ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி....பேரறிவாளனைப் பரோலில் மீட்ட அற்புதம்மாளின் போராட்டப் பயணம்!Sponsoredள்ளிரவு என்றாலும் பரபரப்பு குறையாத சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். நைந்துபோன சேலை, தோளில் ஒரு ஜோல்னா பை, கையில் கசங்கிப்போயிருந்த கைக்குட்டையோடு அந்தத் தாய், ரயில் நிலையத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்திருந்தார். பெண்களுக்கு மாதந்தோறும் இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றத்தை, சட்டென்று அத்தருணம் சந்திக்கிறார். உதிரம் போகிறது... உடல் தளர்கிறது. எங்கு திரும்பினாலும் பெரும்பாலும் ஆண்களே சூழ்ந்திருக்கும் புறம். மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சூழலியல் இடர்களை அவர் கொஞ்சம் கூடுதலாகவே அடைந்தார்.  'உங்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் எங்களுக்கும் பிரச்னை வரும்' என்று ஏற்கெனவே சென்னை உறவுகள் புறக்கணித்திருந்ததால், வைராக்கியத்தோடு உறவுகள் வீடுகளுக்குச் செல்லவும் துணியவில்லை. சாதி, ரத்த உறவுகள் எல்லாம் தங்களின் சுயநலனிலிருந்தே கட்டப்பட்டது என்பதை அறியாதவர் அல்ல அந்தக் 'கறுப்பு' சிந்தனைத் தாய்.

சிக்கல்களைப் பொறுத்துக்கொள்ள முயல்கிறார். மனம் வைராக்கியத்தோடு இருந்தாலும், அதை உடல் அறியும் என்று சொல்ல இயலாதே. உதிரப்போக்கு நிற்கவில்லை. அங்கேயிருந்த பொதுக் கழிப்பிடத்துக்குள் நுழைகிறார். இந்தியக் கழிப்பிடங்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனுள் நுழைந்து, தனது கைக்குட்டையால் தமது உதிரத்தைத் துடைத்துக்கொண்டார். சில மணி நேரத்துக்கு ஒருமுறை, இவ்வாறு பொதுக் கழிப்பிடம் சென்று திரும்பினார். 'ஓர் அபலைத் தாயின் துயரம் கண்டு உதவ வழியில்லையே' என்று கருதியோ என்னவோ, கலங்கிப்போய் மழையைப் பொழிந்தது வானம். வலி நிறைந்த இரவு கடந்து, வெளிச்சக் கீற்றுகள் விழத் தொடங்கின. பொழுது புலர, மறுநாள் காலை தமது மகனைக் காண சிறைச்சாலை நோக்கி விரைகிறார் அந்த அன்புத்தாய்.

அங்கே, ''ஏனம்மா தாமதம்'' எனச் சிறை கம்பிகளுக்குள் சிக்கியிருந்த சேய்ப் பறவை கேள்வி கேட்க, மௌனத்தையே பதிலாக தருகிறார் தாய்ப்பறவை. 'தன் துயர் தெரிந்தால் துடிப்பானே' என்ற காரணம். மீண்டும் மகன், ''ஏனம்மா என்னைப் பார்க்க உனக்கும் பிரியமில்லையா'' என்கிறார் ஒரு குழந்தையின் கோவித்தலாக. ''என்ன வார்த்தையடா கேட்டுவிட்டாய்ச் செல்ல மகனே'' என்றபடியே தமக்கு ஏற்பட்ட இடர்களைப் பகிர்கிறார் அந்தத் தாய். ''அச்சோ அம்மா, எனக்காக இப்படியாம்மா கஷ்டப்படுவாய்... வேண்டாம்மா உனக்கு இனி கஷ்டம் வேண்டாம்மா. என் வாழ்க்கையை நான் சிறையிலேயே கழித்துவிடுகிறேன்" கதறுகிறார் மகன். ''செல்லக் குழந்தையே, இதெல்லாம் எனக்கொரு பொருட்டல்ல. உனக்காக எதையும் கடப்பேன். உன்னை வெளியே கொண்டுவருவதே எமது லட்சியம். கவலைகொள்ளாதே செல்ல மகனே.... காலம் உண்டு" என நம்பிக்கை உதிர்கிறார் தாய். கம்பிகளுக்கிடையில் ஓர் உருக்கமான கவிதையைப்போல் கடக்கிறது காட்சி.

