“அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே!” #RIPAnithaSponsored''அரியலூரின் மகளே... அவசரப்பட்டு விட்டாயே! 'ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல... உன்னைப்போலச் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே' என்று சொன்ன, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான், ‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு' என்று சொன்னார். ஆனால் நீயோ, அந்த வரிகளை நினைக்காமல்... அவர் சொன்ன இன்னொரு பொன்மொழியான, 'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்பதை நினைவில் வைத்து உன் முடிவைத் தேடியிருக்கிறாயே? அவசரத்தில் நீ தேடிக்கொண்ட முடிவால், அரசாங்கத்தில் மாற்றமா நிகழ்ந்துவிடப் போகிறது? ஒருபோதும் நடக்காது. ஆனால், நீ எடுத்த இந்தத் தற்கொலை முடிவைக் கொஞ்சம் மாற்றி வேறு பாதையில் பயணித்திருந்தால், இன்னொரு சரித்திரத்தையும் நீ உருவாக்கியிருக்க முடியுமே... அதை ஏன்  நீ உணராமல் போனாய்? 

‘உங்களுடைய கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டால்தான், உங்களுடைய எதிர்காலத்தைச் சிறப்பாகச் செதுக்க முடியும்' என்ற கன்பூசியஸின் வரிகளுக்கு மதிப்புக் கொடுத்து... பெற்றெடுத்துப் பெயர் வைத்து அன்னையைக் காப்பாற்ற உன் ஊரில் மருத்துவர் வசதியில்லாத நிலை அறிந்து வளர்ந்த நீயா, இப்படியொரு முடிவை எடுத்திருக்க வேண்டும்? 'நீட் தேர்வை எழுத மூன்று வாய்ப்புகள் உள்ளன; இவ்வாண்டு தேர்வில் தோல்வியடைந்தவர்கள், அடுத்த வருடம்கூடத் தேர்வை எழுதி மருத்துவப் படிப்பில் சேர முடியும்; இதுபோன்று தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர்' என்கிற வழி இருப்பதை நீ யோசிக்கத் தவறியது ஏன்? நீ மட்டுமா, நீட் தேர்வில் தோற்றுப்போயிருக்கிறாய்? இல்லையே... உன்னைப்போல் எத்தனையோ அனிதாக்களும்... எத்தனையோ அனிதன்களும்! இதே நிலைப்பாட்டில் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஒரு மாற்று வழியைத் தேடிக்கொள்ளும்போது நீ மட்டும் ஏன் மாற்றப்படாத ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தாய்? 

Sponsored


தற்கொலைதான் அனைத்துக்கும் தீர்வென்றால், இந்திய நாடு ஜனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்காது. தன்னம்பிக்கை இருப்பதால்தான் தள்ளாடும் மனிதர்களும் இந்தியாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய லட்சியப் பயணம் அமையாதபோது வாழ்க்கையின் தேவையைப் புரிந்து அடுத்த லட்சியப் பயணத்துக்கான வழியை அவர்கள் தேடிக்கொள்கிறார்கள். இது, இந்தியாவில் மட்டுமல்ல... உலகெங்கில் வாழும் மனிதர்கள் அனைவரும் இந்த வழியைத்தான் கடைப்பிடிக்கின்றனர். அதனால்தான் ஒருகாலத்தில் முகம் தெரியாமல் இருந்த மனிதர்கள் எல்லாம் இன்று முத்திரை பதித்துக்கொண்டிருக்கின்றனர். ஏன், நம் அப்துல் கலாம்கூட 'விமானி'யாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால், சூழ்நிலை அவரை 'விஞ்ஞானி'யாக்கிக் காட்டியது. அதோடு மட்டுமல்ல... இன்றைய அரசியல் அவரை 'வீணை' ஞானியாகவும் ஆக்கிக் காட்டியது. அரசியல்தானே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று உருவெடுத்திருக்கிறது; அதுதானே, அதிரடியாய்ப் பல திட்டங்களை அறிவித்து மக்களையும், மாணவர்களையும் சாகடிக்கிறது; அதுதானே, உன்னையும் கொலைக்களத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் புரட்சி மட்டும்தான் தீர்வு... நீயோ பூச்சி?! உன்னால் என்ன செய்ய முடியும்? முயன்றவரை போராடிப் பார்த்தாய்... முடியாமல் மனமுடைந்து இறந்துவிட்டாய். இதையா இந்த உலகம் உன்னிடம் எதிர்பார்த்தது?

