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த சம்பவமுமே உதாரணம்.  கோரக்பூரில் ஆகஸ்ட் 7 முதல் 11-ம் தேதி வரை மட்டும் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. அடுத்த சில நாள்களில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அத்தனையும் பிறந்து சில வாரங்களே ஆன பச்சிளம் குழந்தைகள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது என்றால், அதற்கு அரசின் நிர்வாகச் சீர்கேடுகள்தான் முன்னணிக் காரணங்களாக நம் முகத்தில் அடிக்கின்றன.

கோரக்பூரிலும் சரி, ராய்ப்பூரிலும் சரி, குழந்தைகளின் இறப்புக்குச் சொல்லப்படும் முக்கியக் காரணம் அந்த மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் உருளைகள் இல்லை என்பதுதான். 

Sponsored


Sponsored


கோரக்பூரில் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உருளைகள் விநியோகம் செய்துவந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ ரூ 70 லட்சம்வரை பல மாதங்களாகத் தரப்படாத காரணத்தால், அந்த நிறுவனம் ஆக்ஸிஜன் உருளைகள் வழங்குவதை நிறுத்திவிட்டது. மருத்துவமனை ஊழியர்களும் நிர்வாகமும் ஆக்ஸிஜன் உருளைகள் இல்லாத நிலைமையை அரசிடம் எடுத்துச்சென்று போராடியிருக்கின்றனர். என்றாலும், அரசு எந்திரம் அலட்சியமாகவே இருந்திருக்கிறது. 

பாக்கித்தொகை தரப்படாவிட்டால் ஆக்ஸிஜன் உருளைகள் விநியோகத்தைத் துப்புரவாக நிறுத்திவிடுவோம் என்ற எச்சரிக்கையையும் அந்த நிறுவனம் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதற்கும் செவிசாய்க்கவில்லை அரசு. 

மரணமடைந்துள்ள பெரும்பாலான குழந்தைகள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு, அதன் விளைவாக நுரையீரலில் அழற்சி உண்டாகி, சுவாசிக்க முடியாத அளவுக்குக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குத் தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட வேண்டிய நிர்பந்தம் இருந்து இருக்கிறது. 

இப்படிப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவும் ஆக்ஸிஜன் உருளைகள் வாங்குவதில் காலம் கடத்தியதால், பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. 

இது கோரக்பூரில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும், ஏன் ஒட்டு மொத்த இந்தியாவிலும் அரசு மருத்துவமனைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோரக்பூரில் நிகழ்ந்துள்ள துயரச் சம்பவத்துக்குக் கொஞ்சமும் குறையாத நிலைமைதான் தமிழ்நாட்டிலும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் உருளைகள் வழங்கும் நிறுவனங்களுக்குப் பணம் தருவதில் தாமதம் ஏற்படுவது சகஜமாக இருந்தது. இதற்கான பொறுப்பில் உள்ளவர்கள் தங்களை வளப்படுத்திக்கொள்வதில் அக்கறை காட்டிவிட்டு, அரசை நம்பியுள்ள நோயாளிகளின் நலனில் அக்கறை செலுத்த மறந்துவிடும் நிலைமை இங்கும் நிகழ்ந்துள்ளது. 

பல நேரங்களில் தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்தந்த மருத்துவமனை டீன்கள் தங்களுக்குப் பழக்கமான தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆக்ஸிஜன் உருளைகளை அரசு மருத்துவமனைகளுக்கு வரவழைத்தும், தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து ஆக்ஸிஜன் உருளைகளை வாங்கிக் கொடுத்தும் நிலைமையைச் சமாளித்த சம்பவங்கள் நிறைய உண்டு.

இப்போதும்கூட தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நிலைமை முழுவதுமாகச் சரியாகிவிட்டது என்று நம்பிக்கையுடன் சொல்வதற்கு இல்லை. அரசு மருத்துவமனைகளுக்குத் தமிழகத்தின் சுகாதாரத்துறை கொடுக்கும் நிதி ரொம்பவே குறைந்துவிட்டது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கும் நிதியிலிருந்துதான் ஆக்ஸிஜன் உருளைகள் வாங்குவது உள்ளிட்ட அவசர சிகிச்சை செலவுகளை மருத்துவமனை நிர்வாகத்தினர் வெளியில் சொல்லிக் கொள்ளாமல் சமாளிக்கின்றனர். 

ஆனால், இந்தக் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! இதன் நடைமுறைகளில் பல பிரச்னைகள் உள்ளன. படிப்பறிவு குறைந்த பாமர ஏழை நோயாளிகள்தான் அரசு மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்கு வருகின்றனர். பல சமயங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் கேட்கும் பலதரப்பட்ட ஆவணங்களை அவர்களால் கொடுக்கமுடியாமல் போகிறது. அப்போது காப்பீட்டுத்தொகை நிராகரிக்கப்படுவதும் உண்டு. ஏதாவது சாக்குப்போக்குக் காரணங்களைக் காட்டி காப்பீட்டுத்தொகை குறைக்கப்படுவதும் உண்டு. அப்போது அந்த ஏழை நோயாளிகளுக்கு முழுவதுமாக சிகிச்சை கொடுக்க முடியாத நிலைமை அரசு மருத்துவமனைகளில் உருவாகிறது. 

மருந்துப் பற்றாக்குறை, இடப் பற்றாக்குறை என்று ஏதாவது காரணம் காண்பித்து, சிகிச்சை முழுவதும் முடியும் முன்னரே, நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேற்றுவது உண்டு. அப்போது கையில் இருக்கும் சொத்து சுகங்களை விற்று பல ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இது இயலாத நோயாளிகள் இறக்கின்றனர். இந்த மரணங்கள் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. அரசின் புள்ளிவிவரக் கணக்கில் வருவதில்லை. அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நேரடியாக ஒதுக்கும் நிதி குறைக்கப்பட்டதும், காப்பீட்டு நிறுவனங்களின் நிதியை நம்பி அரசு மருத்துவமனைகள் நடத்தப்பட வேண்டிய சூழல் உருவானதும்தான் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படக் காரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு மருத்துவமனைகளுக்கு வருடத்துக்கு எத்தனை நோயாளிகள் வருகிறார்கள், என்ன மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது, என்னென்ன செலவுகள் அத்தியாவசியம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கேற்ப மருந்துகள் வழங்குவது, பணியாளர்கள் நியமிப்பது போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கிவந்தனர். இந்த நடைமுறையும் இப்போது இல்லை. மேலும் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு என்று ஒதுக்கப்படும் தமிழகத்தின் நேரடி நிதி பெரும்பாலான நேரங்களில் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படுவதும் உண்டு. அப்போது மருந்துப் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று நோயாளிகளுக்குத் தேவையானவை கிடைக்காமல் போவதும் உண்டு.

அடுத்து, மருத்துவமனைகளில் மூளைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவுக்கும் நோய்கள் பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும்போது, அவர்களைக் கவனித்து சிகிச்சை கொடுக்க வேண்டியது பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர்கள் (Neonatologists) மட்டுமே. மேல் நாடுகளில் இந்த நடைமுறையை  மிகச் சரியாகப் பின்பற்றுகின்றனர். அதனால்தான் அங்கு பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த கால் நூற்றாண்டுகளில் மிகவும் குறைந்து வருகிறது. 

ஆனால், இந்த சிறப்பு நிபுணர்களின் எண்ணிக்கை தமிழகத்திலும் சரி இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சரி அரசு மருத்துவமனைகளில் மிகவும் குறைவு. இவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்குப் பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர்கள் தமிழகத்தில் குறைவு. இங்கு குழந்தை மருத்துவ நிபுணர்கள்தான் (Pediatricians) பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளைக் கவனிக்கின்றனர். 

அதேவேளையில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர்கள் தேவையான அளவுக்கு உள்ளனர். இதனால்தான் மக்களுக்குத் தனியார் மருத்துவமனைகள் தருகிற நம்பிக்கையை அரசு மருத்துவமனகள் உருவாக்க முடியவில்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான எண்ணிக்கையில் பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர்களை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 38 குழந்தைகள் தங்கள் முதலாமாண்டு பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன்னரே இறந்து விடுகின்றன என்கிறது புள்ளிவிவரம். ஆனால், அந்த இறப்புகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகின்ற பச்சிளம் குழந்தை சிறப்பு நிபுணர்களை நியமிப்பதற்கான திட்டமோ, சட்டமோ இரு அரசுகளிடமும் இதுவரை ஏற்படவில்லை. இந்த நிலைமை நீடிக்குமானால், அரசாங்கமே தனியார் மருத்துவமனை செயல்பாடுகளை மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்றுதான் கருதவேண்டியது இருக்கும். 

