குண்டர் சட்டத்தால் போராளிகளை முடக்கிவிட முடியுமா? #StandWithThirumuruganGandhiSponsored“கோடிக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒருநாள்கூடச் சிறையில் தள்ளமாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்” என்ற போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் வீரச்செறிவுமிக்க நீதிமன்றப் பேச்சுதான், நம் தமிழகத்தைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

சென்னை மெரினாவில் கடந்த மே மாதம் 21-ம் தேதி ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முயன்றதற்காகக் கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட்ட நான்கு பேரின் மீதான குண்டர் சட்டத்தை,  நீண்டநாள்களுக்குப் பிறகு ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sponsored


இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த மே மாதம் 21-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் உட்பட நான்கு பேரைத் தடுத்து நிறுத்திக் கைதுசெய்த போலீஸார், பின்னர் அவர்கள்மீது குண்டர் சட்டத்தைப்  பதிவுசெய்தனர். திருமுருகன் காந்தி மீது உள்ள வழக்குகளின் அடிப்படையில் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்திருப்பதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

Sponsored


பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியதற்காகத் திருமுருகன் காந்தி மீது ஐந்து வழக்குகள் உள்ளன. முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்ட  60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு காவல்துறை தரப்பில் செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, எவ்வாறு குண்டர் சட்டம் போட முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். திருமுருகன் காந்தி உட்பட நான்குபேரும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்திருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகக்  குற்றம்சாட்டியதோடு அவர்கள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், திருமுருகன் காந்தியை மீட்பதற்கான சட்டப் போராட்டம் நடைபெற்றுவந்த நிலையில்... கிட்டத்தட்ட  ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அவருடைய வழக்கறிஞர் விவேக்கிடம் பேசினோம், “நமது தரப்பில் இருந்து தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் பிறகும் அரசுத் தரப்பில் இருந்த பல இடையூறுகள் இருந்தன. திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர்மீதும் போட்டப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய கால தாமதமும் ஒரு காரணம். ஆனாலும், அரசுத் தரப்பில் இருந்து ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தார். இதுவரை பப்ளிக் பிராசிகியூட்டர் மட்டுமே ஆஜரான நிலையில், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதாடிவந்தார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆறு முறை வாய்தாக்களை வாங்கினார். ஒட்டுமொத்தமாக ஒன்பது வாய்தாக்களை வாங்கியுள்ளார். குண்டர் சட்டத்தைப் போட்டார்கள் என்பதாலேயே அதனை உறுதியாக்கும் முயற்சிகள் போலீஸ் தரப்பில் இருந்து நடந்தது. அதனால்தான் இவ்வளவு காலதாமதம்'' என்றார். 

இதுதொடர்பாகப் பேசிய மே 17 இயக்கத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் லேனா குமார், “ ‘மத்திய அரசை விமர்சித்தார்’ என்ற

உள்நோக்கத்தின் காரணமாகவே இந்த வழக்கைப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை, முதல் வழக்காக அட்வகேட் ஜெனரல் விஜய நாராயணன் எடுத்து வாதாடிய நிலையில் இதில் தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல தீர்ப்பு. வளர்மதி விடுவிக்கப்பட்டநிலையில் தற்போது திருமுருகன் காந்திமீது போடப்பட்ட குண்டர்  சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போராளிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இனிவரும் போராளிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்” என்றார். 

இதுகுறித்து திருமுருகன் காந்தியின் தந்தையான காந்தி, “குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கும்போது இதுபோன்ற குண்டர் சட்டமே தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. இருக்கிற சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் புதிய சட்டங்களைக் கொண்டு வருகின்றனர். அதனைத் தவறான வழியிலும்  பயன்படுத்தி வருகின்றனர் .இவ்வாறு பயன்படுத்துவதன்மூலம் அரசாங்கம் தனது ஜனநாயக மரபில் இருந்து நழுவிச் சர்வாதிகாரத்தை நடைமுறைபடுத்திச் செல்கிறது என்பது தெளிவாகிது. இதுபோன்று  குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உச்ச நீதிமன்றமே முன்வந்து  கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கான முகாந்திரம் இல்லாதபோது, கைது செய்யப்படுகிறார்கள். அதில், பாதிக்கப்படுபவர்கள் வெளியில்வர குறைந்தது மூன்று மாதகாலம் ஆகிறது. எந்தவித நியாயமும் இல்லாமல் மூன்று மாத காலம் ஒருவருடைய வாழ்கையை முடக்க முடியும் என்ற நிலை உருவாகிவிடுகிறது. அதனை இந்த அரசாங்கம் செய்துகொண்டிருக்கிறது” என்றார்.

“நான், என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்” என்றார் மாவோ. அதைத்தான்  தற்போதைய போராளிகளுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம்!Trending Articles

Sponsored