''ஜக்கையன்  'எம்.எல்.ஏ' பதவி தப்பியது எப்படி..?'' அரசு கெஜட்டில் வெளியான வாக்குமூலம்டப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அரசு கொறாடா விளக்கம் கேட்டு அந்த 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதே நேரத்தில், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்த கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் திடீர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். முதல்வர் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்று அறிவித்தார். அதன்பின்னர், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஜக்கையன் தலை தப்பியது. இந்நிலையில் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்தும் ஜக்கையன் நீக்கப்படாதது குறித்தும் காரணங்களை விளக்கி அரசிதழில் அறிவிப்பு (18.9.17) வெளியாகி உள்ளது. 

Sponsored


சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுக்கு ஜக்கையன் எம்.எல்.ஏ அனுப்பிய கடிதத்தில், ''நான் உள்ளிட்ட 19  அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் 22-8-2017 அன்று ஆளுநரைச் சந்தித்து அளித்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, 24-8-2017 ஆம் நாளிடப்பெற்ற எஸ்.ராஜேந்திரன், (அரசு தலைமைக் கொறடா)  ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதுகுறித்து என்னிடம் தாங்கள் விளக்கம் கேட்டிருந்தீர்கள். அதன்பேரில் என் சார்பாக விளக்கமளிக்க நான் வழக்கறிஞர்களை நியமித்தும், 30-8-2017 மற்றும் 5-9-2017 அன்றும் இரண்டு விளக்கங்களைத் தங்களிடம் சமர்ப்பித்துள்ளேன். நான் ஏற்கெனவே 7-9-2017 அன்று தங்களை நேரில் சந்தித்து விளக்கமளித்ததோடு, எழுத்துமூலமாகவும் பதில் அளித்துள்ளேன். ஆளுநருக்கு  என்னுடைய கடிதத்தின்மூலம் நிலைமையை விளக்கி, நான் ஏற்கெனவே அளித்த மனுவினை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளேன். அதன் நகலை தங்களின் பார்வைக்காகத் தற்போது வழங்குகிறேன். எடப்பாடி பழனிச்சாமி, தலைமையிலான இந்த ஆட்சிக்கு என்னுடைய முழு ஆதரவையும், நம்பிக்கையையும் தெரிவித்துக்கொண்டு, தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்குவேன் என்கிற உறுதியை மீண்டும் அளித்து, ஏற்கெனவே தங்களிடம் நான் அளித்துள்ள கடிதத்தை ஏற்றுக்கொண்டு, என் மீதான மேல் நடவடிக்கையை கைவிடுமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

Sponsoredதமிழக ஆளுநருக்கு விளக்கம் அளித்து எஸ்.டி.கே. ஜக்கையன், எம்.எல்.ஏ, ஓர் கடிதம் அளித்துள்ளார். அதில், ''ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் மிகுந்த துயருற்று இருந்தேன். இந்த ஆட்சி இன்னும் 100 ஆண்டு காலம் தொடர வேண்டும் என்கிற எண்ணத்திலும், ஜெயலலிதா வழியில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு நடைபெற வேண்டும் என்றும் மிகுந்த எதிர்பார்ப்போடு 14-2-2017 அன்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சித்தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்ந்தெடுத்தோம். இந்நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு ஜெயலலிதா  கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது என்கிற காரணத்தைச் சொல்லியும்,  எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்துவிட்டனர். இனி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஊழல் அரசாக மாறிவிடும் என்றும், தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியே நீட்டிக்க வேண்டுமென்றால்  எடப்பாடி பழனிச்சாமி தலைமை மாற்றப்பட வேண்டும் என என்னை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 22-8-2017 அன்று தங்களிடம் என்னுடைய கோரிக்கை மனுவை அளித்திருந்தேன்.

Sponsoredஅப்போதும் எனக்கு கடிதம் கொடுத்ததில் உடன்பாடு இல்லாமல்தான் இருந்தேன். பாண்டிச்சேரியிலே ஒரு விடுதியிலே நான் தங்கி இருந்த நேரத்திலே, தொலைக்காட்சியிலே நடைபெற்ற விவாதங்களை ஊன்றி கவனிக்கையில், எந்த அளவிற்கு  எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அரசு, ஜெயலலிதா வழியில் பல்வேறு வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அறிந்தேன். மேலும், என் தொகுதி மக்களும் தொடர்ந்து எனக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுதிப் பணிகளைக் கவனிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஜெயலலிதா, தான் இறந்த பின்னும் இன்னும் நூறாண்டு காலம் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சி தொடர்ந்து செயல்படும் என்கிற வேதவாக்கினைச் சொல்லி மறைந்தார்கள். புதுச்சேரியில் நான் தங்கியிருந்த சமயத்தில் அங்கு நடைபெற்ற சில சம்பவங்கள், ஜெயலலிதாவின் ஆணைக்கு எதிராக இருந்ததை உணர்ந்தேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், என் கையைக் கொண்டே என் கண்ணைக் குத்திக்கொள்வதைப்போல, அ.தி.மு.க உறுப்பினர்களைக் கொண்டே, அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்த்து, ஜெயலலிதா காலமெல்லாம் எதிர்க்கட்சியாக கருதி வந்த தி.மு.க தலைமையில் ஆட்சி அமைய உறுதுணையாக நிற்க உதவுகிற சூழ்நிலையைக் கண்டேன்.

.

கடந்த 22-ம் தேதி தங்களிடம் நான் அளித்த மனுவில் கையொப்பமிட வைத்ததற்கான காரணத்தையும், பேரவைத் தலைவரிடமும் அதற்குப் பின் தொடர்ந்து நான் அளித்த விளக்கங்களுக்கான உண்மையான நோக்கத்தையும் அறிந்துகொண்டேன். மேலும், உண்மையான அ.தி.மு.க விசுவாசிகள் என்கிற போர்வையில், ஜெயலலிதா கொள்கைகளைப் பின்பற்றி இந்த ஆட்சி தொடர வேண்டும் என்கிற எண்ணத்தை வலியுறுத்தி, அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க அ.தி.மு.க உறுப்பினரான என்னை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டதை உணர்ந்து மிகுந்த வேதனையுற்றேன். எந்தக் காரணத்திற்காக எம்.ஜி.ஆர் அயராது உழைத்தாரோ, எந்தக் காரணத்திற்காக ஜெயலலிதா தன்னலம் கருதாது உழைத்து, தன்னுயிரை நீத்தாரோ, அந்தக் காரணம் குலையும் வண்ணம் நான் செயல்பட்டால் இவ்விருவருடைய ஆன்மா என்னை மன்னிக்காது, தாங்கள்தான் உண்மையான  அ.தி.மு.க விசுவாசிகள் என்று சொல்லி, உண்மைக்கு மாறான காரணங்களை என்னிடத்திலே சொல்லி,  எடப்பாடி பழனிச்சாமிக்கு  எதிராக 22-8-2017 அன்று நான் அளித்த கோரிக்கை மனுவில் கையொப்பமிடச் செய்தனர்.

மேற்கூறிய காரணங்களுக்காக, 22-8-2017 அன்று நான் தங்களுக்கு அளித்த மனுவானது உண்மைக்கு மாறானது என்பதை உணர்ந்து திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். இக்கடிதத்தினை தாங்கள் ஏற்று, நான் ஏற்கெனவே அளித்துள்ள மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளதாகக் கருதி அதன்மீது ஏதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று பணிந்து கேட்டுக்கொள்கிறேன். மேலும், எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான ஆட்சியின்மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும், இந்த ஆட்சி தொடர அவருக்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்பதையும் இதன்மூலம் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored