"விதைப்புக்கு நீர் இல்லை...விவசாயிகளுக்கு நீதி இல்லை.. எதற்காக காவிரி வழிபாடு?" - புலம்பும் விவசாயக் கூட்டமைப்பினர்!Sponsoredநாள்: 19/09/2017

இடம்: உச்சநீதிமன்றம், திலக் மார்க், புதுடெல்லி.

Sponsored


விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது: நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு 

Sponsored


விவாதத்தில் பங்குபெற்றோர்: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூவர் பெஞ்ச், தமிழக அரசு வழக்கறிஞர் சேகர் நாப்டே, மத்திய அரசு சொலிசிடர் ஜெனரல் ரஞ்சித் குமார்.

(வழக்கின் மீதான விவாதம் இப்படியாக விரிந்தது...).

வழக்கறிஞர் சேகர் நாப்டே: காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் இனி தமிழக அரசு, மத்திய அரசை நம்பப் போவதே இல்லை!. காவிரி நதிநீருக்கான மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதை 2007-ல் காவிரி நடுவர் மன்றம் கூறியது. ஆனால், மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா (மத்திய அரசின் வழக்கறிஞரிடம்): இதற்கான உங்கள் விளக்கம் என்ன? ஏன் இத்தனை காலமும் மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை?

வழக்கறிஞர் ரஞ்சித் குமார்:  நாடாளுமன்றமும், மத்திய அரசும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்பதற்கும், ஆணையிடுவதற்கும் நீதிமன்றங்கள் இல்லை. பக்ரா-நங்கல் மற்றும் நர்மதா விவகாரத்தில் இதேபோன்ற நிலையில் நீதிமன்றத் தலையீடு ஏற்பட்டபோது அரசு அதனைத் தவிர்க்க அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவந்ததை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். 

தீபக் மிஸ்ரா: விளக்கம் கேட்டதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு பீதியுற்றுப் பேசுகிறீர்கள்? நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது தவறாமல் பின்பற்றப்படும். 

(வழக்கின் மீதான அடுத்த விசாரணை இன்னும் 28 நாட்களுக்குப் பிறகு நடக்கும் என்று கூறி, தள்ளிவைக்கப்படுகிறது).

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே நடந்துவரும் பிரச்னையில் காவிரி நடுவர் மன்ற முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கடந்த ஜூலை 11-ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. அதுதொடர்பான விசாரணையில் அண்மையில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதிதான் மேலே கூறப்பட்டிருக்கிறது.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வை அளிக்கும்" என்று நடுவர் மன்றம் தன் இறுதித்தீர்ப்பில் கூறியுள்ள போதிலும், மத்தியில் முன்பு இருந்த அரசும், தற்போது இருக்கும் அரசும் என இருதரப்புமே அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதற்கு மத்தியில்தான் 'காவிரி புஷ்கரம்' என்ற பெயரில் காவிரி ஆற்றை வழிபடும் விழாவுக்காக, தற்போது மேட்டூர் அணையில் இருந்து அரசு, காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கு முன்பு சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு பாராமுகம் காட்டிய அரசு, தற்போது காவிரி வழிபாட்டுக்காக தண்ணீர் திறந்து விட்டிருப்பது, டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபதி கல்யாணம், “உச்ச நீதிமன்றம் சரியான சமயத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறது. கர்நாடக மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் செய்வது சரியானாலும் தவறானாலும் மொழியால் ஒன்றுபட்டு இருப்பவர்கள், அதனால் காவிரி நதிநீர்ப் பிரச்னையில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள். மத்திய அரசைப் பொறுத்தவரை, கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் வரவிருப்பதால், அம்மாநிலத்தில் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதால், கர்நாடகத்துக்கான சார்புநிலையை எடுக்கிறார்கள். தமிழக அரசும் தற்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சூழலில் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காவிரி டெல்டா பகுதியில் செப்டம்பர் மாத காலகட்டத்தில் விதைப்புக்கான நீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், தற்போதைய சூழல் அப்படி இல்லை. விதைப்புக்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோரிக்கை வைக்கவேண்டியதாக இருக்கிறது. சம்பா சாகுபடிக்காக தண்ணீர் கேட்டோம். அதற்கு செவிசாய்க்காத அரசு, 144 வருடத்துக்கு ஒருமுறை வரும் காவிரி வழிபாட்டு விழாவுக்காக நீரைத் திறந்துவிடுகிறது. அதுவரை காவிரிக்கரை எப்படி இருக்கிறது என்றுகூட பார்வையிட வராத தமிழக முதல்வரும், தண்ணீர் திறந்துவிட்ட பின்பு வந்து காவிரியில் புனித நீராடுகிறார். மத்தியில் ஓட்டுக்காக எங்களை வஞ்சிக்கிறார்கள். மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே அவர்களுக்கு நேரம் போதுமானதாக இல்லை” என்றார்.

