“தினகரன் அணிக்கு வரும் 20 பேரை மிரட்டவே நோட்டீஸ்” - தங்கதமிழ்செல்வன்Sponsored“அரசியல் மாற்றம் என்பது நல்லதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான்..." என்றார் தந்தை பெரியார். அதுபோன்ற மாற்றங்கள்தான், தற்போது தமிழக அரசியல்களத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். இப்போது எடப்பாடியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்து விட்ட நிலையில், ஓ.பி.எஸ். துணை முதல்வராக உள்ள அரசில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்களை போராடி வருகிறார்கள். அன்று கூவத்தூர் சொகுசு விடுதி... இன்று புதுச்சேரி ரிசார்ட்...

எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன. இப்போது, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், ஆட்கள் மட்டுமே இப்போது மாறியுள்ளனர். ஆனால், அதே காட்சிகள் மீண்டும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, பெரியார் குறிப்பிட்ட அரசியல் கழிசடை இதுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Sponsored


Sponsored


டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் எனவும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரி தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், 'அவர்கள் 19 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' என அரசு கொறடா ராஜேந்திரன், சட்டசபை சபாநாயகர் ப. தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில், "எம்.எல்.ஏ-க்களின் இந்தச் செயல் கட்சி விரோத நடவடிக்கையாகும். கொறடா அனுமதி இல்லாமல், ஆளுநரை தன்னிச்சையாக உறுப்பினர்கள் சந்தித்து இருப்பது, தங்களை தானாகவே விடுவித்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகும் செயல். எனவே, இந்த 19 எம்.எல்.ஏ-க்களையும் அரசமைப்புச் சட்டம் 10-வது அட்டவணைப்படி, 1986-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுதல் தகுதியின்மை குழு, பேரவை விதி 6-ன் படி தகுதியின்மை செய்யவேண்டும்" குறிப்பிட்டுள்ளார். இந்தப் பரிந்துரைக் கடிதத்தை ஏற்று, சபாநாயகர் தனபால் 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சிக்கு எதிராக நடந்துள்ளதால் ஏன் உங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது? என்றும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசினோம். "தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. எனவே, முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்கிறோம்.மேலும், அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்றுதான் கடிதம் கொடுத்துள்ளோம். அ.தி.மு.க-வில் இருந்து வேறுகட்சிக்குத் தாவி ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று கூறவில்லை. அப்படி இருக்கும்போது, எங்களுக்கு சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸ் எங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. தவிர, 

சட்டசபைக்குள் மட்டுமே கொறடா உத்தரவு செல்லும். பேரவைக்குவெளியே எங்களுடைய நடவடிக்கைளை கட்டுபடுத்துவது அவருடைய வேலை இல்லை. நாங்கள் தி.மு.க-விலோ அல்லது காங்கிரஸ் கட்சியிலோ சேர்ந்தோம் என்றால், பேரவைக்கு வெளியே எங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொறடாவுக்கு இருக்கிறது. நாங்கள் வேறு கட்சியை ஆதரித்தால்தான், எங்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். 

சின்னம்மாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 132 வாக்குகள் விழுந்திருக்க வேண்டும். ஆனால், 122 வாக்குகள்தான் பதிவானது. அதற்குக் காரணம், தி.மு.க-வுடன் சேர்ந்து இந்த அரசை கவிழ்க்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டார். கட்சிக்கும், ஆட்சிக்கும் விரோதமாகச் செயல்பட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று, நம்பிக்கை வாக்கெடுப்பினபோது பேரவையின் ஜனநாயக மாண்பைக் குழிந்தோண்டி புதைத்தனர் தி.மு.க-வினர். அவ்வாறு சட்டசபை விதிகளை மீறி செயல்பட்ட தி.மு.க-வினருக்கு கொடுக்கப்பட்ட நோட்டீஸ் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, விதிகளை மீறி செயல்பட்டவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்கட்டும். பிறகு எங்களிடம் சபாநாயகர் வர வேண்டும். நாங்கள் அனைத்தையும் சட்ட ரீதியாகவே செய்து கொண்டிருக்கிறோம். அதனால், நாங்கள் எந்த விளக்கத்தையும் கொடுக்கப்போவதில்லை. இதில் கொறடாதான் சட்டத்திற்கு எதிராக நடந்துள்ளார். உதாரணமாக, எடியூரப்பாவிற்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் 14 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரினர். எங்கே எடியுரப்பாவிற்கு எதிராகப் போய் விடுமோ என்று அந்த 14 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து அந்த 14 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்திற்குச் சென்றனர். ஆனால், அதனை  நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு போனது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, 'தனிப்பட்ட உறுப்பினர் ஒருவர் தன்னுடைய முதல்வரை மாற்றக்கோரும் அதிகாரம் உள்ளது. எனவே, அவர்களை நீக்கியது செல்லாது' என உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை மேற்கோள்காட்டியே நாங்கள் ஆளுநருக்குக் கடிதம் கொடுத்துள்ளோம். அதனால் நீதிமன்ற உத்தரவை மீறிய கொறடா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உள்ளோம். அவருடைய பதவியைக் காலி செய்வோம். இந்த நோட்டீஸ் அனுப்பியது எங்களைப் பயமுறுத்த அல்ல. டி.டி.வி தினகரன் அணிக்கு மேலும் வரவிருக்கும் 20 பேரை தடுத்து நிறுத்துவதற்காகத்தான்" என்றார்.

அரசியலில் மாற்றம் நிகழலாம்; அரசியலே அசிங்கமாகும் அளவிலான மாற்றம் நிகழக்கூடாது!Trending Articles

Sponsored