நாஞ்சில் சம்பத் தலைமறைவாக இருக்கிறாரா? உண்மை நிலவரம் என்ன?Sponsoredடி.டி.வி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்  பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. மேலும் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் பேட்டி ஒன்றில் அவர் விமர்சனம் செய்திருந்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாக பி.ஜே.பி தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பி.ஜே.பி-யினர். அவருடைய இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கோஷங்களையும் எழுப்பினர். தினகரன் வீடு அருகே உள்ள ஒரு ஓட்டலில் அவர் இருப்பதை தெரிந்துகொண்ட பி.ஜே.பி-யினர் ஓட்டலை நோக்கிச் சென்றனர். அங்கே நேரடியாக நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைச் சற்றும் எதிர்பாராத நாஞ்சில் சம்பத் திகைத்துப் போனார். அங்கிருந்த அவரிடம்  பி.ஜே.பி-யினர் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி பதற்றமானதால், தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் அவரை  போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டனர். இதன் தொடர்ச்சியாக நாஞ்சில் சம்பத் மீது பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர்கள் பட்டினப்பாக்கம் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பம்மல், பல்லாவரம், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் அவர் மீது 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்  சட்டம், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட  பல்வேறு பிரிவுகளின்  கீழ்  இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்றுசொல்லப்படுகிறது.

Sponsored


போலீஸார் எந்த நேரத்திலும் கைதுசெய்வார்கள் என்பதால், அவர்  தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியானது. அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு மற்றும், தலைமறைவு விஷயங்கள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக  பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டுபேசினோம். அப்போது பணியில் இருந்த காவலர் நம்மிடம் பேசுகையில், ''பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் எங்கே போய் விடப் போகிறார்? புகார் கொடுத்த அன்று அவரை விசாரித்தோம். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் எங்கே போக முடியும்? அடுத்தக்கட்ட விசாரணையை பொறுத்தே, அவரைக் கைதுசெய்வது குறித்து முடிவு செய்வோம்" என்றார். 

Sponsored


இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவரது தொலைபேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு நாள்களாக முயற்சித்தும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது உதவியாளரைத் தொடர்பு கொண்டுபேசியபோது, ‘அவர் தலைமறைவாகவில்லை. இந்த விவகாரத்தை சட்டரீதியாக அவர் எதிர் கொண்டுவருகிறார். அவர் யாருக்கும் அஞ்சாதவர். அப்படிப்பட்டவர் ஏன் தலைமறைவாக இருக்கப் போகிறார். இங்குதான் உள்ளார். எப்போது சிங்கம் பேச வேண்டுமோ அப்போது பேசும். அவர்  தலைமறைவாக உள்ளார் என்று வருகின்ற தகவல் உண்மையில்லை''  என்று உறுதியாக மறுத்துப் பேசினார்.Trending Articles

Sponsored