“அனிதா... அரசின் வார்த்தையை நம்பிக் கொண்டிருந்தாள்!” #NEETKilledAnitha



“நீட் விலக்கு கிடைக்கலைனா, மாற்று எதாவது யோசிச்சிருக்கிங்களா?”

Sponsored


இந்த கேள்விக்கு அனிதாவிடமிருந்து தயங்கியபடியே பதில் வந்தது.

Sponsored


“இவங்க சொல்லற சட்டமெல்லாம் எனக்குப் புரியலை. ஆனா எனக்கு டாக்டர் சீட் கனவு... அதற்காகத்தான் இவங்க கூட நீதிமன்றம் வந்திருக்கேன். 

Sponsored


ம்ம்ம்ம்... சீட் கிடைக்கும், ஒருவேளைக் கிடைக்கலைனா... 

பி.எஸ்சி மாதிரி எதாவது படிச்சிக்க வேண்டியதுதான்!” - மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நம்பிக்கையும் கலந்த குரலில் பேசினார் அனிதா.  
நீட் விலக்குக்காக மூன்றரை லட்சம் மாணவர்களின் பிரதிநிதியாக தைரியமாகக் நீதிமன்றப் படிகள் ஏறிய அதே அனிதா தற்போது உயிருடன் இல்லை...  

“வேண்டுமானால் ஓராண்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்” என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதும், நீட் எழுதாத மாணவர்கள், நீட் எழுதித் தேர்ச்சி அடையாத மாணவர்கள் என இரு தரப்புக்கும், எப்படியும் தங்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை  ஏற்பட்டது. ஆனால், இரட்டை நாக்குடன் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் ஒரே குரலில், “மற்ற மாநிலங்கள் அத்தனையும் நீட் வழி மருத்துவக்கல்வி முறையைத்தான் பின்பற்றுகின்றன...! தமிழகத்துக்கென என தனியே நீட் விலக்கு அளிக்க முடியாது.” என்று தமிழக அரசுக்கு 'அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளும்படி சொல்லாமல் சொல்லி அனுப்பியது. ஆனால், அட்ஜஸ்ட் செய்துகொள்ள இது ரயில் சீட்டோ அல்லது பேருந்து சீட்டோ அல்லவே; மூன்றரை லட்சம் மாணவர்களின் எதிர்காலம்!

தீர்ப்பு அளிக்கப்பட்டதும், தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலர் உடனடியாக நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து ‘நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்படும்” என்று அவசர அவசரமாக அறிவித்தார். மறுநாளே நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதுவரை நீட் விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுத்து வந்த அரசு, நீட் எழுதாத மற்றும் நீட் எழுதித் தேர்ச்சி அடையாத அத்தனை மாணவர்களையும் 'அம்போ' என விட்டுவிட்டு நீட் நுழைவுத்தேர்வு அடிப்படையிலான மருத்துவக் கலந்தாய்வைத் தொடங்கியது.

இவர்களில் அனிதா, நீட் எழுதி பெற்ற மதிப்பெண் வெறும் 86  மட்டுமே. எப்படியும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிடும் என நம்பிக்கைக் கொண்டிருந்த அந்த பெண் முற்றும் முழுதுமாய் தனது எதிர்காலம் அரசால் கைவிடப்பட்ட நிலைக்கு ஆளானாள்.

நீட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதத்தில் இருந்த சமயத்தில் நம்மிடம் பேசிய அனிதாவின் அண்ணன் மணிரத்னம், “நாங்க ஏழைங்க... எங்களால தனியார் காலேஜில் பணம் கொடுத்து படிக்க வைக்க முடியாது. அரசுக் கல்லூரியில் இடம் கிடைச்சாதான் அனிதாவுடைய மருத்துவக் கனவு நிறைவேறும் அதனால் சட்டத்தைத்தான் கடவுள் மாதிரி நம்பினோம். இப்ப அந்தக் கடவுளே எங்களைக் கைவிட்டுருச்சு. அதுக்காக எங்க புள்ளையோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முடியாது. இப்போது கால்நடை மருத்துவப் படிப்பு படிக்க அரசுக் கல்லூரியில இடம் கிடைச்சிருக்கு. அதுல சேர்க்க முடிவு எடுத்திருக்கோம்” என்றார்.

அனிதா, தனது பத்தாம் வகுப்பிலிருந்து மருத்துவக் கனவுகளுடன் வளர்ந்து வருவதையும், அனிதாவைப்போன்ற எளிய மக்களுக்காகவாவது அரசு நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அனிதா என்ற நம்பிக்கை மனுஷி பற்றி முதன்முதலில் சமூக வலைத்தளங்களில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் சிவசங்கர். 

நீட் விலக்கு கிடைக்காத சோகத்தால் தற்போது அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்ட நிலையில்,”என்னுடைய பொண்ணு

மாதிரிங்க.. அந்த பிள்ளை!” என்று கம்மிய குரலில் பேசத் தொடங்குகிறார் சிவசங்கரன், “உச்ச நீதிமன்றம் வரைக்கும் நீட் விலக்கு கேட்டு போனதுல.. பெரிய கோர்ட் ஆச்சே! எப்படியும் தீர்ப்பு சாதகமாகக் கிடைத்துவிடும் என்று எல்லோருமே நம்பிக் கொண்டிருந்தோம். அனிதா, அரசின் வார்த்தைகளை கூடுதலாகவே நம்பிக் கொண்டிருந்தாள். டாக்டர் சீட் கிடைக்கலைன்னாலும் வெட்னரி சீட் கிடைச்சதும் நாங்க தெரிஞ்சவங்க எல்லோரும் ஒன்று சேர்ந்து பணம் கட்டிப் படிக்க வைக்கறதாகத்தான் இருந்தோம். டாக்டர் சீட் கிடைக்காததுல அனிதா மனசு ஒடஞ்சிருக்கும் பத்திரமா பாத்துக்க சொல்லி அவங்க அண்ணனிடம் சொல்லியிருதேன். ஆனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்துல அந்த பொண்ணு இப்படியொரு முடிவை எடுத்திருக்கு... இந்த நாட்டுல ஏழைங்கள் எல்லாம் இவ்வளவு வலிமையோட இருக்கறதே பெரிய விஷயங்க. ஓராண்டு விலக்குக்கு வேண்டுமானால் பரிசீலிப்போம்! என்று அவளுக்கு திடீர் நம்பிக்கையையாவது மத்திய மாநில அரசுகள் கொடுக்காமல் இருந்திருக்கலாம்.” என்றார். 

டாக்டராகியிருக்க வேண்டிய அனிதாவின் உடல் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?



Trending Articles

Sponsored