பன்னீர் அணியில் பதவிச் சண்டை..! அ.தி.மு.க-வில் அடுத்த சிக்கல் #HallOfShameADMKSponsoredதர்மயுத்தத்தை முடித்து இரு அணிகளின் இணைப்புகளையும் வெற்றிகரமாக்கி அ.தி.மு.க பொதுக்குழு (அம்மா - புரட்சித்தலைவி அணிகள்) நடத்தும் தேதி குறிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைப்புக்கு முன் இருந்த முட்டல் மோதல் இப்போதும் அதிகரித்துள்ளது.

முதல்வர் பதவி, மூன்று பேருக்கு அமைச்சர் பதவி, டெல்லி பிரதிநிதி, வாரியத் தலைவர்கள் என்று பல கனவுகளோடு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது துணை முதல்வர் பதவியோடு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி. மேலும்,  நிதி மற்றும் வீட்டுவசதித் துறைகளின் அமைச்சர் பதவிகளும் கிடைத்தன. இந்த நிலையில், பன்னீர்செல்வம் அணியினர் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த பொதுப்பணித் துறை கிடைக்கவில்லை. மாஃபா பாண்டியராஜனுக்குக் கேட்ட பள்ளி கல்வித் துறையை ஒதுக்காமல், தமிழ் வளர்ச்சித் துறையை ஒதுக்கினர் எடப்பாடி அணியினர். செம்மலை, எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்று கைவிரித்துவிட்டார்கள். அதனால் இருவருமே அதிருப்தியில் உள்ளனர்.

Sponsored


Sponsored


எனவேதான், இரு அணிகளின் இணைப்பு நிகழ்ச்சிக்கு ராயப்பேட்டை கட்சி அலுவலகத்துக்கு வந்த செம்மலையும் எஸ்.பி.சண்முகநாதனும் துணை முதல்வராகப் பன்னீர்செல்வம் பதவி ஏற்ற விழாவுக்கு வராமல் புறக்கணித்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ-க்களாக இல்லாத கே.பி.முனுசாமி, பொன்னையன், மனோஜ் பாண்டியன், கோவை கே.சி.பழனிசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், கே.ஏ.கே.முகில் போன்றவர்கள், தங்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அதில், கே.பி.முனுசாமிக்கு மட்டும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பொறுப்பு கொடுத்துள்ளனர். வேறு யாருக்கும் எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு இடையே டெல்லியில் லாபி செய்துவரும் டாக்டர் மைத்ரேயன் எம்.பி-யும் தனக்கு கட்சியில் ஏதேனும் முக்கியப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நேற்று நடந்த கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். அந்தக் குழுவிலாவது தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று பன்னீர்செல்வம் அணியில் சிலர் எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். அதுவும் நடக்காமல் போய்விட்டது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி அணியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் பன்னீர்செல்வம் டீம். இப்போது எடப்பாடி அணியோடு இணைந்தாலும் லோக்கல் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் தங்களை மதிக்கவில்லை என்ற புகார், இப்போது பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்துகொண்டு இருக்கிறது. தனி அணியாக இருந்தபோது இஷ்டப்படி கட்சிப் பணிகளைச் செய்ய முடிந்தது; ஆனால், இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு எதற்கெடுத்தாலும் லோக்கல் அமைச்சர்களை, மாவட்டச் செயலாளர்களைக் கேட்டுத்தான் செய்ய வேண்டி இருக்கிறது என்று நொந்துகொண்டிருக்கிறார்கள். 

தன்னிடம் புகார் வாசிப்பவர்களிடம் பன்னீர்செல்வம், “பொதுக்குழு முடியும்வரை பொறுத்திருங்கள். அதற்குள் வழிகாட்டும் குழு போட்டுவிடலாம். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவோம். அதில், அமைச்சர்களையும் கலந்துகொள்ளச் செய்து அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்து ஒரு முடிவு எடுக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார். எனவே, இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிகரித்துவரும் முட்டல் மோதல்களை எடப்பாடியும் பன்னீரும் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவில்லை என்றால், அணிகள் மாறுவதைத் தவிர்க்க முடியாது என்று அவர்களின் ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்த பதவிச் சண்டை விஷயங்களைக் கேள்விப்பட்டு டி.டி.வி.தினகரன் டீம் உற்சாகமடைந்துள்ளது.Trending Articles

Sponsored