தயாராகிறது உலகின் முதல் நிரந்தர நிலத்தடி அணுக்கழிவு கிடங்கு… பாதுகாப்பானது தானா?Sponsoredநம் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறது? மேற்கு பின்லாந்தில் இருக்கும் ஒல்கிளுவொடோ (Olkiluoto) தீவில் இருக்கும் மக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் அவர்களுக்குச் சற்று கிலி ஏற்படத்தான் செய்கிறது. அங்குதான் தயாராகிறது உலகின் முதல் நிரந்தர நிலத்தடி அணுக்கழிவு கிடங்கு. பின்லாந்து அரசாங்கத்தின் திட்டப்படி எல்லாம் நடந்தால், நூறு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து விடுவார்கள் மக்கள்.

நன்றி: posiva.fi

Sponsored


அங்குள்ள காடுகளில்தான் இருக்கிறது ஒல்கிளுவொடோ அணுசக்தி ஆலை (Olkiluoto Nuclear Power Plant). இப்போது அங்குக் கூடுதலாக ஒரு புதிய கட்டடம், நிலத்தடியில் பிரமாண்டமாக, பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளோடு கட்டப்பட்டு வருகிறது. ஆன்கலோ அணுக்கழிவு கிடங்கு (Onkalo spent nuclear fuel repository) என்று அழைக்கப்படும் இதனால் அணுக்கழிவுகளால் அடிக்கடி நிகழும் விபத்துகள் மற்றும் பல்வேறு ஆபத்துகளைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

Sponsored


1980-ம் ஆண்டு டிமோ ஐகஸ் (Timo Äikäs) என்ற புவியியல் வல்லுநருக்கு முக்கிய பொறுப்பு ஒன்று தேடி வருகிறது. அது வளர்ந்து கொண்டிருக்கும் தன்னுடைய நாட்டின் நியூக்ளியர் வேஸ்ட் எனப்படும் அணுக்கழிவுகளை, ஆபத்து ஏற்படுத்தாத இடத்தில் சேமித்து வைப்பது. பொதுவாக, அணுக்கழிவுகள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் முதல் பத்து லட்சம் ஆண்டுகள் வரை வீரியத்தோடு இருக்கும். அவ்வளவு ஆண்டுகள் எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதவாறு கழிவை எங்கே சேர்த்து வைப்பது? பூமியில் மிகவும் பழைமையான கட்டமைப்பான எகிப்து பிரமிட்களே 4500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவைதான்.

நன்றி: posiva.fi

ஐகஸ் தன் வேலைக்கான ஆராய்ச்சியைத் தொடங்கியபோது, அமெரிக்கா, ஸ்வீடன், ஜெர்மனி போன்ற நாடுகள் அணுக்கழிவை சேமித்து வைக்கக் கிடங்குகள் கட்டப்பட வேண்டும் என வரைபடம் வரை வந்திருந்தார்கள். எனவே, பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள், இந்த நாடுகள் முதலில் தங்களின் திட்டங்களைச் செயல்படுத்தட்டும், அதிலிருந்து நல்ல திட்டங்களை நாம் எடுத்துக்கொள்வோம் என்ற முடிவில் இருந்தனர். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஓடிவிட்டது. மற்ற நாடுகள் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பின்லாந்து மட்டும் இன்று அணுக்கழிவுகளை சேமித்து வைக்கப் பாதுகாப்பான, பிரமாண்டமான கிடங்கு ஒன்றைக் கட்டி முடிக்கும் தருவாயில் இருக்கிறது. தற்போது, உலகம் முழுவதும் தோராயமாக 2,50,000 டன் அணுக்கழிவு உலகம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளது. அது வைக்கப்பட்டிருக்கும் இடம் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாவதும், விபத்துகள் நடப்பதும் சகஜமாகி விட்டன. அதுவும் அமெரிக்காவில் விபத்துகள் நிறையவே நடந்துள்ளன. அவை ஏற்படுத்திய சேதத்தை சரிசெய்யவே ஏராளமான டாலர்களை அள்ளி வீச வேண்டியிருந்தது.

