ஒப்புக்கு அறிக்கைவிடவா விசாரணை ஆணையம்? - ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டுSponsoredஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் சூழல் குறித்து விசாரிக்கும் ராஜேஸ்வரன் ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதத்தில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. அதன் எதிரொலியாக தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஜனவரி 23ஆம் தேதியன்று பெரும் போலீஸ் படை கண்மூடித்தனமாகத் தாக்கியது. சென்னை, மதுரை, கோவையில் போலீசார் நடத்திய தாக்குதலில் போராட்டத்துக்குத் தொடர்பில்லாத அப்பாவி மக்களும் படுகாயம் அடைந்து பாதிக்கப்பட்டனர். இதில் போலீசாரின் அத்துமீறல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் பல்வேறு உரிமை அமைப்புகளும் தனித்தனியாக உண்மையறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக விசாரித்து, அவர்களின் வாக்குமூலங்களை வெளிக்கொண்டுவந்தன. 

Sponsored


போலீசாரின் அத்துமீறல், வன்முறை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் இந்த ஆணையம் விசாரித்து, அறிக்கை அளிக்கும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

Sponsored


இந்த விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டதால், மேலும் மூன்று மாதங்களுக்கு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என கடந்த மே 31 அன்று அறிவிக்கப்பட்டது. ஜூலை கடைசிவரை அதன் விசாரணை முடிவடையாமல் இழுத்துக்கொண்டே போனது. இரண்டாவது முறையாக மேலும் மூன்று மாதங்களுக்கு ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உரிமை ஆர்வலர்களிடம் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பாடகரும் சமூகச் செயற்பாட்டாளர் இசையரசுவிடம் இது குறித்துக் கேட்டோம். 

அப்போது,“ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதால்தான், இந்தப் பிரச்னை வந்தது. திருவல்லிக்கேணி நடுக்குப்பம், வெங்கட்டரங்கம் தெரு ஆகிய பகுதிகளில் மீனவர்களும் தலித் மக்களும், மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியில் தலித் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீஸ் துறையானது தனக்குக் கீழே உள்ள மக்களை எப்படி நடத்துகிறது என்பதற்கு இந்த வன்முறை ஒரு சாட்சி. இதில்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யவேண்டிய உடனடி நிவாரணத்திலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. நடுக்குப்பத்தில் எரிக்கப்பட்ட மீன்சந்தைக்குப் பதிலாக தற்காலிகமாக மாற்றுவசதி செய்துதரப்பட்டுள்ளது; நிரந்தரமான நிவாரணப் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பேத்கர் பாலம் பகுதியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. மூன்று ஆட்டோக்களுக்கு போலீசார் தீவைத்த காட்சியை எல்லாரும் பார்த்திருக்கமுடியும். அதற்கு நிவாரணம் வழங்கியதாகத் தகவல் இல்லை. அதற்கான ஆவணங்கள் இல்லாமல் நிவாரணம் கோருவதே சிக்கலானது. ஆட்டோவை எரித்தவர்கள் ஆவணத்தையும் எரித்திருந்தால் என்ன செய்யமுடியும்? பலருடைய வீட்டுக் கதவுகள், ஜன்னல்கள், வீட்டுப்பொருட்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரூதர்புரத்தில் பெண்களின் மண்டை உடைக்கப்பட்டது. அவர்களுக்கு இதுவரை எந்த தற்காலிக இழப்பீடும் இல்லை. அன்றாடம் கூலி வேலைக்குப் போய்தான் உணவுக்கு வழிசெய்ய வேண்டியநிலையில் இருப்பவர்கள், சேதாரத்தால் உண்டான இழப்பை எப்படி சரிசெய்துகொள்ளமுடியும்? அரசும் ஆணையமும் கேட்கும் ஆவணங்களைப் பெறவே பல நாள் பிழைப்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை நீடித்துக்கொண்டே இருந்தால், எப்போது நீதியும் நிவாரணமும் பெறுவது? இது ஒரு தாக்குதல்; இதிலே மட்டும்தான் இப்படி என்பதில்லை. மேலவளவு முருகேசன் முதல் உடுமலை சங்கர்வரை தலித் மக்களின் படுகொலைகளிலும்கூட இந்த தாமதமே கடைப்பிடிக்கப்படுகிறது. கொடூரமான விசயங்களையும் ஆறப்போட்டு காலங்கழித்து ஒப்புக்குச் சப்பாக அறிக்கைவிடுவது இதிலும் நடந்துவிடக்கூடாது” என அழுத்தமாகச் சொன்னார், இசையரசு. 

தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது உண்மையாகிவிடக்கூடாது!Trending Articles

Sponsored