காலங்கள் உருள்கின்றன. செல்லத்தாயின் நம்பிக்கை வீண்போகவில்லை. இதோ, 26 ஆண்டுகளாகச் சிறைக்குள் சுழன்ற அன்பு மகன் பேரறிவாளனை, ஒருமாத பரோலில் மீட்டு வந்துள்ளார் போராளித் தாய் அற்புதம்மாள்.

தமிழர்களுக்கான இனிப்பாக, நெஞ்சமெல்லாம் தித்திக்க, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு, தாம் பிறந்து வளர்ந்த இல்லத்துக்குள் காலடிவைக்கிறார் பேரறிவாளன். அவரின் சுவாசம் பட்டதும் வாசலில் மாட்டப்பட்ட 'பேரறிவாளன் இல்லம்' என்ற பதாகை சிலிர்த்து உயிர்பெற்றது. 26 ஆண்டுகளாகச் சோகம் ஏறிய இருண்ட இல்லமாகக் காணப்பட்ட 'பேரறிவாளன் இல்லம்' முதல் முறை மகிழ்ச்சியின் சுவாசத்தை நுகர்ந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை அறிவிப்பு வெளியாகி, இறுதி நேரத்தில் அது பொய்த்துப்போன சோகம் இருந்ததாலோ என்னவோ, நம்பிக்கையற்றே காணப்பட்டார் அற்புதம்மாள். நேரில், தமது இல்லத்தில் மகனைக் கண்ட அந்தக் கணம், உலக இயக்கமே நின்றுபோன மௌன நிசப்தம். இது கனவல்ல, நிஜம் என்பதை உணர்ந்தார். மகனின் ஏக்க விழிகளை, தாயின் கலங்கிய விழி உள்வாங்கியது. நான்கு விழிகளும் கசிந்து அன்பைப் பகிர, மைக்ரோ வினாடி இடைவெளிக்குப் பிறகு கட்டியணைத்து முத்தங்களால் மகனுக்கு அபிஷேகம் செய்கிறார் அற்புதம்மாள். 

Sponsored


Sponsored


தாய்க்கும், மகனுக்குமிடையிலான உருக்கமான சங்கீதமாக இக்காட்சிகள் இசைத்தன. தொடர்ச்சியாகத் தமது இல்லத்தைச் சுற்றிப் பார்க்கிறார் பேரறிவாளன். தான் விளையாடிய அறைகள், படுத்துறங்கிய சில்லிடும் தரை அனைத்தையும் தழுவுகிறார். நோயுற்ற தந்தைக்கு அன்பு முத்தமிடுகிறார். அன்பும், மகிழ்வுமாக இரவு கழிகிறது.

அடுத்தநாள் காலை, சுற்றம் முற்ற உறவுகள், தமிழ் நெஞ்சங்கள் பேரறிவாளனைச் சந்திக்க, 'பேரறிவாளன் இல்லத்தில்' குழுமத் தொடங்கினர். பத்திரிகை, ஊடகங்களில் மற்றும் யாரிடமும்  பேச, பேரறிவாளனுக்கு, காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால், கண்களாலேயே நல விசாரிப்புகள் தொடர்ந்தன. உணர்வைப் பிழியும் காட்சி மொழி, இதயங்களுக்கிடையில் கடத்தப்படுகிறது. இல்லத்தின் வாசலில் அன்பொழுக, மகன் வந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருந்தார் அற்புதம்மாள். அங்கே குழுமிய தமிழ் நெஞ்சங்களோ "மகனை மீட்க, அம்மா பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல. காவல் துறை அச்சுறுத்தல் போன்றவைக்குப் பயந்து தொடக்கக் காலகட்டத்திலேயே பல உறவினர்கள் அம்மா குடும்பத்தைப் புறக்கணித் தொடங்கினர். ஒருசில உறவினர்களும், எங்கும் நிறைந்திருக்கும் தமிழ் நெஞ்சங்கள்