மத்திய அரசு ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளை நிறுவுவதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டது. அதற்காகத் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசின் நிதியை வழங்குவதற்கும் தயாராகிவிட்டது. மத்திய அரசின் இந்த ஏற்பாடு இன்னும் சில வருடங்களில் மிகவும் மோசமான நிலைமையை ஏற்படுத்தும் என்பது மக்களுக்கு இப்போது புரியவில்லை. முக்கியமாக, ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு இன்றைக்கு உள்ள ஒரே வாழ்வாதாரம் அரசு மருத்துவமனைகள் மட்டுமே. அந்த உரிமையும் பறிபோகும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

கோரக்பூரில் குழந்தைகளை மரணக்குழிக்குள் தள்ளிய நோய்க்கு 'ஜப்பானிய மூளைக்காய்ச்சல்' என்று பெயர். 'இது எங்கேயோ உள்ள உத்தரப் பிரதேசத்தில்தானே  பரவி இருக்கிறது; நமக்கென்ன பயம்' என நினைக்க வேண்டாம். தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இந்தத் தொற்றுநோய் பரவி இருக்கிறது. இப்போது சுத்தமும் சுகாதாரமும் பெருமளவு கெட்டுப்போய்விட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போல் ஜப்பானிய மூளைக்காய்ச்சலும் நம் குழந்தைகளைத் தாக்கத் தொடங்கிவிட்டால், அதைச் சமாளிக்க தமிழக அரசு தயார்நிலையில் இருக்கிறதா எனக் கேட்டால் கேள்விக்குறியே!  அப்போது வழக்கமான வழிகளில் நோயாளிகளின் புள்ளிவிவரங்களை மறைத்தும், குறைத்தும் கூறி, தமிழகத்தில் இந்த மாதிரியான நோய்கள் இல்லவே இல்லை என்று பகிரங்கமாக அறிவிப்பதற்கும் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கும் நம் அரசுகள் அஞ்சாது. 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை கல்வியும் சுகாதாரமும்தான். இந்த இரண்டுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்றால், அல்லது ஒதுக்கப்பட்ட நிதி சரியாகப் பேணப்படவில்லை என்றால், நாட்டின் ஆரோக்கியச் சூழல் மட்டுமல்லாமல், பொருளாதாரச் சூழலும் படுபாதாளத்தில் விழுந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிய இந்தியா இயக்கம் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்து இருக்கும் நம் பிரதமர், தூய்மையான இந்தியா, ஏழைகள் இல்லாத இந்தியா, ஊழலற்ற இந்தியா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறார். ஆனால், செயலில் வரும்போது அவை எல்லாமே வாய்ப்பந்தல் என்றுதான் நாம் நினைக்கத் தோன்றுகிறது. இந்த ஆண்டில் சுகாதாரத்துக்காக அவர் ஒதுக்கி இருக்கும் நிதி சென்ற ஆண்டைவிட 1.2% குறைவு என்பதே இதற்கான ஆதாரம்.

அரசுகள் செய்ய வேண்டியது இதுதான்; ஆண்டுக்கு ஆண்டு பலதரப்பட்ட தொற்றுநோய்கள் இந்தியாவில் பரவி வருவது வழக்கமாகிவிட்டது. அவற்றை முறையாகக் கண்காணித்து, சுகாதாரத்துறையின் நிர்வாகச் சீர்கேடுகளைச் செம்மைப்படுத்தி, தேவையான நிதி ஒதுக்கி, இனி எந்த ஆண்டிலும் தொற்றுநோய்கள் பரவாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காலத்தோடு எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் அத்தியாவசியக் கடமைகள். இதைச் செய்ய மறுத்தால், அலட்சியமாக இருந்தால் அல்லது மறந்தால் இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி, சாமானிய ஏழை நோயாளிகள் அரசு மருத்துவமனைகளின்மீது நம்பிக்கை இழப்பது உறுதி. அரசு மருத்துவமனைகளைத் தனியார் மருத்துவமனைகளைவிட தரம் உயர்த்துவதற்கு எந்த ஏற்பாடும் மேற்கொள்ளாமல், தொடர்ந்து அவற்றைப் புறக்கணிக்கும் போக்கு நம் அரசுகளிடம் நீடிக்குமானால், அரசு மருத்துவமனைகள் மிகப்பெரும் பாதிப்பை அடையும் என்பது நிதர்சனம்!  Trending Articles

Sponsored