'இங்கே டாக்டர் சர்ட்டிஃபிகேட் விற்கப்படும்.!’ - கூவி விற்ற கும்பல்Sponsoredசுமை நிறைந்த அந்தக் கிராமத்துக்குள் நுழைகிறது நகர சகதியெல்லாம் கடந்து வந்த அந்தக் கார். தூரத்தில் தென்பட்ட ஒரு பாரம்பர்ய மருத்துவக் குடிலை நோக்கி நகர்ந்து சென்று நிற்கிறது. காருக்குள்ளிருந்து இறங்கும் இருவர், அந்தக் குடிலின் உள்ளே நுழைகிறார்கள். அங்கே, இயற்கை  மருந்துவம்  மற்றும் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கும் அப்பாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் மகனை தனியே அழைக்கின்றனர். "அப்பாகூட இருந்ததால தொழிலைக் கத்துகிட்ட, நல்லது. எவ்வளவு நாள்தான் இப்படி உதவி செஞ்சுக்கிட்டே இருப்ப. நீயும் டாக்டர் ஆக வேண்டாமா ?" என அவர்கள் கேட்க, "டாக்டர் ஆகணும்னா படிச்சு சர்டிபிகேட் வாங்கணுமே" என்கிறார் மகன். 'தூண்டிலில் சிக்கியது மீன்' என்ற துள்ளலோடு, ''கவலையை விடு. அதுக்குத்தானே  நாங்க இருக்கோம். கொஞ்சம் செலவாகும். அவ்ளோதான். சர்டிபிகேட் நாங்க ரெடி பண்ணித்  தரோம். பணத்தை நீ ரெடி பண்ணு தம்பி" என்றபடியே காருக்கு திரும்புகின்றனர் இருவரும். ஓரிரு நாளில் ஒரு குறிப்பிட்டத் தொகை இருவருக்கும் கைமாற, தற்போது அந்தக் கிராமத்தின் மருத்துவக் குடிலில் மாட்டப்பட்ட அடையாள பெயர்ப் பலகையில், மகனின் பெயரோடு, 'ஹோமியோபதி டாக்டர்' என்ற பட்டமும் இணைந்துள்ளது.

 

இப்படியாக தமிழ்நாடு முழுக்க, கிராமம் கிராமமாக காரில் பயணித்து, ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்த கும்பலைச் சுற்றி வளைத்துள்ளது சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதன் அமைத்த காக்கி  டீம். போலி ஹோமியோ மருத்துவராக வலம் வந்த தஞ்சாவூர் பாலகிருஷ்ணன், கோவை ரவிக்குமார், கடலூர் வேல்முருகன், திருப்பூர் ஸ்ரீதரன், தேனி அனில்குமார், மதுரை குமரன் என 6 பேரை முதற்கட்டமாக கைதுசெய்துள்ளது காக்கி டீம். விசாரணையின்போது இவர்கள் கொட்டிய தகவல்கள் ஒவ்வொன்றும் பகீர் ரகம்...

Sponsored


"தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் என்பது 'homeopathy system of medicine and practioner of homeopathy  act 1971' என்ற சட்டத்தின் கீழ் இயங்குகிறது. இங்கு பதிவு செய்யப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஹோமியோ மருத்துவர்களாக மருத்துவம் பார்க்க முடியும். இதில் பதிவுசெய்து முறையாக மருத்துவத் தொழில் செய்துவந்த மருத்துவர்களில், இறந்துபோனவர்களின் பதிவு எண்களை வேறொரு பெயருக்கு மாற்றிக்கொடுத்துள்ளது தரகு கும்பல். இந்த மோசடிக் கும்பலிடம் பணம் கொடுத்துப் பெற்ற இந்தப் பதிவு எண்ணை வைத்துக்கொண்டு மருத்துவம் என்ற பெயரில், மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் பலர்.  தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் பதிவாளர் ராஜசேகரன் கொடுத்த புகாருக்குப் பிறகே இவர்களை வளைத்துப் பிடித்தோம். சில முக்கியமான தரகு கும்பலைத் தேடி வருகிறோம்" என்றது காக்கி விசாரணை டீம்.

Sponsored


ஹோமியோபதி மருத்துவச் சான்றிதழ் பின்னுள்ள சட்ட விரோதங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் முன்னாள் பதிவாளர் டாக்டர் ஞானசம்பந்தமிடம் பேசினோம்.