மட்டுமே அற்புதம்மாளுக்கு ஆறுதல். அவரின் போராட்டம் சாதாரணமானதல்ல. ஒருமுறை சிறையில் உள்ள தனது மகனிடம், ''கழிவறை எங்கே இருக்கிறது'' என்று கேட்கிறார் அற்புதம்மாள். ‘'அம்மா, அதெல்லாம் வேண்டாம்மா... நீங்க கிளம்புங்க’' என்கிறார் பேரறிவாளன். ‘'பரவாயில்லை. நான் பார்த்துக்கிறேன்'' என்று கழிவறைக்குச் செல்லும் அம்மா, அதிர்ச்சியடைகிறார். திறந்தவெளியில் கழிப்பிடம் இருக்க, சுற்றிக் காவலர்கள் காவலுக்கு நிற்கின்றனர். அற்புதம்மாளின்  நினைவுகள் கடந்தகாலத்துக்குச் செல்கின்றன. சின்னவயதில் குளித்துவிட்டு வந்த மகனுக்கு கால்சட்டை அணிவிக்கச் செல்கிறார் தாய். ‘'அம்மா, நீங்க கண்ணை மூடுங்க... அப்போதான் போட்டுப்பேன்’' எனக் கைத்துண்டால் தன்னை மறைத்துக்கொள்கிறார். '‘டேய், நான் உன் அம்மாடா'’ என்கிறார் இவர். '‘பரவாயில்லம்மா, நீங்கள் கண்ணை மூடுங்க’' மீண்டும்கூற, அதைச் சிரித்தபடியே ஏற்றுக்கொண்ட தாய் கண்களை மூடிக்கொள்கிறார். மகனும் கால்சட்டை அணிந்துகொள்கிறார்.

இப்படிச் சின்ன வயதிலேயே வெட்கப்படும், கூச்சப்படும் தன் மகனை இன்று இயற்கையான விஷயங்களில் ஈடுபடும்போதுகூடச் சுற்றிலும் கண்காணிக்கிறார்களே எனக் குமுறி அழுகிறார் அற்புதம்மாள். இவையெல்லாம் பழ.நெடுமாறன் மகள் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு' நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது வெளியானது 2005-ம் ஆண்டில். அதன்பிறகு 12 ஆண்டுகளும் மகனை மீட்கும் அற்புதம்மாள் போராட்டப் பயணம் சோதனைத் தடைகளோடுதான் பயணித்தது. ''அத்தனை தடைகளையும், தமது விடாமுயற்சியால் உடைத்து வென்று இன்று பரோலில் மகனை மீட்டுள்ளார் அற்புதம் அம்மா'' என்கின்றனர் இன்றைய தமிழ்நெஞ்சங்கள்.

இடைக்கால இளைப்பாறலாகப் பேரறிவாளனுக்குக் கிடைத்த பரோல் மகிழ்ச்சியைக் கொடுக்க, அங்கே இருந்த அற்புதம்மாள், "ஒரு சின்ன விசாரணைனு 19 வயசுல கூட்டிட்டுப் போனாங்க. அவன் இளமை எல்லாம் போய்  27 வருஷம் கடந்து வந்திருக்கிறான். குழந்தைகளா இருந்தப்போ இந்த வீட்டுல எல்லோரும் ஒண்ணா இருந்தோம். 27 வருஷம் கழிச்சு இப்போ அது மீண்டும் நடந்திருக்கு.  அவனுக்கு திருமணம் முடிக்கணும்னு எனக்கு ஆசையிருக்கு. இன்னைக்குப் போலவே என் குழந்தைங்களோட ஒண்ணா இருக்கணும்னு ஆசைப்படுறேன். இது நிரந்தரமா நடக்கணும். எங்ககூடவே என் மகன்  நிரந்தரமா இருக்கணும். அதுக்கு வழி பொறக்கணும்" என்றார் கண்ணீரோடு.

அம்மா சிந்திய ரத்தமும், கண்ணீரும் வீண்போகாது. Trending Articles

Sponsored