160 நாட்கள்.. போராடும் மக்கள்.. குதிரைபேர அரசு - நெடுவாசல் காக்கப்படுமா?! #SaveNeduvasalSponsored"நிலச்சுவான்தாரர்களுக்கு ஏனோ எப்போதுமே தாங்கள் விதைத்த இடத்தில் அறுவடை செய்யப் பிடித்ததில்லை" - கார்ல் மார்க்ஸ் 

அவரின் இந்த மேற்கோளில் நிலச்சுவான்தாரர்களுக்கு பதில் 'அதிகாரத்துவம்' என்று மாற்றிப் பாருங்களேன்.. சென்றவாரம் நெடுவாசல் பகுதியில் உள்ள நல்லாண்டார் கொல்லையில் ஏற்பட்ட தீவிபத்தை இதற்கான பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். 

Sponsored


அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி, ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு நெடுவாசல் மக்கள் நிலத்தைத் தாரைவார்க்கும் முன்பே அங்கே நல்லாண்டார் கொல்லையில் ஆழ்துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்க அமைத்த குழாய்கள் இன்றும் அப்படியே உள்ளன. இங்கிருந்து கச்சா எண்ணெய் துரப்பணம் செய்யப்பட்டு, கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது வெளியேறிய எண்ணெய் கசடுகளை அருகிலேயே ஒரு சிமெண்ட் தொட்டி அமைத்துக் கொட்டி வைத்துள்ளார்கள். பிறகு அந்தக் கிணற்றில் எண்ணெய் தீர்ந்துவிட்டதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டது. அதையடுத்தே அருகில் இருக்கும் எண்ணெய்க் கிணறுகள் ஜெம் லெபாரட்டரீஸ் நிறுவனத்துக்குத் தரப்பட்டன. இடத்தைக் காலிசெய்த ஓ.என்.ஜி.சி, கழிவுகளை மற்ற எந்தக் குப்பைகளைப் போல அங்கேயே விட்டுச்சென்றுள்ளது. கழிவுகள் கொட்டப்பட்ட அந்தக் கிணற்றிலிருந்து இப்போதும் கடும் ரசாயன நெடி வீசுகிறது. அப்படித் திறந்தவெளியில் கொட்டிவைத்திருந்த கழிவில்தான் சென்றவாரம் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 100 அல்லது 150 மீட்டர் தொலைவில் குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இப்போது சொல்லுங்கள் அதிகாரத்துக்கு தாங்கள் விதைத்த இடத்தில் அறுவடை செய்யப் பிடித்ததில்லை என்பது உண்மைதானே?

Sponsored


அந்த நெடுவாசல் மக்கள் இன்று 160-வது நாளாக தங்களது விவசாய நிலத்தை விட்டுச் செல்லும்படி ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் தொடக்க காலத்தில் அதைப்பற்றிப் பதிவுசெய்த ஊடகங்களுக்கு தற்போது அதைவிட அதிகமாகத் டி.ஆர்.பி தரும் செய்திகள் கிடைத்துவிட்டதால் 'நெடுவாசல் போராட்டத்தில் புதுமையாகச் சொல்ல ஒன்றுமில்லை' என்று கடந்துவிட்டதாகக் கவலைமுகம் காட்டுகின்றனர் போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள். அவர்களில் ஒருவரான ராம்குமார் என்பவர்

கூறுகையில், "ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மக்கள், தங்களது உடைமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 160 நாள்களாகப் போராடுவது என்றால், அதன் சாத்தியக்கூறுகளை நினைத்துப் பாருங்கள். தொடக்கத்தில் மக்கள் அனைத்துத் தரப்பிலிருந்தும் வந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஆனால் நாளாக, நாளாக வெளியிலிருந்து வரும் மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஊடகங்களும் எங்கள் பிரச்னைகளைப் பற்றி பதிவு செய்வதைக் குறைத்துக் கொண்டன. ஆனால், நாங்கள்.ஒவ்வொரு நாளும் நூதன முறையில் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். காலை 11 மணிக்கே மக்கள் அனைவரும் களத்தில் ஒன்றுகூடி மாலை 3 முதல் 4 மணிவரை போராட்ட முழக்கங்களை எழுப்பி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்வதில் அக்கறை உள்ள அரசுக்கு, எங்களைப் பற்றி அக்கறை இல்லை. இருந்தாலும், எங்களது போராட்டக் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருப்போம்" என்றார். 

நெடுவாசல் பிரச்னை தொடர்பாக தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் என மாநில அளவில் கட்சிகள் அமைதியாகி கதிராமங்கலம் பிரச்னை, நீட் சிக்கல், அனிதா மரணம் என அடுத்தடுத்து பிரச்னைகளை நோக்கி நகர்ந்துவிட்டாலும் உள்ளூர் அளவில் கட்சித் தரப்புகள், இன்றும் மக்களுடன் கைகோத்தே இருக்கின்றன என்பது அந்த மக்களுக்கான கடுகளவு ஆறுதல். இருப்பினும் எத்தனை காலம் இப்படி மக்கள் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? எத்தனை நாள்கள் இந்த விவகாரத்தில் நடுநிலை என்ற பெயரில் மௌனம் காத்துக்கொண்டிருக்கப்போகிறது மாநில அரசு?. நெடுவாசல் காக்கப்படுமா?Trending Articles

Sponsored