திருமுருகன் காந்திக்கும் குண்டாஸ் உறுதியானது! உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு?Sponsoredசுற்றுச்சூழலுக்காகப் போராட்டப் பிரசாரம் செய்த சேலம் வளர்மதியை அடுத்து, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்ட வழக்கு சரியானதே என்று அறிவுரைக் கழகம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சென்னை மெரினாவில் அஞ்சலி செலுத்திய திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன், அருள்குமார் ஆகியோர் கடந்த மே 21ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். சென்னைப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்ட வழக்குப் பதியப்பட்டது.

Sponsored


குண்டர் சட்ட வழக்கை எதிர்த்து, சென்னை மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள அட்வைசரி போர்டு எனப்படும் அறிவுரைக் கழகத்தில் ஜூன் 29ஆம் தேதி நான்கு பேரின் சார்பிலும் முறையீடு செய்யப்பட்டது. குண்டர் சட்ட வழக்கு முறையீட்டை ஏழு முதல் 12 வாரங்களுக்குள் அறிவுரைக் கழகம் விசாரிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி நான்கு பேரும் கைதுசெய்யப்பட்ட பின்னர் 32ஆவது நாளில் அறிவுரைக் கழகம் விசாரணை நடத்தியது.

Sponsored


ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமன், மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் இந்த முறையீட்டை விசாரித்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேருக்காக திவிக தலைவர் கொளத்தூர் மணி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன், பேரா. சிவக்குமார், திருமுருகனின் தந்தை பொறியாளர் சா. காந்தி ஆகியோர் வாதங்களை எடுத்துவைத்தனர்.

அதையடுத்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகும்நிலையில் இந்த வழக்கு குறித்த முடிவு தெரியாமல் இருந்துவந்தது. நேற்றோடு நான்கு பேரின் சிறைவாசம் நூறு நாள்களை எட்டியது.

இதற்கிடையில் சுற்றுச்சூழல் போராட்டப் பிரசாரத்தில் ஈடுபட்ட இயற்கைப் பாதுகாப்புக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேலம் வளர்மதியின் மீது குண்டர்சட்ட வழக்கு செல்லும் என்று இதே அறிவுரைக் கழகம் முடிவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்ட வழக்கு ஏவலும் செல்லும் என அறிவுரைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளையில் திருமுருகன் காந்தி மற்றும் மூவர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய வழக்குகள் பட்டியலில் 48ஆவது வழக்காக எண்ணிடப்பட்டுள்ள இவர்களின் வழக்கில் நண்பகலில் விசாரிக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்றே இவ்வழக்கில் கடைசி விசாரணை என நீதிபதிகள் ஏ.செல்வம், கலையரசன் ஆகியோர் அமர்வு முந்திய விசாரணையின்போது கூறியிருந்தது. அதனால் இன்று தீர்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குண்டர்சட்ட வழக்கு குற்றச்சாட்டுப் புத்தகத்தில், திருமுருகனின் தந்தை பொறியாளர் காந்தியின் கையெழுத்தையே போலியாக போலீஸார் போட்டு மோசடி செய்துள்ளனர்; மே 31ஆம் தேதி நீதிமன்றத்தின் முத்திரையை வைத்து அதற்கு முந்தைய 28ஆம் தேதியன்று சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் குண்ட சட்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்; மேலும், ஒருவரைக் கைதுசெய்யும்போது பின்பற்ற வேண்டிய சாதாரண நீதி நடைமுறைகளைக் கூட இதில் போலீஸார் அலட்சியப்படுத்திவிட்டு, ஆவணங்களை உருவாக்கியுள்ளனர் என்று நான்கு பேர் சார்பில், 43 வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையொட்டி நான்கு பேருக்கும் விடுதலை கிடைக்கும் என்று திருமுருகன் காந்தியின் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.Trending Articles

Sponsored