காவிரி உரிமை மீட்புக்குழுவின் தலைவர் பெ.மணியரசன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கு மாதாமாதம் தண்ணீர் திறந்து விடமுடியாது; ஆண்டுக்கு ஒரு தடவை திறந்துவிட ஆணையிட வேண்டும்; அந்தநீரின் அளவையும் குறைக்க வேண்டும்!” – கர்நாடக அரசு வழக்கறிஞர் பாலிநாரிமன் 19.09.2017 அன்று உச்சநீதிமன்றத்தில் கூறியவை இவை!

அதேநாளில் கர்நாடகத்தின் அடாவடித்தனத்துக்கு ஆதரவாக, நரேந்திரமோடி அரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார்

கூறியவை இதோ:

“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் பல குழப்பங்கள் இருக்கின்றன. அதில் எங்களுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன. அந்தத் தீர்ப்பை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால்தான் அதுசெயலுக்கு வரும். நாடாளுமன்றம் அந்த இறுதித் தீர்ப்பில் திருத்தங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் செய்துகொள்ள அதிகாரமிருக்கிறது.” நாடாளும் பா.ஜ.க. அரசின் கருத்து இது!

மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் – 1956-ன் படி, ஆற்று நீர்த் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டால், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குரிய அதிகாரம் பெற்றுவிடுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து மாற்றங்கள் செய்வார்களா? நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளின் தீர்ப்பாயத் தீர்ப்புகள் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டனவா? அவற்றிலெல்லாம் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு அத்தீர்ப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடுநிலையோடு செயல்பட வேண்டிய மத்திய அரசு, காவிரி விஷயத்தில் பாகுபாடு பார்த்து, தமிழ்நாட்டுக்கான நீதியைப் பறிக்கிறது. 

காவிரிப் பாசன மாவட்டங்களை வானம் பார்த்த புஞ்சை மாவட்டங்களாக மாற்றினால்தான் உழவர்கள் தங்கள் நிலங்களை விற்பார்கள். ஓ.என்.ஜி.சி, மற்றும் தனியார் நிறுவனங்கள், மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவளி, நிலக்கரி முதலியவற்றை எடுத்துக் கொள்ளையடிக்க வாய்ப்பு உருவாகும் என்று மோடி அரசு கணக்குப் போடுகிறது.

ஆறு ஆண்டுகளாக குறுவைக்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஒரு போகச் சம்பா சாகுபடியும், தண்ணீரின்றி காய்ந்து சருகாகிப் போனது. நடப்பாண்டில் சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வியுடன் உழவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு சம்பாப் பயிர் காய்ந்து கருகியதைப் பார்த்து 250-க்கும் மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

காவிரி நீர் நமக்கு 12 மாவட்டங்களுக்குப் பாசன நீர்; 20 மாவட்டங்களுக்கு குடிநீர்! இயற்கை நமக்கு வழங்கிய இன உரிமை காவிரி! இந்நிலையில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அது மட்டும் போதாது தமிழ்நாடு அரசு நடுவண் அரசுக்கு உரியவாறு அழுத்தம் கொடுத்து நடுநிலைக்குத் திருப்ப வேண்டும்.

தமிழ்நாட்டு மக்கள் காவிரியில் நமக்குள்ள சட்டப்படியான உரிமையைப் பெற அறவழிப் போராட்டங்களை மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களாக நடத்த வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

நடந்தாய் வாழி காவேரி 

கருங்கயல் கண் விழித்து ஒல்கி 

நடந்த எல்லாம் நின் கணவன் 

திருந்து செங்கோல் வளையாமை, 

அறிந்தேன், வாழி காவேரி

"உன்னுள் துள்ளி விளையாடும் மீன்களைக் கண்களாகக் கொண்டு நீ கம்பீர நடையிட்டு வருவதற்குக் காரணம், உன் கணவனான சோழனின் செங்கோல் யாருக்கும் வளையாமல் நீதிகாத்து வருவதால்தான். அதனால் வாழி நீ காவேரி!” என்கிறது சிலப்பதிகாரப் புகார் காண்டம். 

நீதி கிடைப்பது எப்போது? காவிரி வாழ்வது எப்போது?Trending Articles

Sponsored