"ஹோமியோபதி மருத்துவர்களுக்கான பதிவு, 3 க்ளாஸாக பிரிக்கப்பட்டுள்ளன. நேரடியாக கல்லூரி முடித்துவிட்டு பதிவு செய்பவர்கள் 'ஏ' க்ளாஸ். 10 ஆண்டுகள் பயிற்சிசெய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெறுபவர்கள் 'பி ' க்ளாஸ். இதுதவிர, 4 ஆண்டுகள் ஹோமியோ மருத்துவ அனுபவம் உள்ளவர்கள் அதன்பின் இதற்கென தனியாக ஒரு கோர்ஸ் படித்துமுடிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுக்காகவே நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டரிடம் ஒப்புதல் பெறவேண்டும். இவர்கள் 'சி' க்ளாஸ் பிரிவில் வருவார்கள்.  இவ்வாறு பதிவு

செய்தவர்களில்  'பி' மற்றும் 'சி' க்ளாஸில்  மட்டும் 15,176 மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 4-5-1976-க்குப்  பிறகு இப்பதிவு தொடரவில்லை. இவர்கள் உயிருடன் உள்ளார்களா? மருத்துவம் பார்க்கிறார்களா? என்று சரிபார்ப்பது கவுன்சில் மற்றும் கலெக்டரின் பணியாகும். தொடக்கத்தில் முறையாக நடந்த இவைகள் காலப்போக்கில் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. அதனால்தான் தற்போது இத்துறை முறைகேடுகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. ஏற்கெனவே முறைப்படி பதிவுசெய்திருந்த ஹோமியோபதி மருத்துவர்கள் பலர் காலமாகிவிட்டனர். அவர்களைப் பட்டியல் எடுத்து, ஓரளவுக்குப் பெயர் இணைந்து போகிறவர்களுக்கு போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளனர். உதாரணமாக கே.சி ஸ்ரீதரன் என்பவரின் பதிவு எண்ணை, எஸ்.ஸ்ரீதரன் என்பவருக்கு மாற்றி விற்றுள்ளனர். இப்படி மாற்றிக் கொடுப்பதற்கு மட்டும் ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை விலை பேசியுள்ளனர். எங்கள் கண்டுபிடிப்பில், இப்படிப் பதிவு எண் மாற்றிக்கொடுக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை மட்டும் 40 ஆகும். இந்த சட்டவிரோத செயல்களில் மேலிடம் வரை தொடர்பு இருக்கிறது. முன்னாள் பதிவாளர் சவுந்தரராஜன், தலைவர் ஹானிமன், உறுப்பினர்கள் ரங்கசாமி, பரமேஸ்வரன் நம்பியார் ஆகியோருக்கு இந்தத் தவறில் தொடர்பிருக்கிறது. அவர்களை விசாரிக்க வேண்டும்." என்றார் ஆக்ரோஷமாக.

இவர் கொடுத்த புகாரின் பேரில், போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாம் ஹானிமன், சவுந்தரராஜன் தரப்பில் பேச முயற்சித்தோம். இயலவில்லை. (எப்போது பேசினாலும் அவர்கள் கருத்தைப் பதிவு செய்ய தயாராக உள்ளோம்.) அதேநேரம் அவர்களுக்கு ஆதரவாக, ஞானசம்பந்தம் மீது குற்றம்சாட்டி துண்டறிக்கை ஒன்று ஹோமியோபதி மருத்துவர்களிடம் சுற்றுகிறது. அதில், "ஹோமியோபதியை வளர்ப்பதாகக் கூறி, ஊடகத்தில், கலர் கலராய் பொய்கள் சொல்லி  தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் ஞானசம்பந்தம். 'பி ' க்ளாஸ் பதிவுபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் குறிப்பிட்ட 40 பேர் மட்டுமே போலிகள் என்பதை அடையாளம் காட்ட முடிகிறது என்றால், இதில் களவுத்தனம் செய்தவர் யார் என்று நீங்களே புரிந்துகொள்ளுங்கள். உண்மையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர் ஞானசம்பந்தம்தான். ஆனால், தற்போது புகாருக்கு உள்ளானவர்கள் மற்றும் ஹானிமன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் எதிலும் சம்பந்தமில்லாதவர்கள்" என்கிற ரீதியில் செல்கிறது துண்டறிக்கைத் தகவல்கள்.

"விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதில் வெற்றிபெற வாக்குகள் அவசியம். தமக்கான வாக்குகளை உறுதிப்படுத்துவதற்கு போலியான பதிவு எண் பெற்றவர்களை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த முறைகேட்டை கவுன்சில்தான் தடுக்க வேண்டும். ஒரு தேர்தலுக்காக இப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபடுவார்களா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஹோமியோபதி மருத்துவத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியைக் கையாளும் அதிகாரம் என்பது தேர்தலில் வெற்றிபெறுபவருக்கே கிடைக்கிறது. அதனால்தான் இப்படியொரு தில்லுமுல்லு செய்கிறார்கள்" என பின்னணியைப் போட்டுடைக்கின்றனர் பெயர் வெளியிட விரும்பாத சில ஹோமியோபதி மருத்துவர்கள்!

மருத்துவத்தின் குரல் வளையை நெரிப்பது மருத்துவ அறமாகுமா?Trending Articles

Sponsored