Sponsored


இல்லையே. அப்துல் கலாம் போல் எத்தனையோ மாபெரும் தலைவர்கள் தங்களுடைய லட்சியப் பயணம் நிறைவேறாமல் போனபோது, காலச் சூழ்நிலைக்கேற்ப மாறியிருக்கிறார்கள்... மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே நிஜம். ஓர் இடத்துக்கு அவசரமாய்ச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். அரை மணி நேரமாகியும் பேருந்து வரவில்லையெனில், வேறு வாகனம் பிடித்து அந்த இடத்துக்குச் செல்கிறோம் அல்லவா? அதுபோல், உன்னுடைய மருத்துவக் கனவுக்குத் தடையாய் வந்து நின்ற நீட்டை எதிர்கொள்ள நீ சிந்திக்கத் தவறியது ஏன்? ஓர் ஊரின் மருத்துவக் கனவைச் சுமந்ததோடு... உன்னைப்போல் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிற்கும் மாணவர்களின் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம்வரை சென்று சட்டரீதியாகப் போராடிய நீ, நீட் தேர்வுக்கு நீதி கிடைக்காதபோது மாற்று வழியை அல்லவா தேடியிருக்க வேண்டும்? ஏன், மரணத்தின் வழியைக் கண்டுபிடித்தாய்? ப்ளஸ் டூ தேர்வில் விடியவிடியப் படித்து எல்லோரும் வியக்கும் வகையில் 1,176 மதிப்பெண் எடுத்த நீ, நீட் தேர்வை எதிர்கொள்ளவும் பயிற்சி எடுத்திருக்கலாம் அல்லவா? முடிந்தால் முடியாதது என்பதில்லையே... அப்படியிருக்கையில், 'இந்த வருடம் நீட் தேர்வில் தோற்றுவிட்டேன்' என்று அழுதுகொண்டிருப்பதைவிட, 'அடுத்தவருடம் நிச்சயம் ஜெயிப்பேன்' என்பதை நினைவில் வைத்து நீ படித்திருக்கலாம் அல்லவா? ஏன், இந்தச் சிந்தனை உனக்குள் தோன்றவில்லை? 

மத்திய, மாநில அரசுகள்தான் இந்தப் பிரச்னைக்கு முழுக் காரணம் என உலகுக்கே தெரிந்தாலும் ஓர் உயிர் போனபிறகு, அந்தச் செய்தியை ஊடகங்களும் சமூக வலைதளங்களும் உலகுக்கு உணர்த்தும் அதேவேளையில், அந்தப் பெண் உயிரோடு இருந்தபோது நீட் பற்றிய விளக்கங்களை ஏன் தெளிவாக்கவில்லை? மருத்துவராகும் கனவுகளுடன் காத்திருந்த கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு... நீட் தேர்வுக்கான பாடத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள் முதலியவற்றை அரசாங்கங்களும், ஊடகங்களும், சமுதாய அமைப்புகளும் வழிகாட்டியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா... அரியலூர் மகளின் இறப்பு அகிலத்துக்குத் தெரிந்திருக்குமா... அரசியல் தலைவர்களின் கண்டனங்கள்தான் பிரதிபலித்திருக்குமா? ஓர் உயிருடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரட்டும்... இனி, ஓராயிரம் உயிர்களைக் காக்க  அரசாங்கம் வழிவகை செய்யட்டும். 

'ஈரம் இருக்கும்வரை இலைகள் உதிர்வதில்லை... நம்பிக்கை இருக்கும்வரை நாம் தோற்பதில்லை' என்பதை இந்த மாணவச் சமுதாயம் நன்கு உணரவேண்டும். அறியாத வயதிலும்... எதுவும் தெரியாத நிலையிலும் இருக்கும் மாணவச் செல்வங்களுக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவசியம் விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். 'ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவைத் தவறவிடுகிறோம்' என்பதை இன்றைய மாணவச் சமுதாயம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்''.Trending Articles

Sponsored