“தேர்தலுக்குத் தயாராகும் மு.க.ஸ்டாலின்..!” முப்பெரும் விழாவில் முக்கிய அறிவிப்பு!Sponsored“முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆட்சிக் கட்டிலில் இருந்து வீழ்த்தியே தீருவேன்” என்ற சபதமிட்டு சுழன்று வருகிறார் டி.டி.வி.தினகரன். அவருக்குப் போட்டியாக, தி.மு.க-வும் களத்தில் இறங்கி எடப்பாடிக்கும், பன்னீருக்கும் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தொடர் போராட்டம், நீட் தேர்வு பிரச்னை என்று மத்திய - மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், திண்டுக்கல்லில் நாளை நடக்கும் தி.மு.க முப்பெரும் விழாவில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்கின்றனர் தி.மு.க-வினர்.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், கடந்த மாதம் 22-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும், மூன்று எம்.எல்.ஏ-க்கள் செப்டம்பர் 6-ம் தேதி ஆளூநரைச் சந்தித்தனர். தி.மு.க மற்றும் அதன் தோழமைக்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களும் 26.08.2017 அன்று ஆளுநரிடம், 'எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும்' என்று மனு கொடுத்தனர். 

Sponsored


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் டெல்லியில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, 'தமிழக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், சட்டசபையைக் கூட்டி மெஜாரிட்டியை நிருபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 10 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை மீண்டும் சந்தித்தனர்.

Sponsored


அப்போது மு.க.ஸ்டாலின், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஓர் கடிதம் கொடுத்தார். அதில், “234 சட்டமன்ற உறுப்பினர்களில் சபாநாயகர் உள்ளிட்ட 114 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவவை மட்டுமே எடப்பாடி பழனிசாமி அரசு பெற்றுள்ளது. ஆளும் அரசுக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது. அதாவது, தி.மு.க: 89; காங்கிரஸ்: 8; ஐ.யூ.எம்.எல்: 1; மற்றும் அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்: 21 ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர் முகாமில் உள்ளனர். எனவே, தற்போதைய முதல்வர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை இழந்துள்ளார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்தச சந்திப்புக்கு அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 11-ம் தேதி, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பை சென்று விட்டார். எனவே, அவரின் பதிலுக்காக 'ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டார் மு.க.ஸ்டாலின். அந்த மனுவில், “கடந்த பிப்ரவரி மாதம், எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபித்தபோது தி.மு.க. உறுப்பினர்களை திட்டமிட்டு வெளியேற்றிவிட்டு, வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்றதாக அறிவித்தனர். இப்போது, குட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போதைய அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்விஷயத்தில் தேவையில்லாமல் ஆளுநர், காலதாமதம் செய்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை உயர் நீதிமன்றம் நியமிக்கும் அதிகாரி முன்னிலையில் நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்நிலையில், தி.மு.க முப்பெரும் விழா திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள அண்ணா திடலில் 16.9.2017 அன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த விழா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செப்டம்பர் 15-ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்; செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாள். அதே 17-ம் தேதிதான், இந்த மண்ணின் உரிமைகளை மீட்கும் அரசியல் பேரியக்கமான தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள். இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுகிறோம்.

எந்தக் கொள்கைகளுக்காக திராவிட இயக்கம் அரும்பாடுபட்டு, அதனை வென்று, தமிழ் நிலத்தில் நிலைபெறச் செய்து, மக்கள் நலன் காத்ததோ, அந்தக் கொள்கைகளுக்கு இன எதிரிகளால் பெரும் சவாலும் கடும் சோதனையும் உருவாகியிருக்கிற நேரம் இது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநிலங்களை அடிமைப்படுத்தும் செயலை மத்திய அரசு மேற்கொள்கிறது. அதனை எதிர்க்கத் துணிவின்றி, தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரியாக, டெல்லி தர்பார் காலால் இடும் கட்டளைகளைத் தலையால் நிறைவேற்றும் அடிமைக்கூட்டமாக இருக்கிறது மாநில அரசு. இந்த நிலை மாறாமல் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சியையும் நாம் மீட்க முடியாது. அந்த மாற்றத்திற்கான பயிற்சிக் களமே முப்பெரும் விழா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திண்டுக்கல்லில் நாளை நடைபெறும் முப்பெரும் விழாவில், "எடப்பாடி அரசுக்கு எதிரான தி.மு.க-வின் போராட்ட அறிவிப்புகளையும், கட்சியினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும்" என்று ஸ்டாலின் அறைகூவல் விடுப்பார் என்று தி.மு.க-வினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.Trending Articles

Sponsored