“முதல்வரை மாற்றினால், அண்ணன் அமைதி ஆகிவிடுவாரா..?” தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.Sponsored‘சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்க வேண்டும்’ என்று திவாகரன் கொடிபிடிக்க... ஜெயலலிதா பேரவையின், பவர்ஃபுல்லான செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்பில் மானாமதுரை எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியை நியமித்துள்ளார் டி.டி.வி.தினகரன்! இந்த இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், புதுவை ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியுடன் பேசினோம்.

“முதல்வரை மாற்றினால், டி.டி.வி.தினகரன் அமைதி ஆகிவிடுவாரா..?”

Sponsored


“அம்மா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பாதை மாறிப்போனால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவேதான், முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்தோம். மாண்புமிகு சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்கினால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வோம். அம்மாதான் அவரை இரண்டு முறை சபாநாயகர் ஆக்கினார். நான்கு முறை எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு கொடுத்தார். ஒரு தடவை அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறார். சட்டமன்றத்தில் தனபாலுக்கு தன்னை விட உயர்ந்த இருக்கையை அம்மா கொடுத்தார். திறமையான அவர் யாருக்கும் துரோகம் செய்யமாட்டார்; முதுகில் குத்தமாட்டார். அவர் அனைவருக்கும் பொதுவானவர்”.

Sponsored


“19 எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் முதல்வரை மாற்ற முடியும்..?”

“135 எம்.எல்.ஏ-க்களும் அம்மாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். அம்மா அடையாளம் காட்டியதால்தான் இன்று அவர்களுக்கு எம்.எல்.ஏ என்ற தகுதி கிடைத்துள்ளது. அம்மா இல்லை என்றால், இவர்கள் எல்லாம் சும்மா! அதை மறந்து விட்டு அதிகார போதையில் ஆட்டம் போடுகிறார்கள். முதல்வரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்த  எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல தெரியலாம். ஆனால், டி.டி.வி.தினகரன் மீது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் இப்போது ஓ.பி.எஸ் அணியிலும் இருக்கிறார்கள்; எடப்பாடி அணியிலும் இருக்கிறார்கள். நேரம் வரும்போது அவர்கள் வெளியே வருவார்கள்”.

“ஆளுநர் என்ன சொன்னார்..?”

“நல்லமுறையில் எங்களை வரவேற்றுப் பேசினார். வெற்றிவேல் எம்.எல்.ஏ-தான் மனு குறித்த விவரத்தை ஆளுநரிடம் தெரிவித்தார். 20 நிமிடம் எங்களிடம் பேசிய ஆளுநர், ‘நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். நாங்கள் கொடுத்தக் கடிதத்தை ஆளுநர்தான் பத்திரிகை மூலம் வெளியிட்டார்”.

“நீங்கள் டி.டி.வி தினகரனை ஆதரிப்பது ஏன்..?”

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்றி வழிநடத்த புரட்சித் தலைவி அம்மா கிடைத்தார். அதற்குப் பிறகு தியாகத்தலைவி சின்னம்மா கிடைத்துள்ளார். இப்போது அவரால், நேரடியாகக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. எனவே, துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன் கட்சியை வழிநடத்தி வருகிறார். அவர் நல்ல லீடர். இயற்கையிலேயே அவரிடம் உள்ள தலைமைப் பண்புதான் தொண்டர்களைச் சுண்டி  இழுக்கிறது. அதனால்தான் மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு லட்சக்கணக்கில் இளைஞர் படை திரண்டு வந்தது.

அந்தப் படை, துரோகிகளை துவம்சம் செய்வது நிச்சயம். அம்மாவின் லட்சியங்களை, கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு, எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து கிடைப்பதையெல்லாம் வாரிச் சுருட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த  ஆட்சியை, 'ஊழல் அரசு' என்று போராட்ட அறிவிப்பெல்லாம் வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம் இப்போது அதே எடப்பாடி அரசில் துணை முதல்வராகி கோட்டையில் உட்கார்ந்துவிட்டார்.''

“எடப்பாடி அணியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா..? உங்கள் அணியில் யாருடனும் பேசினார்களா..?”

“என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், சிலரிடம் பேச முயற்சி நடப்பதாக சொல்கிறார்கள். எட்டப்பன் வேலைக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகமாட்டோம்''.

“டி.டி.வி.தினகரன் கஸ்டடியில்தான் புதுவை சொகுசு விடுதியில் தங்கியிருக்கிறீர்களா..?”

“ரிலாக்ஸா இருக்கவே இங்கே வந்துள்ளோம். யாரும் எங்களை அடைத்துவைக்கவில்லை. சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகு  ஊருக்குத் திரும்பிவிடுவோம்”.

“சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுப்பீர்களா..?”

“கண்டிப்பாகக் கொடுப்போம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனபாலுக்கு அம்மாதான் சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கொடுத்தார். அவரை முதல்வராக்கும் எண்ணம்கூட அம்மாவுக்கு இருந்திருக்கலாம். அதனால்தான் தனபாலுக்கு உயர்ந்த பதவிகளைக் கொடுத்தார். இப்போது, முதல்வராக தனபால் ஆகவேண்டும் என்று விரும்புகிறோம்.”

“உங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் போனால் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா..?”

“அதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. பொறுத்திருந்து பாருங்கள்”.Trending Articles

Sponsored