இன்று, பின்லாந்து கட்டி முடிக்கப்போகும் இந்த ஆன்கலோ கட்டமைப்பு ஒல்கிளுவொடோ (Olkiluoto) காடுகளில் அமைந்துள்ளது. அந்த நாட்டின் மேற்கு கடற்கரை ஓரத்தில் வரும் இந்தத் தீவில், மிகவும் குறைந்த அளவிலேயே மக்கள் வசிக்கிறார்கள். இப்பெரிய கிடங்கு, தண்ணீரை எதிர்க்கும் படுகைப்பாறைகளுக்குள் 1500 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. மொத்தம் 137 சுரங்கப்பாதைகள் உள்ளேயிருக்கும் கிடங்குக்கு அழைத்துச்செல்லும். உள்ளே கிடங்கில், 25 டன் கழிவுகளை சேமித்து வைக்கும் அளவுக்கு உருளை வடிவ பாத்திரங்கள் இருக்கும். வார்க்கப்பட்ட இரும்பினால் தயார் செய்யப்பட்ட இவை, காப்பர் இழைகளைக் கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்தப் பாத்திரங்கள் அனைத்தும் துளையிட்டு உருவான அறைகளுக்குள் வைக்கப்பட்டு பெண்ட்டோனைட் களிமண் (Bentonite Clay) கொண்டு மூடப்படும். இவ்வகை களிமண், தண்ணீர் படும்போது இன்னும் வலுப்பெறும். இங்கிருக்கும் நிலத்தடி நீரில், ஆக்சிஜன் அளவு குறைவு என்பதால் இந்தப் பாத்திரங்கள் களிமண்ணைத் தாண்டி துருப்பிடிக்காது.

நன்றி: posiva.fi

இந்த பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு அந்த அணுசக்தி கழிவுகள் மக்கும் வரை நீடித்து நிற்கும் என்றாலும், நமக்குப் பின்னால் வரும் சந்ததிகள் இந்தக் கட்டமைப்பில் கைவைக்காமல் இருக்க வேண்டுமல்லவா? ஒருவேளை 200 ஆண்டுகள் கழித்து வருபவர்கள் இந்த படுகைப்பாறைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று இந்தக் கட்டமைப்பை சிதலப்படுத்தி விட்டால்? மிகப் பெரும் விபத்துக்கு அது வித்திடும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். இதை எப்படித் தடுப்பது என்ற ஒரு புதிய தலைவலி வந்தது. முதலில் “Don’t dig here!” (இங்கே தோண்ட வேண்டாம்) என்று எழுதி விடலாம் என்று முடிவுசெய்தார்கள். ஆனால், மனிதர்களான நாம் அப்போதுதானே தோண்ட வேண்டும் என்றே நினைப்போம்? எனவே, எந்தவித எச்சரிக்கை அடையாளங்களையும் வைக்க வேண்டாம் என்று தற்போது முடிவு செய்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல், படுகைப்பாறைகளில் எவ்வித தாது பொருள்களும் இருக்காது. எனவே, அதை ஆராய்ச்சி செய்ய வேண்டுமென எவரும் நினைக்க மாட்டார்கள். இந்தக் கிடங்கு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, உள்ளிருக்கும் அனைத்துப் பாத்திரங்களும் 2100-ம் ஆண்டின்போது முழுவதும் நிறைந்துவிடும் என்று கணித்துள்ளார்கள். அதன்பிறகு, இந்தக் கட்டமைப்புக்கு எந்தவித பாதுகாப்போ, மின்சார வசதியோ தேவை இருக்காது. ஆன்கலோ கிடங்கை நிரந்தரமாக மூடிவிடுவார்கள். மீண்டும் அணுசக்தி ஆராய்ச்சி தொடரும் பட்சத்தில், இதைப் போன்றே வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பான கிடங்கு ஒன்றைக் கட்ட வேண்டியிருக்கும்.

நன்றி: posiva.fi

இந்தத் திட்டத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்த ஐக்ஸ் 2014-ம் ஆண்டே பணி ஓய்வும் பெற்றுவிட்டார். அவரின் கணிப்புப் படி, 2024-ம் ஆண்டிலிருந்து இங்கே அணுசக்தி கழிவை நிரப்பத் தொடங்கலாம். முன்பு அவர் கூறிய ஒற்றை வரி, ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டதாய் இருந்தது. அது, “இங்கே அணு கழிவுகளை நாம் சேமிக்கத் தொடங்கும்போது, நான் பணியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தக் கிடங்கு நிறையும்போது, நிச்சயம் நாம் அனைவரும் உயிரோடு இருக்க மாட்டோம்.”

முதலில், யாராவது செய்வார்கள், நாம் அதைக் காப்பி அடித்துக்கொள்ளலாம் என்று ஆரம்பித்து, இன்று அனைத்து முன்னேறிய நாடுகளுக்கும் முன்னோடியாக  பின்லாந்து இந்தச் சாதனையை செய்யவுள்ளது. “Zero Incidents” உடன் இது வெற்றிபெறும் பட்சத்தில் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் பலவும் இந்தத் திட்டத்தை காப்பியடிக்க முற்படலாம். அதுவே பின்லாந்துக்கு கிடைக்கப் போகும் மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம்.Trending Articles

Sponsored